Published:Updated:

`தவழ்ந்தே 40 படிகள் ஏறியதும் பெருமூச்சு வரும் பாருங்க!'- மாற்றுத்திறனாளி சரோஜினியின் நம்பிக்கைக் கதை

`` `உன்னால ஓட்ட முடியாது'ன்னு பலரும் சொல்லிட்டே இருந்தாலும், டூ வீலர் ஓட்டக் கத்துக்கிட்டேன். 25 வயதுக்குப் பிறகுதான் வெளியுலக அனுபவங்கள் கிடைச்சுது."

குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட போலியோ பாதிப்பு, சரோஜினியை வீட்டிலேயே முடக்கியிருக்கிறது. ஆனாலும், தளராத நம்பிக்கையில் வேலைக்குச் சென்றுகொண்டே, மாற்றுத்திறனாளிகளுக்கான வாள்சண்டைப் போட்டியில் தேசிய அளவில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறார். மனதிலிருக்கும் வலிகளை, முகத்தில் காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாகப் பேசினார். 

சரோஜினி
சரோஜினி

``என் பூர்வீகம் சென்னைதான். ஒன்பது மாதக் குழந்தைப் பருவத்தில் போலியோ பாதிப்பு ஏற்பட்டு, வீல்சேர்தான் என் வாழ்க்கை என்றானது. அப்பா கூலித் தொழிலாளி. அண்ணனையும் தங்கச்சியையும் பார்த்துக்கிட்டு, என்னை வளர்க்க அம்மா மிகவும் சிரமப்பட்டாங்க. அதனால, எனக்குச் சரியான சிகிச்சை தரப்படலை. அதனால, வெளியுலக தொடர்பு எனக்குச் சரியாகக் கிடைக்கலை. எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பையும் தொடர முடியலை" என்பவர் அதன் பிறகே வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்.

``எந்த வெளிநிகழ்ச்சிக்கும் என்னால போக முடியாது. வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும்கூட அவங்களோடு என்னால சகஜமா பேச முடியாத அளவுக்கு வீட்டிலும் வெளியிலும் புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். `உன்னால ஓட்ட முடியாது'ன்னு பலரும் சொல்லிட்டே இருந்தாலும், டூ வீலர் ஓட்டக் கத்துகிட்டேன். 25 வயதுக்குப் பிறகுதான் வெளியுலக அனுபவங்கள் கிடைச்சுது. அதற்கு உதவிய என் தங்கை, பால் விற்பனைக் கடை ஒன்றை எனக்கு வெச்சுக்கொடுத்தா. அதையும் உறவினர் ஒருவர் அபகரிச்சுக்கிட்டார். இப்படியே இப்போ வரை வாழ்க்கை எல்லா வகையிலும் போராட்டம்தான்" என்கிற சரோஜினிக்கு தற்போது 45 வயது!

சரோஜினி
சரோஜினி

தற்போது சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில், ஃப்ளக்ஸ் போர்டு உள்ளிட்ட தகவல் பலகைகள் பலவற்றுக்கும் எழுத்துகளை டிசைன் செய்யும் பணியைச் செய்துவருகிறார். ``மீண்டும் வீட்டுலயே முடங்கிடக்கூடாதுனுதான் அஞ்சு வருஷத்துக்கு முன்பு இந்த வேலைக்கு வந்தேன். தினமும் ஸ்கூட்டியில வந்து, 40 படிக்கட்டுகளில் தவழ்ந்துதான் ரெண்டாவது ஃப்ளோர்ல இருக்கிற அலுவலகத்துக்குப் போவேன். அப்போ பெருமூச்சு வரும் பாருங்க..." - பெருமூச்சுடன் சொல்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீடு மற்றும் வேலை எனச் சிறு வட்டத்துக்குள் முடங்க நினைக்காத சரோஜினி, தேசிய அளவிலான வாள்சண்டைப் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். ``உறவினர் ஒருவர் மூலமாக வாள்சண்டைக் கத்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்பு நான் கலந்துகிட்ட தேசிய அளவிலான முதல் போட்டியிலேயே டீம் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். 

சரோஜினி
சரோஜினி

பிறகு தொடர்ந்து பயிற்சி எடுக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சேபர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றேன். தவிர, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துக்கிறேன்" என்று முகம் மலரக் கூறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு