Published:Updated:

`லே-லடாக் டு திருப்பூர் பனியன் கம்பெனி!' -பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற பர்வீன் பாத்திமா யார்?

பர்வீன் பாத்திமா
பர்வீன் பாத்திமா

ஹிமயத் திட்டத்தில் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பில் பதவி உயர்வுகளைப் பெற்று வருவதற்காகப் பாராட்டினார். சில நொடிகள் போனில் பேசினாலும், பிரதமருடைய பாராட்டு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

2019-ம் ஆண்டின் இறுதி `மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் `ஹிமயத்’ திட்டத்தில் பங்கேற்று வேலைவாய்ப்பைப் பெற்ற லடாக் பகுதியைச் சேர்ந்த பர்வீன் பாத்திமா என்ற பெண்ணைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பின்னலாடை நிறுவனத்தில் காஷ்மீர் பெண்கள்
பின்னலாடை நிறுவனத்தில் காஷ்மீர் பெண்கள்

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பர்வீன் பாத்திமாவை போனில் அழைத்துப் பேசி பாராட்டியதாகத் தகவல் வெளியானது.

லே-லடாக் யூனியன், கார்கில் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன் பாத்திமா (24). பொருளாதாரத்தில் பின்தங்கியது பர்வீன் பாத்திமாவின் குடும்பம். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக 12-ம் வகுப்புக்கு மேல் இவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. வேலைக்குச் சென்று குடும்பத்துக்கு உதவி செய்யலாம் என்றால், அங்குள்ள பதற்றமான அரசியல் சூழல் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

இதற்கிடையே, தேசிய ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட `ஹிமயத்’ திட்டத்தில் பர்வீன் பாத்திமா சேர்ந்திருக்கிறார். அங்கு பின்னலாடை தொடர்பான பயிற்சியை முழுக்கக் கற்றிருக்கிறார். பயிற்சி முடிந்ததும் பர்வீன் பாத்திமா மற்றும் அவரோடு பயிற்சி பெற்ற 90 பெண்களும் திருப்பூரிலுள்ள `எஸ்.சி.எம் கார்மென்ட்ஸ்’ என்னும் பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

தோழிகளுடன் பர்வீன் பாத்திமா
தோழிகளுடன் பர்வீன் பாத்திமா

வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பர்வீன் பாத்திமா பதவி உயர்வு பெற்றிருக்கிறார். லே-லடாக் பகுதியின் ஒரு குக்கிராமத்திலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த பெண், வேலைவாய்ப்பில் முன்னேறி வந்ததுதான் பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்றதற்குக் காரணம்.

திருப்பூர் டு தாய்லாந்து! - தனியொருத்தியாக மகன்களை மீட்ட தாயின் கதை!

திருப்பூரில் பர்வீன் பாத்திமாவைச் சந்தித்துப் பேசினோம். ``லே-லடாக்கில் குடும்பச் சூழ்நிலையாலும் அரசியல் சூழலாலும் 12-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. ஏதாவது வேலைக்குச் சென்று குடும்பத்துக்கு உதவ நினைத்தேன். அப்போதுதான் `ஹிமயத்’ திட்டம் பற்றித் தெரியவந்தது. அதில் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்று, திருப்பூரில் சாதாரண டெய்லராக வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய உழைப்பினால் இன்றைக்கு சூப்பர்வைசராக ஆகியிருக்கிறேன்.

சமீபத்தில் விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, ஹிமயத் திட்டம் குறித்தும் அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் குறித்தும் அங்கு பயிற்சி பெற்று வருபவர்களிடம் பேசினேன்.

லே-லடாக்கிலிருந்து திருப்பூர் வந்து நல்ல சம்பளத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம். தமிழகம் எங்களுக்கு மிகுந்த பாதுகாப்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
பர்வீன் பாத்திமா

இதற்கிடையே எனக்கு ஒரு போன்கால் வந்தது. எதிர்முனையில் ‘பர்வீன் பாத்திமா!... நான் பிரதமர் மோடி பேசுகிறேன்’ என்றது அந்தக் குரல். `பிரதமர் மோடி பேசுகிறேன்' என்றதும் எனக்கு பெரும் ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் இருந்தது. அந்தத் தருணத்தை என்னால் நம்ப முடியவில்லை. ஹிமயத் திட்டத்தில் பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பில் பதவி உயர்வுகளைப் பெற்று வருவதற்காகப் பாராட்டினார். சில நொடிகள் போனில் பேசினாலும், பிரதமருடைய பாராட்டு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. என்னுடன் வேலைசெய்யும் சக தோழிகளும் என்னைப் போல நிச்சயமான நல்ல நிலைக்கு மேலெழுவார்கள். லே-லடாக்கிலிருந்து திருப்பூர் வந்து நல்ல சம்பளத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம். தமிழகம் எங்களுக்கு மிகுந்த பாதுகாப்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது” என்றார்.

வாழ்த்துகள் பர்வீன் பாத்திமா..!

அடுத்த கட்டுரைக்கு