பிரீமியம் ஸ்டோரி
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களைச் சிறப்பிக்கும்விதமாக, `என் சமூக வலைதளக் கணக்குகளை, மகளிர் தினத்தன்று பெண்களே நிர்வகிப்பார்கள்.

சாதனைப் பெண்களைப் பற்றி #SheInspiresUs என்ற ஹேஸ்டாக்கில் பதிவிடலாம்... அதில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' என்கிற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் பிரதமர் மோடி. இதன்படியே கலை, சமூகசேவை, பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் ஏழு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மார்ச் 8 அன்று பிரதமரின் சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகித்தனர். பிரதமரின் இந்த ஒரு நாள் அட்மின்கள் யார், எவர்?

சினேகா மோகன்தாஸ்
சினேகா மோகன்தாஸ்

சினேகா மோகன்தாஸ்

சென்னைப் பெண்ணான இவர். ‘ஃபுட் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பை 2015-ம் ஆண்டு தொடங்கி, வீடு இல்லாதவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். மார்ச் 8 அன்று பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் முதல் ட்விட், சினேகா பதிவு செய்ததே. இதன்மூலம், ‘இந்தியப் பிரதமரின் சமூக வலைதளப் பக்கத்தை நிர்வகித்த முதல் பெண்’ என்ற பெருமையை சினேகா பெறுகிறார். சினேகாவின் பதிவில், `பசியை எதிர்த்துச் சண்டையிட வேண்டும். பட்டினியில்லா இந்தியாவை உருவாக்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் போன்ற இடங்களிலும் வீணாகும் உணவுகளைச் சேகரித்து, தேவைப்படுபவர்களுக்கு வழங்கிவருகிறோம். எங்களுடைய கோரிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறோம். அதன் மூலம் உதவத் தயாராக இருப்பவர்களிடமிருந்து உதவிகள் பெற்று தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறோம். என்னுடன் சேர்ந்து நிறைய இளைஞர்கள் பங்காற்றி வருகிறார்கள். இதுவே என்னுடைய வெற்றி. உங்கள் வெற்றியையும் பகிர்ந்துகொள்ளுங்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாளவிகா ஐயர்
மாளவிகா ஐயர்

மாளவிகா ஐயர்

13 வயதில் பள்ளிக்குச் சென்றபோது, குண்டுவெடிப்பில் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர். ஒன்றரை வருடப் போராட்டத்துக்குப்பின் செயற்கைக் கால்கள் பொருத்தி மீண்டும் தடம் பதிக்க தொடங்கினார். கைகளை இழந்த நிலையிலும், தன்னம்பிக்கையுடன் போராடி முனைவர் பட்டம் பெற்றது மாளவிகாவின் சாதனை. மாற்றுத்திறனாளி நலனுக்காகப் போராடும் மாளவிகா, 2018-ம் ஆண்டு நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றார். கடந்தாண்டு டெல்லியில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில், `இயலாமையை இல்லாமல் ஆக்க நம்முடைய தன்னம்பிக்கை அவசியம். என்னுடைய செயல்பாடுகளே எனக்கு இன்று இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றன. மாற்றுத் திறனாளிகள் வலிமையானவர்கள் என்பதை உணர்த்த இந்தியா எங்களை பெருமைப்படுத்தி சரியான பாதையில் அழைத்துச்செல்வதாக நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

கல்பனா ரமேஷ்
கல்பனா ரமேஷ்

கல்பனா ரமேஷ்

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கல்பனா ரமேஷ். மழைநீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனம் தொடர்பாக சமூகத்தில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருபவர். அவரின் பதிவில், `அம்மாதான் என்னுடைய ரோல்மாடல். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது எல்லோரும் தண்ணீர் சிக்கனம் பற்றி பேசுகிறோம். ஆனால், தண்ணீர் பஞ்சத்தைத் தடுக்க ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்பதே என் எண்ணம். கட்டடக்கலைஞரான நான், வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு சொட்டு நீரையும், மழைநீரையும் மறுசுழற்சி செய்யும் வகையில் திட்டமிட்டே வீடு கட்டினேன். அதனால், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிந்தது. எங்கள் வீட்டைப்பார்த்து நிறைய பெண்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் நீரையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த ஆரம்பித் தார்கள். நம்முடைய எதிர்கால சந்ததிக்கு தண்ணீரைச் சேமித்துவைக்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஒரு பெண் நினைத்தால் நிச்சயம் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்' என்று பதிவிட்டிருந்தார்.

ஆரிஃபா
ஆரிஃபா

ஆரிஃபா

காஷ்மீர் பெண்ணான ஆரிஃபா, காஷ்மீரின் பாரம்பர்ய கலைத் தொழிலான ‘நம்தா’ கலையை மீட்டெடுப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்துள்ளார். `அழியும் நிலையில் உள்ள கலையை மீட்டெடுப்பதே என் லட்சியம். ‘நம்தா’ என்பதை ஒரு கலை என்பதைத்தாண்டி நம் அடையாளமாகப் பார்க்கிறேன். “ஒரு பெண் நினைத்தால் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். உங்களைச் சுற்றியிருக்கும் தடைகளை உடைத்து வெளியே வாருங்கள். வெற்றி வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக் கின்றன' என்று பதிவிட்டுள்ளார்.

விஜயா பவார்
விஜயா பவார்

விஜயா பவார்

காராஷ்டிரத்தைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் விஜயா பவார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பஞ்சாரா சமூகத்தைச் சார்ந்தவர். பஞ்சாரா சமூக மக்களின் கைவினைப் பொருள்களை மேம்படுத்துவதையே லட்சியமாகக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அவரின் பதிவில், `பஞ்சாரா கலை என்பது அழியும் நிலையில் இருந்தது. அதற்கு உயிர்கொடுக்க கடந்த இருபது ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆரம்பத்தில் நான் மட்டும்தான் இந்தக் கலையை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கினேன். அதன்பின் அந்தக் கலைப்பொருள் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை எங்கள் சமூகப் பெண்களுக்கு உணர்த்தி, அவர்களையும் என்னோடு இணைத்துக் கொண்டேன். இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றாக இணைந்து பஞ்சாரா கலைப்பொருள்களை உருவாக்கி, மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

கலாவதி தேவி
கலாவதி தேவி

கலாவதி தேவி

த்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கட்டு மானத் தொழிலாளராகப் பணியாற்றும் இவர், திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். பொதுமக்கள் மற்றும் நண்பர்களிடம் நிதி திரட்டி இதுவரை 4,000 கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். அவரின் பதிவில் `பொது இடங்களைக் கழிப்பறையாகப் பயன்படுத்துவதால்தான் ஏராளமான நோய்கள் பரவுகின்றன. அதுகுறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் என்னுடைய சொந்த செலவிலிருந்தே இரண்டு கழிப்பறைகள் கட்டினேன். அதன்பின் கழிப்பறை கட்டத் தேவையான பொருள்களுக்கு நிதி திரட்டத் தொடங்கினேன். இப்போது 4,000 கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் அடிப்படை மனிதநேயம்தான்' என்று பதிவிட்டுள்ளார்.

பீனா தேவி
பீனா தேவி

பீனா தேவி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீனா. இயற்கை விவசாயத்தின் மீது பேரார்வம் கொண்டவர். அரசு வழங்கும் பயிற்சிகள் மூலம் காளான் வளர்ப்பு பற்றி அறிந்துகொண்டார். காளான் வளர்க்க ஏற்ற வகையில் தனியிடம் இல்லாத சூழலில் தன்னுடைய வீட்டிலேயே காளான் வளர்ப்பைத் தொடங்கினார். அது வெற்றிகரமான விளைச்சலைத்தர, ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் காளான் வளர்ப்புப் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளார். அவரின் பதிவில், `ஆரம்பத்தில் ஒரு கிலோ காளான் உற்பத்தியில்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. ஒவ்வொரு கிலோ உற்பத்தியிலும் கிடைத்த லாபத்தின் மூலம்தான் இன்று என் தொழில் இவ்வளவு வளர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் தங்களை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். பெண்களால் நிச்சயம் சாதிக்க முடியும்' என்று பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு