Published:Updated:

முடியும்! - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

ஜி.ஏ.பிரபா - ஓவியம்: ரவி

முடியும்! - சிறுகதை

ஜி.ஏ.பிரபா - ஓவியம்: ரவி

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

வீடு திறந்திருந்தது. இன்னும் குடியேறாத வீடுபோல், ‘பளிச்’ என்று புத்தம்புதிதாக இருந்தது. அந்தந்த பொருள்கள் வைத்த இடத்தில் இருந்தன. இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடாகத் தெரியவில்லை.

முருகன் தயக்கத்துடன் எட்டிப் பார்த்தான். “கதிர்” என்று குரல் கொடுத்தான்.

“யாரையும் காணோம்...'' செல்வி உள்ளே செல்லத் தயங்கினாள்.

“கதவைத் திறந்து போட்டுட்டு எங்க போனாங்க?”

வீட்டுக்குள் நுழைந்து மீண்டும் குரல் கொடுத்தான் முருகன்.

“யாரு?” என்று குரல் வந்தது. ஒரு சிறுமி எட்டிப்பார்த்தாள்.

முருகனைக் கண்டதும் முகம் மலர, “அங்கிள் வாங்க” என்றாள்.

“அப்பா... எங்க கண்ணு?”

ஜி.ஏ.பிரபா
ஜி.ஏ.பிரபா

“கீழ, குடியிருப்போர் சங்கக் கூட்டம் நடக்குது. அம்மாவும் அப்பாவும் போயிருக் காங்க. இப்ப வந்துருவாங்க. உட்காருங்க...” ஏழு வயதுப் பெண் குழந்தை அழகாய்ப் பதில் சொன்னது. உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, உட்கார சேர் எடுத்துப் போட்டது. வீட்டுக்குள் சோபா இல்லை. பிளாஸ்டிக் சேர்தான். கைக்கு எட்டாத உயரத்தில் பொருள்கள் இருந்தன. டி.வி பத்திரமாக மர ஷெல்ஃபில் இருந்தாலும், அதன் கண்ணாடிக் கதவில் விரிசல் இருந்தது. ஒரு பெரிய பந்து, ஓரமாய் உருண்டு கிடந்தது.

“இருங்க. அண்ணனைக் கூட்டிட்டு வரேன்” என்று உள்ளே ஓடிய சிறுமி, ஒரு சிறுவனுடன் வெளியில் வந்தாள். இரண்டு வயதுக் குழந்தை யின் உயரம்தான் இருந்தான். சின்ன பீப்பாய்க்கு கண், காது, கை, கால் முளைத்தது போல் இருந் தான். குண்டு முகம். கூடையைக் கவிழ்த்தாற் போல் தலைமுடி. அழகான, சிரித்த உதடுகள். கண்கள், நிலையில்லாமல் அலைந்தன. வாய் ஒருபக்கம் கோணி, தலையைச் சாய்த்து இழுத்து, இழுத்து நடந்ததில் மன வளர்ச்சி அற்றவன் என்று தெரிந்தது.

கதிரின் மூத்த மகன். பத்து வயது ஆகிறது என்றாலும் உடல், மனம் இரண்டுக்குமே இரண்டு வயதுக் குழந்தையின் வளர்ச்சிதான். வீட்டிலேயே அனைத்தும் கற்றுக்கொடுக்கிறாள், கதிரின் மனைவி. லேசாகப் பேச்சு வருகிறது. சொல்வதைப் புரிந்துகொள்கிறான். முருகன், அடிக்கடி வந்து பழக்கம் என்பதால் அவனைப் பார்த்ததும் முகத்தில் ஒரு புன்னகை.

“கும்கி, அங்கிளுக்கு வணக்கம் சொல்லு” - தங்கை சொன்னதும், இருகை கூப்பி “வ... ண... க்... க... ம்ம்ம்...” என்றான்.

“அட, கும்கி. பேசறானே அழகா” - முருகன் வியந்தான்.

“எங்க கும்கி, ரைம்ஸ் சொல்லும் தெரியுமா?”- தங்கை சொன்னதும், கும்கி முகத்தில் பூரிப்பு. ‘ம்... ம்...' என்று வேகமாகத் தலையை ஆட்டினான்.

சிறுமி, அண்ணனுக்கு ஒரு சின்ன சேர் எடுத்துப்போட்டாள். அதில் கால்மேல் கால் போட்டு கும்கி அமர, தங்கை ஒரு கம்பீரத்துடன் அருகில் நின்றது, அழகாய் இருந்தது.

முருகன் கும்கியைக் கொஞ்சினான். அதன் மொழியில் அவனுடன் பேசினான்.

“ஏங்க, நாம எதுக்கு வந்தோம்? நீங்க இவன்கூட கதை பேசிட்டு இருக்கீங்க...” என்று செல்வி கடுகடுக்க, முருகன் அமைதியானான்.

