என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

போலீஸ் அகாடமி, ஹை கோர்ட், ஐசிஎஃப் கேலரி... அருங்காட்சியகங்களை அழகுபடுத்தும் நளினி

நளினி
பிரீமியம் ஸ்டோரி
News
நளினி

ஷூட்டிங் சாம்பியன், கோல்ஃபர், ஈவென்ட் பிளானர், விவசாயி எனப் பன்முகங்கள் நளினிக்கு

2019-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஐசிஎஃப் கேலரி, கொரோனா வின் கோரதாண்டவம் அரங்கேறாமல் இருந்திருந்தால் சென்னை மக்களுக்கு மாறுதலான பொழுதுபோக்குத் தளமாக மாறியிருக்கும். புதுப்பிக்கப்பட்ட சில நாள்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அது பலருக்கும் தெரியாமலேயே போனது.

`ஐசிஎஃப்' எனப்படும் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரியின் அன்று முதல் இன்று வரையிலான தோற்றம், படங்கள் மற்றும் மினியேச்சர் உருவங்கள் அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. கேலரியின் புதுப்பிக்கப்பட்ட இந்த வடிவமைப்பின் பின்னணியில் இருப்பவர் சென்னையைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் நளினி ராதா கிருஷ்ணன். இதற்கு முன் சென்னை ஹை கோர்ட் மியூசியம் மற்றும் எழும்பூர் அரசு மியூசியம் போன்றவற்றைப் புதுப்பித்தவர்.

ஷூட்டிங் சாம்பியன், கோல்ஃபர், ஈவென்ட் பிளானர், விவசாயி எனப் பன்முகங்கள் நளினிக்கு. இன்டர்ஸ்கேப் இன்டீரியர்ஸ் அண்டு லேண்ட்ஸ்கேப்பிங் மற்றும் மீடியா மிக்ஸ் என இரண்டு நிறுவனங்களை வெற்றி கரமாக நடத்திக்கொண்டிருப்பவர்.

‘‘சென்னையில எஸ்ஐஇடி காலேஜ்ல இன்டீரியர் டிசைனிங் படிச்சேன். காலேஜ்ல நான் நேஷனல் லெவல் ரைஃபிள் ஷூட்டர். கோல்ஃப், ஸ்நூக்கர், பேட்மின்டனும் விளையாடுவேன். கல்யாணமாகி யு.எஸ் போயிட்டேன். அங்கே பத்து வருஷங்கள் அட்வர்டைசிங் துறையில இருந்தேன். மறுபடி இந்தியா வந்தோம். பொட்டிக், டெய்லரிங், ஃபேஷன் ஷோஸ்னு நிறைய விஷயங்கள்ல என்னை பிசியா வெச்சுக்கிட்டேன், இதுக் கிடையில மீடியா மிக்ஸ் இன்னோவேட்டிவ் புரொமோஷன்ஸ் என்ற பெயர்ல ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஆரம்பிச்சேன். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், டொயோட்டா, குளோபல் ஹாஸ்பிடல்னு நிறைய லான்ச் நிகழ்வுகள் நடத்தினேன். இந்த நிலையில்தான் திடீர்னு என் இன்டீரியர் டிசைனிங் ஆர்வமும் எட்டிப் பார்த்தது’’ என்பவருக்கு, முதல் வாய்ப்பே ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது.

‘‘2003-ம் வருஷம், நியூஸ் பேப்பர்ல சென்னை மியூசியத்தைப் புதுப்பிக்கிறதுக்கான டெண்டர் நோட்டீஸ் பார்த்தேன். அதுக்கு எப்படி அப்ளை பண்ணணும்னுகூட தெரியலை. ஃபிரெண்ட்ஸ்கிட்ட கேட்டு அந்த டெண்டருக்கு அப்ளை பண்ணினேன். எதிர்பாராதவிதமா எங்க கம்பெனிக்கு அந்த டெண்டர் கிடைச்சது. எத்தனையோ போட்டிகள்... ‘ஒரு பொம்பிளைக்கு எப்படி டெண்டர் கிடைச்சிடும்னு பார்த்துடு வோம்’னு சவால்விட்டாங்க. மியூசியத்தோட வெண்கல கேலரியை டிசைன் பண்ண வேண்டியிருந்தது. 2004-ல சென்னை எழும்பூர் மியூசியத்தை ரெனோவேட் பண்ணி முடிச்சேன்’’ - ஒரு வருட புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்தவர், பாரிஸில் உள்ள லூவ்ரே மியூசியம் மற்றும் எகிப்து மியூசியம் ஆகியவற்றின் இன்ஸ்பிரேஷனில் இந்த அருங்காட்சியகத்தை அழகுபடுத்தினாராம்.

‘‘அடுத்து இந்து சமய அறநிலைத்துறைக்கான புராஜெக்ட் வந்தது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு தேக்குமர ஷோ கேஸ் பண்ணித் தரச் சொன்னாங்க. இந்து சமய அறநிலைத்துறைக்கான புராஜெக்ட்ல வொர்க் பண்ணியிருக்கேன்னு சொன்னதுமே, ‘கோயிலைப் புதுப்பிக்கிற வேலையைப் பண்ணீங்களா’னு கேட்பாங்க. கோயில் புதுப்பித்தல் என்பது முழுக்க வேற வேலை. ஐகான் சென்டர்களுக்கு ஷோ கேஸ் பண்றதுங்கிறது ரொம்பவே தனித்துவமான வேலை. தெய்வ விக்ரஹங்களையும் அவங்களுக்கான நகைகளை யும் பாதுகாப்பா வைக்கிற துக்கான பிரத்யேக பகுதி அது. திருச்செங்கோடு, பெருந்துறை, நாகர்கோவில், கரூர் தாந்தோணி மலைனு நாலு கோயில்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன். இதுக்கடுத்து போலீஸ் அகாடமி மியூசியமுக்கு வொர்க் பண்ணேன். வித்தியாசமான அனுபவம் அது’’ என்பவரது சமீபத்திய சந்தோஷம், ஐசிஎஃப்பின் கோல்டன் ஜூபிளி ரயில் மியூசியத்துக்கு வடிவமைத்தது.

போலீஸ் அகாடமி, ஹை கோர்ட், ஐசிஎஃப் கேலரி... அருங்காட்சியகங்களை அழகுபடுத்தும் நளினி

நளினியின் கற்பனைத்திறனில் செஸ்ட்நெட் கலர் ஸ்கீம், மினியேச்சர் விளக்குகள், உருளை வடிவ தூண்கள் என ஒவ்வொன்றும் கவனம் ஈர்க்கிறது. இன்று ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸி’ன் பகுதிகளாக இருக்கும் ஸ்லீப்பர் கோச் முதல் வேகன்வரை இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள மினியேச்சர்கள், இந்தியன் ரயில்வேக்கு ஐசிஎஃப்பின் பலவருடப் பங்களிப்பைக் காட்டுகின்றன.

‘‘முதல்ல அங்கே போய் பார்த்தபோது அந்த இடம் ஒரு குடோன்போல இருந்தது. அங்கே காட்சிப்படுத்தற மாதிரியான கலெக்‌ஷனும் அவங்ககிட்ட பெருசா இல்லை. தொடக்க விழா போட்டோஸ் மட்டும்தான் இருந்தது. அதைவெச்சு எப்படி அந்த இடத்தை கலர்ஃபுல்லா மாத்த முடியும்னு யோசிச்சேன். அப்பதான் சீலிங்கை ஏன் டிசைன் பண்ணக்கூடாதுனு தோணுச்சு. தயக்கத்தோடுதான் அந்த வேலையை என்கிட்ட கொடுத்தாங்க. என் வொர்க்கை பார்த்த பிறகு சுவர்களுக்கு டிசைன் பண்ற வேலையையும் கொடுத்தாங்க. ஹை கோர்ட் மியூசியத்துல என் வொர்க்கைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, அதே மாதிரி சில விஷயங்கள் ஐசிஎஃப்லயும் வேணும்னு கேட் டாங்க. என் வேலையும் வரலாற்றில் இடம்பிடிச்சிருக்கிறதுல ரொம்பவே பெருமை’’ - பூரிப்பவர், அரசாங்கப் பணிகளில் உள்ள சவால்களையும் பேசுகிறார்.

‘‘இதுவரைக்கும் பண்ண எல்லாமே என் திறமையைப் பார்த்து வந்த வாய்ப்புகள்தான். அரசாங்க புராஜெக்ட்டுங்கிறதால நானும் ஒரு சதவிகிதம்கூட என் வேலையில காம்ப்ரமைஸ் பண்ணிக் கிட்டதில்லை. 2004-ம் வருஷம் வொர்க் பண்ணின சென்னை மியூசியம், 2021-ம் வருஷத்திலும் அப்படியே இருக்குங்கிறதுதான் என் வேலைக்கான சான்று.

எனக்கு கவர்மென்ட் வேலையா, பிரைவேட்டாங்கிறது முக்கிய மில்லை. புராஜெக்ட்தான் முக்கியம். வெறும் இன்டீரியர் டிசைனரா நான் டிசைன் பண்ணின பாத்ரூமையும் கிச்சனையும் காட்டுறது பெரிய சாதனையில்லை. மியூசியம் வேலைகள்ல நான் பெருசா பணம் சம்பாதிக்கலைனாலும் பெயரை சம்பாதிச்சிருக்கேன். நான் வொர்க் பண்ண இடங்களுக்குப் போகும்போது உண்டாகுற அந்த மனநிலையை ‘ஆல்டைம் ஹை’னு சொல்வேன். அது எல்லா இன்டீரியர் டிசைனர்ஸுக்கும் கிடைச்சிடாது’’- விவரிப்பில் அந்தப் பரவச நிலையை நமக்கும் கடத்துகிறார் நளினி.

அடுத்தென்ன?

‘‘மாமல்லபுரம் பக்கத்துல என் விவசாய நிலத்துல சீரகச் சம்பாவும் பாபட்லாவும் விதைச்சிருக்கேன். ஃபார்ம் டேஅவுட் என்ற கான் செப்ட்ல, வயல் எப்படி இருக்கும், நெல் எப்படி விதைக்கிறோம், மாட்டு வண்டி எப்படியிருக்கும்னு இந்தத் தலைமுறையினருக்கு, காட்டும் முயற்சியில இறங்கியிருக்கேன். வெடிங் கோ ஆர்டினேட்டரா சங்கீத்லேருந்து சகலத்துக்குமான ஏ டு இஸட் வேலைகளைப் பார்த்துக் கொடுக்குறேன். மூணு பேரக் குழந்தைங்க இருக்காங்க. அவங்க கூப்பிடும்போது விளையாட கம்பெனி கொடுக்கணும். இதெல்லாம் போக, என் மனசுக்குப் பிடிச்ச மாதிரியும் வரலாறு பேசற மாதிரியும் நிறைய புராஜெக்ட்ஸ பண்ணணும்.’’

அடேங்கப்பா!