Published:Updated:

`வைல்டுலைஃப் போட்டோகிராபர்னா பெரிய நகரங்கள்லதான் இருக்கணுமா?' - சாதிக்க துடிக்கும் ஸ்நேகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்நேகா
ஸ்நேகா ( படம்: நா.ராஜமுருகன் / விகடன் )

``எனக்கு முதல் ட்ரிப்பிலேயே அந்த அதிர்ஷ்டம் அடித்தது. திடீர்னு எங்க வாகனத்துக்குப் பக்கத்துல மூணு புலிக்குட்டிகள் விளையாண்டுக்கிட்டு இருக்கு. அப்போ, அம்மா புலி வந்தது. நான் ஷாக்காகி அப்படியே நான் வந்த வேலையை மறந்து, பிரமிச்சு நின்னேன்." - ஸ்நேகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நான் பி.டெக் படிச்சு முடிக்கிறவரைக்கும், `ஐ.டி வேலை; கைநிறையச் சம்பளம்; சிட்டி வாழ்க்கை' என்பதைத்தான் லட்சியமா வச்சுருந்தேன். அதன்படி, சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை கிடைச்சு, ரூ.30,000 சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். ஆனால், ஒன்றரை வருஷத்துலேயே, அந்த வேலை பிடிக்காம போயிட்டு. அதனால், கேமராவை கையில் எடுத்து, வைல்டுலைஃப் போட்டோகிராபி, ஈவென்ட் போட்டோகிராபினு என் மனதுக்கு நெருக்கமான வேலைகளைச் செய்றேன். முதுகுக்கு பின்னால றெக்கைகள் முளைச்ச மாதிரி இருக்கு!" - மனதும் முகமும் மலர்ந்துபோய் பேசுகிறார் ஸ்நேகா பரமேஸ்வரன்.

குரங்குகள்
குரங்குகள்
படம்: ஸ்நேகா

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்நேகா பரமேஸ்வரன். ஐ.டி துறையில் கை விரல்களால் கணினி கீபோர்டை தட்டிக்கொண்டிருந்தவர், இப்போது கேமராவால் காட்சிகளை க்ளிக்கி தள்ளுகிறார். புழுதிக்காட்டில் சிறுவர்களை படமெடுத்துக்கொண்டிருந்த அவரை சந்தித்துப் பேசினோம்.

``ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்தான் படிச்சேன். ஸ்கூல் படிக்கிற காலத்திலேயே போட்டோகிராபி மேல ஆர்வம். அதுக்குக் காரணம், என் உறவினரான சர்மிளா அக்கா. அவங்க கேமராவை வச்சுக்கிட்டு, விதவிதமான காட்சிகளை புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவாங்க. அதைப் பார்த்து நானும் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, 2013-ம் ஆண்டு அக்கா நார்மல் டிஜிட்டல் கேமரா ஒன்றை கிஃப்டா வாங்கிக் கொடுத்தாங்க. அவங்க 2015-ல் டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்குனாங்க. அத வச்சு, என் உறவினர்கள், ஃபிரெண்ட்ஸ்ஸை எல்லாம் போட்டோ எடுப்பேன்.

ஸ்நேகா
ஸ்நேகா
படம்: நா.ராஜமுருகன் / விகடன்
``யூடியூப்தான் என் சந்தை... மாசம் 1.5 லட்சம் வருமானம்!" - கிராமத்தில் கலக்கும் ராஜாத்தி #SheInspires

இந்த நிலையில், பி.டெக் கடைசி வருஷம் படிச்சுக்கிட்டு இருந்தப்ப, என் அப்பா என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, கெனான் 1,300 டி கேமரா ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. படிச்சு முடிச்சுட்டு, வேலைக்குப் போற வரைக்கும் அதை வச்சு அக்கம்பக்கத்துல இயற்கைக் காட்சிகளைப் படமெடுத்துக்கிட்டு இருந்தேன்.

2017-ல சென்னையில் தனியார் ஐ.டி கம்பெனியில ரூ. 30,000 சம்பளத்துக்கு வேலை கிடைச்சுச்சு. வேலையில் சேர்ந்தாலும், போட்டோகிராபி மேல உள்ள ஈடுபாட்டால, ஒரு ஸ்டூடியோ கம் அகாடமியில் போட்டோகிராபி கத்துக்கப் போனேன். ஆனால், 7 கிளாஸூக்கு மேல போகமுடியலை. காரணம், எனக்கு வேலை ஷிஃப்ட் மாறி மாறி வந்தது. இதனால, கொஞ்ச நாள்லேயே ஐ.டி ஃபீல்டு பிடிக்காமப் போயிட்டு. 2018-ல வேலையை ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு வந்துட்டேன்.

வீட்டுல வேலையை விட்டதுக்காகத் திட்டினாங்க. ஆனா, என் முடிவுல உறுதியா இருந்தேன். இன்னொரு பக்கம், ஒன்றரை வருஷம் வரை என்ன பண்றதுனு தெரியாம விழிபிதுங்கி நின்னேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டோகிராபியை புரஃபஷனா எடுக்கலாமாங்கிறதுல தயக்கம் இருந்துச்சு. அதன் பிறகு, `இதுலதான் என் டிராவல்'னு முடிவு பண்ணி, எடிட்டிங் கத்துக்கிட்டேன். 2019-ல இருந்து ஸ்ட்ரீட் போட்டோகிராபி பண்ண ஆரம்பிச்சேன். அம்மாவை துணைக்கு அழைச்சுட்டுப் போய், பக்கத்துல இருக்கிற வயல்கள்ல வேலை செய்றவங்க, சிறுவர்கள்னு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். பல பாட்டிகள் வெட்கப்படுவது அவ்வளவு அழகா இருக்கும். அதனால், அண்ணன் வாங்கிக் கொடுத்த இன்ஸ்டன்ட் பிரின்டர் மூலமா, அவங்களை எடுக்கிற போட்டோக்களை பிரின்ட் போட்டு உடனே அவங்க கையில கொடுப்பேன். `மவராசியா இரு. உன் கல்யாணத்துக்குக் கூப்புடு'னு வாழ்த்துவாங்க.

இதற்கிடையில், பிரபல புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யாவோட போட்டோகிராபி மேல இன்ஸ்பயர் ஆகி, அவரோட சோஷியல் மீடியா போஸ்ட்கள்ல கமென்ட் மூலம் பல சந்தேகங்களை அவர்கிட்ட கேட்டேன்.

பாட்டி
பாட்டி
படம்: ஸ்நேகா

அவரும் க்ளியர் பண்ணுவார். ஒருநாள், எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஆஞ்சநேயர் கோயில்ல இருந்த குரங்கை போட்டோ எடுத்தேன். அதன் பிறகு, திடீர்னு பறவைகளை படம் எடுக்கும் ஆர்வம் வந்தது. அதற்காக, ரூ.72,000 மதிப்பில், அப்பா லென்ஸ் வாங்கிக் கொடுத்தார். அப்பாகிட்ட பலரும், `பொம்பளப் புள்ளைக்கு இது தேவையா? கேமரா வாங்குற காசுக்கு நகை வாங்கலாம். இப்படி பண்ணினா, மாப்பிள்ளை கிடைக்காது'னு சொன்னாங்க. ஆனா, அவர் எனக்கு சப்போர்ட்டிவ்வா இருந்தார். அதனால, வைல்டு லைஃப் போட்டோகிராபி மேல ஈடுபாடு வந்தது. அதைப் பற்றிய விஷயங்களில் எனக்கு மென்டர், ஷீபு.

கடந்த ஜனவரியில மகாராஷ்டிராவில் உள்ள தட்டோபா புலிகள் காப்பகத்துக்குப் போனேன். 3 நாள் பயணம், மொத்தம் 7 ட்ரிப். என்னோடு சேர்ந்து, இதே ஃபீல்டுல இருக்கிற கோவை காயத்ரியும் வந்தாங்க. அவங்க 13 வருஷம் இந்த ஃபீல்டுல இருக்காங்க. தன்னோட முதல் ட்ரிப்புல ஒரு புலியைக்கூட பார்க்கலைனு அவங்க சொன்னாங்க. ஆனா, எனக்கு முதல் ட்ரிப்பிலேயே அந்த அதிர்ஷ்டம் அடித்தது. திடீர்னு எங்க வாகனத்துக்குப் பக்கத்துல மூணு புலிக்குட்டிகள் விளையாண்டுக்கிட்டு இருக்கு. அப்போ, அம்மா புலி வந்தது. நான் ஷாக்காகி அப்படியே நான் வந்த வேலையை மறந்து, பிரமிச்சு நின்னேன்.

போட்டோ எடுக்காம, `பே'னு பார்த்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே லெப்பர்டு ஒண்ணைப் பார்த்தேன். அன்னைக்கு இரவு காட்டு முயல், காட்டுப்பூனை பார்த்தேன். ரெண்டாவது நாள் டிரிப்பிலும், அதே தாய்ப் புலி, குட்டிகளைப் பார்த்தேன். அது எங்களை ஒரு பொருட்டாவே மதிக்காம, ரோட்டை கிராஸ் பண்ணி போணுச்சு. 3, 4 வது ட்ரிப்புல எந்த விலங்குகளையும் பார்க்க முடியலை.

புலி
புலி
படம்: ஸ்நேகா
ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் 20 சிவிங்கிப் புலிகள்; இந்தியாவிற்கு இவை தேவைதானா?

