Published:Updated:

அடங்க மறு - 7 - தாய்ப்பால் ஊட்டத் தடை... துணிந்த பெண்கள், வளைந்த சட்டம்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

அடங்க மறு - 7 - தாய்ப்பால் ஊட்டத் தடை... துணிந்த பெண்கள், வளைந்த சட்டம்!

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

அன்றைய தினம் ஆஸ்திரேலிய நாடாளு மன்றத்தில் நுரையீரல் கறுப்புப் பூஞ்சை நோய் பற்றிய தீர்மானம் குறித்து உரையாற்றியே ஆக வேண்டும். கையிலோ தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தை. துணிந்து முடிவெடுத் தார் லாரிசா வாட்டர்ஸ். குழந்தைக்கு தாய்ப் பாலூட்டியபடியே உரை நிகழ்த்திய லாரிசா, `நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போதே தாய்ப்பாலூட்டிய முதல் நாடாளுமன்ற உறுப்பினர்' என்ற பெருமையைப் பெற்றார். உலகின் முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் லாரிசாவின் அந்த முதல் முயற்சியைக் கொண்டாடின. இது நிகழ்ந்தது 2017-ல்.

‘நம்ம கிராமங்கள்ல பசிச்ச குழந்தைக்கு பொதுவெளியில பால் கொடுத்துக்கிட்டு தானே இருக்கோம், இதுல கொண்டாட என்ன இருக்கு’ என்று உங்களுக்குத் தோன்றினால், உலகம் முழுக்க பொது வெளியில் தாய்ப்பாலூட்டுவதற்கு எதிராக இருக்கிற மனப்பான்மையை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

அதே ஆஸ்திரேலியாவில், 2003-ல், கிரிஸ்டீ மார்ஷல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், பிறந்து 11 நாள்களே ஆன தன் பிஞ்சுக் குழந்தையுடன் வந்த போது நாடாளுமன்ற அவையில் அனுமதிக்கப்படவில்லை. ‘நாடாளு மன்ற உறுப்பினர் அல்லாத வேறு நபர் அவைக்குள் அனுமதிக்கப்பட மாட் டார்கள்’ என்பதே அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டெல்லா க்ரீஸிக்கு குழந்தை பிறந்து சரியாக 15 நாள்களே ஆயிருந்தன. அவருடைய தொகுதி தொடர்பாக அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய கட்டாயம் ஸ்டெல்லாவுக்கு. ஆனால், மக்களவைக்குள் குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஸ்டெல்லா நாடாளுமன்றத் தில் உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவருடைய குழந்தை தாய்ப்பாலுக்காக அழுதுகொண்டிருந்தது. தாய்ப்பால் ஊட்டும் உரிமை ஸ்டெல்லாவுக்கு நாடாளுமன்றத்துக் குள்ளேயே மறுக்கப்பட்டது.

லண்டனின் பிரபலமான கிளாரிட்ஜ் ஹோட்டல் ஊழியர்கள், தங்கள் உணவகத்தில் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த தாயிடம், ‘எங்கள் ஹோட்டல் விதிப்படி மார்பகங்களை மூடாமல் நீங்கள் பாலூட்டக் கூடாது’ என்று தடுத்தனர். இந்தச் செய்தி ஊடகங்களில் பரவ, பிரதமரின் அலுவலகத்திலிருந்து ‘குழந்தையின் பசியாற்றிக் கொண்டி ருக்கிற தாயின் மீது இப்படிப்பட்ட விதியை விதிப்பதே தவறு’ என்கிற தகவல் வந்தது. அதையடுத்து அந்த உணவகத்தின் மேலாளர், ‘தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட தங்கள் உணவகத்தில் எந்தத் தடையுமில்லை’ என்று அறிவித்தார். இது நடந்தது 2014-ல்.

அமெரிக்க உணவகம் ஒன்றில் தன்னுடைய ஏழு மாதக் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தார் கென்டகியைச் சேர்ந்த புரூக் ரேயான் என்ற பெண். ‘மார்பு தெரிய பாலூட்டுவது அநாகரிகம்' என்று உணவகத் தின் மேலாளர் குறிப்பிட, பாலூட்டும் உரிமை சட்ட நகலை அவரிடம் காட்டி யிருக்கிறார் புரூக். ஆனாலும், அவரை குழந்தையுடன் உணவகத்தை விட்டு வெளியே அனுப்பியது நிர்வாகம். அதைச் சமூக ஊடகங்களில் புரூக் பதிவிட, அடுத்த நாளே அந்த உணவகத்தின் முன் மார்பு தெரிய தங்களுடைய குழந்தைகளுக்குப் பாலூட்டி, உணவகத்தின் மனித உரிமை மீறலைக் கண்டித்து குரல் எழுப்பினர் பல தாய்மார்கள்.

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான டார்கெட் ஸ்டோரின் பின்புறத்தில் அமர்ந்து பாலூட்டிய மிச்சல் ஹாக்மேன் என்ற பெண்ணிடம், ‘அநாகரிக மாக உடலுறுப்பைக் காட்டக் கூடாது; டிரையல் ரூமில் பாலூட்டுங்கள்’ என்று ஊழியர் ஒருவர் சொன்னதை யடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் அந்நிறுவன வாசலில் பகிரங்கமாகப் பாலூட்டி தங்களின் எதிர்ப் பைத் தெரிவித்தனர்.

கிருஹலஷ்மியில்...
கிருஹலஷ்மியில்...

ஃபுளோரிடா மாகாண சட்டப்படி, ஒரு தாய் தன் னுடைய குழந்தைக்கு பொது இடங்களில் தாய்ப்பாலூட்ட லாம். அப்படி பாலூட்டும் போது மார்பகங்களோ, முலைக்காம்புகளோ தெரிந்தாலும் யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால், அதே மாகாணத்தில் உணவகமொன்றில் தாய்ப்பாலூட்டிய அனலா லெய்ட்ச்மேன் என்பவரை, `அடுத்த மேஜையில் அமர்ந் திருப்பவர் ஆட்சேபிக்கிறார். உங்கள் மார்பை மறைத்துக்கொள்ளுங்கள்’ என்கிறார் ஊழியர் ஒருவர்.

உணவகத்தின் சட்டமீறல் குறித்து தங்களுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்தனர் அனலா தம்பதியர். நூற்றுக்கணக்கான பெண்கள் உணவகத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, சம்பந்தப்பட்ட உணவகம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டதோடு, குறிப்பிட்ட ஊழியரை பணிநீக்கம் செய்துவிட்டதாகவும் அறிவித்தது.

பொது வெளியில் தாய்ப்பாலூட்டுவதற்கு எதிராகத் தொடர்ச்சியாக நடந்து வருகிற இத்தகைய செய்கைகளை எதிர்த்து, நூற்றுக்கணக்கான பெண்கள் அமெரிக்கா வின் முக்கியமான தெருக்களில் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டி, பாலூட்டுகையில் மார்பும் முலைக்காம்பும் தெரிவது இயல்பானதே என்பதை வெளிப் படுத்தினர். அமெரிக்க தாய்மார்களின் இந்தப் போராட்டம் பெரும் வெற்றிபெற்றது.

அடங்க மறு - 7 - தாய்ப்பால் ஊட்டத் தடை... துணிந்த பெண்கள், வளைந்த சட்டம்!

இந்தியாவில் நிலைமை எப்படியிருக்கிறது..?

‘வெறித்துப் பார்க்காதீர்கள். நாங்கள் பாலூட்ட வேண்டும்' என்ற தலைப்புடன் `கிருஹலக்ஷ்மி' என்ற மலையாளப் பத்திரிகையின் அட்டைப்படத்தில் வந்த தாய்ப்பாலூட்டும் புகைப்படம், சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக விமர்சிக்கப் பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படை யிலும், பெண்களை ஆபாசமாகச் சித்திரிப் பதைத் தடை செய்யும் சட்டத்தின் அடிப் படையிலும், அரசியல் சாசனத்தின் ஷரத்து 39 (c)(4)-ன் அடிப்படையிலும் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தின் மீதும், அட்டைப் படத்தில் இடம்பெற்ற பெண்ணின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஃபெலிக்ஸ் என்பவர் ரிட் மனுத் தாக்கல் செய்தார்.

இந்தச் சம்பவங்களை வாசிக்கையில், ‘பொதுவெளியில் பெண்கள் தாய்ப்பாலூட்ட அனுமதி இல்லையா; குழந்தையின் பசி நேரத்தில் தாய்ப்பாலூட்ட இடமும் விதிகளும் தடையாக இருப்பது மனித உரிமை மீறல் அல்லவா; தாய்ப்பாலூட்டும் பெண்களை வெறிக்கும் சமூகத்தை எதிர்த்துக் கேள்வி யெழுப்புகிறவர்கள் மீது நடவடிக்கையா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன அல்லவா?

கிருஹலஷ்மி பத்திரிகை மீது தொடுக்கப் பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதி மன்றம், ‘அந்த அட்டைப்படம் ஆபாசம் என்ற வரையறைக்கு உட்படாதது. ‘வெறித்துப் பார்க்காதீர்கள், நாங்கள் பாலூட்ட வேண்டும் என்ற தலைப்பிலும் ஆபாசம் இல்லை. இந்திய வரலாறு நெடுகிலும் மனித உடலின் அவயவங் களை வெளிப்படுத்தும் சிற்பங்களையும் கடவுள் உருவங்களையும் படைத்துக் களித் திருக்கிறோம். சமூகத்தின் ஒழுக்கத்தை பாதிக்கிற வகையில் அந்த அட்டைப்படமோ, அதன் தலைப்போ இல்லை. தாய்ப்பாலூட்டும் காட்சி எந்த விதத்திலும் ஆபாசமானது இல்லை’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது.

மாற வேண்டியது சமூகத்தின் பார்வை மட்டுமே!

- போர் தொடரும்...

பாலூட்டுதல்... ஒரு பார்வை!

உலகெங்கிலும் உள்ள தாய்மார்களில் 63 சதவிகிதம் பேர் மட்டுமே தாய்ப்பாலூட்டுவ தாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தாய்ப்பாலூட்ட தயாராக இல்லை. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் தாய்ப்பாலூட்ட மறுப்பதால், உலகிலேயே அந்நாட்டில்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். கனடாவில், பெண்களுக்கு பாலூட்டுவதற்கென்று பணியிடங்களில் இடைவேளைகள் வழங்கப்படுவதில்லை. சீனாவில் 2010-க்குப் பிறகு, பொது இடங்களில் தாய்ப்பாலூட்ட தடை விதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, அங்கே பொது இடங்களில் பாலூட்டும் மையங்களை அமைக்க பெண்கள் கோரிக்கையெழுப்ப, அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

மலேசியா, நேபாளம், நார்வே, போலந்து, ஸ்பெயின், பிரிட்டிஷ், கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஒன்டாரியோ போன்ற நாடுகளில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை ஊக்கப்படுத்துவதோடு பணியிடங்களில் தாய்ப்பாலூட்ட இடைவேளையும் வழங்கப்படுகிறது. அது மட்டுமன்றி, பால்பவுடர் விளம்பரங்களையும் இந்நாடு தடை செய்திருக்கிறது. சவுதி அரேபியாவில், பெண்கள் தங்கள் உடல் பாகங்கள் தெரிய வெளியே வருவது தடை செய்யப்பட்டபோதிலும், பொது இடங் களில் வெளிப்படையாகத் தாய்ப்பாலூட்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

தைவானில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதை ஊக்கப்படுத்த 2010-ல் சட்டமே கொண்டுவரப்பட்டுள்ளது. பாலூட்டுவதை யாராவது தடுத்தாலோ, ஆபாசமாகப் பேசினாலோ அந்நாட்டில் அபராதம் விதிக்கப்படும். தவிர, பணியிடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டால், விதித்தவர் அந்நிறுவனத்தின் முதலாளியே என்றாலும் 6,000 தைவான் டாலர்களை அபராதத் தொகையாகக் கட்ட வேண்டும்.

அயர்லாந்தில் ‘ஈக்வல் ஸ்டேட்டஸ்’ சட்டப்படி, ‘இந்த இடத்தில் தாய்ப்பால் ஊட்டக் கூடாது; துணியால் மறைத்துக்கொண்டுதான் பாலூட்ட வேண்டும்' என்று வற்புறுத்தினால், அது தண்டனைக்குரிய குற்றம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism