Published:Updated:

ஐ.ஏ.எஸ் கனவு... ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நடமாடும் லத்தீஷா

லத்தீஷா
பிரீமியம் ஸ்டோரி
லத்தீஷா

நம்பிக்கை நாயகி

ஐ.ஏ.எஸ் கனவு... ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நடமாடும் லத்தீஷா

நம்பிக்கை நாயகி

Published:Updated:
லத்தீஷா
பிரீமியம் ஸ்டோரி
லத்தீஷா
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இந்தி படம் ‘தில் பெச்சாரே.’ தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் நடித்துள்ள இந்தப் படத்தின் நாயகி, புற்றுநோய் பாதிப்பின் காரணமாக 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் சிலிண்டரோடு வலம் வருவார். கற்பனையில்தான் இப்படிப்பட்ட கேரக்டர்களைப் பார்க்க முடியும் என அதைக் கடந்துபோனவர்களுக்கு, நிஜத்தில் சாட்சியாக நிற்கிறார் லத்தீஷா. கேரளாவைச் சேர்ந்த லத்தீஷா பிறக்கும்போதே ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்ஃபெக்டா (Osteogenesis Imperfecta) எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயல்பான அசைவுகள்கூட, இவரின் எலும்புகளை முறித்துவிடும். மற்றவர்களின் உதவி இல்லாமல், லத்தீஷாவால் எந்த வேலையும் செய்ய முடியாது. இரண்டடி உயரம், 14 கிலோ எடையுள்ள இவர், 26 வயதில் 400-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகளைச் சந்தித்தவர். சுவாசப் பிரச்னை காரணமாக எப்போதும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் இருப்பவர். வீல்சேரில் முடங்கியது வாழ்க்கை. ஆனால், லத்தீஷாவின் கனவுகளையும், அவரது லட்சியத்தை நோக்கிய பயணத்தையும் எந்தப் பிரச்னையாலும் முடக்க முடியவில்லை. எம்.காம் பட்டதாரி, ஐ.ஏ.எஸ் கனவு, இசை, ஓவியம் என்று சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கிறார் லத்தீஷா.

கோட்டயம் மாவட்டம், எருமேலி பகுதியைச் சேர்ந்த லத்தீஷாவைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். உடல்நலமின்றி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. டிஸ்சார்ஜ் ஆன இரண்டே நாள்களில் லத்தீஷாவிடமிருந்து நமக்கு அழைப்பு... பேசுவதற்கு சிரமப்பட்டவருடன் வாட்ஸ்அப்பில் இணைந்தோம்.

“உடல்நலக்குறைபாடு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான். எனவே, சராசரி மனிதர்களைப் போல வாழ முடிவு செய்தேன். என்னை யாரும் குறைபாடுள்ள குழந்தையாகப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். என் பெற்றோர் எல்லாவற்றிலும் எனக்குத் துணையாக இருக்கின்றனர்’’ - நம்பிக்கையோடு பேசத்தொடங்கினார் லத்தீஷா.

ஐ.ஏ.எஸ் கனவு... ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நடமாடும் லத்தீஷா

“ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும்; சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்; குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்கும் வசதிகளைச் செய்து தர வேண்டும்... இவைதாம் என் லட்சியங்கள். ஆனால், அவற்றை நோக்கிய என் பயணம் எளிதானதாக இல்லை.

நான் பள்ளி, கல்லூரி படிக்கும்போது அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். வலியுடன் படிப்பேன். வாரக்கணக்கில் ஓய்வெடுத்துவிட்டுத் திரும்பிய நாள்களும் உண்டு. நான் உறுப்பினராக உள்ள என்.ஜி.ஓ-வில் குறைபாடு களுடன் 80 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில், ஒரு சிலர் மட்டுமே படிப்பை முடித்துள்ளனர். மற்ற குழந்தைகள் பள்ளி சென்றதில்லை. நான் கற்ற கல்வியை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மோட்டிவேஷனல் உரைகளை ஆற்றி வருகிறேன். அங்கு பல குழந்தைகள், என்னை அவர்களின் முன்மாதிரி என்று சொல்வார்கள். எந்த நெருக்கடி யான சூழ்நிலையிலும் நாம் நமது முயற்சியில் இருந்து பின்வாங்கக் கூடாது. சோர் வடையும்வரை, முயற்சி செய்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நான் அவர்களுக்குச் சொல்லும் செய்தி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்மனரி ஹைப்பர்டென்ஷன் (Pulmonary hypertension) எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதாவது, ஆக்ஸிஜன் சப்போர்ட் இல்லாமல், என்னால் ஓர் அடிகூட நகர முடியாது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும், என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற உந்துதலில் இப்போது, சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன்” என்றவர், மருந்து எடுத்துக்கொள்ள இடைவெளிவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் இணைந்தார்.

“ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்ஃபெக்டா நோய்க்கு எந்த மருத்துவமும் இல்லை. இப்போது சுவாசப் பிரச்னைக்குதான் சிகிச்சை எடுத்து வருகிறேன். 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் சப்போர்ட் கட்டாயம் தேவை. இல்லையென்றால் இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். Bipap (வென்டிலேட்டர் போன்ற ஒரு கருவி) மெஷின் உதவியுடன்தான் தூங்குகிறேன்.

 தந்தையுடன்...
தந்தையுடன்...

கடந்த ஆண்டு எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. இப்போது, இன்னும் கடுமையாகப் படித்து வருகிறேன். ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுக்கிறேன். அதேபோல, எனக்கு இசை மீதும் ஆர்வம் அதிகம். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கீ போர்டு வாசிக்கிறேன். ஓவியமும் பிடிக்கும். நான் வரையும் ஓவியங்களை, செலிபிரிட்டிகளுக்கும் நண்பர்களுக்கும் பரிசாக வழங்குவேன். இவை அனைத்துக்குமே என் அப்பா, அம்மா பக்கபலமாகத் துணை நிற்கின்றனர். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது’’ - நெகிழ்பவருக்குள் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கின்றன.

``விமானத்தில் செல்ல வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை, ஒரு விருது நிகழ்ச்சிக்காக மும்பைக்குச் சென்றதன் மூலம் நிறைவேறிவிட்டது. துபாய் செல்ல வேண்டும் என்றோர் ஆசை இருக்கிறது. நடிகர்கள் மம்முட்டி சார் தமிழில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும். அவர்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது’’ காத்திருப்பவர் மற்றவர்களுக்கும் மெசேஜ் வைத்திருக்கிறார்...

லத்தீஷா
லத்தீஷா

‘‘ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என முடிவெடுத்த பிறகு, எத்தனை தடைகள் வந்தாலும் முயற்சிகளைக் கைவிடக் கூடாது.மனச்சோர்வுக்கு அடிமையாகிவிடக் கூடாது.”