Published:Updated:

``பிரதமர் பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை!" - `ஆட்டோ ஆம்புலன்ஸ்' ராதிகா

ஆட்டோ ஆம்புலன்ஸ்
ஆட்டோ ஆம்புலன்ஸ்

``பிரதமர் மோடி என்னை பாராட்டுவார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிரதமரின் இந்தப் பாராட்டு, மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற என்னை ஊக்கப்படுத்தும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னுார் வண்டி சோலை பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர், தன் நண்பர்களின் உதவியுடன் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், குன்னூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி யூனிட் ஒன்றை உருவாக்கிக் கொடுத்து பெருந்தொண்டாற்றினார்.

ஆட்டோ ஆம்புலன்ஸ்
ஆட்டோ ஆம்புலன்ஸ்
தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்; இலவசமாக அளித்த குன்னூர் பெண்!

அடுத்த முயற்சியாக, தனது காஃபி ஷாப்புக்கு வரும் வாடிக்கையாளர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ரூ.21 லட்சம் செலவில் `ஆம்புரிக்ஷ்' எனப்படும் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கினார். இதற்காக, மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட 470 சிசி திறன் கொண்ட பஜாஜ் மாக்சிமா வாகனத்தை ஆல்டர் செய்து நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதி, ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற ஆம்புலன்ஸுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இவரது இந்த மகத்தான சேவை நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில், `மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டில் உள்ள மலை மாவட்டமான நீலகிரியின் கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளில் ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் சென்று வருவது மிகுந்த பயன் அளிக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வது பெருமை அளிப்பதாக உள்ளது" என ராதிகாவின் சேவையைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

ஆட்டோ ஆம்புலன்ஸ்
ஆட்டோ ஆம்புலன்ஸ்
Vikatan

பிரதமரின் பாராட்டு குறித்துப் பேசிய ராதிகா, ``போதிய சாலை வசதிகள் இல்லாத மலைக் கிராம மக்களுக்குச் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இதைச் செய்தோம். தற்போது இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் குன்னூர், கோத்தகிரி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. பிரதமர் மோடி என்னைப் பாராட்டுவார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிரதமரின் இந்தப் பாராட்டு, மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற என்னை ஊக்கப்படுத்தும்" என்றார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு