Published:Updated:

நீங்கள் ராஜியா, ராதாவா...? - வொர்க்கிங் விமன்களுக்கு ஒரு சுயபரிசோதனை!

சுயபரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
சுயபரிசோதனை

#Motivation

நீங்கள் ராஜியா, ராதாவா...? - வொர்க்கிங் விமன்களுக்கு ஒரு சுயபரிசோதனை!

#Motivation

Published:Updated:
சுயபரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
சுயபரிசோதனை

லாக்டௌனுக்கு முந்தைய ரயில் பயணமொன்றில் அருகில் அமர்ந்திருந்த பெண்களின் பேச்சை கவனித்தேன்.

“குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக் காமல் நைட்டு 8 மணிவரை வேலை பார்க்கிறா...’’

‘`சமையல் எல்லாம் அவ செய்றது இல்ல தெரியுமா... சமையலுக்கு, வீட்டு வேலைக் குனு எல்லாத்துக்கும் ஆள் போட்டிருக்கா...’’

“மாமியார் அவகூட இருந்து பார்த்துக்கிற தால குடும்பம் ஓடுது...’’

“குடும்பத்தை சரியா பார்க்காம, வேலை வேலைனு ஓடி புரொமோஷன் வாங்கி என்ன பண்ண...”

தொடர்ச்சியாக அவர்கள் பேசியதை வைத்து, வேலையில் தனக்கான இலக்கை அடைய ஓடும் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றிய பேச்சு அது எனப் புரிந்தது. இவ்விரு பெண்கள் மட்டுமல்ல, நம் சமூகத்தி லிருக்கும் பல பெண்களும், வேலையை முன்னிலைப்படுத்தும் பெண்களைப் பற்றி இதுமாதிரியான தீர்ப்புகளைத்தான் எழுதுகிறார்கள்.

பெண்கள் என்றாலே தியாகத்தின் மறு உருவாகவும், அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலவும், தனக்கான ஆசைகளைவிட குடும்பத்தின் நலனையே கருத்தில் கொள் பவளாகவும் இருக்க வேண்டும் என்பது, காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட புனித பிம்பம். அதற்கு உட்பட்டு, பெரும்பாலான பெண்கள் எப்படி தனது வேலை குறித்த லட்சியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது குடும்பத்துக்கு எது நல்லதோ அதை மட்டும் செய்யும்படியான ஒரு வட்டத்துக் குள் சுற்றிக்கொண்டிருக்கிறார்களோ, அதுபோலவே அவர்களைச் சுற்றியுள்ள பெண் களும் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். இப்படி அவர்களைச் சிந்திக்கவைப்பது எது?

தன்னால் முடியாததைத் தன் கண்முன்னால் வாழும் மற்றொரு பெண்ணால் செய்ய முடிகிறதே என்ற இயலாமை தரும் வலியா? அடி மனதில் கசியும் பொறாமையா? இல்லை, ‘அவள் ஏன் தன்னைப்போல தியாகச்செம்மல் பட்டத்துக்கு முயலவில்லை’ என்ற கோபமா? இந்த உளவியலைப் புரிந்துகொள்வதுதான் சிக்கலாக உள்ளது.

தன் வேலட்டிலிருந்து கீழே சிதறவிட்ட பணத்தை குனிந்து எடுப்பதற்குச் செலவிடும் நேரத்தில், அதைவிட பல மடங்கு பணத்தை அவரால் சம்பாதிக்க முடியும் என்று கொண்டாடப் படும் பில்கேட்ஸையும் அம்பானியையும் இந்தச் சமூகம் அண்ணாந்து பார்க்கும். ஆனால், ‘கிச்சனிலும் வீட்டு வேலைகளுக்கும் செலவிடும் நேரத்துல, பக்கத்துக் கடையில கேஷ் கவுன்ட்டர்ல நிக்கிற ஒரு வேலைக்குப் போய் என்னால சம்பாதிக்க முடியும். அந்தப் பணத்துல வீட்டு வேலைகளுக்கு ஆள் போட்டுக்கிட்டு, மிச்சத்தை எனக்கான வருவாயா வெச்சுக்கிட்டா என்ன இப்போ?’ என்று ஒரு பெண் சொல்வதை ஏற்குமா? ‘நீ வேலைக்குப் போறதாலேயே வீட்டுவேலை உன் பொறுப்பாகாமல் போகாது, அதையும் நீதான் செய்யணும்’ என்ற `கண்டிஷன்ஸ் அப்ளை' உடன் வேண்டுமானால் சரி சொல்லலாம்.

குடும்பத்தை நன்றாக வழிநடத்திச் செல்ல வேண்டு மெனில் வேலையையும், வேலையில் முன்னேற வேண்டுமெனில் குடும்பத்தையும் ஒரு பெண் தியாகம் செய்தால் மட்டுமே அவளால் முடியும் எனும் எண்ணம், பெண்களிடமே இருப்பதுதான் வேதனை. அதில் ஓரளவு உண்மை இருக்கிறதுதான் என்றாலும், அந்தச் சூழலை சிறப்பாக எதிர்கொண்டு, மாற்று ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக வாழ்க்கையை கையாளும் பெண்களும் இங்கேயேதான் இருக்கின்றனர்.

நீங்கள் ராஜியா, ராதாவா...? - வொர்க்கிங் விமன்களுக்கு 
ஒரு சுயபரிசோதனை!

ராதா, ராஜி இருவரும் ஆறு வருடங்களாக ஒரே அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றிய தோழிகள். காலப்போக்கில் ராஜி திருமணம், குழந்தை என ஹோம் மேக்கர் ஆக, ராதா ஒரு நிறுவனத்தின் உயர் பதவிக்குச் சென்றாள். சமீபத்தில் ராஜியைச் சந்தித்தபோது, ராதாவைக் குறித்து பொறுமினாள். “நான் ப்ரெக்னன்ட்டா இருந்தப்போ, பதவி உயர்வு ரேஸ்ல இருந்து என்னை நானே விலக்கிக்கிட்டேன். குழந்தைக்காக ஒரு கட்டத்துல வேலையையும் விட்டேன். ஆனா ராதா, குடும்பத்தைப் பத்தி நினைக்காம வேலை வேலைனு ஓடினா. அது எதுக்கு? ஆனா, என் அம்மா என்கிட்ட, ‘ராதா இன்னிக்கு எப்டி இருக்கா பாரு. வீடு, வேலைனு பேலன்ஸ் பண்ணிட்டே ஓடுறா. நீதான் சாமர்த்தியமில்லாம வேலையை விட்டுட்ட’னு சொல்றாங்க’’ என்று கோபமாகச் சொன்ன ராஜியைப் பார்க்க, எனக்குப் பாவமாக இருந்தது.

உண்மையில், ‘நம்மகூட கரியரை தொடங்கினவ இன்னிக்கு எங்கேயோ போயிட்டா, நான் சும்மா இருக்கேனே... ஒருவேளை, வேலையை விடாம இருந் திருந்தா நானும் இன்னிக்கு அவளைப் போல உயரதிகாரியா ஆகியிருக்க லாமே...’ என்ற தன் ஆற்றாமைக்கு, ராஜி சொல்லிக்கொள்ளும் சமாதானம் தான்... ‘என்னதான் இருந்தாலும் அவ நல்ல அம்மா இல்ல. ஆனா, நான் நல்ல அம்மாவா இருக்கேன்’ என்பது. உண்மையில், ராதாவும் நல்ல அம்மா. ஆனால், ‘தியாகங்கள்தான் உனக்கு நல்ல அம்மா பட்டத்தைத் தரும்’ என்ற ஸ்டீரியோடைப்பை கண்டுகொள்ளா மல், ‘வேலையில் இலக்கு நோக்கி ஓடுவ

தாலேயே நான் கெட்ட அம்மா ஆகிவிட மாட்டேன்’ என்ற விழிப்பு உணர்வு பெற்ற நியூ ஏஜ் மாம் ராதா.

ராஜியிடம் கேட்டேன். “உன் பிரச்னை என்ன? ஏன் ராதாவும் உன்னை மாதிரி தியாகங்கள் செஞ்சு ஹோம் மேக்கரா இல்லை என்பதா? இல்ல, நீ அவபோல சில மாற்று ஏற்பாடுகளை செய்துகிட்டு வேலை, குடும்பம்னு ரெட்டை குதிரை சவாரி செய்யாமல் விட்டதா?'' என்றேன். அவள் மூன்றாவதாக ஒரு பதிலைச் சொன்னாள். ‘‘குடும்பத்துக்காக இவ்ளோ செஞ்சும், என் அம்மா என்னைவிட அவளை பெஸ்ட்னு சொல்றதைத்தான் என்னால ஏத்துக்க முடியல’’ என்றாள்.

நம்மில் பலரும் ராஜியைப்போல்தான் இருக்கிறோம். ‘நான் பெஸ்ட் மகள் / மருமகள் / மனைவி, ஆகச்சிறந்த அம்மா’ என்ற அங்கீகாரத்தை, பாராட்டை நமக்கு நெருக்கமானவர் களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

அது மனித இயல்புதான். ஆனால், அந்த எண்ணம், ‘என்னை மாதிரி இருந்தாதானே பெஸ்ட்... அவளைப் போல இருக்கக்கூடாதுல்ல...’ என்று பிறரைப் பற்றித் தீர்ப்பு எழுதும் பழக்க மாக மாறுவதே பிரச்னை. அதுதான், தன்னைப் போலல்லாத பிறரை பழிக்கச் செய்கிறது.

ஒரு வொர்க்கிங் உமன் தனக்கும், தன் குடும்பச் சூழலுக்குப் பொருந்துகிற மாதிரியான முடிவுகளை எடுப்பது அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வது என அனைத்தைப் பற்றியும் முடிவெடுக்கும் மொத்த உரிமையும் அப்பெண்ணையும் அவளின் குடும்பத்தையுமே சார்ந்தது. ஏனெனில், அதில் வரும் சாதக பாதகங்களைச் சமாளிக்கப்போவது அவர்கள்தான்.

ஒருவரின் வாழ்வைப்போல மற்றொருவரின் வாழ்வு அல்ல; ஒருவரின் குடும்பச் சூழல்போல மற்றொருவருடையது இல்லை. எப்படி, ‘எனக்கு இது முக்கியம்’ என நீங்கள் முன்னிறுத்திய விஷயங்களைப் பொறுத்து வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தை முழுநேரமாக கவனிக்கிறீர் களோ, அதுபோலவே அவர்களின் முடிவு, அவர்களின் சூழலுக்கு தக்கபடி எடுக்கப்பட்டது. அதை விமர்சனம் செய்வதற்கும், குறை கூறுவதற்கும் நம் எவருக்கும் உரிமை இல்லை.

நம் ‘தியாகங்களுடன்’ பிறரை ஒப்பிட்டு, நம்மைப்போல் அவர்கள் இல்லை எனச் சொல்வதை நிறுத்தி, குடும்பம், வேலை என இரட்டைக் குதிரை சவாரியை அந்தப் பெண்கள் எவ்விதம் கையாள்கிறார்கள் என்பதில் நம் வாழ்வுக்கு பயன்படும்படியான படிப்பினைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், அதை நாமும் பின்பற்ற முயலலாம். நம்மால் முடியாததை தனக்கான சவால்களுடன் எதிர் கொண்டு திறம்பட கையாளத் தெரிந்த பெண்ணைத் தட்டிக்கொடுக்காவிட் டாலும், எட்டி உதைக்க வேண்டாமே.

வைஷாலி, குழந்தை பிறந்ததற்குப் பின்தான் முன்பைக்காட்டிலும் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தாள். இரண்டு தையல் மெஷின் களுடன் வீட்டுத் திண்ணையில் தொடங்கப்பட்ட கடை, ஐந்து வருடங் களில் இன்று 30 பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கும் ஒரு சுயதொழில் முனைவோராக அவளை மாற்றி இருக்கிறது. வெற்றியின் காரணங்களாக அவள் சொல்வதில் முக்கியமான

ஒரு விஷயம், அவளின் மாமனாரின் ஒத்துழைப்பே. மனைவியை இழந்தவர். ‘நீ இதைப் பண்ணல, அதைப் பண்ணல’ எனக் குறைகூறாமல், ‘முடிஞ்சதை பண்ணு, நான் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்வாராம். குடும்பம், குழந்தை, வீடு என சகல வேலைகளையும் அவர் முன் நின்று பார்த்துக்கொண்டதால்தான், வைஷாலி இன்று ஒரு வெற்றியாளர்.

சொல்லுங்கள் தோழிகளே... ஓர் ஆணாக இருந்து வைஷாலியின் மாமனாரால் அவளுக்கு இந்தளவுக்கு ஒத்துழைப்பும் அனுசரணையும் தர முடிகிறதெனில், நம் வாழ்வில் நம்மைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கு நம்மால் அதைக் கொடுக்க முடியாதா?!