Published:Updated:

அடங்க மறு - 6 - இருக்கை உரிமை, இயற்கை உபாதை... ஆண்களுக்காகவும் போராடி வென்ற பெண்கள்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்... வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

அடங்க மறு - 6 - இருக்கை உரிமை, இயற்கை உபாதை... ஆண்களுக்காகவும் போராடி வென்ற பெண்கள்!

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்... வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவின் துணிக்கடைகளிலெல்லாம் மக்கள் வெள்ளம்... கழிவறைக்குச் செல்லக்கூட நேரம் கிடைக்கா மல் நாள் முழுக்க வேலையே கதியெனக் கிடந்த பெண் விற்பனையாளர் அனிதாவுக்கு தாங்க முடியாத கால்வலி. ஆனால், அதைப் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. காரணம்... ஊரறிந்ததுதானே! விற்பனையாளர்கள் உட்கார்வதை, கடை முதலாளிகள் அனுமதிப்பதில்லை. இருக்கை யும் வழங்கப்படுவதில்லையே.

கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

இருக்கைகளில் அமர்ந்திருந்த வாடிக்கை யாளர்கள், ‘எந்தத் துணியை எடுக்கலாம்; என்ன நிறத்தில் எடுக்கலாம்' என்று உடன் வந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த சில நொடி நேரத்தில், அப்படியே பின்பக்க சுவரில் சாய்ந்து நின்றாள் அனிதா. அந்த நேரம் பார்த்து சரியாக அங்கே வந்த தளத்தின் மேலாளர், ‘வெட்டியா நிக்காதே; வேலையைப் பாரு’ என்று அத்தனை பேரின் முன்னாலும் அதட்ட, கூனிக்குறுகிப்போனாள் அனிதா.

அந்த மாதம் அவளுடைய ஊதியத் தில் நூறு ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. வெளிநாட்டிலிருந்தபடியே கேமரா வழியாகக் கண்காணித்த முதலாளி, அந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். பிரமாண்டமான அந்தத் துணிக் கடையின் வேலையை உதறிவிட்டு, சிறிய கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள் அனிதா.

45 வயதான பீனாவின் நிலைமை இன்னும் வேதனையானது. ஒரு பெரிய துணிக்கடையில் தன்னுடைய 25-வது வயதில் விற்பனையாளராகச் சேர்ந்தார். கடையில் பெண்களுக்கென்று கழிவறைகளே கிடையாது. மிகப்பெரிய அடுக்குமாடி வளாகத்தில்தான் அந்தத் துணிக்கடை. ஒட்டுமொத்தமாக இருக்கும் ஓரிரு கழிவறைகளைத்தான், அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தார்கள். விளைவு, கழிவறைகள் எப்போதும் அசுத்தமாக இருக்க, கழிவறைக்குச் செல்வதைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறாள் பீனா. `தண்ணீர்க் குடித்தால்தானே சிறுநீர் கழிக்க வேண்டி யிருக்கும்’ என்கிற எண்ணத்தில், தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித் தாள். விளைவு... சிறுநீர்த் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை வரை செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆண்டுக்கணக்கில், நாள் முழுக்க நின்றபடியே வேலை பார்த்ததால், காலில் ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ பிரச்னையும் வந்து விட்டது பீனாவுக்கு.

‘20 வருஷத்துக்கும் மேல சேல்ஸ் கேர்ளா வேலை பார்த்தும் மெடிக்கல் இன்ஷூரன்ஸும் பென்ஷனும் கொடுக்கவே இல்ல’ என்று கண்ணீர் சிந்துகிறார் 43 வயதான தேவி.

அடங்க மறு - 6 - இருக்கை உரிமை, 
இயற்கை உபாதை... ஆண்களுக்காகவும் போராடி வென்ற பெண்கள்!

வேலை பார்க்கிற துணிக்கடை களில் கழிவறை இல்லாததால் அருகிலுள்ள உணவகங்களின் கழிவறைகளை நாட வேண்டி யிருப்பது; நாளொன்றுக்கு 12 மணி நேரம் நின்றபடியே வேலைபார்ப்பது; உட்கார இருக்கை மறுக்கப்படுவது; 12 மணி நேர வேலை நேரத்தில் இரண்டே இரண்டு முறைதான் கழிப்பறை செல்வதற்கு அனுமதிக்கப்படுவது என பெண்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லிமாளாது. அதிலும் மாதவிடாய் நாள்களும் கர்ப்ப காலமும் இன்னும் துயரமானவை.

எல்லா பிரச்னைகளுக்கும் என்றாவது தீர்வு கிடைக்குமல்லவா? சிறுநீரை அடக்கி, கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த பல ஆயிரம் பெண் விற்பனையாளர்களின் வேதனை களுக்கும் தீர்வு கிடைத்தது. எப்படிக் கிடைத்தது என்று சொல்வதற்கு முன், விஜி பலித்தொடி என்ற பெண்ணை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

விஜி, அடிப்படையில் ஒரு தையல் கலைஞர். வணிக வளாகமொன்றின் தையல் கடையில் வேலைபார்த்தவர். கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டவருக்கு, ‘மூத்திரத்தை அடக்கிக்கோ; இல்ல தண்ணி குடிக்கிறதை குறைச்சுக்கோ’ என்று கேலியாக அறிவுரை வழங்கினார் கடை உரிமையாளர். அவமான மும் ஆத்திரமுமாகக் கடையைவிட்டு வெளி யேறிய விஜியின் மனதில் அந்த நொடி விழுந்தது, ‘பெண் கூட்டு’ இயக்கத்துக்கான விதை. இது நடந்தது... 2007-ம் ஆண்டில். தையல் கலைஞராக வேலைபார்த்து வந்த போதே, முன்னாள் மாவோயிஸ்ட்டான போராளி அஜிதாவோடு இணைந்து ‘அன்வேஷி’ என்ற அரசு சாரா அமைப்பின் கீழ் சமூகப் பிரச்னைகளை எதிர்த்து வந்தவர் விஜி. அந்தத் தைரியத்தில் பெண் விற்பனை யாளர்களை ஒன்று திரட்டிய விஜி, பணிபுரியும் இடத்தில் உட்காரும் உரிமை கேட்கும் (இருப்பு சமரம் - Right to Sit) போராட்டத்தை ஆரம்பித்தார். கடை உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது; பலன் கிடைக்க வில்லையென்றால் தெருவில் இறங்கிப் போராடுவது என கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக சக பெண்களை வழிநடத்திய படி போராடினார் விஜி.

கோழிக்கோட்டிலுள்ள சில்லறை வர்த்தக வணிக வளாகங்களில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்களும், தூய்மைப் பணியாளர் களும் இணைந்து ‘அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம்‘ என்ற பதாகையின் கீழ், ‘எங்களுக்குக் கழிவறைகள் வேண்டும்' என்று முழக்கமிட ஆரம்பித்தனர். ‘பெண் கூட்டு’ இயக்கத்தின் தலைவி விஜியின் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இப்போராட்டம் கேரளா எங்கும் பரவியது. இந்தியாவில் அமைப்புசாரா பெண் தொழிலாளருக்கென உருவான முதல் பெண் தொழிலாளர் சங்கம் ‘பெண் கூட்டு’ என்கிற இந்த அமைப்புதான். இவர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்த அரசியல் கட்சி களைச் சேர்ந்த எந்தவொரு தொழிற் சங்கமும் முன்வரவில்லை என்பது பெருங்கொடுமை.

2014-ம் ஆண்டு திருச்சூரிலுள்ள கல்யாண் புடவைக் கடையில் வேலைபார்த்து வந்த பெண் விற்பனையாளர்கள் உட்காரும் உரிமை, கழிவறை செல்லும் உரிமை கேட்டு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். அது தேசிய அளவில் அனைவரின் கவனத் தையும் ஈர்த்தது. அதேசமயம், ‘உட்காரணும், கழிவறைக்கு போகணும்னா வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே’ என்று கேலி பேசிய கடை முதலாளிகள், போராடிய பெண்களை பணிநீக்கம் செய்தனர். ஆனாலும் பெண்கள் பின்வாங்கவில்லை. தொடர்ச்சி யான போராட்டங்கள் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்ததோடு, கடைகள் மற்றும் பெரும் வணிக வளாகங்களில் பணிபுரி வோருக்கான கழிவறைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதையும் தொழிலாளர் விதிகள் மீறப்படுவதையும் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

அடங்க மறு - 6 - இருக்கை உரிமை, 
இயற்கை உபாதை... ஆண்களுக்காகவும் போராடி வென்ற பெண்கள்!

உண்மையில், கேரளாவில் மட்டும்தான் பெண் விற்பனையாளர்கள் இப்படியெல்லாம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்களா? இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைமைதான். இயக்குநர் வசந்த பாலனின் ‘அங்காடித்தெரு’ படத்தைப் பார்த்தபின் விற்பனையாளர்களைப் பார்த்த நமது பார்வை மாறிப்போனதையும், அவர்கள் பால் கருணை சுரந்ததையும் மறக்க முடியுமா?

சில்லறை வணிக வளாகங்களில் பணி புரிவோரில் பெரும்பான்மையினர் பெண் களே. ஆனால், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு என்பது அரிது. மோசமான பணிச்சூழல், குறைவான ஊதியம், வேலையை விட்டு நின்றுவிட்டால் பணிப்பயன்கள் ஏதுமற்ற நிலை என்று பிரச்னைகளின் பட்டியல் மிக நீளமானது. வேலைபார்க்கும் பெண்களில் 7 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தியாவில் பணிப்பாதுகாப்பு இருக்கிறது. இதை எந்தவோர் அரசாங்கமும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதே யதார்த்தம்.

ஒரு நபர் உடல் நொந்தால் உட்காரவும், கழிவறைக்குச் செல்லவும், குடிநீர் அருந்தவும் போராட வேண்டியிருப்பது எத்தகைய கொடுமை? இந்த அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்த நினைக்கும் பெண்ணின் ஒவ்வோர் அசைவும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது மனித உரிமை மீறலல்லவா? சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடைகளில் பிளாஸ்டிக் பைகளை இணைத்துக்கொள்ள அறிவுறுத்தும் கொடுமை சில இடங்களில் நடக்கிறது. இதெல்லாம் அராஜகத்தின் உச்சமல்லவா? ஆண் விற்பனை யாளர்கள் தங்கள் கைகளில் சிறிய பாட்டிலை வைத்துக்கொண்டு அதில் சிறுநீர் கழிப்பதாக வந்த செய்திகளின் பின்னணியில் இருக்கிற வேதனை இப்போதாவது புரிகிறதா?

இவற்றையெல்லாம் எதிர்த்துதான் அமைப்புசாரா பெண் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத் தது. இதையடுத்துதான், ‘குறைந்தபட்ச ஊதியம் பத்தாயிரம்; எட்டு மணி நேரம் மட்டுமே வேலை; உட்காருவதற்கு இருக்கை தர வேண்டும்; உணவு மற்றும் தேநீர் இடைவேளைகள், தேவைப்பட்ட நேரத்தில் கழிவறை செல்வதற்கான உரிமை உறுதிப் படுத்தப்பட வேண்டும்’ என்று 2018-ம்

ஆண்டு புதிய சட்டத்தை அமலாக்கியது கேரள அரசு.

தமிழக ஜவுளிக்கடைகளிலும்கூட இதே நிலைதான். இந்தப் பணியாளர்களின் நிலைமை குறித்து ஆட்சியிலிருந்த அனைத்து அரசுகளுக்கும் தெரியுமென்றாலும், தேர்தல் நிதிக்காக கடை முதலாளிகளிடம் கையேந்தும் அரசியல் கட்சிகள், அங்கு வேலைபார்க்கும் விற்பனையாளர்களுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கேரளாவில் உட்காரும் உரிமை கிடைத்த பிறகு, இன்றைய தமிழக அரசு சென்ற வருடம் செப்டம்பர் 13-ம் தேதி, விற்பனையாளர்களுக்கு இருக்கை, கழிவறை நேரம், தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை மற்றும் குடிநீருக்கான உரிமை ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தும் மசோதா வைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.

பெண்களுடைய போராட்டம்... ஆண் களுக்கும் சேர்த்தே உட்காரும் உரிமையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism