தன் மகளுடைய கேச பிரச்னைக்குத் தீர்வாக எண்ணெய் உருவாக்கிய தந்தை ஒருவர், அந்த எண்ணெய் தயாரிப்பின் மூலமாக தன்னுடைய 85வது வயதில் தொழில்முனைவோராக மாறியதுடன், தன் வருமானத்தில் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
திறமை மற்றும் முயற்சி இருந்தால் எந்த வயதிலும் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் குஜராத்தை சேர்ந்த 85 வயது முதியவரான ராதாகிருஷ்ண சௌத்ரி. தனது மன உறுதியால் வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நானாஜி என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ண சௌத்ரி, சிறுவயதில் இருந்தே ஆயுர்வேதத்தில் ஆர்வம் கொண்டவர். உடல்நலக் கோளாறுகளுக்கு எளிய சிகிச்சைகளை முயல்பவர். ஆயுர்வேதம் குறித்த புத்தகங்களை ஆர்வத்துடன் தேடி சேகரித்தவர். தன் வீட்டிலேயே அதற்கான சிறிய நூலகம் ஒன்றை அமைத்துள்ளார். ராதாகிருஷ்ண சௌத்ரி பீகாரில் இருந்தபோது, ஆயுர்வேத சிகிச்சை பற்றி சுமார் 2500 புத்தகங்கள் வைத்திருந்தகாகக் கூறுகிறார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது, அவர் மகள் வினிதாவிற்கு தலையில் கேச உதிர்வு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னைக்காக ஆயுர்வேதத்தில் தீர்வு தேடிய அவர், அதன் அடிப்படையில் கேசத்துக்கான எண்ணெய் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை தன் மகளிடம் கொடுத்து உபயோகிக்கக் கூறியபோது, அந்த எண்ணெய் இந்த 82 வயதிலும் தன் எதிர்கால வளர்ச்சிக்குக் காரணமாகப் போகிறது என்று அவர் நினைத்திருக்கவில்லை.
அந்த எண்ணையை அவரின் மகள் பயன்படுத்த ஆரம்பித்து சில காலத்திலேயே அவர் கேசம் உதிர்வது நின்று, அடர்த்தியாக வளர தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், மற்றும் உறவினர்கள் எனப் பலரும் தங்களுக்கும் அந்த எண்ணெய் வேண்டும் எனக் கேட்க, அவர்களுக்காக எண்ணெய் செய்து கொடுக்கத் தொடங்கினார். தொடர்ந்து, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் தந்தை மற்றும் மகள் இணைந்து எண்ணெய் விற்பனையை தொடங்கியுள்ளனர். இதற்கு அவர் மனைவி சகுந்தலாவும் உதவி புரிய ஆரம்பித்தார்.

சமூக வலைதளத்தில், பலரும் அந்த எண்ணெய் பற்றி விசாரிக்கத் தொடங்கியதால், ராதாகிருஷ்ண சௌத்ரி கதை வைரலானது. வியாபாரமும் ஹிட் ஆனது. ’அவிமீ ஹெர்பல்’ என்ற பிராண்ட் பெயருடன் எண்ணெய் விற்பனையை தொடர்ந்தார் அவர்.
தற்போது பல பிரபலங்களுக்கும் இவரின் எண்ணெய் பேவரிட் ஆகியுள்ளது. அவர்களில் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவியும் சமூக ஊடக பிரபலமுமான மீரா கபூர், கேச உதிர்தலை எதிர்த்துப் போராட அவிமீ ஹெர்பல் தனக்கு உதவியது என்று பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில், ராதாகிருஷ்ண சௌத்ரி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவரது பிசினெஸ் பற்றிய ரீல்ஸ், மற்றும் தன்னுடைய 85வது வயதில் அவர் வாங்கிய முதல் கார் பற்றிய ரீல்ஸ் ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.