Published:Updated:

அடங்க மறு: 12 - உடலும் உடையும் எங்கள் விருப்பம்! - ‘தர்பூசணிப் போராட்டம்’ சொல்வது இதைத்தான்...

தர்பூசணிப் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
தர்பூசணிப் போராட்டம்

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி | ஓவியம்: ஜீவா

அடங்க மறு: 12 - உடலும் உடையும் எங்கள் விருப்பம்! - ‘தர்பூசணிப் போராட்டம்’ சொல்வது இதைத்தான்...

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி | ஓவியம்: ஜீவா

Published:Updated:
தர்பூசணிப் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
தர்பூசணிப் போராட்டம்

‘பெண்களின் உடை பெண்களின் விருப்பம்’ என்பதை இப்போது வரை ஆணாதிக்கவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கு மிக சமீபத்திய உதாரணம், கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த ஹிஜாப் சர்ச்சை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவை யில் இருக்கிறது.

 கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

2022 பிப்ரவரி வரை, அம்மாநிலத்தின் எம்.ஜி.எம் கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆனால், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவிகளின் உடை குறித்து அந்தந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரே தீர்மானிக்கலாம் என்ற விதியின் அடிப் படையில், எம்.எல்.ஏ. ரகுவீர் பட், ஹிஜாப் அணியத் தடை விதித்ததையடுத்துதான் ஆரம்பித்தது சர்ச்சை. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு, குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்து பிரச்னை கொடுக்க, அது உலகளவில் கவனம் பெற்றது.

ஹிஜாப் அணிவதையோ, அணி யாமல் இருப்பதையோ சம்பந்தப் பட்ட பெண்களே தீர்மானிக்கட்டும். ஆனால், அதை இங்கே மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இங்கே உடுப்பி கல்லூரி விவகாரம் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. மட்டுமல்ல... பெண்கள் அணியும் உடைகளுக்கு அரசியல் சாயம் பூசுவதோ, மதச் சாயம் பூசுவதோ அவசியமற்றது. அநாகரிக மானதும்கூட...

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஃபரூக் டிரெயினிங் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஜோஹர் முனவிர் (Jouhar Munavvir), சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சையில் சிக்கியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அது 2018-ம் வருடம். இஸ்லாமியக் குடும்பத்தார் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில், தான் பணிபுரியும் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஹிஜாப் அணிகின்ற விதம் குறித்து அவர் சொன்ன விமர்சனம் ஒன்று வலைதளங்களில் வெளியாக, மாணவியர் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அவருடைய பேச்சைக் கேட்டு அக்கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளின் பெற்றோர் அதிர்ந்து போயினர்.

‘`நான் 80 சதவிகிதம் பெண்கள் படிக்கும் ஒரு கல்லூரியின் ஆசிரியர். அங்கே பெரும் பான்மை மாணவிகள் இஸ்லாமியர்கள். அவர்கள் பர்தா அணிகிறார்கள்; அதோடு லெக்கின்ஸ் பேன்ட்டும் அணிகிறார்கள். அது வெளியே தெரிகிறபடி தங்கள் பர்தாக்களை உயர்த்திப் பிடித்தபடி கல்லூரி வளாகத்துக்குள் வலம் வருகிறார்கள். மார்பகங்கள் தெரியும்படிதான் ஹிஜாப் அணிகிறார்கள். பெண் களின் மார்பகங்கள் ஆண்களை ஈர்க்கக்கூடிய உறுப்பு. அதனால், அதை மூடித்தான் வைக்க வேண்டும். ஆனால், மாணவிகள் தங்களுடைய மார்பகத்தின் ஒரு பகுதி தெரியுமாறே உடை உடுத்துகிறார்கள். உண்ணத்தகுந்த வகையில் இருக்கிறதா என்று சோதிக்க தர்பூசணிப் பழத்தைத் துண்டுபோட்டுப் பார்ப்பதுபோல, மீதமுள்ள தங்கள் உடல் தாங்கள் காட்டும் மார்பகங்களைப் போலவே இருக்கும் என்பதைச் சொல்வதற்காகவே இஸ்லாமிய மாணவிகள் இப்படி ஆடை அணிகிறார்கள்.’’

அடங்க மறு: 12  - உடலும் உடையும் எங்கள் விருப்பம்! - ‘தர்பூசணிப் போராட்டம்’ சொல்வது இதைத்தான்...

ஜோஹர் முனவிரின் இந்த ஆடியோவை கேட்ட மாணவிகள் மட்டுமல்ல, மாணவர் களும் கொதித்துப் போனார்கள். எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள்; ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். முனவிரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மாணவர் சங்கங் களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தன. கல்லூரி நிர்வாகமோ, ‘முனவிரின் ஆபாச பேச்சு குறித்து யாரும் புகார் அளிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. துறை சார்ந்த விசாரணை மட்டுமே செய்ய முடியும்’ என்றது. அதையடுத்து அதே கல்லூரியைச் சேர்ந்த அமிர்தா என்ற மாணவி கொடுவாலி காவல் நிலையத்தில் முனவிரின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354 A (பெண்களை மானபங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத் தோடு ஆடைகளைக் களைந்து பார்த்தல்), பிரிவு 509 (பெண்களை மானப்பங்கப்படுத்து வது போல் பேசுவது) ஆகியவற்றின் கீழ் முனவிரின் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தலைவி சுஜா, ‘`ஆசிரியர்கள் எங்கள் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டுமேயல்லாது எங்களுடைய உடையையோ, உடலையோ பார்த்து அல்ல’’ என்று காட்டமாக கருத்துச் சொல்ல, ‘பெண் களின் உடல் அமைப்பை தர்பூசணி பழத் தோடு ஒப்பிட்டுப் பேசியது பாலியல்ரீதியான வன்முறை' எனக் கூறி அனைத்து மாணவ, மாணவியரும் தர்பூசணி பழங்களைக் கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். ஆசிரியர் முனவிருக்காக ஆரம்பத்தில் வக் காலத்து வாங்கிய கல்லூரி நிர்வாகம், தர் பூசணிப் போராட்டம் கொடுத்த அழுத்தம் காரணமாக, பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்பு புகார் கமிட்டியில், ஃபரூக் கல்லூரி மாணவியான மினா ஃபர்ஸானாவை உறுப்பினராக்கி விசாரணை நடத்த உத்தர விட்டது.

அதேநேரம், ‘பெண்களின் அங்கங்களை தர்பூசணி பழங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது தவறல்ல; உதவிப்பேராசிரியர் ஜோஹர் முனவிர் சுட்டிக்காட்டியது சரியே. அந்த மாணவிகள் அப்படி உடை உடுத்துவது இஸ்லாமுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒழுக்கக்குறைவானதுமாகும்’ என்று கேரள சட்டமன்றத்தில் பேசினார் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர். முற்போக்கு சிந்தனைக்குப் பெயர்பெற்ற கேரளாவில் இப்படியும் சிலர்?!

முனவிரின் பேச்சுக்கு எதிராக தர்பூசணிப் போராட்டம் நடத்தியதோடு நில்லாமல், அதை அழுத்தமாகப் பதிவு செய்ய தங்கள் மார்பகங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்கள் இரண்டு பெண்கள். கொச்சியில் உள்ள தியாசனா என்னும் பெண்ணியவாதி, தன் மார்பகங்களை தர்பூசணிப் பழத்துண்டுகளால் மறைத்தவண்ணம் எடுக்கப்பட்ட புகைப் படத்தை தன்னுடைய முகநூலில் வெளி யிட்டார். ஆரத்தி என்கிற மாணவியோ, பெண்களைப் பாலுணர்வு பண்டங்களாக நினைக்கும் பழைமைப் பார்வைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தனது நிர்வாணப் படத்தையே தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட் டார். அதற்கு அவருடைய கணவரும் ஆதர வளித்தார். ‘மார்பகங்களை பாலியல்ரீதியாக மட்டுமே பார்க்கும் மக்களை நினைத்து வருத்தப்படுகிறேன். கல்லூரி பேராசிரியராகட் டும், வலைதளங்களைப் பயன்படுத்துவோரா கட்டும், பெண்களுடைய மார்பகங்கள் ஆண்களை ஈர்க்கிறது என்பதாலேயே எங்கள் உடலை அத்துமீறும் நோக்கோடு பார்ப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை’ என்கிறார் ஆரத்தி அழுத்தமாக. தியாசனா, ஆரத்தி இருவரின் புகைப்படங்களை நீக்கிய தோடு, இருவரின் முகநூல் கணக்கையும் முடக்கியது முகநூல் நிறுவனம்.

