தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காதல் (இல்லா) கடிதம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

கீதா கைலாசம்

காதல் (இல்லா) கடிதம் - சிறுகதை

நினைவிருக்கிறதா... அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் வருடம். நீ வேலைபார்த்துக்கொண்டிருந்தாய். நாம் இருவரும் மாங்குமாங்கென காதலித்துக்கொண்டிருந்தோம். அத்தை மகனானாலும் நம் வீடுகளில் நம் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி... என் வீட்டு மாடிப்படிக்கு அடியில் நீ எனக்குக் கொடுத்த முதல் முத்தம், உன் வீட்டு மொட்டை மாடியில் என் அப்பாவின் பிறந்தநாளன்று நாம் முதன்முறை கட்டிப்பிடித்துக்கொண்டது, என் பி.ஏ ரிசல்ட் வந்தவுடன் உனது மோட்டார் பைக்கில் வி.ஜி.பி போனோமே... அங்கே நாம் கோத்த கைகளை அந்த நான்கு மணி நேரமும் விடவேயில்லை. அன்று நாம் கொடுத்துக்கொண்ட முத்தங்களின் எண்ணிக்கை நினைவில்லை. வேறு சில அத்துமீறல்களும் இருந்தன. அவை என்னவென்று நினைவிருக்கிறதா உனக்கு?

இந்தக் கடிதத்தை நான், உனக்குக் காட்டவா போகிறேன்... ம்ஹூம்... இல்லை.

நான் எழுதியதுகூட உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாளை பிறந்தால் புது வருடம். என்னென்னவோ பழைய நினைவுகள். நம் திருமணம் நடந்ததும் ஜனவரி 1 அன்றுதான். கட்டின புடவையோடு ஓடிப்போய் கருமாரி அம்மன் கோயிலில்தான் தாலி கட்டிக்கொண்டோம். அதாவது நினைவில் உண்டா... நாம் என்ன, நாளைக்கு ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொள்ளவா போகிறோம்?

சரி... எதற்கு இந்தக் கடிதம்? இன்றைக்கு என்ன முகூர்த்தம்... இதை எழுதுவதற்குச் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை. இப்படி ஏதேதோ எழுதி எழுதித் தானே என்னை நான் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் இத்தனை வருடங்களாய்.

இரண்டு வரிகளுக்கு மேல் தொடர்ந்து எழுத முடிவதில்லை. வலது கை வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. வலியென்றால் சாதாரண வலி இல்லை. எந்த வேலையும் செய்ய விடாது, துடிக்கச் செய்யும் வலி. இதே கையால் உன்னைத் தூக்கிப் பிடித்து கைத்தாங்கலாக மாடிப்படிகளில் அழைத்துப் போயிருக்கிறேன். அன்று இரவே 24 மணி நேர ஆஸ்பத்திரிக்குத் தனியாக ஓடினேன், உன் பளு தாங்காமல் கைவலி அதிகமாகிப் போனதால்தான். டாக்டர்கூட அப்படி நான் தனியாக வந்ததற்கு வருத்தப்பட்டார். இதை இன்றுவரை யாரிடமும் சொன்னதில்லை நான்.

சிறுகதை
சிறுகதை

எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் விடலாம் என்று தோன்று கிறது ஒவ்வொரு நாளும். உண்மையிலேயே கையாலா காதவளாக இருக்கிறேன் நான். நாம் பூனாவில் இருந்தபோது, நான் வேலைக்கெல்லாம் போனேன். ஒரு நர்சரி பள்ளியில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டேன். எத்தனை குழந்தைகளை இந்தக் கையால் தூக்கி அவர்களோடு விளையாடி மகிழ்ந்திருக்கிறேன். நினைவிருக்கிறதா... மாதம் ரூபாய் 12,000-க்கும் மேல் சம்பாதித்தேன். என்னமோ திரும்ப சென்னை வந்ததும் வேலைக்குப்போகாமல் விட்டுவிட்டேன். அப்போதெல்லாம் கைவலியே இருந்தது இல்லை. எத்தனை வேலைகள் செய்வேன்? உதவிக்கு ஒருவரும் கிடையாது. இப்போதுதான் கைக்கு முடியாமல் வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறேன்.

நாம் கணவன் மனைவியாக வாழ்ந்து 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நம் உறவுக்கு ஒரே அடையாளம் நமக்குள் வாரம் ஒருமுறை நடக்கும் சில்லறைச் சண்டை மட்டுமே. உண்மையாகவே சில்லறைக்குத்தான் சண்டை. என்னால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை இந்தக் கையை வைத்துக்கொண்டு. பார்க்காத வைத்தியம் இல்லை. என்னவோ சரியாகவே மாட்டேன் என்கிறது. மாதச் செலவுக்கும் நம் மகளின் படிப்புக்கும் நீ கொடுக்கும் சில்லறைக்காகத்தான் உன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சிறுகதை
சிறுகதை

ஞாபகம் இருக்கிறதா... முதன்முறை நீ அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு வந்தாய். புது வருடம் என்று சாக்கு சொன்னாய்... அது நம் கல்யாண நாள் என்ற நினைவு இல்லாமல். அன்று என்னை முதன்முறை நன்றாகப் போட்டு அடித்துவிட்டாய். ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து, நான் கையில் கொண்டு வந்த சாப்பாடு பிடிக்காமல், என் கை மேலே அதைத் தூக்கி விசிறி அடித்தாய். நான் வலி தாங்காமல் அழுதே விட்டேன். அதோடு, அப்போதே உனக்கு நீ விரும்பியதை சமைத்துப் போட்டேன். அந்த நிகழ்ச்சி, மறுநாளே உன் நினைவில் இல்லை. அந்தப் புதுவருடம் மிக மோசமானதாகப் போனது எனக்கு. அளவாகக் குடித்துக் கொண்டிருந்த நீ, அந்த வருடத்திலிருந்து அளவுக்கு மீறி குடியும் கும்மாளமுமாய் மாறிவிட்டாய். `கேர்ள் ஃபிரெண்டு' என்று யாரையோ அறிமுகப்படுத்தி வைத்தாய். அன்றிலிருந்துதான் நான் கீழ் அறையில் தனியாகத் தூங்குவதாக முடிவெடுத்தேன். அதற்கும் பெரிய சண்டை நடந்தது. முடிவைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன்.

எது தவறினாலும் கருமாரியை தரிசிக்கத் தவறினதேயில்லை நான். அவள் மட்டுமே எனக்கு கதி. என் கைக்கும் சரி, கணவனுக்கும் சரி அவளாலும் இன்றுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இனி செய்வாளா? இன்று அவளிடம் வேண்டிக்கொண்டு என் வீட்டில் வேலை செய்யும் மாரியோடு பிசினஸ் பார்ட்னர்ஷிப் டீல் பேசி முடித்தேன், அரும்பாக்கத்தில் ஒரு சாப்பாட்டு கைவண்டி வைக்கலாம் என்று. அவள் சமையல் முழுவதையும் செய்துவிடுவாள். நான் கூடமாட உதவுவேன். அவள் கணவன், சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வந்து கொடுப்பான். நான் கணக்கு வழக்கு பார்த்துக்கொள்வேன். 40,000 ரூபாய் வரை முதலீடு இருக்குமாம். அதில் என் பங்கு 20,000. என்னிடம் உள்ள சேமிப்பையும் கணக்கு பார்த்து, அங்கும் இங்கும் புரட்டினால் இரண்டு மாதத்தில் தயார் செய்துவிட முடியும் என் பங்கை. நீயானால், `இந்தக் கைவண்டி சமையல் படுமட்டமான வியாபாரம், என்னால் அவமானம் மட்டும்தான் மிஞ்சும்' என்று சொல்லி என்னைக் கிண்டல் செய்கிறாய், என் மகளையும் உன் பக்கத்தில் வைத்துக்கொண்டு.

காதல் (இல்லா) கடிதம் - சிறுகதை

எனக்கு எல்லா ஊர் சமையலும் அத்துப்படி. அதுவும் உனக்கு எங்கு நினைவிருக்கப் போகிறது? சரியாக லிஸ்ட் போட்டு சொல்லிக் கொடுத்தால், மாரி மடமடவென சமைத்து இறக்கிவிடுவாள். அஞ்சோ, பத்தோ நான் சம்பாதித்தாக வேண்டும்.

நாம் மாடியும் கீழுமாக இருந்தபோது கூட என்னுடன் படுக்க மட்டும் வந்து கொண்டிருந்தாயே... அந்த உரிமையில் அடிக்கடி என் முதுகை உன் மகள் அழ அழ உன் பரந்த கைகளால் பதம் பார்த்துக்கொண்டிருந்தாய். என்ன கோபம் அது? என்ன குடி அது? குடித்தால் அடிக்கத்தான் வேண்டுமா? அப்போதுதான் அடி தாங்காமல் ஒரு நாள் நீ என்னைத் தொடவே கூடாது என்று முடிவெடுத்து அதை உன்னிடம் சொன்னேன். அதற்காக கலாட்டா செய்தாய். என்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னாய். நான் போகவில்லை. ஆனால், அன்று உன்னை நான் நெருங்கவிடவில்லை. அந்த நாளிலிருந்து தான் எனக்கு உன் தொடுதலில் இருந்து முழு விடுதலை கிடைத்தது.

பெண் குழந்தை, படிப்புச் செலவு, மாதச் செலவு, மருத்துவச் செலவு, நான் வீட்டையும் உங்களையும் பார்த்துக்கொள்ள, இத்யாதி... இதற்கெல்லாம் கணக்குப் பார்த்துப் பார்த்துக் காசு கொடுக்கிறாய். உன் குடிக் கணக்கை யார் பார்ப்பது?

என் மகள் சம்பாதிக்க ஆரம்பித்த பின் தைரியமாக ‘அம்மா வா நாம் போய் தனியாக இருக்கலாம்’ என்று சொன்னால், உனக்கு சமைப்பதிலிருந்தும், உன் முகத்தில் முழிப்பதிலிருந்தும் எனக்கு விடுதலை கிடைத்துவிடும். இல்லை... ஒரு வேளை என் கைவண்டி சமையல் வியாபாரம் நன்றாக அமைந்தாலும், நான் மெதுவாக வெளியேற முயல்வேன். இந்தக் கைக்கு ட்ரீட்மென்ட் செலவுதான் இழுத்துக்கொண்டே போகிறது. அதற்காகவும்தானே உன்னிடம் கையேந்திக் கிடக்கிறேன்.

என் கை சரியாக இருந்தால் என் நண்பர்களே எனக்கு வேலை கொடுத்துவிடுவார்கள். தொடர்ந்து கணினியில் என்னால் வேலை செய்ய முடியாது. அதனால்தான் சமையல் வேலையென்றால் மாரி போன்ற ஆளோடு சேர்ந்து செய்துவிடலாம்.

அந்த திருவேற்காடு அம்மன்தான் இந்த வேலையை படிப்படியாக ஒசத்திக்கொண்டு போய் நான் ஒரு பெரிய ஹோட்டல் வைக்கின்ற அளவுக்கு என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காட்டணும். என் கை மட்டும் சரியாய் போய்விட்டால், என்னையும் மகளையும் நானே எட்டு ஊருக்குப் பார்த்துக் கொண்டுவிடுவேன்.

கடிதத்தை எங்கோ ஆரம்பித்து எங்கேயோ கொண்டு வந்துவிட்டேன். எப்படி முடிப்பது? எதை முடிப்பது? உனக்கு ஞாபகம் இருக்கிறதா... நம் காதலை கல்யாணத்தில் கொண்டு முடிக்க நீ எத்தனை மெனக்கெட்டாய் என்று? நம் குழந்தைக்கு அந்த கான்வென்டில்தான் இடம் வேண்டும் என்று நீ முடிவு எடுத்தாயே... இதோ இந்த வீட்டை முடிக்கவும்தான் மெனக்கெட்டாய். நமக்குள் ஆன கல்யாணம் ஒன்றுதான் இன்னமும் முடியாமல் இருக்கிறது. பார்த்துச் செய் சக்தி. பட்டென கைவலி விட்டாலும் விட்டுவிடும்

நம் காதல் வாழ்க்கைக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாகக்கூட என் சித்தி அடிக்கடி சொல்லுவார். குடிதான் அந்த சூனியம். நீயே வைத்துக்கொண்டது. ‘சக்தி’... உன் பெயர் முன்பெல்லாம் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? பல வருடங்கள் கழித்து இன்று இந்தக் கடிதத்தில்தான் அதை நான் வாய் விட்டு சொல்லிப் பார்க்கிறேன். முடியாத கையோடு மணிக்கணக்காகச் செலவிட்டு எப்படியோ எழுதிவிட்டேன்.

ஏதோ ஒரு சக்தி வந்தாற்போல இருக்கிறது. இதில் உள்ளதெல்லாம் என்னுடைய புத்தாண்டு தீர்மானங்களாகக் கொள்கிறேன். என் காதலன் எனக்குக் கொடுத்த முத்தக் கணக்கை விஞ்சும் அளவுக்கு அத்தனை பெளர்ணமிகள் கருமாரியைப் போய்க் கும்பிட்டிருக்கிறேன். அவளுக்கு நினைவு தப்பாது. வரும் ஆண்டுக்குள் என் திருவேற்காடு தாயார் என்னை ஒரு நிலைக்குக் கொண்டு போய் வைப்பாள்.

இப்படிக்கு,

காதல் (இல்லா) கடிதம் - சிறுகதை