ஆறாவது நாள் டிரிப்புல, ரொம்ப பக்கத்துல ஒரு புலியைப் பார்த்தேன். அப்போவும், எதிர் திசையில சூரியன் இருந்ததாலயும், நான் பதற்றமாகிட்டதாலயும் சரியா போட்டோ எடுக்க முடியலை. ஆறாவது நாள் டிரிப்பின்போது காலையில 100 அடி இடைவெளியில ஒரு புலி இருந்துச்சு. திடீர்னு பார்த்தா, அதைக் காணவில்லை. எங்கேனு மூணு பக்கமும் பார்த்துட்டு, எங்க வாகனத்துக்கு முன்னாடி பார்த்தா, பகீர்னு ஆயிட்டு. எங்களுக்கு முன்னாடி வந்து உட்கார்ந்திருந்துச்சு. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியாயிட்டு. காயத்ரி மேம், `இப்படி எவ்வளவு முறை புலியைப் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது'னு சொன்னாங்க. அந்த நொடியில முடிவு பண்ணினேன், `இதுதான் நம்ம லைஃப்'னு. அதேபோல், கடைசி டிரிப் முடியுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி, பெரிய புலி ஒண்ணு, குட்டிப்புலி ஒண்ணையும் பார்த்தேன். அந்தப் பெரிய புலியை வீடியோ, போட்டோ எடுத்தேன்.

ஒரு டிரிப்புக்கு ரூ. 30,000 வரை செலவாகுது. அதை நாமே சம்பாதிக்கணும்னு களமிறங்கியிருக்கிறேன். அதனால், ஈவென்ட் போட்டோகிராபியும் ஸ்டார்ட் பண்ணியிருக்கிறேன். வருமானத்துக்காக பேபி ஷூட், வெடிங் ஷூட், கப்புள் ஷூட்னு எடுக்கிறேன். அதோடு, வைல்டு லைஃப் போட்டோகிராபிக்காக கெனான் 100 - 400 எம்.எம் லென்ஸ் ஒண்ணு அப்பா கொடுத்த ஒன்றரை லட்சத்துல வாங்கியிருக்கிறேன். ரெண்டாவது முறை டிரிப் போகலாம்னு நினைக்கையில, செகண்ட் லாக்டௌன் போட்டாங்க. நிலைமை சரியானதும்தான் போகணும். அடுத்த முறை, புலியோட ஒவ்வோர் அசைவையும் நின்னு நிதானிச்சு கேமராவுல புகைப்படங்களாக அள்ளிக்கொண்டு வரணும்னு இருக்கேன்.

`35அவார்ட்ஸ்' ஆன்லைன் போட்டோகிராபி போட்டியில, கடந்த வருடம் என்னோட போட்டோ டாப் 5 சதவிகிதத்தில் வந்துச்சு. நான் எடுக்கும் போட்டோ நேஷனல் ஜியோகிரபில வரணும்னு ஆசை.

இருவாச்சி
இருவாச்சி
படம்: ஸ்நேகா
`அமிதாப் பாராட்டு; ஜிவி-யின் மெசேஜ், அன்விக்கு தாலாட்டு!' - `கையிலே ஆகாசம்' பற்றி சைந்தவி

`சென்னைக்கு வா... இதுல சாதிக்கலாம். ராசிபுரம் மாதிரியான சின்ன ஊர்ல இருந்து என்ன பண்ணிட முடியும்?'னு பலரும் கேட்கிறாங்க. நான், இந்தச் சின்ன ஊர்ல இருந்தும் வைல்டு லைஃப் போட்டோகிராபியில சாதிக்க முடியும்னு நிரூபிக்க நினைக்கிறேன். வைல்டுலைஃப் போட்டோகிராபர்னா பெரிய நகரங்கள்லதான் இருக்கணுமா? தவிர, இதில் எனக்கு முன்னோடிப் பெண்களான ஐஷ்வர்யா வடமாநிலத்திலும், ராதிகா ராமசாமி டெல்லியிலும் இருக்காங்க. அவங்க வரிசையில நான் ராசிபுரத்தில் இருந்து இணைய நினைக்கிறேன். கண்டிப்பா, அதை சாதிப்பேன். அதேபோல், மனசுக்குப் பிடிக்காத வேலையைப் பொதியாட்டம் சுமக்க முடியாது. நமக்குக் கிடைத்த ஒரே ஒரு லைஃப்ல, நமக்குப் புடிக்கிற வேலையை, விசயங்களை செய்றதில்தான், வாழ்க்கையை நிறைவா வாழுற பேரானந்தம் கிடைக்குது" - அருவி போல பேசி முடித்தார் ஸ்நேகா.

உயரங்கள் தொட வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு