Published:Updated:

``யாராவது ஒருத்தர் கைதூக்கிவிட்டா சடார்னு மேல வந்திடுவேன்!'' - `பல்சர் அக்கா' சத்தியபாமா கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பல்சர் ஓட்டும் சத்தியபாமா
பல்சர் ஓட்டும் சத்தியபாமா ( நா.ராஜமுருகன் )

குடும்ப வறுமையை வெல்ல ஆட்டோ ஓட்டும் கரூர் தன்னம்பிக்கை பெண்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வறுமையும், தேவைகளும்தான், மனிதர்களை எதையும் கற்க வைக்கிறது; பல விசயங்களை சாதிக்கவும் வைக்கிறது. கரூரைச் சேர்ந்த சத்தியபாமாவும் அப்படிதான். குடும்பத்தில் தாண்டவமாடிய வறுமை, குடும்பத்திற்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எல்லாம் சேர்ந்து, கோயில் வாசலில் பூ விற்றுக்கொண்டிருந்த அவரை, இன்று ஆட்டோ ஓட்ட வைக்கிறது; பல்சர் ஓட்ட வைக்கிறது.

ஆட்டோ ஓட்டும் சத்தியபாமா
ஆட்டோ ஓட்டும் சத்தியபாமா
நா.ராஜமுருகன்

கரூர் நகரத்தில் உள்ள பகவதியம்மன்கோயில் தெருவில் வசிக்கிறார் சத்தியபாமா. அந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சிறுகுடிசையில் வசித்து வரும் அவர், கரூரில் ஆட்டோ ஓட்டும் முதல் பெண்; ஒரே பெண்ணும்கூட. சவாரிக்காக தயாராகிக்கொண்டிருந்தவரைச் சந்தித்து பேசினோம்.

"எங்களுக்கு பூர்வீகம் இங்கதான். சொந்தமா சிறுஅளவு இடம்கூட கிடையாது. கோயிலுக்குச் சொந்தமான இடத்திலதான் குடியிருக்கிறோம். என் கணவர் சந்திரசேகருக்கும் இதே பகுதிதான் பூர்வீகம். எங்களுக்கு ஒரு பெண், ரெண்டு பசங்க. எனக்கு 39 வயசாவுது. என் கணவர் கூலி வேலைக்குப் போறார். நான் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுறேன். பெருசா படிக்கலை. முதல்ல நான் கோயில் வாசல்ல பூக்கடைதான் வெச்சுருந்தேன். 12 வருஷம் பூக்கடை வெச்சுருந்தேன். ஆனா, அந்த வருமானம், குடும்பத்தை நகர்த்த பத்தலை. அதனால், 'வேற ஏதாவது தொழில் பண்ணணும்'னு நினைச்சுக்கிட்டே இருப்பேன்.

