Published:Updated:

நான் ராமராஜன் மகள் என்பதில் பெருமை! - அருணா ராமராஜன்

ராமராஜன், அருணா ராமராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமராஜன், அருணா ராமராஜன்

அப்பா... அம்மா... அன்பு

முகநூலின் முகப்புப் படம் முதல் வாழ்க்கையின் ஞாபக அடுக்குகள்வரை அருணாவுக்கு எல்லாமே அப்பா ராமராஜன்தான். சாயலில் அப்படியே அம்மா நளினி... மற்றபடி சகலத்திலும் அப்பா ராமராஜனின் பிரதி.

ராமராஜனின் படங்களிலும் பாடல்களிலும் தாய்ப்பாசம் தூக்கலாக இருக்கும். அவரின் மகள் அருணாவின் வாழ்க்கைப் பதிவுகளில் தந்தைப் பாசமே நிறைந்திருக்கிறது. அந்த அளவுக்கு அவருக்கு எல்லாமே அப்பா... அப்பா... அப்பப்பா!

பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார் அருணா. அவரோடு பேசிக்கொண்டிருந்தால் நளினி உருவத்தில் ராமராஜன் பேசுவது போன்று இருக்கிறது

‘`அம்மா, அப்பா ரெண்டு பேருமே அதிகம் படிக்கலை. அதனால பிள்ளைங்களோட படிப்பு ரொம்ப முக்கியம்னு அம்மா நினைச்சாங்க. அந்த விஷயத்துல அப்பா நேரெதிர். படிப்பு ரெண்டாம்பட்சம்தான், மரியாதை, பழக்க வழக்கங்கள்தான் முக்கியம்னு சொல்வார்.

அப்பாகிட்ட கிராமத்தார்களுக்கே உரிய அந்த மரியாதையைப் பார்க்கலாம். வீட்டுக்கு யார் வந்தாலும் எழுந்து, வணக்கம் சொல்லி, தண்ணீர்கொடுத்து உபசரிக்கணும்னு சொல்வார். ‘நீ எவ்வளவு பெரிய செலிபிரிட்டி குழந்தையா இருந்தாலும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை முக்கியம்’னு சொல்வார். வீட்டுக்குள்ளே பிரளயமே நடந்திட்டிருந்தாலும், அந்த நேரம் யாராவது வீட்டுக்கு வந்தா, எல்லாத்தையும் நிறுத்திட்டு அவங்களை உபசரிக்கணும் அப்பாவுக்கு. `வணக்கம்'னுதான் சொல்லணும். ஹாய், குட் மார்னிங்கெல்லாம் கூடாது.

ராமராஜன், அருணா ராமராஜன்
ராமராஜன், அருணா ராமராஜன்

நகரத்துக் குழந்தைங்க எல்லா உறவுகளையும் பொதுவா அண்ணா, ஆன்ட்டி, அங்கிள்னு கூப்பிடுவோம். அப்பாவுக்கு அது பிடிக்காது. மச்சானை மச்சான்னுதான் கூப்பிடணும், மாமாவை மாமானுதான் கூப்பிடணும்னு சொல்வார். அப்பாவோட அம்மாவை `அப்பத்தா'னுதான் கூப்பிடுவோம். என் தம்பியோட குழந்தை எங்கம்மாவை அப்பத்தானுதான் கூப்பிடுது. முடியை வெட்டறது, ஸ்ட்ரெயிட்டனிங் பண்றதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. அவருடைய இன்னசன்ஸ் இன்னும் மாறவே இல்லை’’ - வார்த்தைக்கு வார்த்தை அப்பா எட்டிப்பார்க்கிறார் அருணாவின் பேச்சில்.

‘`அம்மாவும் அப்பாவும் பிரியும்போது நானும் தம்பியும் ஏழாவது படிச்சிட்டிருந்தோம். எங்க முன்னாடி அவங்க சண்டையே போட்டதில்லை. பிரிவுங்கிறது அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு. அதை எங்களுக்குப் புரியவெச்சாங்க.அம்மாவைப் பத்தி அப்பாவோ, அப்பாவைப் பத்தி அம்மாவோ எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட தப்பா பேசினதில்லை. டைவர்ஸ் அன்னிக்கு கோர்ட்டுல அம்மா மயங்கிவிழுந்துட்டாங்க. அப்பா தான் அம்மாவைத் தூக்கினார். ‘நீங்க நிஜமாவே டைவர்ஸுக்குத்தான் வந்திருக்கீங்களா’னு ஜட்ஜே ஆச்சர்யமா கேட்டார். அந்தச் சூழல்லயும் அவங்களுடைய அன்பு குறையலை. இன்னிக்கும் அப்படித்தான். அவங்க டைவர்ஸுக்குப் பிறகு தம்பியும் நானும் அம்மாகூடதான் இருந்தோம். எங்களுக்குத் தோணும் போதெல்லாம் அப்பாவைப் பார்க்கிற சுதந்திரம் இருந்தது. ஆனாலும், அப்பாவை தினம் தினம் மிஸ் பண்ணியிருக்கோம்’’ - அந்த வயதில் உறவில் வெற்றிடத்தை எதிர்கொண்ட வலி இன்றும் மிச்சமிருக்கிறது அருணாவிடம்.

‘’என்னை அம்மா ஒரு மினி ராமராஜனாதான் வளர்த்திருக்காங்க. அப்பாவின் குணங்கள் என்கிட்ட நிறைய இருக்கு. எவ்வளவு சூடா இருந்தாலும் அப்பா அஞ்சே நிமிஷத்துல சாப்பிட்டுடுவார். நானும் அப்படித்தான். ரெண்டு பேருமே ஸ்பூன், ஃபோர்க்கெல்லாம் யூஸ் பண்ண மாட்டோம். நான் பார்க்கிறதுக்கு அம்மா மாதிரியே இருப்பேன். என் கையைத் தொட்டுப் பார்த்து, ‘ஆத்தா மாதிரியே கை வந்திருச்சில்லே’ம்பார். அப்பாவைப் பத்தி நாங்க நினைக்காத, பேசாத நாளே இருக்காது. டி.வியில தினம் அப்பா பாட்டு வரும். அதைப் பார்த்ததும் அம்மாவுக்கு அந்த நாள் ஞாபகங்கள் வரும். அதைப் பத்திப் பேசிட்டிருப்போம். அம்மாவுக்கு அப்பா மேல வெறித்தனமான அன்பு உண்டு. ஒருவேளை அது வெறுப்பா மாறிடக்கூடாதுன்னே பிரிஞ்சாங்களோனு நினைப்பேன். அப்பாவும் அப்படித்தான். அவரைப் பார்க்கப் போனா முதல்ல ‘அம்மா எப்படி இருக்காங்க’னுதான் கேட்பார். இதையெல்லாம் நான் சொன்னா பலரும் நம்ப மாட்டாங்க, நடிக்கிறோம்னு சொல்வாங்க. ஆனா, அதுதான் நிஜம்.

ராமராஜன், அருணா ராமராஜன்
ராமராஜன், அருணா ராமராஜன்

எம்.பி ஆன பிறகுதான் அப்பா இங்கிலீஷ் கத்துக்கிட்டார். தினமும் சாயந்திரமானா என்னையும் தம்பியையும் உட்காரவெச்சு எங்ககிட்ட இங்கிலீஷ் பேசுவார். தப்புத்தப்பாதான் பேசுவார். நாங்க பயங்கரமா ஆர்கியூ பண்ணுவோம். ஆனாலும் விடமாட்டார். ஏன் தப்பு, என்ன தப்புன்னு கேட்பார். அப்பா அவ்வளவு சூப்பரா டிரைவ் பண்ணுவார். அவர்கூட டிராவல் பண்றது செம எக்ஸ்பீரியன்ஸ். ஃபிரெண்ட்ஸ் யாராவது அவங்க அப்பாவைத் திட்டறதைப் பார்க்கும்போது, ‘கூடவே இருக்கிறதாலதானே திட்டத் தோணுது’னு நினைப்பேன். அப்பல்லாம் பயங்கரமா மிஸ் பண்ணுவேன். அப்பா என்ற கேரக்டரை தினம் தினம் மிஸ் பண்ணிட்டுதான் இருக்கேன்’’ - அப்பாமீது அவ்வளவு பாசம் என்றால் அப்பாவாகவும் இருந்து வளர்த்த அம்மாமீது அநியாய பாசம் அருணாவுக்கு.

‘`அம்மா, அப்பா பிரிஞ்சபோது எங்களுக்கு யாரும் சப்போர்ட் இல்லை. அம்மா ஷூட்டிங் போயிட்டு லேட்டா வருவாங்க. நானும் தம்பியும் வீட்டுல தனியா இருக்கும்போது அப்பா இருந்திருந்தா நல்லாருந்திருக்குமோனு ஏங்கியிருக்கோம். அம்மா, அப்பா ரெண்டு பேருமே சேர்ந்திருந்த போது பணத்துக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கலை. கஷ்டம்னு யார் வந்தாலும் தூக்கிக்கொடுத்திருக்காங்க. நிறைய ஏமாந்திருக்காங்க. அப்பாவும் அம்மாவும் இன்னும் உழைச்சுதான் சாப்பிடறாங்க. சொத்தோ, பேங்க் பேலன்ஸோ சேர்த்து வைக்கலை. டைவர்ஸுக்குப் பிறகு வாடகை வீட்டுலதான் இருந்தோம். ‘இன்னிக்கு கார் இருக்கு. நாளைக்கு நடந்துபோக வேண்டிய சூழ்நிலை வந்தா அதுக்கும் ரெடியா இரு’னு சொல்லி வளர்த்தாங்க. நல்ல படிப்பைக் கொடுத்தாங்க. எனக்கு 20 வயசுல கல்யாணம் பண்ணிடணும்னு அப்பா ஆசைப்பட்டார். `லா' படிச்சதால. அது முடியலை. அப்புறம் கொஞ்ச நாள் வேலை பார்க்கணும்னு சொன்னேன். அப்பா புரிஞ்சுக்கிட்டார். நானும் சரி, என் தம்பியும் சரி லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டோம். நான் லவ் பண்ணிட்டிருந்தபோது அவரை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போய், ‘இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’னு என்னால தைரியமா சொல்ல முடிஞ்சது. ஆசீர்வாதம் பண்ணி எங்க கல்யாணத்தை முன்னால நின்னு நடத்தி வெச்சார்.

என் கணவர் எனக்கு இன்னோர் அப்பான்னே சொல்லலாம். அதனாலதான் அவரை எனக்குப் பிடிச்சதோனுகூட நினைப்பேன்’’ - அகம் மகிழும் அருணாவுக்கு அப்பாவுக்கு நடந்த அந்த விபத்தை இப்போது நினைத்தாலும் பதைபதைக்கிறது.

‘`2006-ம் வருஷம் அப்பாவுக்கு மதுரையில ஒரு ஆக்ஸிடன்ட். அன்னிக்கு விடியற்காலையில என் தம்பிக்கு போன் வந்தது. அவன் அதைக் கனவுனு நினைச்சு கட் பண்ணிட்டான். காலையில டி.வி-யில நியூஸ் பார்த்து அம்மா ஷாக் ஆயிட்டாங்க. நானும் தம்பியும் மதுரைக்குப் போனோம். அடுத்த நாள் அப்பாவுக்கு பிரசாரம். உள்ளே போய் அப்பாவைப் பார்த்தா அடையாளமே தெரியாம ஒடுங்கிப்போய், எங்களைக்கூட யார்னு தெரியாத நிலையில படுத்திருந்தார். பதினெட்டு ஃபிராக்ச்சர்ஸ். அவர் முழுசா குணமாகிறவரைக்கும் நானும் தம்பியும் கூடவே இருந்து பார்த்துக்கிட்டோம். அதுவரைக்கும் அம்மா தவிச்ச தவிப்பு இப்பவும் மறக்கலை’’ - அன்பு மகளுக்கு அப்பாவைப் போல டிரஸ் செய்வதில்தான் ஆர்வமாம்.

