Published:Updated:

``பிரச்னைனா பேசி சரி பண்ணுங்க... தற்கொலை வேண்டாம்!'' - நிர்க்கதியான ஒரு இளம்பெண்ணின் சோகம்

கணவர் தற்கொலையால் சிதறிப்போன ஒரு குடும்பத்தின் கதை இது

குழந்தைகளோடு பொன்மணி
குழந்தைகளோடு பொன்மணி

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள பொய்யாமணிதான் பொன்மணியின் ஊர். ஓட்டை உடைசலான ஓட்டுவீட்டில் வசிக்கிறார். இரண்டாவது படிக்கும் தனுஸ்ரீ, ஒன்றாம் வகுப்பு படிக்கும் தாரணி, ஒன்றரை மாத ஆண் குழந்தையான பெரியசாமி என மூன்று பிள்ளைகளும் பொன்மணியைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். பிள்ளைச் செல்வங்கள் நிறைந்த அந்த வீட்டில், மகிழ்ச்சிதானே ஆர்ப்பரிக்க வேண்டும்? ஆனால், வெறுமையும் துக்கமும் வீடுமுழுக்க ஊதுபத்திப் புகைபோல பரவிக்கிடக்கிறது. காரணம், குடும்பத்துக்குத் தலைவனாக இருந்து, குதூகலம் தர வேண்டிய பொன்மணியின் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோய் ஒரு வருடம் ஆகப்போகிறது. 25 வயதில் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைந்துபோன அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக இருக்கிறார் பொன்மணி.

குழந்தைகளோடு பொன்மணி
குழந்தைகளோடு பொன்மணி

"கடவுளுக்கு என்னைப் பார்க்கும்போது மட்டும் கண் ரெண்டும் தெரியாது போலண்ணே... இல்லைன்னா 25 வயசுல கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒன்றரை வயசுல ஒரு பையனையும் வச்சுக்கிட்டு இப்படிச் சீரழிவேனா சொல்லுங்க? சின்ன சண்டைக்காக அவர்பாட்டுக்கும் கோபத்துல விஷத்தைக் குடிச்சுட்டு செத்துப்போயிட்டார். ஆனா நான், மூக்கும் முழியுமா முன்னே திரியிற மூணு பிள்ளைகளையும் எப்படிக் கரைசேர்க்கப்போறேன்ங்கிற நெனப்புலேயே நிமிஷத்துக்கு நிமிஷம் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கேன் அண்ணே" என்று விசும்பலோடு தனது சோகக் கதையை விவரிக்கிறார் பொன்மணி.

ஆறுதல் சொல்லி, பொன்மணியிடம் பேசினோம். "எனக்கு சொந்த ஊர், இங்கிருந்து 6 கிலோமீட்டர்ல இருக்கும் மருதூர்வீரம்பூர். எட்டு வருஷத்துக்கு முன்னாடி விஜயகுமாருக்கு என்னைய கட்டி வச்சாங்க. அவரு விவசாயக் கூலிவேலைக்குப் போனார். தங்கமான மனுஷன். எந்தக் கெட்டப்பழக்கமும் அவருக்குக் கிடையாது. சல்லிக்காசு குறைக்காம, வருமானம் மொத்தத்தையும் கொண்டுவந்து என்கையில கொடுத்துடுவாரு. ஏழ்மை நிலைமைனாலும், வாழ்க்கை மகிழ்ச்சியா போச்சு.

குழந்தைகளோடு பொன்மணி
குழந்தைகளோடு பொன்மணி

அதனால, மூணு குழந்தைங்க பிறந்தாங்க. எங்க மேல அவ்வளவு பாசம் வச்சுருந்தார். அவர்கிட்ட உள்ள ஒரே பிரச்னை, சின்ன விசயத்துக்கெல்லாம் கோபப்படுவார். கடந்த வருஷம் செப்டம்பர் 26-ம் தேதி, எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை. அதுக்காக நான் அவர்கிட்ட பேசாம இருந்தேன். உடனே, கோபமா வெளியே போனார். 'வீட்டுல இருந்தாதான் சண்டை பெரிசாவும். வெளியில போய், நண்பர்களோட பேசுனா அவருக்குக் கோபம் குறைஞ்சுரும்'னு நானும் சாதாரணமா நினைச்சேன். ஆனா, அந்த நினைப்புல தீ அள்ளிக் கொட்டுறாப்புல, பயங்கர செய்தி ஒண்ணு வந்துச்சு. என் கணவர் விஷத்தைக் குடிச்சுட்டு செத்துக்கிடக்கிறதா பார்த்தவங்க வந்து சொன்னாங்க.

