Published:Updated:

“பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தினா சிறையில் அடைப்பீங்களா?” - இளம்பெண்களின் கேள்விகள்

இளம்பெண்களின் கேள்விகள்
பிரீமியம் ஸ்டோரி
News
இளம்பெண்களின் கேள்விகள்

அவலம்

ந்திய மாநிலங்களிலேயே, தமிழகக் காவல் துறையில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டிலும் காவல்நிலையங்கள் சாமான்யப் பெண்களை பயமுறுத்தும் இடமாகவே இருப்பது வேதனை. சமீபத்தில் ஒரு காவல்நிலையத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், அதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

“மேனேஜர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனா, இன்ஸ்பெக்டர் கோமதி எங்க மேலேயே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பிட்டாங்க’’ - சமீபத்தில் மதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்த இரண்டு இளம்பெண்களின் வார்த்தைகள் அனைவரையும் அதிரவைத்தன. ``இந்த வழக்கில் நான் விசாரணை அதிகாரி கிடையாது. என்னிடம் இதைப் பற்றிக் கேட்காதீங்க. எஸ்.ஐ-யிடம் பேசுங்க” - பெண்களின் புகார் பற்றி நேரில் பேச மறுத்த இன்ஸ்பெக்டர் கோமதி அலைபேசியில் நமக்கு அளித்த பதில் இது.

“பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தினா சிறையில் அடைப்பீங்களா?” - இளம்பெண்களின் கேள்விகள்

என்னதான் நடந்தது? பாதிக்கப்பட்ட பெண்களின் வார்த்தைகள் இங்கே... “பெற்றோர் பிரிந்து சென்றதால் திருப்பரங்குன்றத்தில் பாட்டியின் ஆதரவில் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். டிகிரி முடித்ததும் பெருந்துறையிலுள்ள கார்மென்ட்ஸில் கம்ப்யூட்டர் பிரிவில் கடந்த வருடம் வேலை கிடைத்தது. மதுரையைச் சேர்ந்த என் தோழியும் இதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே மேனேஜர் சிவக்குமார், எங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தான். என் போட்டோக்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து நெட்டில் போடப்போவதாகச் சொல்லி மிரட்டினான். இந்த டார்ச்சரால் அந்த கார்மென்ட்ஸ் வேலையிலிருந்தே நின்றுவிட்டேன். சில நாள்கள் கழித்து அருகே வேறு ஒரு கார்மென்ட்ஸில் நானும், பிறகு தோழியும் வேலைக்குச் சேர்ந்தோம். ஆனாலும், சிவக்குமார் தொடர்ந்து போன் மூலம் என்னை டார்ச்சர் செய்தான். காவல் நிலையத்துக்குச் சென்ற நானும் தோழியும், சிவக்குமார் எங்களுக்குக் கொடுக்கும் பாலியல் தொல்லை பற்றிக் கூறினோம். ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்லி, அவர்கள் எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆதாரத்தைத் திரட்ட, அவன் அடுத்துப் பேசிய ஆபாச போன் கால்களை எல்லாம் பதிவு செய்தோம். அவனை போலீஸில் பிடித்துக்கொடுக்க முடிவு பண்ணி, அவன் எங்களை வரச்சொன்ன இடத்துக்கு, செப்டம்பர் 14-ம் தேதி சென்றோம். எங்கள் பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்பிரே, மிளகாய்த்தூள், கயிறு என்று எடுத்துச் சென்றோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தக் காட்டுப் பகுதிக்குத் தவறான எண்ணத்துடன் வந்தவனிடம், ‘ஏன் இப்படி எங்களை மிரட்டுற?’ என்று கேட்டு சண்டை போட்டோம். எங்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, உடனே பெப்பர் ஸ்பிரேவை அவன் முகத்தில் அடித்து, மிளகாய்ப் பொடியைத் தூவினோம். கயிற்றை எடுத்து அவன் கைகளைக் கட்டினோம். இவற்றையெல்லாம் வீடியோவும் எடுத்தோம். அங்கிருந்தே போலீஸுக்கு போன் செய்தோம். அவர்கள் வந்து அவனை அழைத்துச் சென்றார்கள். புகாரை பதிவு செய்ய, நாங்களும் காவல் நிலையத்துக்குச் சென்றோம்.

“பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தினா சிறையில் அடைப்பீங்களா?” - இளம்பெண்களின் கேள்விகள்

பல்லடம் இன்ஸ்பெக்டர் கோமதியிடம் நடந்ததை எல்லாம் கூறினோம். எங்கள் இருவரின் குடும்ப விவரங்களை விசாரித்த அவர், நாங்கள் ஆதரவில்லாத ஏழைப் பெண்கள் என்று தெரிந்தவுடன், எங்களை அசிங்கமாகத் திட்டி, எங்களையே குற்றவாளிபோல பேசினார். ‘அவன் என்னதான் மிரட்டினாலும், நீங்க எப்படி கட்டிப்போட்டு தண்டனை கொடுக்கலாம்? என்ன தைரியம் உங்களுக்கு?’ என்று கடுமையாகப் பேசினார். இறுதியாக, எங்களை மிரட்டி, அடித்து வெற்றுத் தாளில் கையெழுத்திடச் சொன்னார்கள். நாங்கள் கொடுத்த புகாரை மாற்றி எழுதினார்கள். மாஜிஸ்திரேட்டிடம் எதுவும் கூறக்கூடாது என்று மிரட்டி, அவர் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்று ரிமாண்ட் செய்ய வைத்தார்கள். புகார், வழக்கு, நீதிமன்றம் என்று எதைப் பற்றியும் அறியாத எங்களுக்கு உதவ யாரும் இல்லை. எங்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தார்கள்.