‘`அப்பாவோட டிரஸ்ஸிங் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை மாதிரியே எனக்கும் மிட்டாய் பிங்க், கிளிப்பச்சை கலரெல்லாம் பிடிக்கும். அம்மாவும் தம்பியும் எங்களுக்கு ஆப்போசிட். இப்பவும் அப்பாவைப் பார்க்கப் போனா ரொம்ப எக்ஸைட் ஆயிடுவேன். நாம டல்லா இருந்தாலும் அவருடைய ஷர்ட் கலர் அப்படியே மனசை மாத்திடும். சேர்ந்திருந்தபோதும் அம்மா எனக்கும் அப்பாவுக்கும் ஒரே மாதிரிதான் டிரஸ் வாங்குவாங்க. பிரிஞ்ச பிறகும் அப்பாவும் நானும் ஷாப்பிங் போனா ஒரே மாதிரி வாங்குவோம். அவருடைய டிரஸ்ஸிங் சென்ஸை யாராவது கிண்டல் பண்ணினா செம கடுப்பாயிடுவேன்’’ என்கிறார் அப்பாவுக்குத் தப்பாத மகளாக.

‘`அப்பா எனக்கு சூப்பர் ஹீரோ. எம்.ஜி.ஆர் மாதிரியே வாழணும்னு ஆசைப்பட்டவர். இருக்கிறவரைக்கும் எல்லாருக்கும் கொடுத்துட்டே இருக்கணும்னு நினைச்சவர். பயங்கரமான ஹார்டு வொர்க்கர். டெல்லியில ஒரு வீட்டுல பாத்ரூம் கழுவியிருக்காராம் அப்பா. அதே டெல்லியில பிரதமரை நேருக்கு நேரா சந்திக்கிற அளவுக்கு வளர்ந்தார்னா அது அவருடைய ஹார்டு வொர்க்காலதான். அம்மாவை நளினினு கூப்பிடறதைவிடவும் மிஸஸ் ராமராஜன்னு கூப்பிட்டா அவ்வளவு சந்தோஷமாயிடுவாங்க. நானும் அப்படித்தான் ராமராஜன் பொண்ணுன்னு சொல்லிக்கிறதை கர்வமாவும் பெருமையாவும் ஃபீல் பண்றேன். எங்க மூணு பேரையும் அப்படி ஃபீல் பண்ணவைக்கிறதுதான் அப்பாவோட ஸ்பெஷாலிட்டியே’’ - திகட்டத் திகட்ட தாய் தந்தை பாசம் பகிர்பவருக்கு அவர்களை மீண்டும் சேர்த்துவைக்கும் ஆசை உண்டா?

‘`பிரிவுக்கு முன்னாடி அம்மா எங்களைப் பார்த்துக்கிட்டு ஹவுஸ்வொயிஃபா இருந்தாங்க. இப்போ அவங்களுடைய லைஃப்ஸ்டைல் ரொம்பவே மாறியிருக்கு. ஆனா, அப்பா இன்னும் அதே சிந்தனையோடுதான் இருக்கார். ஒருவேளை இனி அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா அது எந்தளவுக்கு சரியா வரும்னு தெரியலை. சேர்ந்தா நல்லாத்தான் இருக்கும். எங்க ஆசையைத் தாண்டி, அது அவங்க ரெண்டு பேருடைய தனிப்பட்ட முடிவு. அதுக்கு மரியாதை கொடுக்கணும். இப்படி இருக்கிறது அவங்களுக்கு சந்தோஷம்னா எங்களுக்கும் அதுதானே சந்தோஷம்...’’ - ஏக்கம் மறைத்துச் சிரிக்கிறார்.

அன்பு எதையும் சாதிக்கும் அருணா!