என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளின் வேதனை நியாயமானது. கதிரிடம் பேசி விட்டு தங்கள் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வந்தார்கள். அதைப் பற்றிப்பேசாமல், குழந்தைகளுடன் அவன் விளையாடுவது எரிச்சலைத்தானே கிளப்பும். ஆனால், முருகனுக்கு இது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. மன ரணத்துக்கு மருந்தாக இருந்தது, குழந்தைகளின் பேச்சும் சிரிப்பும். கும்கியும் அவன் தங்கையும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள். ரசனையாக இருந்தது.

சிறுமி, தன் அண்ணாவை ஒரு கைக்குழந்தை போல் நடத்தினாள். அவனுடன் பேச்சுக்கொடுத்து, அவனையும் பேச வைத்தாள். நடு நடுவில் பிளாஸ்கிலிருந்து அவனுக்குப் பால் ஊற்றிக் கொடுத்தாள். வாயைத் துடைத்து, கப்பில் சுண்டல் போட்டு ஊட்டிவிட்டாள். அவ்வப்போது ‘கி’, ‘நோ’ என்றெல்லாம் அதட்டி, ‘கும்கியால முடியுமே!’ என்று உற்சாகப் படுத்தி அவனின் இயக்கமாக இருந்தாள் சிறுமி. அவளின் பரிவே பார்க்க ஆனந்தமாக இருந்தது.

“கும்கி பாடுவான் தெரியுமா...” - முகம் முழுவதும் பூரிப்புடன் கூறினாள் சிறுமி. அவளின் வாய் அசைவை உற்றுப்பார்த்து புரிந்து ‘ம்... ம்’ என்று தலையாட்டினான் கும்கி.

“அப்படியா... அவனால முடியுமா?”

“ஏன் முடியாது?”- சடாரென்று சீறினாள் சிறுமி. கண்கள் குரோதத் துடன் விழிக்க, “அவனால் முடியும். கும்கி ஒரு பாட்டு பாடு...” என்றாள்.

அமர்ந்திருந்த சேரிலிருந்து குதித்தெழுந்த கும்கி, கண்களை மூடிக் கொண்டு, இரு கைகளையும் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து கத்தினான். “டி... விங்... கிள், டிவி... ங்கி... ள்’’ அதற்கு மேல் விழித்தான்.

“முடியலைன்னா விட்ரு கண்ணு” என்று முருகன் சொன்ன விநாடி, கும்கி துள்ளிக் குதித்தான்.

“முத்தியும், முத்தியும்” என்று கத்தினான். தரையில் புரண்டு உருண்டு அழுதான். அவனின் கதறலில் வீடு அரண்டது. தங்கை ஓடிப்போய் அவனை தட்டிக்கொடுத்தாள்.

“கும்கி, அந்த அங்கிளால எதுவும் முடியாது. ஆனா, நீ கிரேட்ல. உன்னால முடியும்தானே...'' - கும்கி எழுந்து உட்கார்ந்து தலையாட்டினான்.

“அந்த அங்கிள் பயந்தாங்கொள்ளி. எதுன்னாலும் பயந்துடுவாரு. `என்னால முடியாது'னு சொல்லுவாரு. நீ சூப்பர்மேன்ல கும்கி. உன்னாலதான் எல்லாம் முடியுமே...”

சிறுமி சொல்லச் சொல்ல... சூப்பர்மேனாக உடலைச் சிலிர்த்து எழுந்த கும்கி, `ஊய்...' என்ற கூச்சலோடு தலையைச் சிலிர்த்துக் கொண்டான்.

“ஹை, சூப்பர்மேன்... இப்ப பாருங்க” சிறுமி கை தட்டினாள்.

கும்கி ஆவேசத்துடன் ரைம்ஸ் சொல்ல ஆரம்பித்தான். வார்த்தைகள் தெளிவாக இல்லாவிட்டாலும், ராகத்தை இழுத்து, இழுத்துப் பாடினான். முழுப்பாடலையும் பாடி முடித்ததும், சிறுமி துள்ளிக் குதித்தாள். அவளுடன் சேர்ந்து கும்கியும் குதித்தான். கைதட்டினான்.

செல்வியும் கைதட்டினாள். முருகன், குழந்தைகளை ஒரு பரவசத்துடன் இழுத்து அணைத்துக்கொண்டான்.

“என்ன ஒரே கும்மாளமா இருக்கு?”

கதிரும் அவன் மனைவியும் வந்து விட்டார்கள்.

“எப்படா வந்தே?” முருகன் அருகில் வந்து அமர்ந்தான் கதிர். இருவரும் ஒன்றாம் வகுப்பி லிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். கதிருக்கு, ஐ.டி கம்பெனியில் வேலை. முருகன், சொந்த பிசினஸ்.

“கும்கி நல்ல இம்ப்ரூவ் இல்லையா?”

“ஆமாண்டா. நல்லா ரெஸ்பான்ஸ் பண் றான். பாப்பாவும் அவனை நல்லா கவனிச்சுக் கிறா. அவ என்ன சொன்னாலும் கேட்பான். அவதான் ரைம்ஸ், அ, ஆ எல்லாம் சொல்லிக் கொடுக்கிறா. ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணாலும் எழுத்தாலும் எழுதுவான் தெரி யுமா...” கதிரின் பேச்சில் பெருமை தொனித்தது.

முடியும்! - சிறுகதை

“என்ன விஷயம் முருகன்?”

முருகன் தயங்கினான். என்ன சொல்வது. பிசினஸில் ஏகப்பட்ட நஷ்டம். இருக்கும் வீடு, தோட்டம் எல்லாம் விற்றாலும் கடன் அடை யாது. கடன் கொடுத்தவர்கள் நெருக்குகிறார்கள். நம்பிக்கை அனைத்தும் இழந்து, மனம் செத்து விட்டது. எனவே, சாவது என்று முடிவு எடுத்து விட்டார்கள். ஒரே மகள் ஏழு வயது. பாட்டி வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு என்று பணம் போட்டிருந்தான். மகளின் கார்டியன் கதிர் என்று நியமித்து பத்திரம் தயாரித்திருந்தான். கடன் பற்றிய விவரங்கள் உட்பட அனைத்தை யும் கதிரிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டுக்குப் போய் மனைவியுடன் விஷம் குடித்துவிடுவது என்ற முடிவோடுதான் வந்திருக்கிறான்.

கதிர், பால்ய நண்பன். அவனிடம் மறைக்காத எந்த விஷயமும் இல்லை. ஆனால், கதிரிடம் இப்போது எதையும் பேச மனமில்லை. கும்கியின் ‘முத்தியும், முத்தியும்’ என்ற சொல்லே அவன் மனதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண் டிருந்தது.

கதிரிடம் பொதுவாகப் பேசிவிட்டு எழுந்தான்.

“என்னடா அவசரம்? நைட் டிபன் சாப்டுட்டு போகலாமே.”

“இல்லை கதிர். ஊருக்குப் போய் பொண் ணைக் கூட்டிண்டு வரணும். இன்னொரு நாள் வர்றேன். கும்கி, வரட்டா.”

கும்கி எழுந்து நின்று கைகூப்பினான். முருகன் அவனை நெருங்கி அணைத்து முத்தம் இட்டான். சிறுமியை அணைத்துத் தலை வருடினான்.

“கண்ணு. உங்க அண்ணாவை ரொம்ப நல்லா பார்த்துக்கறே. கும்கி இன்னும் கொஞ்ச நாள்ல அற்புதமா பேசுவான் பாரேன்.”

“ஆமாம் அங்கிள். அவனால் முடியும். இல்லையா கும்கி?”

“முத்தியும், முத்தியும்”- கும்கி கைகொட்டி குதித்து ‘டன்’ என்று கட்டை விரலை உயர்த்தி னான்.

“பாப்பா அவனுக்கு முடியும்னு மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கு. எந்தத் தயக்கம் னாலும், முடியும்னு கட்டை விரல்ல தம்ஸ் அப் காண்பிப்பா. செஞ்சுடுவான்” - கதிரின் மனைவி பெருமையுடன் கூறினாள்.

“நல்ல குழந்தைகள். கடவுள் துணை நிற்பார்.”

முருகன் நெகிழ்வுடன் வெளியில் வந்தான். காரில் ஏறி அமர்ந்த பின்னும் அதை ஸ்டார்ட் பண்ண மனம் வரவில்லை. டாக்குமென்ட் கட்டுகளை பின்சீட்டில் போட்டான்.

“வொர்க் ஷாப்ல வண்டியை விட்டுட்டு வீட்டுக்குப் போகணும். விஷம் வீட்டுல இருக்கு. இந்த டாக்குமென்ட் எல்லாம் கதிர்கிட்ட கொடுக்காம வந்துட்டீங்க?”

“நாம சாகணுமா?’'- நிதானமாகக் கேட்டான்.

“என்ன கேள்வி இது? செத்துடலாம்னுதானே முடிவெடுத்தோம்.”

“செத்துட்டா இந்தக் கடன் அடைஞ்சுடுமா?”

“நம்மை நம்பிக் கடன் கொடுத்தவங்களை ஏமாத்தினதா ஆகிடாதா?”

“வழி இல்லாம எந்தப் பாதையும் இல்லை.”

செல்வி அமைதியானாள். முருகன் மௌன மாக காரை ஓட்டினான்.

“அப்போ வாழலாம்னு சொல்றீங்களா?”

“கும்கி மாதிரியான ஒரு குழந்தைகூட முடியும்கறதை நம்பிக்கையோட சொல்ல முடியறப்ப... நம்மால முடியாதா? எல்லாத்தை யும் வித்துடலாம். ஆளுக்கு கொஞ்சம், கொஞ்சம் தந்து சமாதானம் பேசலாம். மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்.”

செல்வி, கட்டை விரல் உயர்த்தி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism