Published:Updated:

அடங்க மறு: 14 - பாலியல் இன்பம் கிடைக்கப்பெறாத 13 கோடி பெண்கள்...

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

பெண்ணுறுப்பு சிதைப்பு எதிர்ப்பும், மதங்கொண்ட மதங்களும்

அடங்க மறு: 14 - பாலியல் இன்பம் கிடைக்கப்பெறாத 13 கோடி பெண்கள்...

பெண்ணுறுப்பு சிதைப்பு எதிர்ப்பும், மதங்கொண்ட மதங்களும்

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி ஓவியம்: ஜீவா

கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

ஐம்பத்தி மூன்று வயதான நிலையிலும், ஏழு வயதில் தனக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உடல் பதறுகிறது மசூமா ரனல்விக்கு (Masooma Ranalvi). அன்றைக்கு, ‘வெளியே போகலாம் வா’வென பாட்டி அழைக்க, ‘ஆஹா, தனக்குப் பிடித்த சாக் லேட்டுகளை வாங்கித் தரப் போகிறார்’ என்று துள்ளிக் குதித்துச் சென்றாள் சிறுமி மசூமா.

ஒரு பழைய கட்டடத்துக்குள் அழைத்துச் சென்ற பாட்டி, அங்கு ஓர் அறையில் அவளைப் படுக்க வைத்தார். அவளைச் சுற்றித் திரையிடப்பட்டது. அறிமுகமற்ற வயதான பெண்மணி ஒருவர், சிறுமி மசூமா வின் உள்ளாடையைக் களைந்தார். பயத்தில் துள்ளிய மசூமாவின் சின்னஞ்சிறு தோள்களை அழுத்திப் பிடித்துக்கொண்டார் அவளுடைய பாட்டி.

தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்று மசூமா அழ ஆரம்பிக்க, அவளுடைய கால்களை தன் கால்களால் அழுத்தியபடி, அவளுடைய பிறப்புறுப்பின் ஒரு பகுதியை வெட்டி வீசி, அந்த இடத்தில் கறுப்பு நிற தூளை வைத் தார் அந்தப் பெண். வலியால் துடித்து மயக்கமுற்றாள் சிறுமி மசூமா. அந்த ரணம் ஆறும்வரை, சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் எரிச்சல் தாங்க முடியாமல் துடிப்பாள்.

சிறுமி மசூமா வளர்ந்ததும் தனக்கு நிகழ்ந்தது பெண்ணுறுப்புச் சிதைப்பு என் பதைப் புரிந்துகொள்கிறார். 2015-ல் அதை வெளியுலகத்துக்குச் சொல்கிறார். போரா (Bohra) முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மசூமா, பெண்ணுறுப்புச் சிதைப்பில் இருந்து தங்கள் சமூகப் பெண்களைக் காப்பாற்ற விரும்பிய போரா முஸ்லிம் பெண்களோடு இணைந்து ‘நாம் வெளிப்படையாகப் பேசுவோம்’ (WeSpeakOut) என்ற அமைப்பை உருவாக்கு கிறார். ஆசிய மக்களிடையே நிலவும் பெண் ணுறுப்பு சிதைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராடிக்கொண்டிருந்தது இன்னோர் இயக்கமான சஹியோ (Sahiyo). தற்போது இந்த இரண்டும் பெண்ணுறுப்பு சிதைப்புக்கு எதிராக இணைந்து செயலாற்றி வருகின்றன.

அடங்க மறு: 14 - பாலியல் இன்பம் கிடைக்கப்பெறாத 13 கோடி பெண்கள்...

இந்தியாவில் பெண்ணுறுப்பு சிதைப்பு நடப்பதில்லை என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். சபரிமலை சந்நிதானத்தில் வயது வேறுபாடின்றி அனைத்துப் பெண்களும் நுழைவதற் கான பொதுநலன் வழக்கு முடிவு பெறும் நிலையில், பெண்களுக்கு எதிராக போரா முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் கட்னா அல்லது கஃப்ஸ் (Khatna or Khafz) என்கிற பெண்ணுறுப்பு சிதைப்பு முறையை யும் விசாரிக்க வேண்டும் என்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டபோதுதான், இது தொடர்பான தேடலை ஆரம்பித்தேன்.

பெண் விருத்த சேதனம் (Female circumcision) அல்லது பெண்ணுறுப்பு சிதைப்பு, ஆப்பிரிக்காவிலுள்ள 28 நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுமிகளும், பெண்களுமாக இதுவரை 13 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்ப தாக ஐ.நா சபை தெரிவித்திருக்கிறது.

அதாவது, நாளொன்றுக்கு 6,000 சிறுமிகளின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஷியா முஸ்லிம்களில் ஒரு பிரிவினரான தாவூதி போரா (Dawoodi Bohras) சமூகத்தில் ஏழு வயது சிறுமியருக்குப் பிறப்புறுப்பு சிதைப்பு நடைபெறுகிறது. பிறப்புறுப்பில் பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் கிளிட்டோரிஸ் என்னும் பகுதியின் மேற்பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ வெட்டி விடுகிறார்கள். இப்பிரிவின் மதத் தலைவரான முஃபடால் சைஃபுதீன் (Mufaddal Saifuddin), ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மத நூல்கள் ஆண்களையும், பெண்களையும் மதரீதியாகப் புனிதப்படுத்த இந்த முறையைச் செய்யச் சொல்கிறது’ என்கிறார். சுலைமானி போராக்கள், அலாவி போராக்கள் மற்றும் கேரளாவில் வசிக்கும் சுன்னி முஸ்லிம்களில் ஒரு பிரிவினரும் பெண் ணுறுப்பு சிதைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. இதை மதம் சம்பந்தப்பட்ட நடைமுறை என்று மட்டுமே பார்ப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம்.

கடவுள் பெயரால் / மதத்தின் பெயரால் பெண்களுடைய பிறப்புறுப்பை வெட்டிச் சிதைக்கும் வழக்கம் ஆண்களால் மிக எளிதாக நடத்தப்படுகிறது. பெண்களின் பாலியல் விருப்பத்துக்குத் தாங்கள்தான் உரிமை யாளர்கள் என்று உறுதிப்படுத்திக்கொள்ள, தங்களுக்கு மனைவியாக வரவிருக்கிற பெண், விருத்தசேதனம் என்னும் பிறப்புறுப்பு சிதைப்பைச் செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பிறப்புறுப்பு சிதைப்பு செய்து கொள்ளாத பெண்மீது மோசமானவள், காம வேட்கை கொண்டவள், கெட்டவள், திருமணம் செய்து கொள்ளத் தகுதியற்றவள் என்ற முத்திரைகள் குத்தப்படுவதால், தாய்மார்களும் தங்கள் மகள்களை இந்தக் கொடுமைக்குக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

அடங்க மறு: 14 - பாலியல் இன்பம் கிடைக்கப்பெறாத 13 கோடி பெண்கள்...

பெண்ணுறுப்பு சிதைப்பு எப்படிச் செய்யப் படுகிறது என்று தெரிந்தால் அதிர்ச்சியில் உறைந்து விடுவோம். கிராமங்களில் இருக்கிற மருத்துவச்சிகளும், வயதான பெண்களும் கையில் கிடைக்கிற பிளேடு, கத்தி, கத்தரிக் கோல், உடைந்த கண்ணாடி சில்லுகள், கூர்மையான கல் போன்றவற்றை உபயோகித் தும், சில வட்டாரங்களில் பற்களால் கடித்தும்கூட சிறுமிகளின் பெண்ணுறுப்பைச் சிதைக்கிறார்கள். பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட சிறுமிகள் நோய்த்தொற்று, சிதைந்துபோன சிறுநீர்க்குழாய், ஆறாத புண், தொற்றுநோய், ஹெச்.ஐ.வி, ஹெப்படைட்டிஸ் பி, மலட்டுத் தன்மை, கருப்பையின் உட்பகுதியில் கழலைகள், நரம்புகளில் கட்டிகள், சிறுநீர் கழித்தலில் சிரமம், மாதவிடாய் ரத்தம் வயிற்றிலேயே உறைந்துபோதல் என வாழ்நாள் முழுக்க தாளமுடியா துன்பங்களை அனுபவித் துக் கொண்டிருக்கிறார்கள். சில பெண் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

பெண்ணுறுப்பு சிதைப்பு காரணமாக, பாலியல் இன்பம் கிடைக்கப்பெறாத பதிமூன்று கோடி பெண்கள் இன்றைக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவிலும், அமெரிக்க ஆப்பிரிக்க மக்களிடையே பெண் ணுறுப்பு சிதைப்பு நடை பெறுகிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதா நாயகியாக நடித்த ‘வாரிஸ் டைரி’யின் ‘பாலைவனப் பூ’ புத்தகமே அதற்குச் சாட்சி.

இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?

மசூமா ரனல்வியின் `நாம் வெளிப்படையாகப் பேசுவோம்' அமைப்பும், `சஹியோ'வும் இணைந்து பெண்ணுறுப்பு சிதைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க,

2015-ல் ஓர் இணைய முகப்பை உருவாக்கினர். அவர்களே எதிர்பாராத அளவுக்கு ஆயிரக் கணக்கான மனுக்கள் வந்து குவிந்தன. அதையடுத்து 2017 மே மாதம், பெண்களின் பிறப்புறுப்பு சிதைத்தலைத் தடுக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த சுனிதா திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த நடைமுறை குறித்து அறிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை, சிறுபான்மை நலத்துறை ஆகியவற்றுக்கும், இவ்வழக்கம் நடைமுறையில் உள்ள கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அன்றைய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், `தற்போதைய சட்டத்தின்படி பெண் ணுறுப்பு சிதைப்பு தண் டனைக்குரிய குற்றம்' என்றார்.

கே.கே.வேணுகோபால் மற்றும் போரா முஸ்லிம் வழக்கறிஞர் ஆகியோரின் வேண்டுகோளின்படி, 2018-ல் வழக்கு, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்பட்டது. தற் போது, பெண்களுடைய உரிமைகள் குறித்து விசா ரிக்கும் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பப்பட்டு விசாரணைக்காகக் காத் திருக்கிறது.

இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புகையில் நீதிபதிகள் எழுப்பிய கேள்வி, அனைத்து மதங்களிலும் இருக்கும் ஆணாதிக்கவாதிகளுக்கு விழுந்த சம்மட்டி அடி.

`மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சடங்குகள் நடைபெறுவது சமூகத்துக்குத் தேவையான ஒன்றுதானா?' என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, இன்று வரையில் யாரும் பதில் தந்தபாடில்லை!

ஏ… ஆணாதிக்கவாதிகளே...

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சாதி, மதங்களின் பெயராலும், மதப் புத்தகங்களின் பெயராலும் உங்கள் சுய நலத் துக்காக பெண் இனத்தை காவு கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்?!

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்