Published:Updated:

அடங்க மறு - 8 - இரவும் தெருவும் பெண்களுக்கும் சொந்தமானவையே!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

அடங்க மறு - 8 - இரவும் தெருவும் பெண்களுக்கும் சொந்தமானவையே!

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு
கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

உலகையே உலுக்கிய நிர்பயா வழக்கை மனிதம் உள்ள யாராலும் மறக்க முடியாது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் ஒரு பேருந்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, கொடூரத் தாக்குதலுக்கும் உள்ளாக்கப் பட்டார் நிர்பயா. சில நாள்களிலேயே பரிதாபமாக இறந்தும் போனார்.

இந்தச் சம்பவம் குறித்த செய்தி வெளி யானதும், நாடு முழுக்க போராட்டத்தீ பற்றிக்கொண்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் அதற்கான தேவைகளும் பரபரப்பாக முன்வைக்கப்பட்டன. அதற்கென நீதிபதி வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைப் பரிந்து ரைத்தது. அவை ஏற்றுக்கொள்ளப் பட்டு, உடனடியாக சட்டமாகவும் இயற்றப்பட்டன. இவையெல்லாம் இந்தியப் பெண்களிடையே நம்பிக்கையை விதைக்கும் என்பது தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், நம்பிக்கை இன்னமும் தளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்!

தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற அறிக்கை, ‘இன்னமும் இந்தியப் பெண்கள் பாதுகாப் பாக வாழ முடியவில்லை; பெண்களைப் பின்தொடர்வது அதிகரிக்கவே செய்கிறது, பாலியல் பார்வைகள் குறைந்தபாடில்லை; பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் களும் அதிகரித்துக்கொண்டேதான் இருக் கின்றன’ என்று உண்மையை உடைத்துப் போட்டிருக்கிறது.

இந்திய மக்கள்தொகையில் 50 சதவிகிதத் துக்கும் மேலாக இருப்பவர்கள் பெண்கள். ஆனால், இன்னமும்கூட பொதுவெளிகளில் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை... எப்படிப் பட்ட கொடுமை இது?

பள்ளி மாணவிகளில் ஆரம்பித்து வேலை பார்க்கும் பெண்கள் வரை குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு திரும்பியாக வேண்டுமென்ற அச்சத்துடன்தான் இன்றளவிலும் விரைகிறோம்.

கடற்கரை, பூங்கா, சினிமா தியேட்டர் என்று நம்மை சற்று ஆசு வாசப்படுத்தும் பொது இடங் களுக்குக் கிளம்புகையில் பாதுகாப்பு குறித்துதான் மிகவும் யோசிக்கி றோம்.

ஆண்களைப் போலவே பெண்களும் பொதுவெளிகளில் காலநேரமின்றி சுதந்திர மாக இருக்க முடிவது எக்காலத்தில் சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறோம்.

இந்தியாவைப் பீடித்திருக்கிற பெருவியாதி, ஆணாதிக்க மனோபாவமும் அதை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் பட்டிருக்கும் கலாசாரமும்தான். அந்த மனோபாவம்தான் பெண்களை வெறித்துப் பார்ப்பது, ஆபாசமாகப் பேசுவது, வாகனம் ஓட்டிச் செல்லும் இளம்பெண்களை மறித்து இடைஞ்சல் செய்வது, அவர்கள் உடலை உரசுவது, ஆடைகளைப் பிடித்திழுப்பது அல்லது களைவது என்று அராஜகம் செய்ய வைக்கிறது.

இந்த ஆணாதிக்க அழுத்தம், நம் பெண் களின் உடல்மொழியையே மாற்றிவிட்டது. வெறிக்கும் ஆண்களின் பார்வையிலிருந்து மார்பகங்களை மறைக்க கூன் போடுகிறார்கள்; ஆளரவமற்ற இடங்களில் ஓர் ஆணையோ, கும்பலையோ கண்டால் மிரள்கிறார்கள்; போதாக்குறைக்கு நம் குடும்பங்களும் ஆணா திக்கத்துக்கு பயந்து, ‘உங்களோட பாது காப்புக்குத்தான் சொல்றோம்' என்று சொல்லிச்சொல்லியே பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தை முடக்கி வைக் கின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு, அரசியல் சாசனத்தின் பிரிவு 19(d) அளித்துள்ள சுதந்திரமாக நடமாடும் உரிமையைச் செயல் படுத்தும் வகையில் பொதுவிதிகளை அரசு உருவாக்குவதுதான். பெண்களுடைய பாது காப்பையும் தேவைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டமிடல் நடக்கும்போது தான், பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்.

அடங்க மறு - 8 - இரவும் தெருவும்
பெண்களுக்கும் சொந்தமானவையே!

அதென்ன பாலின இடைவெளி குறியீடு?

நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்பு, கல்வி, ஆரோக்கியம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை உலக பொருளாதார மையம் ஆய்வுசெய்து ஆண்டு தோறும் அறிக்கை வெளியிடும். சென்ற ஆண்டு, இந்த ஆய்வில் பங்கேற்ற 156 நாடுகளில் இந்தியா 140-வது இடத்தில் இருக்கிறது.

ஆக, பெண்களை முடக்கும் விஷயத்தில் உலக அளவில் முதலிடத் தைப் பிடிக்கும் நாடு களுடன்தான் இந்த டிஜிட்டல் இந்தியாவும் போட்டிபோட்டுக்கொண் டிருக்கிறது. இத்தகைய சூழல் நிலவும் இந்திய நாட்டை, உலக நாடுகள் எந்த இடத்தில் வைக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நிலையில், பெண் களாகவே துணிந்தெழ ஆரம்பித்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. ‘பொதுவெளிகள் எங்களுக்குமானவை’ என்று இன்றைய பெண்கள் உரத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் கல்வியையும் வேலைவாய்ப்பையும் தேடி வீட்டைவிட்டு வெளியே வந்த பெண்கள், இந்த நூற்றாண்டில் ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பொதுவெளிகளில் உத்தர வாதப்படுத்துவதை நிலைநாட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் 14 முதல் 16 வரை பொதுவெளிகளை பெண் களுக்கானதாக மாற்றும் முயற்சிகள் பிரசாரங் களாக, போராட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

‘இரவு நேரத்தில் வெளியே சென்றதால்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள்’ என்று நிர்பயாவின் மீது பழிசுமத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாக்கிய அந்த ஆணாதிக்கக் கருத்தை, எழுத்துகள், பிரசாரங்கள் மற்றும் போராட்டங்கள் வழியே முறியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பெண்கள்.

ஷில்பா பத்கே, சமீரா கான், ஷில்பா ரானடே ஆகிய மூன்று பெண்ணியவாதிகள் இணைந்து எழுதிய ‘ஏன் திரிய வேண்டும்; மும்பை தெருக்களில் பெண்கள் எடுக்கும் ரிஸ்க்' (Why Loiter? Women and Risk on Mumbai Streets) என்ற புத்தகம், பெண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நினைக்கிற சமூகம், பொதுவெளிகளை பெண்களுக்குப் பாதுகாப்பானதாக வைக்க ஒருபோதும் திட்டமிடுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

பெண்ணியவாதி நேஹா சிங் 2014-ல் ஆரம்பித்த ‘ஏன் திரிய வேண்டும்?’ (Why loiter) என்ற பிரசாரம் இரவு நேர நடை, ரயில் பயணங்களில் அந்தாக்ஷரி, பூங்காக் களில் தூக்கம் எனப் பெண்களின் பொது வெளியை இன்னும் விரிவுபடுத்த முயன்று கொண்டே இருக்கிறது.

மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ள இந்தப் பிரசாரத்தில் இதுவரை ஏறத்தாழ 1,000 பெண்களுக்கு மேல் பங்கேற்றுள்ளனர்.

அடங்க மறு - 8 - இரவும் தெருவும்
பெண்களுக்கும் சொந்தமானவையே!

‘இந்த நடைப்பயணங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் இரவு தங்குதல் நீண்ட காலமாகத் தங்களிடமிருந்த பாதுகாப்பு குறித்த அச்சத்தை போக்கிவிட்டது’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்ற பெண்கள். பெண் களின் இந்த இரவு நேர பிரசாரங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து ஆரம்பத்தில் கேள்வி கேட்ட காவல்துறையினரும் தற்போது ‘இது பெண்களின் உரிமைக்கான இயக்கமே’ என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து மற்ற பெண்களிடமும் எடுத்துக் கூறுவதாக அவர்கள் கூறியிருப்பதே இந்தப் பிரசாரத்துக்கான வெற்றி.

பெங்களூரைச் சேர்ந்த ‘வெற்றுச் சத்தம்' (Blank Noise) எனும் அமைப்போ, ‘உறங்கு வதற்கான சந்திப்பு’ (Meet to sleep) என்ற ஹேஷ்டேக்கை உரு வாக்கி, பிரசாரத்தின் ஒரு பகுதியாக இரவில் பூங்காக்களில் உறங்கும் முன்னெடுப்பைச் செய்தது.

டெல்லி மாநக ராட்சியோடு இணைந்து ‘சேஃப்டி பின்’ (Safetipin) என்ற அமைப்பு இரண்டு நாள்கள் நடத்திய இரவுத் திருவிழா, ‘தெருக் களும் பூங்காக்களும் எப்போதும் எங்களுக் கானவை என உணரச் செய்தது’ என்று சிலிர்த் தார்கள் அதில் பங்கேற்ற பெண்கள்.

வாருங்கள் சகோதரி களே... பௌர்ணமி இரவில் கடற்கரையில் கால்பதித்து, ஓடிப் பிடித்து விளையாடி, வானத்தைப் பார்த்தபடி படுத்து, நட்சத் திரங்களை எண்ணி, மனதுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி... இந்திய தேசத்தின் பொதுவெளிகளில் நம்முடைய உரிமைகளை உறுதிப்படுத்துவோம்.

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism