லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

தனியொருத்தி - 16 - “சட்டக்கல்லூரியில குழந்தையோடு சேர்ந்து படிச்ச முதல் மாணவி நானாதான் இருப்பேன்!”

ஹெப்சி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெப்சி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - ஹெப்சி

நேற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்... இன்றைக்காக வாழுங்கள்... நாளையின்மீது நம்பிக்கை வையுங்கள்!

‘வலியில்லாமல் வாழ்க்கையில்லை’ என்பது மானுட தத்துவம். வாழ்க்கையில் வலிகள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு வலிகளே வாழ்க்கையாவதுண்டு. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹெப்சிக்கும் அப்படித் தான். விரக்தியின் உச்சத்தில் யாருக்கும் வாழ்வின் மீதும், சக மனிதர்கள் மீதும் வெறுப்பு ஏற்படுவது சகஜம். ஹெப்சியோ, வாழ்க்கையும் வாய்ப்புகளும் கைநழுவிப் போன நிலையிலும் யார் மீதும் எதன் மீதும் வெறுப்பை உமிழாதவர். அதுதான் அவரது பலமும்கூட. வழக்கறிஞரான ஹெப்சி, கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி சென்னை உயர் நீதிமன்றம் வரை வாதாடி வருபவர்.

‘‘எனக்குப் பூர்வீகம் கன்னியாகுமரி. உப்புக் காத்தோடவும் கடல் அலைகளோடவும் வாழற மீனவ பெற்றோருக்கு பத்து குழந்தைகள்ல ஒருத்தியா பிறந்தவள் நான். சின்ன வயசுலேருந்தே எனக்கு ஐபிஎஸ் ஆகிறதுதான் கனவு. அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சேன். உடலளவிலான தகுதிகளையும் வளர்த்துக் கிட்டேன். என் 15 வயசுலயே என் ஹேர்ஸ்டைலை மாத்திக்கிட்டேன். நான் வளர்ந்த கிராமத்துச் சூழல்ல அதுக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனா என் பெற்றோரோ அதையெல்லாம் கண்டுக்காம என் லட்சியத்துக்கு உறுதுணையா இருந்தாங்க...’’ க்ராப் செய்யப்பட்ட கூந்தல், பேன்ட்-ஷர்ட், கம்பீர நடை என ஹெப்சியின் இப்போதைய தோற்றத்துக்கு அதுதான் ஆரம்பம் என்பதை உணர்த்துகிறது அவரது பேச்சு.

‘‘பிஏ ஆங்கில இலக்கியமும் எம்பிஏ ஹெச்ஆரும் படிச்சேன். படிப்பை முடிச்சதும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரோட ஏற்பட்ட அறிமுகம், பெரியவங்க சம்மதத்தோடு கல்யாணத்துல முடிஞ்சது. ‘என் லட்சியத்துல பின் வாங்க மாட்டேன்... என் தோற் றத்தை மாத்திக்க மாட் டேன்’னு கல்யாணத் துக்கு முன்னாடியே என் கணவர்கிட்டயும் அவங்க வீட்டார்கிட்ட யும் பேசியிருந்தேன். அவங்களும் சம்மதம் சொன்னதாலதான் கல் யாணம் பண்ணிக்கிட் டேன். ஆனா, கல்யாணத் துக்குப் பிறகு அந்த வாக் குறுதியெல்லாம் காத்துல பறந்துடுச்சு.

போலீஸாகணும்ங்கிற என் கனவுக்கு புகுந்த வீட்டுல முட்டுக்கட்டை போட்டாங்க. பிரச்னை களுக்கு நடுவுல ஒரு பெண் குழந்தை பிறந் தாள். கல்யாணம் என்ற பந்தம் என்னையும் என் குழந்தை யையும் பாதுகாப்பதாகவோ, உடன் பயணிக்கிறதாகவோ இல்லை. என் குழந்தை மட்டும்தான் அந்தக் கல்யாண வாழ்க்கை எனக்குக் கொடுத்த ஒரே நல்ல விஷயம். கசப்பான அனுபவங்களை மட்டுமே கொடுத்த அந்தக் கல்யாண வாழ்க்கையிலேருந்து வெளியே வர முடிவெடுத் தேன். ஆனா, அந்தச் சூழல்லயும் நாங்க கணவன்-மனைவியா பிரிஞ்சாலும் என் குழந்தைக்கு புகுந்த வீட்டு உறவுகள் அவசியம்னு தோணுச்சு. என் சுய விருப்பத்துக் காக என் குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய அன்பையோ, பாசத்தையோ, உறவுகளையோ பறிக்கக்கூடாதுனு முடிவு பண்ணேன். அதனால பிரிவுக்குப் பிறகும் நானும் என் குழந்தையும் மாமனார், மாமியார்கூடவே இருந் தோம்...’’ பெருந்தன்மையின் உச்சத் துக்கே போன பிறகும்கூட ஹெப் சிக்கு ஆறுதலோ, அமைதியோ கிடைத்துவிடவில்லை.

‘‘எனக்கும் என் குழந்தைக்குமான எல்லா தேவைகளையும் நான் என் சம்பாத்தியத்துலதான் பார்த்துக்க வேண்டியிருந்தது. கனவுகள் நொறுங்கிப்போச்சு... கணவன் என்ற பந்தமும் முடிஞ்சுபோச்சு... எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு, மாமனார், மாமியார்கூட வாழ்ந் திட்டிருந்த எனக்கு ஒரு கட்டத்துல அந்த வாழ்க்கையும் அர்த்தமில்லாத துனு புரிஞ்சது. இனியும் இந்த பந்தத் துக்காக என்னைத் தொலைச்சுட்டு வாழணுமாங்கிற கேள்வி வந்தது. ஆறு வருஷங்கள் கடந்த நிலையில அங்கேருந்து வெளியே வந்தேன். அப்போ என்கிட்ட என் படிப்பைத் தவிர எதுவும் இல்லை. என் அப்பா கொடுத்த நகைகள், சீர்வரிசைனு எதுவும் எனக்குத் திருப்பித்தரப் படலை. மனமுவந்த விவாகரத்து மூலமா ரெண்டு பேரும் நிரந்தரமா பிரிஞ்சோம்...’’ துணிந்து முடிவெடுத்த வரை வாழ்வின் சவால்கள் மட்டும் விட்டபாடாக இல்லை.

தனியொருத்தி - 16 - “சட்டக்கல்லூரியில குழந்தையோடு சேர்ந்து படிச்ச முதல் மாணவி நானாதான் இருப்பேன்!”

‘‘குழந்தையை வெச்சுக்கிட்டு இனியும் ஐபிஎஸ் கனவைத் துரத் தறது சாத்தியமில்லைனு புரிஞ்சது. வழக்கறிஞராகலாம்னு முடிவெடுத் தேன். தமிழ்நாட்டுல லா காலேஜ் அட்மிஷனுக்கான கால அவகாசம் முடிஞ்சிருந்ததால பெங்களூருல உள்ள விவேகானந்தா கல்லூரியில சேர அப்ளை பண்ணினேன். புது ஊர், புது மக்கள்... குழந்தையை எங்கே விட்டுப் போறதுங்கிற கேள்வி வந்தப்போ, கல்லூரி முதல்வர்கிட்ட என் நிலைமையை எடுத்துச் சொல்லி, குழந்தையை வகுப்பறையில என் கூடவே வெச்சுக்க அனுமதி கேட்டேன். ‘ரெண்டு நாள் அனுமதிக் கிறேன். குழந்தை வகுப்பறையில யாரையும் தொந்தரவு பண்ணாம இருந்தா தொடரலாம், இல்லைனா மாற்று ஏற்பாடு பண்ணிக்கோங்க’ன்னு சொன்னார். குழந்தைக்கு ஓவியம் வரையவும் கிராஃப்ட் பண்ணவும் பொருள்களை வாங்கிக் கொடுத்து, ‘நீ சமத்தா இருந்தா அம்மாகூடவே இருக்கலாம். அடம் பிடிச்சா க்ரெச்ல தான் விடுவேன்’னு சொன்னேன். முதல்நாள் வகுப்பறை யில என் குழந்தையோட இருந்த அனுபவம் சக மாணவர்கள் அத்தனை பேருக்கும் ஆச்சர்யமா இருந்தது. குழந்தை யாரையும் எந்தத் தொந்தரவும் பண்ணலை. குழந்தை வகுப்பறையில இருந்ததை யாருமே தொந்தரவா உணரலைனு சொன்னாங்க. அப்படியே படிச்சு முடிச்சேன். சட்டக்கல்லூரியில குழந்தையோடு சேர்ந்து படிச்ச முதல் மாணவி நானாதான் இருப்பேன்...’’ ஹெப்சியின் விவரிப்பில் அவரின் மகள் மீதும் மரியாதை கூடுகிறது நமக்கு.

‘‘2006-ல தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன் சில்ல வழக்கறிஞரா பதிவு செய்தேன். சென்னை உயர் நீதி மன்றம் உள்ளிட்ட நீதி மன்றங்கள்ல வாதாட ஆரம்பிச்சேன். ஒரு ஜூனியர் வழக்கறிஞரா எனக்கு கிடைச்ச வரு மானத்துல எங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறது சிரமமா இருந்தது. ஒரு எம்என்சி கம்பெனியில மாலை 6 முதல் 10 மணி வரைக்கும் அடிஷனல் ஹெச்ஆர் வேலை பார்க்கிற வாய்ப்பு வந் தது. காலையில நீதிமன்ற வேலை, மாலை ஹெச் ஆர் வேலைனு ஓயாம உழைச்சேன். என் மகளை நல்லா படிக்க வெச்சு, ஃபேஷன் டிசைனர் ஆக்கினேன். கல்யாணமும் பண்ணி வெச்சிட்டேன்...'’ தந்தையுமானவராக கடமைகளை முடித்திருக்கிறார்.

‘‘என் வாழ்க்கையில எல்லா பிரச்னைகளும் சரியாயிடுச்சு. அம்மாவா என் மகளுக்கான கடமைகளை சிறப்பா முடிச்சிட்டேன். இனி வேறென்ன வேணும்னு அதோட என்னால நிறைவடைய முடியலை. நான் தனிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டபோது என் நலன்லயும் வளர்ச்சிலயும் அக்கறை உள்ள நல்ல நண்பர்கள், ஆசான்கள் எனக்குக் கிடைச்சாங்க. என்கிட்ட என்ன இருக்குனு உணரவும் அதை அடையாளம் கண்டு உழைக்கவும் வழிகாட்டினாங்க. பல பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள்ல சட்டம் சொல்லித் தரவும், மூன்றாம் பாலினத் தவர்களுக்கு ஒரு வழக்கறிஞரா என்னால என்ன உதவிகள் செய்ய முடியும்னும் வழிகாட்டினாங்க. அதனால கஷ்டம்னு என் வீட்டுக் கதவுகளைத் தட்டற பெண்களுக்கு வழக்கறிஞரா என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யறேன். ஓஹி புயல்ல உறவுகளை இழந்த பெண் களோட முன்னேற்றத்துக்காக உழைக்க ஆரம்பிச்சேன். அந்த இடத்துல என் ஹெச்ஆர் பின்னணி யைப் பயன்படுத்தி அவங்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு வழி காட்டறேன். படிப்பறிவில்லாத பெண்களுக்கு சுயதொழில் ஆலோ சனைகள் கொடுக்கறேன். நண்பர்கள் சிலர் இணைஞ்சு ‘குமரியின் கரங்கள்’ என்ற பெயர்ல சமூகநல இயக்கம் உருவாக்கியிருக்கோம். வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கற பலருக்கும் சுய அடையாளத்தை ஏற்படுத்தற பயிற்சிகளைக் கொடுக்கறோம். கணவனோடு வாழற பெண்களுக்கும் சரி, தனியா வாழறவங்களுக்கும் சரி சுய சம்பாத்தியமும் சுய அடையாள மும் அவசியம். அந்த இலக்கை நோக்கி தான் இயங்கிட்டிருக்கோம்’’ - வாழ்வின் பிற்பாதியை பொது நலனுக்காக மாற்றிக் கொண்டிருக் கிறார் ஹெப்சி.

‘‘தனியா வாழும் பெண்களுக்கு மட்டுமே பிரச்னைகள் வர்றதில்லை. குடும்ப சூழல்ல பிரச்னைகளையும் வன்முறையையும் சகிச்சுக்கிட்டு வாழற பெண்கள் பலர். சுயத்தை இழக்காம இருக்க வேண்டியதுதான் யாருக்கும் இங்கே முக்கியமாகுது. சுயத்தை இழக்காதவங்களால எந்த இடத்துலயும் எந்தச் சூழல்லயும் சாதிக்க முடியும்’’ - அனுபவத்தி லிருந்து ஹெப்சி சொல்வது அறிவுரை மட்டுமல்ல, அன்புரையும்கூட..!

நிறைவடைந்தது