Published:Updated:

“நான் இல்லாட்டியும் மகன் சுயமா வாழணும்!” - ஒரு தாயின் சபதம்!

ஷர்மிளா
பிரீமியம் ஸ்டோரி
News
ஷர்மிளா

தெய்வத்தாய்

“ஹாய் அங்கிள், வெல்கம்!” – சென்னை மணலியிலுள்ள அந்தச் சிறிய வீட்டுக்குள் நுழைந்ததும், சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்கிறான் சைஃபுல்லாஹ். 12 வயதாகும் இவன், மூளை முடக்குவாதக் குறைபாடுடைய சிறப்புக் குழந்தை. அதனால், சிறுவனிடம் ஒவ்வொரு செயல்பாடுமே மெதுவாகவே வெளிப்படுகிறது. மகனின் ஒவ்வோர் அசைவையும் இமை மூடாமல் பார்த்துப் பூரிக்கிறார் அம்மா ஷர்மிளா.

‘குழந்தையால் பேசுவது, சாப்பிடுவது, நடப்பதெல்லாம் சிரமம்தான்..!’ – இப்படி மருத்துவர்களால் சொல்லப்பட்ட எல்லாச் செயல்களையும் ஷர்மிளாவின் தாயுள்ளம் நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. மகனின் முன்னேற்றத்துக்காகக் கணவரையும் பிரிந்தார். கண்ணீர் பக்கங்களைக் கிழித்தெறிந்துவிட்டு, மகனே உலகமாக வாழும் ஷர்மிளாவிடம் சிறிது நேரம் உரையாடினால் நமக்கும் உத்வேகம் ஊற்றெடுக்கிறது.

“எங்க குடும்பத்துல பெண்களைப் படிக்க வைக்கிறது அபூர்வம். பத்தாவதுதான் படிச்சேன். சொந்த அத்தை மகனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. அவரோட குடிப்பழக்கத்தால வீட்டுல நிம்மதி போச்சு. குழந்தை பிறந்ததும் எல்லாக் கவலையும் சரியாகிடும்னு காத்திருந்தேன். ஆனா, குழந்தை விஷயத்துலயும் எனக்கு சோதனைதான்.

பிறந்து மூணு மாசமாகியும் பையன்கிட்ட எந்த இயல்பான உணர்வுகளும் வெளிப்படலை. பயந்துபோய் ஆஸ்பத்திரிகளுக்கு அலைஞ்சேன். பல டாக்டர்கள் பயமுறுத்தினாங்களே தவிர, குழந்தைக்கு என்ன பிரச்னைனு உறுதியா சொல்லலை. ‘பையனுக்கு மூளை முடக்குவாத பாதிப்பு. இயல்பான விஷயங்களைக்கூட மிகவும் தாமதமாதான் செய்வான். நிற்பது, ஸ்கூலுக்குப் போறதெல்லாம் சிரமம்தான். உங்களோட முயற்சியைப் பொறுத்து இவன் வளர்ச்சி இருக்கும்’னு குழந்தையின் ரெண்டு வயசுலதான் சொன்னாங்க. நிறைய அழுதேன்.

ஷர்மிளா
ஷர்மிளா

பிறகு என்னோட ஒவ்வொரு செயலையும் மகனின் நலனுக்கானதா மாத்திக்கிட்டேன். எந்நேரமும் அழுதுட்டே இருப்பான். ஏதாவது அதிர்வா சத்தம் கேட்டா மிரளுவான். தாய்ப்பால்கூட குடிக்க மாட்டான். புட்டிப் பால், மசிச்சுக்கொடுக்கும் ஆகாரம் எதுவா இருந்தாலும் ஒருவாய் உள்ள போனா, பல மடங்கு வாந்தியா வரும். பையனோட அஞ்சு வயசு வரை இதே நிலை. ஒரு வார்த்தை பேசிட மாட்டானா, எழுந்து நடந்திட மாட்டானான்னு ஏங்கியிருக்கேன். சிறப்புக் குழந்தைகளுக்கான ‘ஸ்பாஸ்டிக் சொசைட்டி’க்கு பையனோட ஒரு வயசுலேருந்து வாரத்துக்கு நாலு நாளைக்குக் கூட்டிட்டுப்போவேன். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, படிப்புக்கான வகுப்புகள் முடியும் வரை காத்திருந்து கூட்டிட்டு வருவேன்.

ரெண்டு வயசுல பையனுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டுச்சு. ரெண்டு கண்லயும் ஆபரேஷன் பண்ணி நிரந்தர லென்ஸ் வெச்சாங்க. தலை நிக்காம, உட்கார முடியாம, எந்த அசைவும் இல்லாம பொம்மை மாதிரி இருந்தான். சுத்தியும் தலையணை வெச்சு இவனை மெதுவா உட்கார வெக்கிறதுல இருந்து எழுப்பி நிக்கவைக்கிற வரைக்கும் போராடினேன். எந்நேரமும் என் இடுப்பில்தான் இருப்பான். இவனோட சின்ன சிரிப்பில் என் வலிகளை மறப்பேன். ஆறு வயசுக்குப் பிறகு, படிப்படியா வாந்தி குறைஞ்சுது. பார்க், பீச்சுக்கு அடிக்கடி கூட்டிட்டுப்போய் வெளியுலகத்தைப் புரியவைப்பேன். தெரபிக்காக நிறைய இடங்களுக்குத் தூக்கிக்கிட்டே நடப்பேன். வார்த்தைகளில் விவரிக்க முடியாத காலகட்டம் அது” என்று இடைவெளி விடுகிறார்.