சிறையில் என் தோழிக்கு கொரோனா வந்ததால், அவளை ஜாமீனில் விட்டார்கள். இரண்டு நாள்கள் கழித்து என்னை கண்டிஷன் பெயிலில் விட்டார்கள். அதோடு அங்கியிருந்து கிளம்பி நாங்கள் மதுரைக்கு வந்து, மதுரை ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம். எங்கள் நடத்தையை அசிங்கமாகப் பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு காவல் நிலையத்தில் சிவக்குமார்மீது புகார் தெரிவித்தபோதே விசாரித்து நடவடிக்கை எடுக்காதது யார் தவறு? பாலியல் தொல்லை கொடுப்பவனை திருப்பித் தாக்கச் சொல்லி பெண்களுக்கு அறிவுரை கொடுப்பதெல்லாம் வார்த்தைகளுக்குத்தானா?” - தளர்ந்துபோய் கேட்கிறார்கள் அந்த இளம் பெண்கள்.

‘அந்தக் கேள்வி அவர்களுடையது மட்டும்தானா..?’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், கழனி வேலை முதல் கார்ப்பரேட் வேலைவரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி புகாரளிக்கும் பெண்கள் மீதே திருப்பப்படும் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி. வேலைக்குச் செல்லும் பெண்களின் உரிமை களுக்காகச் செயல்பட்டு வரும் மதுரை ‘சோக்கோ’ அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி, ‘`பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் எதிராளி உயிரிழந்தாலும் அது குற்றமாகாது என்கிறது சட்டம். ஆனால், இந்தப் பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ஜவுளி நிறுவனங்களில் பொதுவாக, கிராமப்புற பெண்களைத்தான் அதிகம் வேலைக்கு எடுக்கிறார்கள். அதிலும் சிறுமிகள், கணவனால் கைவிடப்பட்ட, கணவன் இல்லாத, குடும்பப் பின்னணி இல்லாத பெண்கள் என்றால் அதிக நேரம் வேலை செய்வார்கள், கேள்வி கேட்க மாட்டார்கள், குறைந்த கூலி கொடுக்கலாம் என்பது ஆலை முதலாளிகளின் கணக்கு. பணியிடத்தில் இவர்களுக்கான பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டிய மாவட்ட அதிகாரிகளும் அலட்சிய மாக நடந்துகொள்கிறார்கள். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சார்பாக அரசு அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப ஆலோசித்து வருகிறோம்’’ என்றார்.

பெண்களின் தைரியத்துக்கு இதுதான் பரிசா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது!

குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாரிடம் கேட்டபோது, “என் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் ஜோடிக்கப் பட்டது. நான் பேசின ஆடியோவை மட்டும் வெளியிட்டவங்க அவங்க பேசினதை வெளியிடல. நான் வேலை செய்யும் கம்பெனியில விசாரிச்சுப் பாருங்க, என் மீது எந்தப் புகாரும் இல்ல” என்றார்.

பிளான் பண்ணி பொருளை எடுத்துட்டுப் போறது தற்காப்பா?

பெண்களின் புகார் குறித்து பல்லடம் டி.எஸ்.பி. ஸ்ரீராமசந்திரனிடம் கேட்டபோது, “போலீஸ்ல புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கலைன்னா உயரதிகாரிகளை சந்தித்து புகார் செய்திருக்கலாமே? அதை விட்டுட்டு திட்டமிட்டு கத்தி, கயிறு எடுத்துட்டுப் போய் சிவக்குமார் மேல தாக்குதல் நடத்தியிருக்காங்க. பிளான் பண்ணி பொருளை எடுத்துட்டு வர்றது எப்படி தற்காப்பு ஆகும்? மிளகாய்ப்பொடி போட்டதுல தன் கண்ணு பாதிக்கப்பட்டுருக்குனு சிவக்குமார் கொடுத்த புகார்ல எப்படி நடவடிக்கை எடுக்காம இருக்க முடியும்? ஸ்டேஷன்ல மிரட்டி அடிச்சதா சொல்றதும், வெள்ள பேப்பர்ல கையெழுத்து வாங்கினதா சொல்றதும் பொய். அந்தப் பெண்கள், சிவக்குமார்னு ரெண்டு தரப்பு மேலயும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரெண்டு தரப்புமே சிறைக்குப் போயிட்டு ஜாமீன்ல வந்திருக்காங்க. விசாரணை போயிட்டிருக்கு.

மத்தபடி வேற எதையும் இப்போதைக்குச் சொல்ல முடியாது” என்றார்.