ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

குழந்தைகள் கைக்கு தொலைவில்!

என் உறவினரும், அவர் மனைவியும் அடிக்கடி தலைவலி தைலம் பயன் படுத்துவது வழக்கம். இரண்டு வயதாகும் அவர்கள் குழந்தை ஒருநாள், தைல பாட்டிலை எடுத்து, தன் பெற்றோர் செய்வது போலவே அதைத் தலையில் தேய்த்துக்கொள்ள, அது எரிச்சல் தர ஆரம்பித்தவுடன் அதே கையால் கண்ணைத் தேய்க்க, கண்ணும் தாங்க முடியாமல் எரிய ஆரம்பிக்க, அலறி விட்டாள். உறவினரின் மனைவி பதறி ஓடிச்சென்று பார்த்து முகம், கைகள் எல்லாம் சோப்பு போட்டுக் கழுவி, கண்களை நன்கு தண்ணீர்விட்டு கழுவி என, குழந்தைக்கு எரிச்சல் போக்குவதற்குள் பல நிமிடங்கள் ஆகிவிட்டன. மருந்துப் பொருள்களைக் குழந்தைக்கு எட்டுவதுபோல் வைக்கக் கூடாது என்பதற்கு இன்னும் எத்தனை பாடங்கள் படிப்பார்களோ பெற்றோர்? - அமுதா அசோக்ராஜா, திருச்சி-15

அனுபவங்கள் ஆயிரம்!

பலகாரத்துக்குப் பிரண்டை நீர்!

எங்கள் தோட்டத்தில் உள்ள பிரண்டையை அடிக்கடி பறித்துச் செல்லும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், அதை எதற்குப் பயன்படுத்துவார் என்பது குறித்துக் கேட்டேன். அவர் சொன்னதோ, இதுவரை நான் கேள்விப்படாதது. ‘பலகாரங்கள் செய்ய மாவில் வெந்நீர் ஊற்றிப் பிசைவோம் இல்லையா... அதற்குத் தண்ணீர் சுடவைக்கும்போது, அதில் உப்புடன் ஒரு பிரண்டைத் துண்டையும் தட்டிப் போட்டு, கொதிக்க வைத்து ஆறவிட வேண்டும். அந்த நீரைப் பயன்படுத்தினால் உடம்புக்கு நல்லது. பலகாரங்கள் வெடிக்காமலும், கரகரப்பாகவும் இருக்கும்’ என்றார். நானும் இதைப் பின்பற்றி பார்க்க, சீடை கூட வெடிக்கவில்லை. மற்றவையும் நன்றாகவே வந்தன. பிரண்டையின் வாசனையோ, அரிப்போ தின்பண்டங்களில் துளியும் இல்லை. இதுபோன்ற வித்தியாசமான ஆரோக்கியமான குறிப்புகள் நமக்கு அபூர்வமாகத்தான் கிடைக்கும். அவற்றையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப்போடாமல், உடனே செய்து பார்த்து உலகுக்கும் சொல்வோம். - இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி-1

அனுபவங்கள் ஆயிரம்!

அத்தனையும் நடிப்பா கோபால்?!

கொரோனா காலத்தில் இரண்டு வாரங்கள் என்னை தனிமைப்படுத்த வேண்டிய நிலை. மதிய உணவு செய்ய முடியாது என்பதால் உணவகத்தில் பெற்றுக் கொண்டோம். என் கணவர், காலை, மாலை டிபன் செய்துவிடுவார். வெந்நீர் கூட வைக்கத் தெரியாது என்று 30 ஆண்டுகளாக என்னிடம் சொல்லி எஸ்கேப் ஆனவர், அந்த நாள்களில் செய்த தோசை, சட்னி, டீயின் ருசையை எல்லாம் சுவைத்தபோது, ‘அத்தனையும் நடிப்பா கோபால்?’ என்று கேட்கத் தோன்றியது. இருவருமே அலுவலகப் பணிகளை மேற்கொண்டவர்கள். `கல்யாண மாகி இந்த 30 வருஷங்களா நான் செஞ்ச வேலைகளை இந்த 15 நாள்கள் நீங்க செஞ்சிருக்கீங்க. இன்னும் 29 வருஷம், 11 மாசம், 15 நாள்கள் செய்து கடனை தீர்க்கணும்’ என்றேன். இப்போது இருவரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆண்களையும் சமையலறைக்குள் அழைப்போம்! - கே.லலிதா, செங்கல்பட்டு

அனுபவங்கள் ஆயிரம்!

விருந்து நாள்களில் இது முக்கியம்!

சென்ற வருடம் உறவினர் வீட்டுத் தலைதீபாவளி விருந்துக்கு எங்களை அழைத் திருந்தார். அவர் ஒரு கேட்டரரிடம் சாப்பாடு ஆர்டர் கொடுத்திருந்தார். சாப்பாடு டெலிவரி செய்தபோது அவர்கள் சில `யூஸ் அண்ட் த்ரோ’ உணவு பேக் செய்யும் டப்பாக்களையும் கொடுத்திருந்தனர். `மீந்துபோன உணவை தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்ல இது உதவும்’ என்றனர். அதேபோல, அன்று விருந்து போக மீதம் இருந்த சாப்பாட்டை அவரவர் தேவைக்கேற்ப அந்த டப்பாக்களில் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம். உணவு வீணாகாமல் இருந்ததோடு, எங்களுக்கு வீட்டுக்கு வந்ததும் இரவு சமையலிலிருந்தும் ரெஸ்ட் கிடைத்தது. இப்போதெல்லாம் எங்கள் வீடுகளில் விருந்துக்குத் திட்டமிடும்போது லிஸ்ட்டில் மறக்காமல் யூஸ் அண்ட் த்ரோ உணவு டப்பாக்களையும் வாங்கி விடுகிறோம். - மீனலோசனி பட்டாபிராமன், சென்னை-92

அனுபவங்கள் ஆயிரம்!

இப்படிச் செய்யலாம்!

எங்கள் வீட்டில் தினசரி பேப்பர், வார இதழ்கள், மாத இதழ்கள் என வாங்குவது வழக்கம். அவற்றை நேர்த்தியாக எடுத்து வைத்து, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று எடுத்துச் சென்று, எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலிருக்கும் முதியோர் இல்லத்தில் நானும் கணவரும் கொடுத்து வருவோம். அங்குள்ள வாசிப்பு பழக்கமுள்ள முதியவர்கள் மட்டுமல்லாது, வாசிப்பு பழக்கமில்லாதவர்களும் இப்போது அதைப் பழகிக்கொண்டு அந்த இதழ்களை ஆர்வமாகப் படிக்கின்றனர். எங்களைப் பார்த்ததுமே, தங்களுக்குப் பிடித்த உணவு, பொம்மையுடன் வரும் உறவினர்களைப் பார்க்கும் பிள்ளைகளின் கண்களில் தெரியும் சந்தோஷம் போல அவர்கள் கண்களிலும் மின்ன ஆரம்பிப்பதைப் பார்ப்பதில் எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். - ஜெ.ரஞ்சிதமணி, கோயம்புத்தூர்-36

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com