ஒரு பெண் எப்படி உடை அணிவது என்பதை அவள்தான் முடிவு செய்ய முடியும் என்பதை ஏன் முனவிர் போன்ற ஆண்கள் புரிந்துகொள்ளவில்லை?

ஓர் உதவிப் பேராசிரியரே இப்படிப்பட்ட பார்வையுடன் பெண்களை அணுகினால், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை அவரால் எப்படி உருவாக்க இயலும்?

உடல் உறுப்புகளை பாலியல்ரீதியாகப் பார்க்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட இவரைப்போன்ற ஆசிரியர்களால் பாலியல் பாகுபாடற்ற சமூகத்தை எப்படி உருவாக்க முடியும்?

சமூகத்தின் எதிர்பார்ப்புகளைவிட, தனி நபர்களின் உரிமைகளும் விருப்பங்களும் முக்கியமானவை என்பதை பெண்கள் விஷயத் தில் மட்டும் நாம் ஏன் மறந்து விடுகிறோம்?

முனவிருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தங்கள் உடல்களையே போராட்ட கருவிகளாக்கிய பெண்கள் மீது ஏன் அத்தனை காட்டம்; பெண்கள் உடலுடன் இணைத்துப் பார்க்கப் படும் ஒழுக்கத்தை அவர்கள் கைவிட்டதால் தானே... அதனாலேயே அவர்களை ஒழுக்கம் கெட்டவள், மோசமான நடத்தை உள்ளவள் என விமர்சிப்பது எப்படிச் சரியாக இருக்கும்; குடும்பத்தோடு நாம் பார்க்கும் மிட் நைட் மசாலா படங்கள் ஏற்படுத்தாத பாலியல் வெறியா? ஆனால், பாலியல் வெறியைக் கண்டிப்பதற்காக ஆரத்தியும், தியாசனாவும் பதிவிட்டதைக் குற்றம் என்று விமர்சிக்கிறோம்.

இந்து மதத்தில், `தெய்வம்' என்று போற்றிப் போற்றியே பெண்களை முடக்கி வைப்பார்கள். இஸ்லாம் மதத்தில், `பாதுகாப்பு' என்கிற பெயரில் பொத்திப் பொத்தி பெண்களை முடக்கிவைப்பார்கள். ஒட்டுமொத்தத்தில், 'பெண்கள் அறிவு பெற்றுவிடக்கூடாது' என்பதுதான் உலகில் உள்ள பெரும்பாலான மதங்களின் அடிப்படையே.

ஏ... தாழ்ந்த சமூகமே. நீ கட்டமைத்த ஒழுக்க நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள இன்றைய பெண்கள் தயாராக இல்லை. தனிப்பட்ட மனுஷிகளாக தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்தே தங்களுக்கான நெறி களை வகுத்துக்கொள்ள ஆரம்பித்து

விட்டார்கள் அவர்கள். இதைப் புரிந்து

கொள்ள வேண்டியது சமூகமாகிய உன்னுடைய கடமையே. அதைவிடுத்து, பெண்களை ‘கடமை’ என்னும் ‘கண்ணி’யில் மீண்டும் மீண்டும் சிக்க வைக்கும் வேலையைத் தொடர வேண்டாம்!

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்