Election bannerElection banner
Published:Updated:

`பிப்ரவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை!' - செவிலியர்கள் போராட்டத்தில் அடுத்து என்ன?

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம் ( படம்: பெ.ராகேஷ் )

’’எங்களுடைய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளைப் பராமரிக்கும் பணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினோம்.’’

தமிழ்நாடு முழுக்க ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தைச் சேர்ந்த செவிலியர் செந்தில் குமாரியிடம் பேசினோம்.

‘’மத்திய அரசின் மருத்துவமனைகளில் பணிபுரிகிற செவிலியர்களுக்கு இணையாக எங்களுக்கும் ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்பட வேண்டும் என்ற எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.

செவிலியர் செந்தில்குமாரி
செவிலியர் செந்தில்குமாரி

இது எங்கள் முதல் கோரிக்கை. இரண்டாவதாக, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா பெருந்தொற்றின் போது பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்தபடி ஒரு மாத ஊக்க ஊதியமும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு உரிய நிவாரணமும், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

எங்களுடைய மூன்றாவது கோரிக்கையாகக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படுவதோடு இனிவரும் காலத்தில் தொகுப்பூதிய முறையினை அரசு அறவே ரத்து செய்யக் கேட்டிருக்கிறோம். நான்காவதாக, மத்திய அரசின் செவிலியர்களைப் போல ஐந்து கட்ட காலமுறை பதவி உயர்வு மற்றும் தமிழக அரசு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்ட பதவி பெயர் மாற்ற அரசு ஆணை வழங்கிட வேண்டும். ஐந்தாவதாக இந்திய செவிலிய குழும விதிகளின்படி செவிலியர்களுக்கான புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்
படம்: பெ.ராகேஷ்

எங்களுடைய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளைப் பராமரிக்கும் பணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினோம். ஒரு நாள் போராட்டம் நடத்தியவுடனே, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர். பிப்ரவரி மாதம் 3-ம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்திருக்கிறார். பேச்சு வார்த்தையின் முடிவைப் பொறுத்துத்தான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம்’’ என்கிறார்.

`என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை!’ -கொரோனா வார்டில் பணியாற்றும் நர்ஸ் உருக்கம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு