Published:Updated:

என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!
பிரீமியம் ஸ்டோரி
News
என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

#StopJudgingWomen #DontJudgeMe

ஓவியம்: ந. சீனிவாசன்

சமுதாயம் காலங்காலமாக உரமிட்டு உறுதியாக்கி வைத்திருக்கும் பிற்போக்குத் தனமான நம்பிக்கைகளைத் தகர்க்கவோ, தடைகளை உடைக்கவோ முனையும் பெண் களுக்கு இங்கே அளிக்கப்படும் பட்டங்கள் ஏராளம். போற்றிப் பாராட்டப்பட வேண்டிய அவர்களின் செயல்கள், ‘நல்ல குடும்பத்துப் பொம்பளைங்க இப்படிச் செய்ய மாட்டாங்க’ என்ற ஒரு வரி விமர்சனத்தில் கொச்சைப்படுத்தப்படும். அடுத்தவர்களின் மதிப்பீடுகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளா வதில் சாமானியர்கள், சாதனையாளர்கள் என்ற பேதமிருப்பதில்லை.

கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின் மனைவி அலுவலகத்திலிருந்து திரும் பினால் அவள் திமிர்பிடித்தவள், குழந்தை பிறந்த பின்னும் வேலை முக்கியம் என்று செல்பவள் நல்ல அம்மா இல்லை, #MeToo அனுபவம் பகிர்பவள் சரியான பெண் இல்லை, அலங்காரத்தில் அதிக ஆர்வம் கொண்டவள் குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை... இப்படிப் பெண்களின் ஒவ்வொரு செயலுமே அடுத்தவரின் ஜட்ஜ்மென்ட்டுக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம். அந்த ஜட்ஜ் மென்ட்டை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து முன்னேறும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றை எதிர்கொள்ளத் திராணியின்றி குற்ற உணர்வில் காணாமல் போகிறவர்களும் இருக்கிறார்கள்.

என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

When you judge someone you do not define them, you define yourself என்பதொரு பிரபல வாசகம். யெஸ்... அடுத்தவரைப் பற்றி மதிப்பீடு செய்யும்போது வெளிப்படுவது அந்த நபரின் முகமல்ல, மதிப்பிடுபவரின் நிஜ முகம் என்பது தெரியாமலேயே எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில், யாரோ ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். முகத்துக்கு நேரே வைக்கப்படுகிற இத்தகைய ஜட்ஜ்மென்ட், புறம்பேசுதலுக்கு இணையானதோர் அநாகரிகம் என்பதை அறியாமல் அதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இங்கே சில பெண்கள் தங்கள்மீது வைக்கப் பட்ட ஜட்ஜ்மென்ட் பற்றியும் அதைத் தகர்த்து மீண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள் கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் உரக்கச் சொல்வோம்... #StopJudgingWomen #DontJudgeMe

சுய அடையாளத்துக்காக கல்யாணத்தை தள்ளிவெச்சேன்! - சித்ரா, ஐ.ஆர்.எஸ்

“என் ஊர் விழுப்புரம். 21 வயசுலதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். வீட்டின் பொருளாதார சூழல் காரணமா வேலைக்குப் போயிட்டே தேர்வுக்குத் தயாராயிட்டு இருந்தேன். ‘செட்டில் ஆவது’ என்பது பெண்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணம் முடிச்சு குழந்தை பெத்துக்கிறதாகத்தானே இருக்கு...

சித்ரா, ஐ.ஆர்.எஸ்
சித்ரா, ஐ.ஆர்.எஸ்

‘லேட் மேரேஜ் ஆச்சுனா குழந்தை பிறக்காது’, ‘பொண்ணு கல்யாணம் வேணாம்னு சொல்றா, வேற ஏதாவது பிரச்னை இருக்கான்னு விசாரிங்க’னு பேசினாங்க. ஒரு பெண்ணோட லேட் மேரேஜுக்கு, காதல்தான் காரணமா இருக்கணுமா, கனவுகள் காரணமா இருக்கக் கூடாதா? என்மீது வைக்கப்பட்ட எல்லா ஜட்ஜ்மென்ட்களுக்கும் என் வெற்றியைத்

தான் பதிலா தரணும்னு ஆசைப்பட்டேன். சிவில் சர்வீஸ் எக்ஸாம்ல பாஸ் பண்ண பிறகுதான் கல்யாணம்னு வீட்டுல உறுதியா சொல்லிட்டேன். எக்ஸாம்ல அஞ்சு முறை தோல்வி அடைஞ்சேன். ஆறாவது முயற்சியில, நேர்முகத் தேர்வுல அகில இந்திய அளவுல முதலிடத்தைப் பிடிச்சேன். இன்னிக்கு ஹைதராபாத்தில் பயிற்சியில் இருக்கேன்.

30 வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இன்னாரோட மனைவி, மகள்னு அடையாளப்படுத்தப்படாம எனக்குனு ஓர் அடையாளத்தை உருவாக்கி இருக்கேன். அதுல எனக்குப் பெருமைதான்”

- கம்பீர முகம் காட்டுகிறார் சித்ரா.

என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

கரியர் என் கனவு, அடையாளம்! - வி.ஜே அஞ்சனா

‘‘என் குழந்தை பிறந்ததுலேருந்து ஆறு மாசம்வரை நான் அவன் கூடவேதான் இருந்தேன். அதுக்கப்புறம் மறுபடி என் வேலையைத் தொடர்ந்தப்போ, குழந்தையைவிட காசு முக்கியமானு விமர்சனம் பண்ணாங்க. ஷூட்டிங் போகும்போது குழந்தை யையும் கூட்டிட்டுப் போவேன். ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பேன். ‘குழந்தையை இப்படி ஷூட்டிங் நடக்குற இடத்துக்கு கூட்டிட்டு வந்து கஷ்டப்படணும்னு என்ன அவசியம்’னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. நான் போட்டோஷூட் செய்த புகைப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது, ‘இதுல நேரத்தை வீணடிக்காம குழந்தையைப் பாரு, இப்போ நீ ஒரு அம்மா, அதுக்குத் தகுந்த மாதிரி டிரஸ் போடு’னு ஏகப்பட்ட கமென்ட்ஸ் வரும். இதெல்லாம் உச்சகட்ட மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கு. ஒரு கட்டத்துல, நான் என் குழந்தைக்கு ஓர் அம்மாவாக பெஸ்ட்டை கொடுக்கும்போது இந்த மாதிரி ஜட்ஜ்மென்ட்களுக்கு ஏன் எமோஷனல் ஆகணும்னு தோணுச்சு. எல்லா விமர்சனங்களையும் புறக்கணிக்க ஆரம்பிச்சேன். என் குழந்தைக்கு ரெண்டரை வயசுவரை தாய்ப்பால் கொடுத்திருக்கேன். குழந்தையையும் கரியரையும் என்னால் ஒரே நேரத்தில் சமாளிக்க முடிஞ்சது. என் கரியர் எனக்கு ரொம்ப முக்கியம். காசு சம்பாதிக்க மட்டுமல்ல, கரியர் என் கனவு, அடையாளம். தாய்மைங்கிறது ஒவ்வொரு பெண்ணோட உரிமை. அதை எப்படி வழிநடத்தணும்னு அவங்களுக்குத் தெரியும். அக்கறை என்ற பெயர்ல அநாவசிய அட்வைஸ் பண்ணாம, முடிஞ்சா அவளுக்குத் துணை நில்லுங்க”

- அழுத்தமாகச் சொல்கிறார் அஞ்சனா.

 ஐரின் செல்வராஜ்
ஐரின் செல்வராஜ்

விமர்சனங்களுக்கு பயந்து கனவுகளைத் தொலைச்சிடாதீங்க... - தற்காப்புக்கலை பயிற்சியாளர் ஐரின் செல்வராஜ்

‘‘திருநெல்வேலி பக்கத்துல சின்ன கிராமம் எங்களுடையது. பொம்பளப் புள்ளைய படிக்கவைக்கிறதே அங்கே பெரிய சாதனை. முட்டி அளவுக்கு டிரஸ் போட்டுக்கிட்டு நான் விளையாடப் போறதை மக்களால ஏத்துக்க முடியல. வெயிட் தூக்குனா குழந்தை பொறக்காது, ஆம்பளை மாதிரி ஆயிடுவேனு சொன்னாங்க. என் உடையைவெச்சு என்னை விமர்சனம் பண்ணாங்க. ஒவ்வொரு முறையும் விளையாடப் போயிட்டு வந்து வீட்டுல அடிவாங்குவேன். சர்வதேச அளவுல விளையாடி என் போட்டோ பேப்பர்ல வர ஆரம்பிச்சப்போதான் மக்கள் என்னை நம்பினாங்க. விமர்சனங்கள் கொஞ்சம் குறைஞ்சது. அந்த வெற்றி என்னை யோசிக்க வெச்சது. என்னை மாதிரி ஆயிரக்கணக்கான பொண்ணுங்களை உருவாக்கணும்னு முடிவு பண்ணேன். அடுத்தடுத்து கிக் பாக்ஸிங், சிலம்பம், அடிமுறைக் கலைகள் கத்துக்கிட்டேன். என் துறையில் இருப்பவரையே கல்யாணம் பண்ணிக் கிட்டேன். இப்போ கிராமத்துக் குழந்தை களுக்கு சிலம்பம், அடிமுறைக்கலைகள் பயிற்சி கொடுக்கிறோம். பெண் குழந்தைகளை தேசிய அளவிலான போட்டிக்குத் தயார் படுத்திக் கூட்டிட்டுப் போறேன். எல்லாப் பெண்களுக்கும் நான் சொல்ல நினைக்கிறது ஒரே விஷயம்தான்.... விமர்சனம் செய்யுற வங்களுக்கு பயந்து உங்க கனவுகளைத் தொலைச்சிடாதீங்க...’’

- வெற்றிப் புன்னகை வீசுகிறார் ஐரின்.

ஹாரத்தி
ஹாரத்தி

வெளிநாட்டுல வேலை பார்க்குற பெண் வீட்டுக்கு அடங்காதவளா? - ஹாரத்தி, புதுச்சேரி

“பிகாம் முடிச்சுட்டு சி.ஏ படிச்சுட்டு இருக் கேன். கூடவே சில நிறுவனங்கள்ல ஏழு வருஷமா ஆடிட்டிங் துறையில் வேலை பார்த்துட்டு இருக்கேன். சிங்கிள் பேரன்ட்டா என் அம்மா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. துபாய்ல எனக்கு நல்ல வேலை வாய்ப்பு வந்தது. ‘பொண்ணைத் தனியா அவ்வளவு தூரம் அனுப்பாத, ரிஸ்க், அப்படி இப்படி’னு எல்லாருமே எங்க அம்மாவைக் குழப்பினாங்க. ஆனா, நான் எடுத்த முடிவுல உறுதியா இருந்தேன். என்னை என்னால் பார்த்துக்க முடியும்னு நம்பினேன். ஓர் ஆண் வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்த்தா அதை கெளரவம்னு நினைக்கிற சமூகம், ஒரு பொண்ணு அப்படி வெளிநாட்டுல வேலை பார்க்கிறதை தப்பா பேசுது. அவளுக்கு `வீட் டுக்கு அடங்காதவள்'னு பட்டம் கொடுக்குது.

நான் துபாய்க்குப் போன நேரம் கொரோனா பரவி லாக்டெளன் அறிவிச்சுட்டாங்க. கஷ்டமா இருந்தாலும் பத்து மாசம் அங்கேயே தாக்குப் பிடிச்சுட்டேன். அந்த வேலையை ஒழுங்கா முடிச்சுக் கொடுத்ததால இப்போ அடுத்தடுத்த வாய்ப்புகள் வருது. நம்மை மதிப்பீடு செய்யுற யாரும் நமக்கான எதிர் காலத்தை உருவாக்கித் தர மாட்டாங்க, அப்புறம் ஏன் அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்...”

