Published:Updated:

“பொம்மைகளைக்கூட சிரிச்ச மாதிரி வடிவமைக்கிறோம். ஆனா...”

 கணவருடன் சாந்தி அம்மா...
பிரீமியம் ஸ்டோரி
News
கணவருடன் சாந்தி அம்மா...

நவராத்திரி ஸ்பெஷல்

சரணி ராம்

துரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் பாதையில் இருக்கிறது விளாச்சேரி கிராமம். அங்குள்ள எல்லா வீடுகளின் வாசல்களிலும் கலர் கலரான கொலு பொம்மைகள் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம் பொம்மைகளை மோல்டிலிருந்து எடுப்பது, பெயின்ட் செய்வது, விற்பனைக்காக பேப்பர் மற்றும் வைக்கோல்களில் சுற்றுவது போன்ற பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் வியாபாரிகள் மொத்த விலைக்கு பொம்மைகளை வாங்கி லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். விளாச்சேரியில் மூன்று தலைமுறைகளாக கொலு பொம்மை தயாரிப்பில் இருக்கும் சாந்தி அம்மாவிடம் பேசினோம்.

“பொம்மைகளைக்கூட சிரிச்ச மாதிரி வடிவமைக்கிறோம். ஆனா...”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பொம்மை தயாரிப்பு எங்க ஊர்ல பிரதான தொழில். இங்கே 200 குடும்பங்கள் பொம்மை தயாரிப்பை நம்பிதான் இருக்கு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சிலைக்கான மோல்டு இருக்கும். யார்கிட்ட என்ன மோல்டு இருக்கோ அவங்க அந்த பொம்மைகள் தயாரிப்பாங்க. மோல்டு செய்யறதுக்கும் சில குடும்பங்கள் இருக்கு. எங்களுக்குள்ள போட்டி பொறாமையெல்லாம் கிடையாது. விளாச்சேரியில் மட்டுமல்ல... கிருஷ்ணகிரி, மானாமதுரை, விழுப்புரம், பண்ருட்டினு நிறைய இடங்களில் கொலு பொம்மை தயாரிக்கிறாங்க. ஒவ்வொரு ஊரு மண்ணுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். எங்க ஊர் மண்ணின் தன்மைக்கு ரெண்டடிக்குமேல் அச்சு பொம்மைகள் செய்ய முடியாது. உயரமான பொம்மைகள் வேணும்னா கையில்தான் செய்யணும்.

“பொம்மைகளைக்கூட சிரிச்ச மாதிரி வடிவமைக்கிறோம். ஆனா...”

எங்க குடும்பத்தில் ஆரம்பத்தில் திருவிழாவுக்குப் படைக்கும் நேர்த்திக் கடன் பொம்மைகள்தான் பண்ணிட்டு இருந்தோம். அப்புறமாதான், கொலு பொம்மைகள் தயாரிக்க வந்தோம். என் வீட்டுக்காரரும் மகனும் கொலு பொம்மைக்கான மோல்டு செய்து கொடுப்பாங்க. நான், மகள், மருமகள் சேர்ந்து பொம்மையை அச்செடுப்பது, பெயின்டிங் வேலை, பேக்கிங் வேலைகளைப் பார்த்துப்போம். வருஷம் முழுக்க பொம்மைகள் செய்யறோம். ஆனா நவராத்திரி சீஸன்ல மட்டும்தான் விற்பனை இருக்கும். இந்த ஒரு மாச வியாபாரத்துக்காகத்தான் மீதி 11 மாசங்களும் உழைக்கிறோம்’’ என்ற சாந்தி அம்மா பொம்மை தயாரிக்கும் முறை பற்றிப் பேசுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
“பொம்மைகளைக்கூட சிரிச்ச மாதிரி வடிவமைக்கிறோம். ஆனா...”

“ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜைக்கு அடுத்து வரும் வளர்பிறை நாளில் பூஜை பண்ணி, குலதெய்வத்தைக் கும்பிட்டு, அடுத்த வருஷத்துக்கான பொம்மைகளைச் செய்ய ஆரம்பிப்போம். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள்ல மழை பெஞ்சு கம்மாயில் தண்ணீர் நிரம்பியிருக்கும். அந்த நேரத்தில் கம்மாயிலிருந்து மண் எடுத்துட்டு வருவோம். மண் எடுக்க அரசாங்கம் நிறைய கட்டுப்பாடுகள் விதிச்சிருப்பதால் சில நேரம் மண்ணை விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்.

கணவருடன் சாந்தி அம்மா...
கணவருடன் சாந்தி அம்மா...

மண்ணை எடுத்துட்டு வந்து தண்ணீர் சேர்த்துக் கரைச்சு தொட்டி யில் ஊத்தி ஊற வெச்சுருவோம். மண், தண்ணீரை முழுவதும் உறிஞ்சி ரெண்டு நாளில் கொஞ்சம் கட்டிப்பட்டிருக்கும். மேல் மண்ணை மோல்டு செய்ய வெச்சுக்குவோம். அடி மண்ணுடன் சாம்பல் சேர்த்து மிதிச்சு நல்ல பக்குவத்துக்குக் கொண்டு வருவோம்.

“பொம்மைகளைக்கூட சிரிச்ச மாதிரி வடிவமைக்கிறோம். ஆனா...”

டிசம்பர் இறுதிக்குள் மண் நல்லா பக்குவப்பட்டு இருக்கும். பிறகு, அச்சுகளில் ஏற்றி ஏப்ரல் மாசத்துக்குள் ஆயிரக்கணக்கான பொம்மைகள் தயார் செய்து நிழலில் காய வெச்சுருவோம். தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், விநாயகர் சிலைகள், செட்டியார் பொம்மைகள் போன்றவற்றுக்கான தேவை எல்லா வருஷமும் இருக்கும். இதைத் தாண்டி, ஒவ்வொரு வருஷமும் கிரிக்கெட் செட், திருமண செட், வகுப்பறை செட்னு புது கான்செப்ட்ல பொம்மைகள் செய்வோம். எல்லா பொம்மைகளையும் ஆகஸ்ட் மாச ஆரம்பத்தில் சூளையில் வேகவெச்சு, பெயின்ட் பண்ணி, விற்பனைக்கு ரெடி பண்ணிருவோம். விற்காத பொம்மைகள் இருந்தா அவற்றை அடுத்த வருஷத்துக்கான வியாபாரத்துக்காக வெச்சுப்போம்.

எங்ககிட்ட இருந்து கம்மி விலைக்கு பொம்மைகளை வாங்கி, மக்கள்கிட்ட பல மடங்கு அதிக விலைக்கு வித்துடு வாங்க. உழைக்கும் எங்களுக்கு பெரிய கூலி கிடைக்கிறதில்லை. இந்த வருஷம் கொரோனா வந்ததால் பெரிய அளவு வியாபாரம் இல்லை. செஞ்சு வெச்ச பொம்மைகள் அப்படியே இருக்கு. ஒரு வருஷமா கடன்லதான் பொழைப்பு ஓடிட்டிருக்கு. இந்த வருஷம் வியாபாரம் நடந்தாதான் கடன்லேருந்து மீள முடியும். பொம்மைகள்கூட சிரிச்ச மாதிரி இருக்கணும்னுதான் வடிவமைக்கிறோம். ஆனா, நாங்க சிரிக்க மறந்து பல மாசமாச்சு. இந்த வாழ்க்கை மாறினா சந்தோஷம்’’ - கண்கள் கலங்குகின்றன சாந்தி அம்மாவுக்கு.