Published:Updated:

அடங்க மறு: 10 - கலாசார காவல் கல்விக்கூடங்கள்... கூண்டை உடைத்த மாணவிகள்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

அடங்க மறு: 10 - கலாசார காவல் கல்விக்கூடங்கள்... கூண்டை உடைத்த மாணவிகள்!

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி - ஓவியம்: ஜீவா

பிறந்த குழந்தை தொடங்கி, மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் போதும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுபவள் பெண்தான். ‘அவ டிரஸ் சரியில்லை... அணுகு முறை சரியில்லை... அடக்க ஒடுக்கமா இருந் திருக்கணும்... கண்ட நேரத்துல வெளியில சுத்தியிருக்கக் கூடாது...’ என வன்முறைக்கு காரணமான ஆண் தரப்பை நியாயப்படுத்தும் அறிவுரைதான் காலங்காலமாக பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. இன்றுவரை அதில் மாற்ற மில்லை.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் படிக்கும் பெண்கள் ‘குறிப்பிட்ட நேரத்துக்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும்/குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் விடுதியைவிட்டு வெளியே போகக்கூடாது’ என்கிற கட்டுப் பாடும் இதன் வெளிப்பாடுதான். எந்நேரமும், எவ்விடத்துக்கும் அச்சமற்றுச் செல்லும் தைரியத்தை பெண்களுக்கு ஊட்ட வேண்டிய கல்விச் சாலைகளே அவர்தம் கால்களைக் கட்டி விடுதிக்குள் அடைத்தால்... இதற்கு எதிராக எழுந்ததுதான் ‘கூண்டை உடைப் போம்’ (Pinjra Tod - break the cage) போராட்டம்!

கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் பாலினத்தின் அடிப் படையில் பெண்கள் மீது திணிக்கப் படும் கட்டுப்பாடுகளை முறியடித்து பாலின சமத்துவத்தை வலியுறுத்து வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இது.

நள்ளிரவில்கூட பரிசோதனை சாலைகளிலும் நூலகங்களிலும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டிருக்க, மாணவிகளோ இருட்டிய பிறகு விடுதிகளில் அடைந்து கிடக்க வேண்டிய அவலம். இந்தக் கட்டுப்பாட்டால், பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் ஆராய்ச்சி மாணவிகள். இதை எதிர்த்து டெல்லியிலுள்ள கல்லூரி களைச் சுற்றி இரவுகளில் நடக்க ஆரம்பித் தார்கள் மாணவிகள். ‘கூண்டை உடைப்போம்’ இயக்கத்தினரின் முதல் எதிர்ப்பு இதுதான். இந்த எதிர்ப்பு சமூக வலைதளங்கள் வழியே இந்தியா முழுக்க பரவி வரவேற்பு பெற்றது. போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள் ஆராய்ச்சி மாணவிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுமான தேவாங்கணா காலிதாவும், நடாஷா நர்வாலும். கூண்டை உடைக்கப் போராடிய மாணவிகளைக் கூண் டில் அடைத்து வேடிக்கை பார்த்தது அரசு.

எதிர்ப்பாளர்களை ஒடுக்க நினைத்த அரசையும் அதன் தலைமையையும் மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற் பாட்டாளர்களும் வன்மையாகக் கண்டித்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவிகள் 13 மாதங்கள் வரை விடுதலை செய்யப்படவில்லை. அவர்களைக் காண்பதற்குப் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. அணிந்து கொள்ள போதுமான உடை களில்லாமல், வாசிக்கப் பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் சிறைக் குள் தவித்தனர் மாணவிகள். வயிற்றில் மூன்று மாதக் கருவோடு சிறைக்குச் சென்ற சஃபூரா சர்கார் என்ற மாணவி உரிய நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டார். இறுதியில், எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை யையும், பயங்கரவாத நடவடிக்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத அரசைக் கண்டித்ததோடு மாணவிகளை விடுதலை செய்யவும் உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.

‘கூண்டை உடைப்போம்’ நடைப்பயணத்தில் கலந்துகொண்ட சாம்பவி விக்ரம் என்பவர், ‘கல்லூரி விடுதிகளைக்காட்டிலும் தனியார் விடுதிகள் அபாயகரமானவை; உயிருக்கு ஆபத்தானவை. ஒருமுறை நிலநடுக்கம் வந்தபோது கீழ்த்தளத்தில் தங்கியிருந்த மாணவிகள் வெளியே ஓடி வந்துவிட்டார்கள். மற்ற தளங்களில் பூட்டப்பட்ட கதவுகளுக்குள் இருந்த பெண்கள் ‘காப்பாற் றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என பால்கனியில் நின்று கதறினார்கள்’ என்ற தகவ லைப் பகிர்ந்திருக்கிறார்.

பெண்களின் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராஃபியுல் ரஹ்மான் என்ற மாணவர், ‘பெண்களைப் பூட்டி வைத்து அவர்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப் படுத்த முடியாது. பெண்கள் பொது இடங்களில் அதிகமாக நடமாடும்போது தான் தெருக்கள் பாதுகாப் பானவையாக மாறும்’ என்றார். சத்தியமான வார்த்தைகள்..!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் தங்கள் கல்லூரி விடுதிக்குத் திரும்பும் வழியில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானார்கள். அது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, ‘உரிய நேரத்தில் விடுதிக்கு வராதது உங் களுடைய குற்றம்’ என்று பாதிக்கப்பட்ட மாணவியர் மீதே குற்றம்சாட்டியது நிர்வாகம்.

அடங்க மறு: 10 - கலாசார காவல் கல்விக்கூடங்கள்... கூண்டை உடைத்த மாணவிகள்!

குற்றம் சுமத்திய அதிகாரியைக் கண்டித்து, ‘பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை களிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்; மாணவர்களைப் போலவே மாணவியருக்கும் இரவு 10 மணி வரை வெளியே சென்று வர அனுமதி வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்கலைக் கழகத்தின் பிரதான வாயிலின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் மாணவியர். அவர்கள்மீது தடியடி நடத்தி ஆர்ப் பாட்டத்தைக் கலைக்க முயன்றது உத்தரப் பிரதேச அரசு.

மாணவியர் விடுதிக்குச் செல்லும் வழி இருளடைந்து கிடப்பதும், அவ்வழியெங் கும் ஆண்கள் சுதந்திரமாக நடமாடுவதும்தான் பாலியல் அத்துமீறலுக்குக் காரணம். அவற்றைச் சரி செய்வதை விட்டுவிட்டு, போராட்டம் நடத்திய மாணவிகள் மீது தடியடி நடத்துவது எந்த வகையில் நியாயம்?

1.04.2016 முதல் 31.03.2017 வரையில் பல்கலைக்கழக மானிய குழுவில் வரப்பெற்ற பாலியல் வன்முறை புகார் களில் நான்கில் ஒன்று உத்தரப்பிரதேச கல்லூரி களிலிருந்து என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ். மாணவிகள் அளித்த பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்கள்மீது போலீஸாரை வைத்து தடியடி நடத்திய உத்தரப்பிரதேச அரசுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்.

கல்வி கற்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றான பிறகு, பாதுகாப்பான கல்விச் சாலைகளைக் கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்