Election bannerElection banner
Published:Updated:

`கல்யாணம் ஆன அதே பெட்லதான் இப்ப எங்க பையனும் இருக்கான்!' - நெகிழும் விஜய் - ஷில்பா தம்பதி

விஜய்-ஷில்பா
விஜய்-ஷில்பா

எங்களுக்கு கல்யாணமான அதே பெட்லதான் இப்போ என் பையன் படுத்துகிட்டிருக்கான். இது மிகப்பெரிய ஆச்சர்யம். நாங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரயில் விபத்தில் தன் கால்களைப் பறிகொடுத்த வாணியம்பாடியைச் சேர்ந்த இளைஞர் விஜயையும் தன் காதலனுக்கு கால்கள் பறிபோய்விட்ட நிலையிலும் 'தாலி கட்ட கைகள் போதும்' என்று சொல்லி மருத்துவமனையிலேயே வைத்து திருமணம் செய்துகொண்ட ஷில்பாவையும் தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். விஜய்க்கும் ஷில்பாவுக்கும் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த அதே வாணியம்பாடி மருத்துவமனையில் அதே பெட்டில் பிறந்திருப்பதுதான் அவர்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

விஜய்-ஷில்பா
விஜய்-ஷில்பா

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே விஜயும் ஷில்பாவும் காதலித்தனர். இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து திருமணத்துக்கு சம்மதித்திருந்த நிலையில்தான் துரதிர்ஷ்ட வசமாக ரயில் விபத்தில் சிக்கினார் விஜய். அந்த விபத்தில் விஜயின் இடது கால் துண்டானது. வலது காலும் செயலற்றுப் போனது. எதிர்காலம் இருண்ட நிலையில் மருத்துவமனையில் தவித்தார் விஜய். அவர் நல்ல நிலையில் இருந்தபோது திருமணத்துக்குச் சம்மதித்த ஷில்பாவின் பெற்றோர், ரயில் விபத்துக்குப் பிறகு திருமணத்துக்கு மறுத்தனர்.

இந்தநிலையில்தான் வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவமனையிலேயே வைத்து விஜய்யைத் திருமணம் செய்து உண்மைக் காதலுக்கு உதாரணமானார் ஷில்பா. இந்த நிலையில்தான், திருமணமான அதே மருத்துவமனையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

newborn baby
newborn baby

மகிழ்ச்சியில் இருந்த விஜய்யிடம் பேசினோம், "இங்கு மொத்தம் ஆறு படுக்கைகள் இருக்கு. நாங்க வரும்போது மத்த அஞ்சு படுக்கைகளிலும் ஆட்கள் இருந்தாங்க. எங்களுக்கு கல்யாணம் ஆன பெட் மட்டும் காலியா இருந்துச்சு. கல்யாண நினைவுகளோட அந்த பெட்ல என் மனைவி இருந்தா. 1-ம் தேதிதான் பையன் பொறந்தான். எங்களுக்கு கல்யாணமான அதே பெட்லதான் இப்போ என் பையன் படுத்துகிட்டிருக்கான். இது மிகப்பெரிய ஆச்சர்யம். நாங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு