Published:Updated:

நேசக்காரி: மனம் இருந்தால் இடம் உண்டு!

ஸ்கூட்டியில் செடி வளர்க்கும் ரீட்டாமேரி

பிரீமியம் ஸ்டோரி

செல்லப்பிராணிகளுடன் கார், பைக், ஸ்கூட்டி என வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நடுவே, செல்லச் செடிகளுடன் தன் ஸ்கூட்டியில் பயணிக்கும் ரீட்டாமேரி, கன்னியாகுமரி வரும் உள்ளூர் மக்கள் தொடங்கி சுற்றுலாப்பயணிகள் வரை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

“மீனுமீனேய்ய்...” என உரத்த குரலில் கூவி மீன் வியாபாரம் செய்துகொண்டிருந்த ரீட்டாமேரியிடம் பேச்சுக் கொடுத்தபோது, ``பொறந்து, வளர்ந்தது, கல்யாணம் செஞ்சது எல்லாமே நாகர்கோவிலில்தான். நாலாப்பு வரைதான் படிச்சிருக்கேன். கல்யாணமாகி 30 வருஷமாச்சு. போதைக்கு அடிமையான கணவரால குடும்பத்தைக் கவனிக்க முடியல. அதனால நான் மீன் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். 16 வருஷத்துக்கு முன்ன அவரும் இறந்துட்டாரு.

28 வருஷமா மீன் வியா பாரம்தான். ஆரம்பத்துல, கன்னியாகுமரியில இருந்து மீன் வாங்கிட்டு ரெண்டு பஸ் ஏறி, நாகர்கோவிலுக்கு வந்து தலைச்சுமடாத்தான் வியாபாரம் பார்த்தேன். பஸ்ஸுல மீன்சட்டியைத் தூக்கிட்டு ஏறினாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. `பின்னால போ’, `முன்னால போ... மீன் நாத்தம் தாங்கல’ன்னு எரிச்சலோட சொல்லுவாங்க.

நேசக்காரி: மனம் இருந்தால் இடம் உண்டு!

ஒருநாள், செட்டிகுளத்துல இருந்து பஸ்ஸுல வந்துகிட்டிருக்கும்போது காலால மீன்சட்டியை ஒரு அம்மா எட்டி உதைச்சுட்டாங்க. பஸ்ஸுக்கு வெளியே சட்டி உருண்டு, மீன்களெல்லாம் சிதறிடுச்சு. பஸ்ஸை நிறுத்தி, கீழ இறங்கி மீனையெல்லாம் பொறுக்கிக்கிட்டு, அழுதபடியே நாகர்கோவிலுக்கு நடந்தே வந்தேன். இனி, தனியா வண்டியில வியாபாரம் செய்யலாம்னு தோணுச்சு. டிரைவிங் ஸ்கூல்ல மூணே நாளுல வண்டி ஓட்டக் கத்துக்கிட்டேன். பழைய ஸ்கூட்டியை வாங்கி கேரியர் வெச்சு, மீன்சட்டியை வெச்சுக்கட்டி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். 13 வருஷமா ஸ்கூட்டியிலதான் வியாபாரம்'' என்பவர், தன்னுடைய செடி மீதான காதலையும் அதன் மூலமாகவே தீர்த்திருக்கிறார்.

``சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்க்குறதுன்னா ரொம்ப விருப்பம். அரை சென்ட் வீட்டுல அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. அதனால, ஸ்கூட்டியிலேயே வளர்த்தா என்னன்னு யோசனை தோணுச்சு. கால் வைக்குற இடத்துல பிளாஸ்டிக் தகடு வெச்சு, சிமென்ட் கலவையால பூசி, வண்டல்மண், மட்கிய சாணம் போட்டு சோதனை முயற்சியா அறுகம்புல் வெச்சேன். நெடுநெடுன்னு வளர்ந்துச்சு. பிறகுதான், துளசி, ரோசா, நித்யகல்யாணி செடிகளை வெச்சேன். பூக்கள் செடியில் இருந்தாதான் அழகுங்கறதால பறிக்கறதே இல்ல.

ரீட்டாமேரி
ரீட்டாமேரி

சிக்னல்ல நிக்கறப்பவும், தெருவுல போறப்பவும் ஸ்கூட்டி செடிகளை ஆச்சர்யமா பார்ப்பாங்க. `எங்க வீட்டு துளசி மாடத்துலயே சரியா வளர மாட்டேங்குது. உங்க பைக்குல நல்லா வளர்ந்திருக்கே’ன்னு ஆச்சர்யமா கேட்பாங்க. வெளிநாட்டுப் பயணிகள் செல்ஃபி எடுத்துட்டுப் போவாங்க'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லும் ரீட்டாமேரி,

``தினமும் காத்துல அசைந்தாடினபடி என்னோட பயணிக்கிற இந்தச் செடிகளைப் பார்க்குறப்ப... மனசுக்குள்ள ஒரு நிம்மதி. மூங்கிலை ரெண்டா கீறி, அதுலகூட கீரை வளர்க்கறாங்க. மனம் இருந்தால் எல்லாத்துக்கும் இடம் உண்டு” என்றபடியே ஸ்கூட்டி செடிகளை வாஞ்சையாகத் தடவிக்கொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு