தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நரை எழுதும் சுயசரிதம்

சீனியர் சிட்டிசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சீனியர் சிட்டிசன்

நாமும் மாறுவோம்!

மெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வந்த உறவுக்காரப் பொடிசு, ஒவ்வொரு வீடாக விருந்துக்குப் போய் வந்தபிறகு கேட்டான்... ‘இந்தியா என்ன தாத்தா பாட்டிகளுக்கான ஊரா?’

அப்படி சுற்றிலும் சீனியர் சிட்டிசன்கள் சூழ வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் பார்த்த முதியவர்கள் மூன்று வகையில் வருகிறார்கள். நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள், எதையாவது மறந்துவிட்டு மறந்தது எது என்று யோசிப்பவர்கள், மறந்ததையே மறந்தவர்கள். இவர்கள், ஞாபகமாக விவாதிக்கும் விஷயங்கள் பிபி, சுகர், கொலஸ்ட்ரால், பென்ஷன் பணம் மற்றும் இது எத்தனையாவது `பே கமிஷன்'.

என் அப்பா நடைப்பயிற்சிக்காக பூங்கா வுக்குச் செல்வதுண்டு. சக தாத்தாக்கள் பேசுவதை வீட்டில் வந்து சொல்வார். ஒருவர் கேட்கிறார், ‘உனக்கு இன்னிக்கு காலைல போச்சா?’ மற்றவர், ‘ஆங், போச்சு. ஆனா சரியான கலர்ல இல்ல.’ இன்னொருவர், ‘நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். முடிச்சுட்டு வெளியே வர அரை மணி ஆகிடுச்சு.’ கடைசி தாத்தா சொல்கிறார், ‘எனக்கு எல்லாமே சரியா சுலபமா போயிருக்கு, நான்தான் தூங்கிட்டேன்.’

என் உறவினர் ஒருவர், தன் ஞாபக சக்தி மேல் ரொம்பவே பெருமைகொண்டவர். ‘இன் நைன்டீன் ஃபார்ட்டி டூ’ என்று ஆரம்பித்தால் முடிக்க ஒரு யுகம் ஆகும். தப்பித்தவறி யாராவது அவர் நினைவாற்றலைப் பாராட்டிவிட்டால் போச்சு! `இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க எனக்கொரு வழி இருக்கிறது' என்பார். அதாவது, `நைன்டீன் ஃபார்ட்டி டூவை எப்படி கொண்டுவரணும் தெரியுமா? நம்ம வீட்டு நம்பர் ஒண்ணு. சுவாதி பிறந்தநாள் ஒன்பது. அப்புறம் நான் கல்யாணம் பண்ணிண்டது இருபத்திநாலு வயசுல. அதை மாத்திப்போட்டா நாற்பத்தி ரெண்டு. சிம்பிள்! ஒவ்வொரு முறையும் இதையெல்லாம் ரீகலெக்ட் செஞ்சுட்டா போச்சு' என்பார். ஐடியா கேட்டவன், `ஒரு நம்பரை ஞாபகம் வெச்சுக்க இத்தனை சம்பவங்களையும் ஞாபகம் வெச்சுக்கணுமா...' எனத் தெறித்து ஓடுவான்.

இன்னொரு தாத்தா இருக்கிறார். நிறைய பேசுவார். நாம் எது சொன்னாலும் மையமாகத் தலையசைத்து சிரித்து வைப்பார். அவரைப்போல நம் குறை நிறைகளைச் செவிமடுத்து கேட்க ஆளில்லை என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். தோராயமாக ஆறு வருடங்கள் கழித்து, ஒருநாள் அவர் மனைவி மூலமாகத் தாத்தா வுக்கு சுத்தமாகக் காது கேட்காது என்று தெரிந்துகொண்டேன். இப்போது வரை அதை லாகவமாக மறைத்துவைத்திருக்கும் தாத்தாமீது எனக்கு ஆச்சர்யம்தான்.

நரை எழுதும் சுயசரிதம்

பேசாமலே இருக்கும் மாமனார், பேசியே கொல்லும் மாமியார் என என் தோழிகளிடமே சினிமா எடுக்கும் அளவு கதைகள் இருக்கின்றன. தன் மாமியாரின் சிறு வயது கதைகளை அறுபத்து ஏழாவது முறையாகக் கேட்ட தோழி, அடுத்த நாள் தனிக்குடித்தனம் போனாள். ஒரு தோழிக்கு... யானையாகத் தன் அப்பா மண்டியிட்டிருக்க, மேலே அமர்ந்திருக்கும் பேரன் சொல்லச்சொல்ல பிச்சை எடுக்கிறாராம். தன் படு கண்டிப்பான அப்பாவா, பேரனிடம் இப்படிப் பணிந்து போகிறார் என்று அவளுக்கு ஆச்சர்யம். மகள், மகன் காதல் திருமணத்தை காச்மூச்சென்று எதிர்த்த பல பெற்றோர்கள், பேரக் குழந்தையின் பிஞ்சுமுகத்தைப் பார்த்து கப்சிப் ஆவது, காயாக இருந்து புளிக்கும் ஒன்று, பழமாகி இனிப்பதைப் போன்ற அதிசயம்.

அமெரிக்கா அல்லது வேறு வெளிநாடு களில் இருக்கும் மகன்கள், அப்பா அம்மாவை பார்த்துக்கொள்ளும் நவீன முறை இதுதான். பரிசுப்பொருளாக பிபி பார்க்கும், சுகர் டெஸ்ட் செய்யும் மெஷின்கள், ஆப்பிள் ஐபேட், கால் மசாஜ் செய்ய மெஷின்கள் வாங்கித்தருகிறார்கள். இதை எல்லாம்விட, இப்போது வாட்ஸ்அப்பில் நினைத்தவுடன் உறவுகளைப் பார்க்க முடிவது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

அறுபது வயதுக்குப் பின் ஷார்ட்ஸ் போடும் அங்கிள்கள் அதிகரித்துவிட்டனர். அதுபோலவே, தங்கள் பிள்ளைகளைப் பார்க்க வெளிநாடு போகும் பெற்றோரும். இவ்விரண்டு வாக்கியத்துக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. நம் ஆட்கள் வெளிநாடுகளிலிருந்து இரண்டு விஷயங்களை மறக்காமல் கற்றுக்கொள்வார்கள். அவர்களைப் போல உணவு, அவர்களைப் போல உடை. `சீனியர் சிட்டிசன்களால் கல்ச்சுரல் ஷாக் தரமுடியாதா, என்ன' என அமெரிக்க ரிட்டர்ன் தாத்தாக்கள் சவால் விடுவதும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. என்ன, எத்தனை முறை வெளிநாட்டுக்குச் சென்று வந்தாலும், பேன்ட் சட்டை, கவுன் போடும் பாட்டிகளைத்தான் இன்னும் தமிழ்நாட்டில் பார்க்க முடிவதில்லை.

தாத்தா பாட்டிகளின் உறவு அந்நியோன்யம் மிகமிக அழகானது. தன் இளவயது முழுவதும் மனைவியின் முகத்தை ஒரு நிமிடம் முழுதாகப் பார்க்காதவர்கள், வயதானதும் அருமையாக பார்த்துக்கொள்வார்கள். மருந்து மாத்திரை வாங்கித்தருவது, வாக்கிங் அழைத்துச் செல்வது, வாரத்தில் ஒருநாள் வெளியே சென்று சாப்பிடுவது என்று அவர்களது உலகம் நெருங்கிவந்திருக்கும். அப்பா அம்மாக்கள் டயட்டில் இருக்க, தாத்தா பாட்டிகள் பேரக்குழந்தைகளோடு பீட்சா சாப்பிடுகிறார்கள். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், தாத்தா மறைந்தபிறகு பாட்டிகூட மெள்ள சமாளித்துக்கொள்வார். ஆனால், பாட்டி இல்லாமல் தாத்தாக்கள் அத்தனை வருட கம்பீரத்தையும் இழந்து மணிமுடி இல்லாத ராஜா போல மாறிப்போகிறார்கள்.

என்றைக்காவது ஒரு சீனியர் சிட்டிசனுக்கு கணினியைக் கையாள கத்துக் கொடுத்திருக்கிறீர்களா? அவர்களில் பலருக்கு ஏற்படும் முதல் எரிச்சல் கம்ப்யூட்டரும் தொழில்நுட்பமும்தாம். கொஞ்ச நாள் ஜாவா கிளாஸ் எடுத்திருக்கிறேன். ஜாவா படித்தால் அமெரிக்காவை ஆளலாம் என்று உலகம் நம்பிய காலம் அது. வயதான தாத்தாவிடம் நானும், என்னிடம் அவரும் மாட்டிக்கொண்டோம். அவருக்குப் புரியாத முக்கியமான விஷயம், எப்படி கீபோர்டில் மூன்று பொத்தான்களை ஒரே நேரத்தில் அழுத்தச் சொல்கிறார்கள் என்பது. `எனக்கு இரண்டு கைதானே இருக்கு' என்று சண்டைக்கு வந்துவிட்டார். ஜாவா கண்டுபிடித்தவனுக்கும்தான் என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

இதெல்லாம் பத்து வருட பழைய கதை. இப்போது, சீனியர்கள்தாம் டெக்னாலஜியை கையில் எடுத்துக்கொண்டு கலக்குகிறார்கள். ஃபேஸ்புக்கில் ஸ்ருதிஹாசனைவிட சாருஹாசனை அதிகம் பேர் கவனிக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் வரும் பல ஃபார்வேர்டுகளும் தாத்தாக்களால் எழுதப்படுபவையோ என்ற சந்தேகம் எனக்கு பல நாள்களாக உண்டு. என் குடும்ப வாட்ஸ்அப்பிலேயே, மோடிஜி வாழ்க, மோடிஜி ஒழிக என்று சீனியர் சிட்டிசன்கள் இரண்டாகப் பிரிந்து தரவுகளோடு சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அவர்தம் பிள்ளைகள் புகுந்து சமாதானப்படுத்தி அழைத்துப்போவது தினம் தினம் நடக்கிறது. என் நண்பன் ஃபேஸ்புக்கிலேயே பழியாகக் கிடக்கும் தன் அப்பாவை எப்படி மீட்பது என்று கவலைப்படுகிறான்.

நரை எழுதும் சுயசரிதம்

இணையத்தில் அவ்வப்போது செய்தி களைத் தெரிந்துகொண்டுவிடும் இளைய தலைமுறையால், செய்தித்தாள்கள் மீது சீனியர் சிட்டிசன்கள் கொண்டிருக்கும் காதலைப் புரிந்துகொள்ளவே முடியாது. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஓர் எழுத்து விடாமல் படிப்பதே அவர்களுக்கு பேப்பர் படிப்பதென்பது. ஆசிரியருக்கு எழுதப்படும் கடிதங்கள், பெயர் மாற்றத்துக்காக வரும் விளம்பரங்கள், அரசாங்க விண்ணப்பங்கள், ஆபிச்சுவரி... இவற்றையெல்லாம் கவனமாகப் படிக்க, கண்ணாடியோடு தடிமனான பொறுமையும் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நாம், துளித்துளியாக அப்பாவாகவோ அம்மாவாகவோ மாறிக் கொண்டிருக்கிறோம். முழுவதுமாக மாறிய பிறகு அவர்களைப் புரிந்தும்கொள்வோம்.

முதியவர்களின் உலகத்தில் இருக்கும் பிரச்னைகளில் தலையானது `டை’ அடிப்பதா வேண்டாமா, அடித்துக்கொண்டிருந்தால் எப்போது விடுவது என்பது. அம்மா, பல வருட யோசனைகளுக்குப் பிறகு தலைச்சாயம் அடிப்பதை விட்டுவிட்டார். சக பாட்டிகளிடையே அது, அவருக்குப் பெருமைக்குரியதாக மாறியிருக்கிறது. சமீபத்தில், எங்கள் அப்பாவுக்கு சதாபிஷேகம் நடத்தினோம். திருமணத்துக்கு எவ்வளவு சொல்லியும் அம்மா கொலுசு அணிய மறுத்துவிட்டார். நரைத்த தலைக்கு, கொலுசு பொருத்தமாக இருக்காது என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் சம்பந்தமில்லை என்பதாகவே பல வருடமாக பழமொழிக்காரர்கள் என்னை ஏமாற்றிவந்திருக்கிறார்கள்.

தூர்தர்ஷன் செய்திகளை மட்டும் பார்த்து விட்டு உறங்கப்போகும் என் அப்பா போன்றோருக்கு, வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி எதுவும் ஏற்படப் போவதில்லை. ஆண்களும் பெண்களுமாகப் பல நாள்கள் ஒரே இடத்தில் தங்கவைக்கப்பட்டு, அதை உலகமே பார்க்கும் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. வார இறுதியில், தன் அபிமான நபர் வெளியேற்றப்படக் கூடாது என இளைய சமுதாயம் கவலைகொள்கையில், முதியோர் உலகம் நிதானமாக விவித் பாரதி கேட்கிறது. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு, வாக்கிங் போகையில், ‘கபி, கபி மேரே தில் மே’ என்று விசிலடித்து கடக்கும் தாத்தா மேல் பொறாமையாக இருக்கிறது.

இன்றைய சீனியர் சிட்டிசன்கள் தங்களது இளமைப் பருவத்தில் மாட்டுவண்டிகளில் பயணித்தவர்கள். இப்போதும் அதே நினைவுடனே மோட்டார் வாகனத்தை ஓட்டினால், டிராஃபிக் ஜாமாகிறது. இந்த பெரியவர்கள் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள் வார்கள். வேகத்தைக் கண்டு மட்டும் அவர்களால் பதறாமல் இருக்கவே முடியாது. அநேகமாக கால் டாக்ஸி டிரைவர்கள் சொல்வது என்னவென்றால், சீனியர் சிட்டிசன்கள் முன்னிருக்கையில் அமராமல் இருப்பது அவர்களது இதயத்துக்கும், டிரைவர்களின் இதயத்துக்குமே நல்லது. நவீன கார்களில் ஸ்பீடாமீட்டர் பக்கத்து இருக்கையில் இருப்பவருக்குத் தெரியாதது போல் வைக்கிறார்கள். அநேகமாக இவ்வாறு வடிவமைத்தவருக்குத் தன் அப்பாவை பக்கத்தில் வைத்து வண்டி ஓட்டிய அனுபவப்பாடமாக இருக்கக்கூடும்.

என் நண்பன், பேச்சுலர். அவனுக்கு சீனியர் சிட்டிசன்கள் என்றாலே ஆகாது. முதல் காரணம், ரயிலில் லோயர் பர்த்தை பிடுங்கிவிடுகிறார்கள். இரண்டாவது காரணம், எம்.ஜி.ஆர் படம் போல எல்லா உரையாடல் நடுவிலும் ஏதாவது அறிவுரையை நுழைத்து விடுவது. கடைசியாக, படிக்கும்போதே `உன் லட்சியம் என்ன' எனக் கேட்பது. அதை நோக்கி இரவுபகலாக உழைக்கையில், `கல்யாணம் பண்ணிக்க... லட்சியமெல்லாம் கடைசி வரை வராது' என்பது. `சரி, படிக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கறேனே' என்றால், பெரிசுகள் சேர்ந்து `பொறுக்கி' பட்டம் தருவது. `பரவாயில்லை விடுறா, இந்தியாவில் உன்னைப் போல காதலிக்கத் தெரியாத அசடுகளுக்கெல்லாம் கல்யாணம் ஆவது அதே பெரிசுகளால்தானே' என்று சமாதானப்படுத்தினேன்.

ஏ.டி.எம் சென்டர்கள், அங்கிருக்கும் சிசிடிவி மற்றும் மெஷின்களின் தொழில்நுட்பத்தால் பாதுகாப்பாக இருந்தாலும், வாசலில் ஒரு குடுகுடு தாத்தா காவலுக்குத் தேவைப்படுகிறார். வீட்டிலும் தாத்தா பாட்டி இருந்தால் குழந்தைகள் பாது காப்பாக வளர்கின்றனர். இந்த வாழ்க்கையின் ஆகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், எதை நாம் இன்று ஏளனமாகப் பார்க்கிறோமோ, அதுவே ஒரு நாள் நமக்கு உன்னதமாகத் தெரியும். ஒவ்வொரு நாளும் நாம், துளித்துளியாக அப்பாவாகவோ அம்மாவாகவோ மாறிக் கொண்டிருக்கிறோம். முழுவதுமாக மாறிய பிறகு அவர்களைப் புரிந்தும்கொள்வோம்.

சீனியர் சிட்டிசன்கள் இணையத்தில் ரயில் டிக்கெட் பதிவுசெய்யவும், அமேசானில் பொருள்கள் வாங்கவும் கற்றுக்கொண்டு விட்டார்கள். துளி கொத்தமல்லிக்காக வாசலில் சண்டையிடும் பாட்டிகளும் இணையம் மூலம் சல்லிசாக வாங்க ஆரம்பிக்கும் நாள் தூரத்தில் இல்லை. நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருக்க அவர்கள் மெனக்கெடும்போது, நாம் அவர்கள் உலகத்தை எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?

மூட்டுவலியையும் தூக்கமின்மையையும் விட கஷ்டமானது தனிமை. முதியோர்களுக் கான நம் நேரமும் பொறுமையும், தற்சமயம் வெகுவாகக் குறைந்திருப்பதை மறுக்கவே முடியாது. நகைமுரண் என்னவென்றால், சுற்றியிருக்கும் சீனியர் சிட்டிசன்கள்மீது எரிச்சலடைகிறோம், சீனியர் சிட்டிசன்களாக நாமே மாறும் இப்பயணத்தில்!