Published:Updated:

‘`ஆகாசத்துல பறந்தோம்!”

சுய உதவிக்குழுப் பெண்களின் விமானப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
சுய உதவிக்குழுப் பெண்களின் விமானப் பயணம்

- சுய உதவிக்குழுப் பெண்களின் விமானப் பயணம்

‘`ஆகாசத்துல பறந்தோம்!”

- சுய உதவிக்குழுப் பெண்களின் விமானப் பயணம்

Published:Updated:
சுய உதவிக்குழுப் பெண்களின் விமானப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
சுய உதவிக்குழுப் பெண்களின் விமானப் பயணம்

காடு, வயல்களில் வேலை செய்யும் கிராமத்துப் பெண்கள், ஆகாயத்தில் விமானம் போவதைக் கண்டால், அண்ணாந்து, கண் களுக்கு உள்ளங்கையால் குடைப்பிடித்து, அந்த அலுமினியப் பறவை புள்ளியாக மறையும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு, பின் மீண்டும் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

இன்று, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் ‘பக்கெட் லிஸ்ட்’டில் விமானப் பயணத்தை வைத்திருந்து, அதை சமீபத்தில் நிறைவேற்றி, நம்மை எல்லாம் அவர் களை ‘அப்புடிப்போடு!’ என்று பார்க்க வைத்திருக்கிறார்கள். கடந்த ஓராண் டாக தாங்கள் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு விமானப் பயணம் செய்து தங்களின் கனவை நனவாக்கி இருக்கிறார்கள்.

‘`ஆகாசத்துல பறந்தோம்!”
‘`ஆகாசத்துல பறந்தோம்!”

‘அன்னை தெரசா’, ‘அன்னை இந்திராகாந்தி’, ‘சிவகாமி’ ஆகிய பெயர் களில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் மொத்தம் 54 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 32 பேர் விமானத்தில் பறந்துள்ளனர். விமானப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்த, ‘சிவகாமி’ மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மெர்சியிடம் பேசினோம். “எங்க மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பத்துல இருந்தே நல்லா செயல்படுறதால, இதுவரை எங்களுக்கு 10 முறை வங்கிக் கடன் கிடைச்சிருக்கு. அதை யெல்லாம் திருப்பிக் கட்டிட்டோம். நாங்க எல்லாருமே பீடி சுத்துறது, விவசாயக்கூலி வேலைனு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவங்க. எங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை வருஷம் முடிஞ்சதும் பங்கு போட்டு பிரிச்சுக்கு வோம். சில வருஷம் பணத்தை சமமா பங்குபோட்டு பிரிச்சுக்கிட்டு வந்த நாங்க, அப்புறம் அந்தப் பணத்துல ஒரு தொகையை ஒதுக்கி, பக்கத்துல இருக்குற மதுரை, வைகை டேம், மேல்மருவத்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம்னு பல ஊர்களுக்கும் டூர் போவோம்.

ஒருமுறை எங்களுக்குக் கிடைச்ச லாபத்துல, ஆளுக்கு ஒரு மோதிரம் செஞ்சுக்கிட்டோம். அடுத்த வருஷம் என்ன பண்ணலாம்னு போன வருஷம் யோசிச்சப்போ, பிளேனுல போக லாம்னு எல்லாருமே ஒருமனசா முடிவு பண்ணினோம். எங்க குழுவுல இருக்குற 54 பேர்ல 32 பேரால மட்டுமே வர முடிஞ்சது. உடல்நிலை, குடும்பச் சூழ் நிலைனு சிலரால வரமுடியாம போச்சு’’ என்று வருந்தியவர், மீண்டும் உற்சாகத்துடன் தொடர்ந்தார்.

‘`நாங்க அதிகாலையிலேயே கல்லூத்து கிராமத்துல இருந்து வேன்ல மதுரை விமான நிலையத்துக்குப் போனோம். அங்கிருந்து இண்டிகோ விமானத்துல போக ஏற்கெனவே டிக்கெட் புக் செஞ்சிருந்தோம். 8 மணிக்கு பிளேன் ஏறி 9 மணிக்கு சென்னைக்குப் போயிட்டோம். அங்கிருந்து மெட்ரோ ரயில்ல எக்மோர் ஸ்டேஷனுக்குப் போயி இறங்கி, பக்கத்துல இருக்குற மியூசியம் போனோம். அப்புறம் மெரினா பீச்சை சுத்திப் பார்த்துட்டு, ராத்திரி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறி மறுநாள் காலையில தென்காசி வந்துட்டோம்” என்றார் முகம்கொள்ளா சிரிப்புடன்.

மல்லிகா
மல்லிகா
மாரியம்மாள்
மாரியம்மாள்
மெர்சி
மெர்சி

பீடி சுற்றுவதன் மூலம் தினந்தோறும் 170 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை சம்பாதிக்கும் இந்தப் பெண்கள் விமானத்தில் பயணம் செய் ததை, சுற்றியுள்ள கிராமத்தினரெல்லாம் அதிசயமாகப் பேசிக்கொள்ள, ஆண்கள் எல்லோரும் பேசிப் பேசி வியக்கிறார்கள்.

‘சிவகாமி’ மகளிர் சுய உதவிக்குழுவின் உறுப்பினர் மாரியம்மாள், “நான் பீடி சுத்திட்டி ருக்கேன். மகளிர் சுய உதவிக்குழுவுல சேர்ந்த பிறகு எங்க குடும்பத் தேவைக்கு யாரையும் எதிர்பார்க்குறதோ, கடன் வாங்குறதோ இல்ல. எங்க குழுவுக்கு 2010-ல மணிமேகலை விருது கொடுத்து, 25,000 ரூபாய் நிதியும் அரசு கொடுத் துச்சு. இப்போ விமானப் பயணமும் போயிட்டு வந்ததுக்கு அப்புறம், எங்களுக்கு சந்தோஷமும் பெருமையும் இன்னும் கூடிப்போச்சு. மதுரை விமான நிலையத்துக்குள்ள போனப்போ காலெல்லாம் கூச ஆரம்பிச்சிருச்சு. ஒரு வழியா பிளேனுல ஏறி பறக்க ஆரம்பிச்சதும், ஆத்தாடி என்ன இது கனவானு இருந்துச்சு” என்று குழந்தைபோல சிரிக்கிறார்.

அருகில் இருந்த மல்லிகா, “நாங்கயெல்லாம் இதுவரைக்கும் விமானத்தை பக்கத்துலகூட பார்த்ததில்ல. பறக்கத் தொடங்கினவுடனே மனசெல்லாம் ஜிவ்வுனு ஆகியிருச்சு. சென்னை யில மெட்ரோ ரயில்ல போனதும் மறக்க முடியாத புது அனுபவம். மதுரையில இருந்து சென்னைக்கு விமான டிக்கெட் 2,984 ரூபாய். இது எங்களுக்குப் பெரிய பணம். நகரத்துல இருக்குற சிலருக்கு பிளேனு டிக்கெட்டு எல்லாம் பெருசா இல்லாம இருக்கலாம். எங்களைப்போல கிராமத்து ஆளுகளுக்கு எல்லாம் இது பெரிய விசயம், பெரிய தொகை. ஆனாலும், நாங்களும் ஒரு தடவையாவது பிளேனுல பறக்கணும்னு ஆசைப்பட்டோம், பறந்துட்டோம்... அம்புட்டுத்தான்’’

- உறுதியுடன் அவர் சொன்னது அழகு.