ஆனா, 'மூணு பிள்ளைகள ஒத்த மனுஷியா எப்படிக் கரைசேர்ப்பேன்'னு நினைக்கும்போது, உள்ளூர நொறுங்கிப் போயிருவேன். இந்த ஒரு வருஷமா நான் அவ்வளவு சிரமபட்டுப்போய்ட்டேன். தினமும் ராத்திரியாச்சுன்னா, எதிர்காலத்தை நினைச்சு விடியவிடிய தூக்கம் வரமாட்டேங்குது. 'ஏன்டா, இரவாவுது'னு தோணுது. ஆனா, பொழுதுவிடிஞ்சா, 'ஏன்டா பொழுது விடிஞ்சுச்சு'னு பயமா இருக்கு. ஒவ்வொருநாளையும் அக்னிச்சட்டியில வாழுறாப்புல அவ்வளவு சிரமப்பட்டு கடக்குறேன்.

பொன்மணி
பொன்மணி

எங்களுக்கு இந்த சிறிய வீடு மட்டும்தான் சொத்து. மத்தபடி, எந்த சொத்தும் இல்லை. வருமானத்துக்கும் வழியில்லை. நான் வேலைக்குப் போகலாம்னா, ஒன்றரை வயசு பிள்ளையை வச்சுக்கிட்டு வேலைக்கும் போகமுடியலை. ரேஷன் அரிசியும், எங்கம்மா அப்பப்ப தர்ற நூறு, இருநூறும் மட்டும் இல்லைன்னா, நாங்க நாலு உசிரும் இந்நேரமும் பூமிக்கு உரமாகி போயிருப்போம்.

நான் ரெண்டு வேளை பட்டினி கிடப்பேன். பெண் பிள்ளைங்க இரண்டையும் அரசுப் பள்ளிகூடத்துல சேர்த்திருக்கிறேன். அங்க மதியம் சாப்பாடு போடுவாங்க. அதை இரண்டு பிள்ளைகளும் கொஞ்சமா சாப்பிட்டுட்டு, மீதிய தம்பிக்குனு கொண்டு வருவாங்க. அதைப் பார்த்து நான் நொறுங்கிபோயிருவேன்.

அந்த நேரமே, 'பேசாம செத்துரலாமா'னு தோணும். ஆனா, 'நாம ஒத்த மனுஷியா இருந்தா பரவாயில்லை. நம்பளை நம்பி மூணு ஜீவன்கள் இருக்கே. அந்த மூணு பிள்ளைங்களுக்கு நாமளும் இல்லைன்னா, அதுகளோட கதி'னு நினைச்சு, அந்த எண்ணத்தை மாத்திக்குவேன். கூலி வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். நான் பத்தாவது வரை படிச்சுருக்கேன்.

அதுக்கேத்த வேலை கிடைச்சாகூட பரவாயில்லை. ஆனா, யார் எனக்கு இரக்கப்படப்போறா? கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆம்பிள்ளைங்களுக்கு சகோதரியா ஒரு அறிவுரை சொல்கிறேன். தயவுசெய்து வீட்டுல என்ன பிரச்னைனாலும் பேசி தீர்த்துக்குங்க

என் கணவரைப்போல தற்கொலை பண்ணிக்காதீங்க. ஏன்னா, 25 வயசுல மூணு பிள்ளைகள வச்சுக்கிட்டு, எதிர்காலமே இருட்டுல விழுந்தாப்புல வாழுற என்னைப்போல உங்க மனைவி, பிள்ளைகளும் ஆகிடுவாங்க. என்னோட நிலைமை என் எதிரிக்கும்கூட வரக்கூடாதுண்ணே" என்று கூறி, மறுபடியும் குரல் உடைந்து, உடல்குலுங்கி அழுகிறார். அவரைத் தேற்றுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை!