Published:Updated:

சித்ராக்கள் தொடர்கதையாகக் கூடாது!

சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா

சித்துவுக்கு கடன் தொல்லை இருந்துச்சுன்னு சொல்றாங்க. அவ நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த ஆர்ட்டிஸ்ட். அதனால, அவளால கடனை அடைச்சிருக்க முடியும்

சித்ராக்கள் தொடர்கதையாகக் கூடாது!

சித்துவுக்கு கடன் தொல்லை இருந்துச்சுன்னு சொல்றாங்க. அவ நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த ஆர்ட்டிஸ்ட். அதனால, அவளால கடனை அடைச்சிருக்க முடியும்

Published:Updated:
சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா
விஜய் டிவியின் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் `முல்லை’யாக வாசம் வீசிக்கொண்டிருந்த விஜே சித்ரா இன்று நம்மிடையே இல்லை. கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

‘பல தடைகளைக் கடந்து திரைத்துறையில் ஜெயித்தவர். எதையும் சமாளிக்கும் திறன்கொண்டவர்’ எனப் பலராலும் பாராட்டப்பட்ட சித்ரா, தற்கொலை முடிவெடுத்தது ஏன்? ஒருவர் தனக்கு வருகின்ற எல்லாக் கஷ்டங்களையும் சுமுகமாகக் கையாளும் தன்மை உடையவராக இருப்பார். ஆனால், திடீரென்று வரும் ஏதோ ஒரு பிரச்னையைக் கடந்து வர யாரோ ஒருவருடைய துணை தேவைப்படும். அப்படி யாரும் இல்லாத பட்சத்தில் ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் முடிவுதான் தற்கொலை.

சித்ராக்கள் தொடர்கதையாகக் கூடாது!

இதை உளவியலில் ‘சைக்காலஜிக்கல் ரெசிலியன்ஸ் (Psychological resilience)’ என்று குறிப்பிடுவார்கள். இந்தப் பிரச்னை யாருக்கும் எந்த வயதிலும் வரலாம். ஒவ்வொரு தற்கொலையின்போதும், எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற முழக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தற்கொலைகள் மட்டும் நின்றபாடில்லை. சித்ராவே கடைசியாக இருப்பார் என நம்புவோம்.

சித்ரா தற்கொலை முடிவு குறித்து சீரியல் பிரபலங்கள் இருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

புருஷன் சரியில்லைனா பிரிஞ்சிடுங்க! - சாந்தி வில்லியம்ஸ்

‘‘சித்துவுக்கு கடன் தொல்லை இருந்துச்சுன்னு சொல்றாங்க. அவ நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த ஆர்ட்டிஸ்ட். அதனால, அவளால கடனை அடைச்சிருக்க முடியும். இந்தக் காரணத்தை நான் நம்பவே மாட்டேன். கட்டிக்கிட்டவன் டார்ச்சர் தாங்காம செத்துப் போயிட்டான்னும் சொல்றாங்க. சித்து வயசுல இருக்கிற எல்லா பெண் குழந்தைகளுக்கும் நாலு பிள்ளைங் களைப் பெத்த அம்மாவா ஒண்ணு சொல்றேன். லவ் பண்றவனோ, புருஷனோ யாரா இருந்தாலும், அவன் உங்களுக்கு பிசிக்கலாவோ, மென்டலாவோ டார்ச்சர் கொடுத்தா போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுங்க. லவ்வுல பிரச்னை வந்தாலோ, கல்யாணத்துக்கப்புறம் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துனாலோ அவனைவிட்டுப் பிரிய யோசிக்காதீங்க. தயவுசெஞ்சு தற்கொலை முடிவு மட்டும் எடுக்காதீங்க.

புருஷனை இழந்து, பசி தாங்க முடியாம நாலு குழந்தைகளோட வயித்துல ஈரத் துணியைப் போட்டுக்கிட்டிருந்த சூழ்நிலை யில நான் ஆயிரம் முறை தற்கொலை பண்ணி யிருந்திருக்கணும். பெருசா படிக்காத நானே இவ்வளவு தைரியமா இருந்தேன்னா, சித்து மாதிரி படிச்சிட்டு நடிக்க வர்ற பிள்ளைங்க எவ்வளவு தைரியமா இருக்கணும்.

சித்து தலையெடுத்து சம்பாதிச்ச பணத்துல அவங்க அம்மா அப்பாவுக்குதான் மொதல்ல வீடு கட்டிக் கொடுத்தா. அவங்க யாரையும் எதிர்பார்த்து வாழக் கூடாதுன்னு மாசம் பொறந்தா வாடகை வர்ற மாதிரி கடைகள் கட்டிக் கொடுத்தா. பொதுவா, இந்த மாதிரி பொண்ணுங்க மேல ‘எம் பொண்ணு எங்க போனாலும் பொழைச்சிக்குவா’, ‘எந்தப் பிரச்னை வந்தாலும் மீண்டு வந்திடுவா’ன்னு பெத்தவங்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை இருக்கும். ஆனா, எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் அந்த இடத்துல உங்க பொண்ணுக்கு ஏதாவது பிரச்னை இருக்கான்னு கேளுங்க. பெத்தவங்ககிட்ட மனசுவிட்டுப் பேசற பொண்ணுங்க கண்டிப்பா தற்கொலை முடிவை எடுக்க மாட்டாங்க.’’

சாந்தி வில்லியம்ஸ் - நீலிமா ராணி
சாந்தி வில்லியம்ஸ் - நீலிமா ராணி

தற்கொலை எண்ணம் வந்தா அலட்சியப்படுத்தாதீங்க! - நீலிமா ராணி

“புகழ் வெளிச்சத்துல இருக்குறவங்களுக்கு பிரஷர் அதிகம். அதனாலதான் பல பேர் தற்கொலை செஞ்சிக் கிறாங்கன்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு. எல்லா துறையிலேயும் பிரஷர் இருக்கு. அதைச் சமாளிக்க முடியாம நிறைய பேர் தற்கொலை செஞ்சுக்கிறாங்க. ஆனா, அதெல்லாம் பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வர்றது இல்ல. சமாளிக்க முடியாத பிரச்னைகள் வரும் போதெல் லாம் ஒருத்தருக்கு தற்கொலை சிந்தனைகள் வந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. மனநல மருத்துவரையோ, ஆலோசகரையோ அவசியம் சந்திக்கணும். அட்லீஸ்ட் உங்க நண்பர்கள்கிட்ட மனம் விட்டுப் பேசலாம். சித்து தன்னோட மன அழுத்தத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருக்காங்க. அது தற்கொலை எண்ணத்தை நோக்கி அவங்களைத் தள்ளிடுச்சு. இதுமாதிரியான விபரீதங்கள் இனிமேல் நிகழாமல் இருக்க எல்லோரும் அவங்க மனநலனில் அதிகம் கவனம் செலுத்துங்க. மன அழுத்தத்தோட வாழப் பழகாதீங்க.”