பல்சர் ஓட்டும் சத்தியபாமா.
பல்சர் ஓட்டும் சத்தியபாமா.
நா.ராஜமுருகன்

அப்போதான், எங்கண்ணன் ரவி, ஒரு பழைய பல்சரை வாங்கினார். அதை நான் கத்துக்க நினைச்சேன். என் அண்ணன், 'பொம்பளை புள்ளைக்கு இது தேவையா?'னு உதாசீனப்படுத்தினார். நான் விடாப்பிடியா நின்னேன். அதனால, நாலு வருஷத்துக்கு முன்னாடி கத்துக்கொடுத்தார். இதுக்கிடையில், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பூக்கடை வியாபாரத்தை விட்டுட்டு, குதிரை கழிவை வாங்கி விற்பனை செய்ற தொழிலைப் பார்த்தேன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுவும் கைகொடுக்கலை. அப்போதான், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 'நாம ஆட்டோ ஓட்டுனா என்ன?'னு தோணுச்சு. என் கணவர், 'பழையபடி பூக்கடை வியாபாரத்தையே பாரு'னு சொன்னார். ஆனா நான், 'ஆட்டோ ஓட்டுறது'னு விடாப்பிடியா இருந்தேன். 'ஆட்டோ ஓட்டக் கத்துத்தாங்க'னு 5 ஆட்டோ டிரைவர்கள்கிட்ட கெஞ்சி கூத்தாடினேன். ஆனா, அவங்களுக்குப் போட்டியா வந்திருவேன்னு பயந்து, ஒருத்தரும் கத்து தரலை. ஆனா, என் தவிப்பை பார்த்து இரக்கப்பட்ட சுப்ரமணிங்கிற பையன், பெரியமனசு பண்ணி, எனக்கு ஆட்டோ ஓட்டக் கத்துக்கொடுத்தார். நல்லா கத்துக்கிட்டாலும், ஆட்டோ வாங்க காசில்லை. கையில கால்ல விழுந்து ஒருத்தர்கிட்ட ஆட்டோவை வாடகைக்குப் புடிச்சு, கடந்த ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல பலரும் என்னை நம்பி ஆட்டோவுல ஏற பயந்தாங்க; இன்னும் சிலர், என்னை வேடிக்கைப்பொருளா பார்த்தாங்க. நான் அசராம சவாரிக்கு ஆள் தேடுவேன். என் ஆட்டோவுல ஏறி வர்ற சிலரும், நான் கேட்குற கூலியை விட பாதிதான் கொடுப்பாங்க.

ஆட்டோ ஓட்டும் சத்தியபாமா
ஆட்டோ ஓட்டும் சத்தியபாமா
நா.ராஜமுருகன்
ஏதோ ஒரு சூழல், யாரோ கொடுக்குற நம்பிக்கை, எதிர்பாராம எங்கே இருந்தாச்சும் கிடைக்கும் ஒரு கைதூக்கிவிடல்ல நாம சடாரென்னு மேலே ஏறி வந்துரலாம்னு மனசுல வைராக்கியத்தை விதைச்சுக்குவேன்.
சத்தியபாமா

இன்னும் சிலர், பத்து, இருபது ரூபாய்களை கொடுத்துட்டு, 'இத வச்சுக்க. மீதியை நாளைக்கு தர்றேன்'னுட்டு போயிருவாங்க. மனசு நொறுங்கிப்போயிரும். இருந்தாலும், 'இனி ஒரு புதுதொழிலை தேடமுடியாது. விதிவிட்டது வழி. இதையே பார்ப்போம்'னு மனசுல வைராக்கியத்தோட ஆட்டோ ஓட்டுற தொழிலை தொடர்ந்தேன். என் நம்பிக்கை வீண் போகலை. கொஞ்சம் கொஞ்சமா என்னை நம்பி பயணிகள் வர ஆரம்பிச்சாங்க. மீட்டர்ல சூடு வைக்கிறது, அதிகமா கூலி கேட்கிறதுனு இல்லாம, நான் நியாயமா கூலி கேட்டதால், எனக்கு ரெகுலர் கஸ்டமர்களும் பெருக ஆரம்பிச்சாங்க. ஆனா, வருமானம் மட்டும் பெருசா இல்லை.

பல்சர் ஓட்டும் சத்தியபாமா
பல்சர் ஓட்டும் சத்தியபாமா
நா.ராஜமுருகன்

காரணம், என்னதான் மாடுமாதிரி கஷ்டப்பட்டாலும், ஆட்டோ தினவாடகை 200, பெட்ரோல், வண்டி பராமரிப்பு செலவுன்னு போக மீதி என்னனு பார்த்தா, ஒரு நாளைக்கு 300 ரூபாய் வந்தாலே பெரிசுங்கிற நிலைமைதான். இருந்தாலும், 'ஆட்டோ ஓட்டுற தொழில்தான் சொச்ச காலத்துக்குமான தொழில்'ங்கிறதுல உறுதியா இருக்கேன்.

` நம்மை விட்டு ஏன் விலகிச் செல்கிறார்கள்?!' 
- தினகரனிடம் ஆதங்கப்பட்ட சசிகலா

அதேபோல, சொந்த வேலைக்கு பல்சர் பைக்கை பயன்படுத்துவேன். அதை பார்த்துட்டு, எல்லோரும் எனக்கு, 'பல்சர் அக்கா'னு பேரே வச்சுட்டாங்க. சொந்தமா ஆட்டோ இருந்தா, என் குடும்பத்தை நான் முன்னேத்துபுடுவேன். ஆனா, அதுக்கு வழியில்லை. உதவவும் நாதி இல்லை. என் வருமானமும், என் கணவர் வருமானமும், எங்க அஞ்சு பேரோட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட பத்தலை. சமயத்துல சோத்துக்கே தாளம் போடுற நிலைமைகூட வரும். அப்ப மனசுல உறுதிய மட்டும் விடாம திடமா இருப்பேன்.

 சத்தியபாமா
சத்தியபாமா
நா.ராஜமுருகன்

ஏதோ ஒரு சூழல், யாரோ கொடுக்குற நம்பிக்கை, எதிர்பாராம எங்கே இருந்தாச்சும் கிடைக்கும் ஒரு கைதூக்கிவிடல்ல நாம சடாரென்னு மேலே ஏறி வந்துரலாம்னு மனசுல வைராக்கியத்தை விதைச்சுக்குவேன். நான் ஆட்டோ, பைக் ஓட்டுறேன். ஆனா, என் கணவருக்கு சைக்கிள் மட்டும்தான் ஓட்டத் தெரியும். இப்போ கரூர் கலெக்டரா இருக்கிற அன்பழகன் சாரோட சம்சாரம் என்னைப் பாராட்டினாங்க.

ஒருநாள் கரூர் பேருந்துநிலையத்துக்கிட்ட இருக்கிற சிக்னல்ல ஆட்டோவுல காத்திருந்தேன். அப்போ, பக்கத்துல வந்து நின்னுச்சு ஒரு கார். கொஞ்ச நேரத்துல கார் கதவை திறந்து, உள்ளே இருந்து ஒரு அம்மா எட்டிப்பார்த்தாங்க. 'ஒரு பெண்ணா இருந்துகிட்டு சவாலான ஆட்டோ ஓட்டுற தொழிலைப் பார்க்கிறீங்க. வாழ்த்துகள்'னு சொல்லிட்டு, கையைகாட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கு, 'அவங்க யாரு'ன்னு ஒரே குழப்பமா போச்சு. அப்புறம்தான் பக்கத்தில இருந்தவங்க, 'அவங்க கலெக்டரோட சம்சாரம்'னு சொன்னாங்க.

ஆட்டோ ஓட்டும் சத்தியபாமா.
ஆட்டோ ஓட்டும் சத்தியபாமா.
நா.ராஜமுருகன்

அந்த நேரத்துல அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு ஆட்டோ மட்டுமல்லாம, கார், லாரின்னு மத்த வாகனங்களையும் ஓட்டத் தெரியும். ஏதாச்சும் நகராட்சி அலுவலகத்தில் வேலை போட்டுக் கொடுத்தா, என் குடும்பமே கரை ஏறிரும். ஆனா, என்னைபோல ஏழை பெண்ணோட குரல் யாரைத் தட்டி எழுப்பபோவுது?. இருந்தாலும், பொழுது விடுஞ்சா, 'நான் ஆட்டோக்காரி ஆட்டோக்காரி, நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரி'னு பாட்ஷா படத்துல வர்ற சூப்பர்ஸ்டார் கணக்கா பொழப்பு பழுதில்லாம ஓடுது சார்" என்று முடிக்கிறார்.

உங்களுக்கு நல்லதே நடக்கும் சகோதரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு