Published:Updated:

அடங்க மறு - 9 - மணிப்பூர் மகளும் உலகின் நீண்ட போராட்டமும்..!

இணைந்த கைகள்... 
தகர்ந்த தடைகள்...
பிரீமியம் ஸ்டோரி
இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

அடங்க மறு - 9 - மணிப்பூர் மகளும் உலகின் நீண்ட போராட்டமும்..!

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

Published:Updated:
இணைந்த கைகள்... 
தகர்ந்த தடைகள்...
பிரீமியம் ஸ்டோரி
இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

மணிப்பூர் மாநிலத்தில் மலோம் என்றொரு சிற்றூர். அங்குள்ள பேருந்து நிலையமொன்றில், வழக்கம்போல அன்றைய தினம் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று அங்கே துப்பாக்கிச் சத்தம். பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் பட்பட்டென சுட்டுத் தள்ளப்பட்டனர். ‘என்ன தவறிழைத்தோம்; எதற்காகச் சுடப் படுகிறோம்’ என்று எதுவும் தெரியாத அப்பாவி மக்கள், ரத்தவெள்ளத்தில் சரிந்து மாண்டனர். 1988-ம் ஆண்டில், நான்கு வயது சிறுவனாக இருந்தபோது தேசிய அளவில் சிறார்களுக்கான வீரதீர விருதுபெற்ற சினம் சந்திரமணி என்ற இளைஞனும் அவர்களில் அடக்கம்.

துப்பாக்கியோடு அங்கே ரத்தம் குடித்தது... தீவிரவாதிகளல்ல, இந்திய ராணுவம்தான். ஆம், ‘அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்’ எனும் ராணுவப் பிரிவு கண்மூடித்தனமாக நடத்திய கொலை வெறித் தாண்டவம்தான் அது.

அப்பாவி மக்களைச் சுட்டுக்கொல்லும் உரிமையை ராணுவத்துக்கு யார் அளித்தது?

அடங்க மறு - 9 - மணிப்பூர் மகளும் உலகின் நீண்ட போராட்டமும்..!

‘ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்’ எனும் கொடூர சட்டம் தந்த உரிமை தான் அது. வடகிழக்கு மாநிலங் களிலும் காஷ்மீரிலும் அமல்படுத்தப் பட்டிருக்கிறது இந்தச் சட்டம். சந்தேகத்தின் பேரில் யாரையும் எப் போதும், எங்கு வேண்டுமானாலும் வாரன்ட் இல்லாமலே கைது செய்யலாம்; சுட்டுத் தள்ளலாம்; எங்கு வேண்டுமானாலும் சோதனை போடலாம் என்கிற வரைமுறையற்ற அதிகாரங்களை ராணுவத்துக்கு அளித் திருக்கிறது இந்தச் சட்டம்.

இந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனித உயிர்களைக் கொத்துக் கொத் தாகக் கொன்று குவிப்பது இந்திய அளவில் ஆங்காங்கே நடந்திருக்கிறது. அந்த வரிசையில், 2000-ம் ஆண்டு, நவம்பர் 2-ம் தேதி நடத்தப் பட்டதுதான் இந்த மலோம் படுகொலைகள்.

‘இந்தியாவின் இரும்பு மங்கை’ என்று தற்போது அழைக்கப்படும் இரோம் சானு ஷர்மிளா என்பவரை வெளியுலகுக்கு அடை யாளம் காட்டியதும் இந்தக் கொடூர நிகழ்வு தான். அவருடைய 16 ஆண்டுக்கால உண்ணா விரதப் போராட்டத்துக்கு வித்தூன்றியது, இந்தச் சம்பவமே. ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்கிற கோரிக்கையுடன் நவம்பர் 4-ம் தேதியன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் ஷர்மிளா.

ஷர்மிளா, 12-ம் வகுப்பு வரை படித்தவர். மனித உரிமை அமைப்புகளிலும், இளையோர் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மகாத்மா காந்தி யையும், நெல்சன் மண்டேலாவையும் ஆதர்சங்களாகக் கொண்டிருந்தவர். தன் 28-வது வயதில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தை, 44-வது வயதில்தான் நிறைவு செய்தார் ஷர்மிளா.

அது, காலை உணவை முடித்து விட்டு உண்ணாவிரதம் இருக்கிற போலி உண்ணாவிரதப் போராட்டமல்ல. உணவும் தண்ணீரும் மறுத்து, உயிரைப் பணயமாக வைத்து நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

அடங்க மறு - 9 - மணிப்பூர் மகளும் உலகின் நீண்ட போராட்டமும்..!

அகிம்சை வழியில் போராடியவரை, ‘தற்கொலைக்கு முயன்றார்’ எனக் குற்றம் சாட்டி கைது செய்தது அரசு. மருத்துவ மனையில் மூக்கில் குழாயைச் செருகி தினமும் 1600 கலோரி நீர் ஆகாரமாக உள்ளே செலுத்தப்பட்டது. இதன் பிறகு, போராட் டத்தைக் கைவிட்டுவிடுவார் என்று நினைத்தது அரசு. ஆனால், நடந்தது... அரசும் அதிகாரி களும் முற்றிலும் எதிர் பாராதது. மருத்துவமனைப் படுக்கையிலேயே தன் னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார்.

ஷர்மிளா பற்றவைத்த நெருப்பு, மணிப்பூர் மாநிலமெங்கும் பற்றிக் கொண்டது. ‘அப்பாவிகள் சித்ரவதை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; ராணுவத்திலுள்ள கொடுங் கோலர்களால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்; ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்’ என்கிற கோரிக்கைகளுடன் மக்கள் வீதியில் இறங்கினார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த அரசு, ‘தற்கொலைக்கு முயன்றார்’ என்று சொல்லி நீதித்துறை காவலில் வைத்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைக்க முடியும். ஓராண்டு முடிந்ததும் விடுதலை செய்வது, மறுபடியும் கைது செய்வது, காவலில் வைத்து மூக்கு வழியாக நீர் ஆகாரம் செலுத்துவது என்பது தொடர்கதையாக மாறிப்போனது.

இப்படி ஆண்டுக்கணக்கில் மூக்கு வழி யாகத் திரவ உணவு கொடுக்கப்பட்டதால் ஷர்மிளாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது; மாதவிடாயும் நின்றுபோனது. ஆனாலும் உறுதியோடு போராட்டத்தைத் தொடர்ந் தார், இந்திய ஜனநாயகத்தின் இன்னொரு முகத்தை உலகுக்கு உரித்துக்காட்டுவதற்காக.

இதற்கிடையே, மனோரமா என்கிற இளம்பெண்ணை ‘அஸ்ஸாம் ரைஃபிள் படை’ப் பிரிவினர் பாலியல் வன்கொடுமை செய்து சுட்டுக்கொலை செய்தனர். ஏற்கெனவே ஷர்மிளாவின் போராட்டம் பூதாகரமாக வடிவெடுத்து நிற்க, மனோரமா கொல்லப்பட்டது மணிப் பூர் மக்களை மேலும் கொந்தளிக்க வைத்தது. இளம்பெண்கள் முதல் வயது முதிர்ந்த தாய்மார்கள் வரை ‘அஸ்ஸாம் ரைஃபிள் படை’ தலைமையகத்தின் முன்பாக ஒன்றுகூடி, ‘இந்திய ராணுவமே எங்களை வன்புணர்வு செய்’ என்ற பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர், ஆடைகளற்றவர்களாக.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களைக் கைது செய்து மூன்று மாதங்கள் சிறையில் அடைத்தது அரசு. நாடே இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து நிற்க, உலகின் முன் தலைகுனிந்து நின்றது இந்திய ராணுவம். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தையும், அஸ்ஸாம் ரைஃபிள் படையினரின் அதிகார அத்துமீறலையும் எதிர்த்து, மக்களும் மாணவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முற்போக்கு இயக்கங் களும் ஷர்மிளாவின் பின்னால் அணி திரண்டனர்.

டெல்லியிலும் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முயன்ற ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற அரசுக் குக் கடிதங்களும் எழுதினார். சில அரசியல் கட்சிகளும் இவருடைய போராட்டத்தை ஆதரித்தன.

தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 2006-ல் நீதிமன்றம் நிராகரித்தது. ‘தற்கொலை செய்து கொள்வதற்காக இந்த உண்ணா விரதத்தை மேற்கொள்ளவில்லை; என் வாழ்க்கையை நான் மிகவும் நேசிக்கிறேன்; என்னுடைய போராட்டத்தின் நோக்கம் சிறப்புச் சட்டத்தின் கொடுமைகளிலிருந்து மணிப்பூர் மக்கள் விடுபட வேண்டும். அச்சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த மட்டுமே’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2016-ல் அவர்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை யில்லை என்று சொல்லி ஷர்மிளாவை விடுதலை செய்தது நீதிமன்றம்.

அதற்குப் பின்னரும் சில காலம் உண்ணா விரதத்தைத் தொடர்ந்த ஷர்மிளா, 2016 ஆகஸ்ட் 9-ம் நாள் தன் போராட்டத்தை நிறைவு செய்தார். அரசியலில் நுழைந்து தன் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதென ‘மக்கள் எழுச்சிக் கூட்டணி’ என்ற கட்சியை ஆரம்பித்தவர், மணிப்பூர் முதல்வர் இபிபோ சிங்கை எதிர்த்து தோபால் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், கிடைத்தவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே!

இந்த 16 ஆண்டுக்காலத்தில் மணிப்பூரின் அரசியல் சூழல், தேசிய அரசியல் சூழல் எல்லாம் தலைகீழாக மாறிப்போய்விட்டன. 16 ஆண்டுகளாக உடல்நலத்தை அடகு வைத்து, ராணுவச் சட்டத்துக்கு எதிராக ஷர்மிளா தொடுத்த போரின் தாக்கமும்கூட மக்களின் மனங்களில் இருந்து மறைய ஆரம்பித்து விட்டது. `அந்த 90 பேருக்கு நன்றி’ என்று தழுதழுத்தபடி அரசியலைவிட்டே நகர்ந்துவிட்டார் ஷர்மிளா.

 கணவருடன் திருமணத்தின்போது...
கணவருடன் திருமணத்தின்போது...

ஷர்மிளாவுக்கு, 2007-ல் மனித உரிமை களுக்கான குவாங்ஜீ பரிசும், 2010-ல் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன. அதே ஆண்டில், ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ப்ளானிங் அண்ட் மேனேஜ்மென்ட்’டின் ரவீந்திரநாத் அமைதிப் பரிசும் வழங்கப் பட்டது. 2013-ம் ஆண்டு, `ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு, ‘மன சாட்சியின் கைதி’ என்று ஷர்மிளாவை அறிவித்தது. அவரது அமைதிப் போராட்டம் குறித்து புத்தகங்கள் வெளிவந்தன; அவருடைய வாழ்க்கை, நாடகங்களாக்கப்பட்டன. ஷர் மிளாவை கௌரவிக்கும் வகையில், அவரின் 39 வயதில் 39 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இத்தனை விருதுகளும் மரியாதையும் வழங்கப்பட்டபோதும், ஷர்மிளாவின் தனிப்பட்ட வாழ்க்கையை அவருடைய ஆதரவாளர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேஷ்மாண்ட் கௌடின்ஹோ என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள அவர் விண்ணப்பித்தபோது, எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம் நம் தமிழகத்தின் கொடைக்கானல், முன்ஜிக் கல்லில் உள்ள துணைப்பதிவாளர் அலுவலகம் நிராகரிக்கவே, பிறகு, எளிமையாக நடந்தது ஷர்மிளாவின் திருமணம்.

2019-ம் ஆண்டு அன்னையர் தினத்தன்று இரட்டைக் குழந்தைகளை (நிக்ஸ் சகி, ஆட்டம் தாரா) பெற்றெடுத்தார் ஷர்மிளா. தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் இந்த இரும்புப் பெண்மணி, ‘இந்த உலகத்துக்கு என்னிடம் உள்ள ஒரே செய்தி அன்பு மட்டுமே’ என்கிறார்.

- போர் தொடரும்...

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்