தன் மடியில் சாய்ந்துகொண்ட மகனின் தலையை வருடியபடி தொடரும் ஷர்மிளா, “இந்த பாதிப்புள்ள குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம். கடவுள் புண்ணியத்துல பையனுக்கு இதுவரை இந்தப் பிரச்னை வரலை. எப்போதும் பையன்கிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டே இருப்பதோடு, அவனைக் கேள்வி கேட்க வைப்பேன் அஞ்சு வயசுலதான் தடுமாறி ‘அம்மா’ன்னு கூப்பிட்டான். பசங்களோடு மிங்கிள் ஆகணும்னு டியூஷன்ல சேர்த்துவிட்டேன். ஆரம்பத்துல வேடிக்கை மட்டுமே பார்த்தாலும் படிப்படியா மத்தவங்களோடு பேச ஆரம்பிச்சான். இந்த நிலையில பொறுப்புள்ள கணவராகவும் அப்பாவாகவும் இல்லாத மனுஷன்கிட்ட அடி உதை வாங்கி நொந்து போனேன். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். ஆனா, ஒருகட்டத்துல பையனையும் துன்புறுத்த ஆரம்பிச்சார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதனால பயம், அழுகைனு எதிர்மறையான மாற்றங்களுடன் பையன் கதறினான். இத்தனை நாள் பையனோட முன்னேற்றத்துக்கு நான் எடுத்த முயற்சிகள் வீணாயிடக்கூடாதுனு நினைச்சேன். ‘மகனா, கணவரா?’ங்கிற நிலையில், இனி அம்மாவா மட்டும் வாழ்ந்தா போதும்னு முடிவெடுத்தேன். சுமுகமா பிரிஞ்சேன். இதுக்கிடையே எனக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, சாகுற நிலைக்குப் போய் பிழைச்சேன். முன்புபோல என்னால அதிக நேரம் தையல் வேலை செய்ய முடியாது. உடல்வலி முடக்கிடும். தையல் வேலையோடு வீட்டுல டியூஷன் எடுக்கிறேன். இதுல கிடைக்கிற சொற்ப வருமானத்துலயே தேவை களைச் சமாளிக்கிறேன்.

வாழ்நாள் முழுக்க இவனுக்குச் சிறப்பு கவனிப்பும் தெரபியும் தேவைப்படும். நாலு வருஷத்துக்கு முன்னாடி பையனை நார்மலான தனியார் ஸ்கூல்ல சேர்த்தேன். ஓரளவுக்குப் பாடங்களைப் புரிஞ்சுப்பான். ஸ்கூல்ல என்ன கல்ச்சுரல் ஆக்டிவிட்டினாலும் உடனே பணம் ரெடி பண்ணி, பையனை மேடையேற வெச்சுடுவேன். அதனால் கிடைக்கிற சின்னச் சின்ன மாற்றங்கள்கூட பையனோட முன்னேற்றத்துக்கு உதவுது. இன்னிக்கு கைத்தாங்கலா நடக்கிறான். ஓரளவுக்கு அவனே சாப்பிட முயற்சி செய்கிறான். மத்தவங்க பேசுறதைப் புரிஞ்சுகிட்டு பதில் சொல்றான். நான் மெனக்கெடாம இருந்திருந்தா, இன்னிக்கு பையன் முகத்துல மகிழ்ச்சியைப் பார்த்திருக்கவே முடியாது” - ஷர்மிளாவின் கண்களில் நீர் கசிய, மகன் துடைத்து விடுகிறான்.

“பொருளாதார பிரச்னையால இந்த வருஷம் பையனை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்க்கப் போறேன். என் உடல்நிலை முன்ன மாதிரி ஒத்துழைக்கிறதில்லை. நான் இல்லாட்டியும்கூட யார் தயவும் இல்லாம பையன் சுயமா வாழணும். அதுக்காக அவனை குணப்படுத்த இன்னும் அதிகம் மெனக்கெடுறேன்.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் இந்த நிலையை மனதளவில் முழுமையா ஏத்துக்கணும். எல்லாம் கடந்து போகும்கிற நம்பிக்கையில், குழந்தையின் முன்னேற்றத்துக்கான எல்லா முயற்சிகளையும் சலிப்பில்லாமல் செய்யணும். நிச்சயம் மாற்றம் உருவாகும்...”

- சக பெற்றோருக்கான மெசேஜ் சொல்பவர், மகனை முத்தமிட்டுக் கட்டியணைக்கிறார்.