Published:Updated:

தலைநிமிரும் சோளகர் இனம்... வெளிச்சம் பாய்ச்சும் இளம் பெண்கள்!

மீனா, ரோஜா
பிரீமியம் ஸ்டோரி
மீனா, ரோஜா

விடியல்

தலைநிமிரும் சோளகர் இனம்... வெளிச்சம் பாய்ச்சும் இளம் பெண்கள்!

விடியல்

Published:Updated:
மீனா, ரோஜா
பிரீமியம் ஸ்டோரி
மீனா, ரோஜா

மிழகத்திலுள்ள தொன்மை யான பழங்குடிகளில் சோளகர் இனம் முக்கிய மானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தொடங்கி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வரை நீள்கிறது பரந்து விரிந்த வனப்பகுதி. இதற்கிடையில் உள்ள தாளவாடிக்கு அருகில் இருக்கும் சோளகர் தொட்டி கிராமத்திலும் அதையொட்டிய குக்கிராமங்கள் பலவற்றிலும் இந்த இனத்தினர் அதிகம் வசிக்கின்றனர். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க களமிறங்கிய தமிழக-கர்நாடக அதிரடிப்படையினர், அமைதியும் எளிமையுமாக வாழ்ந்து வந்த அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கையில் தீராத ரணத்தையும் வேதனையையும் உண்டாக்கினர். ஆண்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பெண்களில் பலர் மோசமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டனர். அந்தக் கறுப்பு அத்தியாயத்துக்குப் பிறகு, சோளகர்களின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி துளிர்த்திருக்கிறது.

வனத்தையும் விவசாயத்தையும் தவிர வெளியுலகமே அறியாதவர்கள், கல்வி வெளிச்சம் பரவாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். அந்த நிலையை மாற்றும் நம்பிக்கையுடன் சில பெண்கள் கல்லூரி படிப்புவரை முன்னேறியிருக்கின்றனர். அவர்களில் எம்.பில் முடித்துள்ள மீனாவும், பிஹெச்.டி படித்துவரும் ரோஜாவும் சோளகர் இனத்தில் நம்பிக்கையூட்டும் அத்திப்பூ அடையாளங்கள். அதிரடிப்படையின் இன்னல் களுக்குத் தப்பாத இவர்களின் குடும்பம் தற்போது மகள்களால் தலைநிமிர்ந்திருக்கிறது.

தலைநிமிரும் சோளகர் இனம்... வெளிச்சம் பாய்ச்சும் இளம் பெண்கள்!

“வீரப்பன் கூட்டாளியா இருந்த சித்தன் என் தாத்தா. அவரின் தங்கை மகள்தான் என் அம்மா. அதனாலேயே வீரப்பனுடன் எந்தத் தொடர்பும் இல்லாத எங்க குடும்ப ஆண்கள் பலரையும் அதிரடிப்படையினர் கைது செய்தாங்க. அப்பா மூணு மாதங்கள் சிறையில் இருந்தார். நிறைய கஷ்டங்களுக்குப் பிறகு, குடும்பம் இயல்பு நிலைக்குத் திரும்புச்சு. என் அம்மா காலத்துல பருவத்துக்கு வரும் முன்பே பெண்களுக்குக் கல்யாணம் பண்ணிடுவாங்க. அந்த நிலை இப்போ ஓரளவுக்கு மாறியிருக்கு. குழந்தைத் திருமணம், விழிப்புணர்வு இல்லாமை, நகரத்து மாணவர்களுடன் மிங்கிள் ஆக முடியாதோ என்ற தாழ்வு மனப்பான்மை, எதிர்கால இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் எங்க சமூக குழந்தைகளுக்குக் கல்வி எட்டாக்கனியாவேதான் இருக்கு. இந்த விஷயத்துல பெற்றோரும் பெரிசா மெனக்கெடாமல், பிள்ளைகளையும் சின்ன வயசுலயே வேலைக்கு அனுப்பிடுவாங்க. இந்த நிலையெல்லாம் புரியவே, நல்லா படிச்சு எங்க சமூக முன்னேற்றத்துக்கு உதவணும்னு நினைச்சேன்.

வனப்பகுதியில் வளரும் சீமாறு (துடைப்பம்) புல் அறுத்துட்டு வரும் பெற்றோர், அதைச் சுத்தம் செஞ்சு சந்தையில் விற்பனை செய்வாங்க. அதனுடன், காட்டில் சேகரிக்கும் கிழங்கு, பெரு நெல்லியை விற்றும், கூலி வேலை செஞ்சும்தான் மூணு மகள்களையும் வளர்த்தாங்க. ஒருபோதும் எங்களை வெளி வேலைக்கு அனுப்புனதில்லை. ‘படிக்கிறது மட்டுமே உங்க வேலை. அதைச் சரியா செஞ்சு ஒசத்தியான வேலைக்குப் போங்க’ன்னுதான் சொல்வாங்க. ‘பொட்டப் பிள்ளைங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுங்க’ன்னு சொல்லும் ஊர்க்காரங்க பேச்சைக் கண்டுக்காம, எங்க விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீனாவும் ரோஜாவும் தங்கள் குடும்பத்தினருடன்....
மீனாவும் ரோஜாவும் தங்கள் குடும்பத்தினருடன்....

எங்க சோளகர் தொட்டி கிராமத்திலிருந்து மூணு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திகினாரையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலதான் பத்தாவதுவரை படிக்கணும். காட்டுப் பாதையில் நடந்துதான் போவோம். பிறகு, ஊட்டியில் ப்ளஸ் டூ, ஈரோடு மற்றும் உடுமலைப்பேட்டையில் காலேஜ் படிச்சேன். எம்.எஸ்ஸி முடிச்சுட்டு கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துல கவர்மென்ட் ஸ்காலர்ஷிப்ல ரெகுலர்ல எம்.பில் படிச்சேன். ஹாங்காங்ல பிஹெச்.டி பண்ற வாய்ப்பு கிடைச்சது. கொரோனாவால் அந்த முடிவை மாத்திட்டு, இந்தியாவிலேயே படிக்கத் திட்டமிட்டிருக்கேன்” என்று முகம் மலரக் கூறும் மீனாதான், சோளகர் இனத்தில் அதிகம் படித்தவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இப்பல்லாம் நாங்க வனப்பகுதிக்குள் செல்லவும், அங்குள்ள பொருள்களைச் சேகரிக்கவும் அனுமதி கிடையாது. எனவே, எங்க சமூக மக்கள் பொருளாதார ரீதியா ரொம்பவே சிரமத்துலதான் இருக்காங்க. இது மானாவாரி பூமி. எங்க மூணு ஏக்கர் நிலத்துல எப்பயாச்சும்தான் வெள்ளாமை இருக்கும். ஆடு மாடு வளர்ப்புலதான் குடும்பம் நடக்குது. என்னைப் பார்த்து தங்கைகளும் காலேஜ் படிச்சாங்க. பெரிய தங்கச்சி எம்.ஏ முடிச்சுட்டு, பிஹெச்.டி படிக்கப் போறா. சின்ன தங்கச்சி எம்.எஸ்ஸி படிக்கிறா. வெளியுலகமே தெரியாத ஏழை சமூகத்துல எங்க பெற்றோர் மூணு பெண் பிள்ளைகளையும் படிக்க வைக்கிறது பெரிய விஷயம். நாங்க நல்ல வேலைக்குப் போய் மதிப்புடன் இருக்கணும்ங்கிறதுதான் அவங்க ஆசை. அதை நிறைவேத்துறதுதான் எங்க கடமை”

- வைராக்கியத்துடன் கூறும் மீனா, தங்கை உறவான ரோஜாவை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

ரோஜாவும் வீரப்பன் கூட்டாளி சித்தனின் உறவுக்காரப் பெண்தான். தன் தாய்மொழியான கன்னடம் கலந்த தமிழில் நிதானமாகப் பேசுகிறார் ரோஜா.

“நான் மூணு மாதக் குழந்தையா இருந்தப்போ, அதிரடிப்படையால் அப்பா கைது செய்யப் பட்டார். விவசாய கூலி வேலைக்குப் போய் கிட்டே தனியாளா என்னை வளர்க்க அம்மா ரொம்பவே சிரமப்பட்டாங்க. நான் அஞ்சாவது படிக்கும்போதுதான் அப்பா விடுதலையானார். இப்பவரை ரேஷன் அரிசி சாப்பாடுதான். விவசாயக் கூலி வேலையில் நிரந்தர வருமானம் இல்லாமல் சிரமப்பட்டாலும் பெற்றோர் மூணு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறாங்க. அவங்க ஆசையை நிறைவேத்தவும் குடும்ப நிலையை மேம்படுத்தவும் பேராசிரியராக முடிவெடுத்தேன். பத்தாவதுவரை திகினாரையில் படிச்சுட்டு, சத்தியமங்கலத்துல ப்ளஸ் டூ முடிச்சேன். ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில எம்.ஏ முடிச்சுட்டு, காலேஜ் பேராசிரியர் மணி சார் ஊக்கத்தால் அங்கேயே ரெகுலர்ல பிஹெச்.டி பண்றேன். தங்கச்சியும் தம்பியும் ஸ்கூல் படிக்கிறாங்க.

வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் எங்க கிராமத்துல ஏறக்குறைய 50 வீடுகள்தான் இருக்கு. ஊர்ல இப்போ ஆரம்பப் பள்ளி மட்டுமே இருக்கு. சுற்றுவட்டார பல்வேறு கிராமத்தினரும் மேற்படிப்புக்குப் பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாளவாடிக்கும், கல்லூரிப் படிப்புக்குச் சத்தியமங்கலம் அல்லது சாம்ராஜ்நகருக்கும்தான் போகணும். இதுபோன்ற சிக்கல்களால் எங்க சமூகத்துல ஸ்கூல், காலேஜ் படிக்கிறவங்க எண்ணிக்கை குறைவாவே இருக்கு. எங்க ஊர்ல பசங்க யாரும் காலேஜ் முடிக்கலை. மீனாவையும் என்னையும் தவிர, இன்னும் சில பொண்ணுங்க மட்டுமே டிகிரி முடிச்சிருக்காங்க. ‘தமிழக-கர்நாடக அதிரடிப்படையினரின் வருகைக்கு முன்பும் பின்பும் சோளக மக்களின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்’ பத்தி பிஹெச்.டி பண்றேன். படிப்பை முடிச்சதும் வேலைக்குப் போய் தம்பி, தங்கச்சியையும் காலேஜ் படிக்க வைக்கணும். குடும்ப நிலையை உயர்த்தணும்”

- உறுதியான வார்த்தைகளில் உள்ளம் கவர்கிறார் ரோஜா.

மகள்களின் பேச்சைக் கேட்டு பூரிக்கும் பெற்றோருக்கு ஆனந்தக் கண்ணீர்!