- நியாயமான கேள்வியை முன்வைக்கிறார் ஹாரத்தி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சாந்தினி
சாந்தினி

பொம்பளப்புள்ள அலையக் கூடாதா?! - சாந்தினி, தேனி

``நான் ஒரு கிட்ஸ் போட்டோகிராபர். தேனி போன்ற ஒரு நகரத்துல ஒரு பொண்ணு கிட்ஸ் போட்டோகிராபி செய்யுறதே சவால்தான். ‘பொம்பளப் புள்ளை ஏன் இப்படி அலையணும்?'னு கேட்டாங்க. அலைந்து திரிஞ்சு செய்யுற வேலை ஆண்களுக்கானது, டேபிள்ல உட்கார்ந்து பார்க்குற வேலைகள்தான் பெண்களுக்கானதுங்கிற இந்தச் சமூகத்தோட ஜட்ஜ் மென்ட்தான் என் மீதும் திணிக்கப்பட்டது. நான் அதை காதுல வாங்கிக்கலை. இப்போ நான் லைட்னிங் கோர்ஸ் பண்றேன்!"

- எம்.கணேஷ், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

கிரேஸ் பானு
கிரேஸ் பானு

திருநங்கைனாலே இப்படித்தான் என்பதை மாற்றினேன்!

கிரேஸ் பானு, திருநர் உரிமைக் கூட்டியக்கத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர், கோவில்பட்டி

``என் உடல்ல மாற்றங்கள் ஏற்பட்டப்போ, என் வீட்டிலேயே என்னை துடைப்பத்தால அடிச்சுத் துரத்தினாங்க. என் தங்கச்சி கல்யாணம், `அவங்க வீட்டுல இப்படி ஒரு பையன் இருக்கானாம்'னு சொல்லி நின்னு போச்சு. `திருநங்கைள்னாலே பாலியல் தொழில் செய்யுறவங்க, பிச்சை எடுக்குறவங்க'னு இந்த மதிப்பீடுகள்தான் இதுக்கெல்லாம் காரணம். இதை நான் மாற்றிக்காட்டாம எனக்கான அங்கீகாரம் கிடைக்காதுனு புரிஞ்சது. என் கடுமையான முயற்சி யால, `இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி’ங்கிற அடையாளம் கிடைச்சது. நாலு வருஷமா இப்போ அம்மா, அப்பா என்னை ஏத்துக்கிட்டிருக்காங்க.''

- இ.கார்த்திகேயன், படம்: எல்.ராஜேந்திரன்

என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

என் வீட்டுல நடந்த மரணம்கூட விமர்சனத்துக்குள்ளாயிருக்கு!

- நடிகை ரோகிணி

“ஜட்ஜ்மென்ட் என்பது வீட்டிலிருக்கும் ஆண்களிடமிருந்தே தொடங்குது. ஆணின் பார்வைதான் சமூகத்தின் பார்வையா மாறுது. குழந்தையிலிருந்தே ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் சமமா நடத்தணும். பெண் குழந்தைகள்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக்கொடுக்கணும். ஜட்ஜ்மென்ட் என்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கும் கூண்டு, அதில் அடைபடப் போறோமா அல்லது சிறகு விரிச்சுப் பறக்கப் போறோமோங்கிறதுதான் பெண்களுக்கான சவால். நம்மை ஜட்ஜ் பண்றவங் களுக்காக முடங்க ஆரம்பிச்சோம்னா, விமர்சனங்கள் ஜெயிச்சிடும். இன்னிக்கு சமூகத்தின் அடையாளமா, வெற்றியின் முகங்களா நிற்கும் எல்லாப் பெண்களும் விமர்சனங்களுக்காக நிச்சயம் கண்ணீர் வடிச்சவங்களா இருப்பாங்க. நானும் அதைக் கடந்துதான் வந்திருக் கேன். நடிகை என்பதாலேயே என் வீடும், உறவுகளும், இவ்வளவு ஏன், என் வீட்டுல நடந்த மரணம்கூட விமர்சனத்துக்குள்ளாயிருக்கு. நடிப்பு என் தொழில். அதுவே விமர்சிக்கப்படுது. விமர்சனங்களைப் புறந்தள்ளிட்டுதான் சாதிக்க வேண்டியிருக்கு. அது உங்களாலயும் முடியும்’’ - நம்பிக்கை தருகிறார் ரோகிணி.

என் அடையாளம், என் வாழ்க்கை, என் உரிமை!

66 வயதில் மறுமணம் செய்துகொண்டேன்!

- லட்சுமி, கேரளா

``எனக்கு 16 வயது இருக்கும்போது, 48 வயதான என் கணவர் கிருஷ்ணய்யருக்கு என்னைத் திருமணம் செய்து வைத்தார்கள். குழந்தை இல்லை. பெரிதாக சொந்த பந்தங்களும் இல்லை.

23 ஆண்டுகளுக்கு முன்பு கணவரும் காலமானார். கொச்சினியன் எங்கள் குடும்பத் துக்குத் தெரிந்தவர். சென்ற வருடம் நானும் அவரும் மறுமணம் செய்து கொண்டோம். இப்போது இருவரும் திருச்சூர் முதியோர் இல்லத்தில் இருக்கிறோம்.

66 வயதில் மறுமணமா என்று யோசிக்காமல், சொச்ச ஆயுளை பிடித்தவருடன் வாழ்வோம் என்ற நியாயமான விருப்பம், ஊர், உலகம் என்ன சொல்லும் என்ற தயக்கத்தை தூக்கி போடச் செய்தது. என்றாலும்கூட, மக்கள் எங்கள் திருமணத்தைக் கொண்டாட்டமாகவே நடத்திவைத்தனர். இந்த வயதில் அன்பான ஒரு துணை எவ்வளவு அவசியம் என்பதை, இருவரும் ஒருவருக்கொருவர் உணர்த்துகிறோம், உணர்கிறோம்!'' - நம்பிக்கை பகிர்கிறார் லட்சுமி.

- சதீஸ் ராமசாமி, படம்: கே.அருண்

அனுபமா
அனுபமா

37 வயதில் ரெண்டாவது குழந்தை... அது என் விருப்பம்!

அனுபமா, கர்ப்பகால ஆலோசகர், கோவை

``என் முதல் பிரசவத்துக்கும், ரெண்டாவது பிரசவத்துக்கும் இடைவெளி 10 வருஷங்கள். என் 37 வயசுல இரண்டாவது குழந்தையை நான் கருவுற்றப்போ, `தேவையா... குழந்தை ஆரோக்கியமா இருக்காது, தாய்ப்பால் வராது, குழந்தையை பார்த்துக்க முடியாது’னு நிறைய விமர்சனங்கள். பொதுவா, பெண்களுக்கு அவங்க உடலோட ஆற்றலையே மறக்கடிக்கிற அளவுக்கு நிறைய தீர்ப்புகள் சொல்லி, தன்னம்பிக்கைய உடைப்பாங்க. ஒவ்வொரு பெண்ணின் உடலும் ஒரு மாதிரி. அதுக்கு பொதுத்தீர்ப்புகளை அனுமதிக்காதீங்க. முதல் பிரசவம் சிசேரியனா இருந்தும் 37 வயதில் ரெண்டாவது பிரசவம் சுகப்பிரசவம், ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தது, தாய்ப்பால் தானம் பண்ணினது, இன்னொரு பக்கம் என் பிரக்னன்ஸி வகுப்புகளைத் தொடர்வதுனு... அதுக்கு நானே சாட்சி!''

- குருபிரசாத்