Published:Updated:

தனியொருத்தி! - டாக்டர் சூரஜ்... S/O மகாலட்சுமி - ஒரு தாயின் தன்னம்பிக்கை - புதிய பகுதி - 1

மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
மகாலட்சுமி

- சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

தனியொருத்தி! - டாக்டர் சூரஜ்... S/O மகாலட்சுமி - ஒரு தாயின் தன்னம்பிக்கை - புதிய பகுதி - 1

- சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
மகாலட்சுமி

விவாகரத்தொன்றும் அவ்வளவு பெரிய சோக நிகழ்வல்ல.... மகிழ்வற்ற மணவாழ்க்கையில் நீடிப்பதுதான் மாபெரும் சோகம்...

புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களின் மேல் சாமானியர்களுக்கு எப்போதும் பொறாமைப் பார்வை இருக்கும். 'அவங்களுக் கென்ன....' என்ற ஒற்றை வார்த்தை போதும் அதைப் பிரதிபலிக்க... பிரபலங்கள் ஒன்றும் வேற்றுகிரகவாசிகள் அல்லர்... பிரபலங்களை பிரச்னைகள் அண்டாதென ஒன்று மில்லையே... ஆனாலும் மக்கள் முன்னிலையில் புன்னகை முகமூடியோடு வலம்வர நிர் பந்திக்கப்பட்டவர்கள் அவர்கள். அப்படி ஒரு பிரபலத்தின் போராட்டம்தான் `தனி யொருத்தி' பகுதியின் முதல் பேட்டியாக...

``ஊருக்கே நியூஸ் வாசிச்சிட்டிருக்கேன். என் பெயரும் நியூஸ்ல அடிபடும்னு நினைச் சிருப்பேனா... மக்கள் மத்தியில பிரபலமான வங்களுடைய வாழ்க்கையில எது நடந்தாலும் அது பொதுவெளியில பேசப்படும், விவா திக்கப்படும். என் விவாகரத்தும் அப்படித்தான் பேசுபொருளாச்சு...'' வழக்கமான சிரிப்பு மாறாமல் பேச ஆரம்பிக்கிறார் மகாலட்சுமி. சன் டி.வியின் ப்ரைம்டைம் செய்தி வாசிப்பாளர்.

மகனுடன்...
மகனுடன்...

`கடந்தகால கசப்பைப் பகிரும்போது அழுகை வராவிட்டால் உங்கள் மனக்காயம் ஆறிவிட்டதாக அர்த்தம்' என்றொரு பொன் மொழி உண்டு. மகாலட்சுமிக்கு அழுகை வராததற்கு காயம் ஆறியதுதான் காரணமா... தெரியாது. ஆனால், அவரது அடையாளம் மாறியது நிச்சயம் காரணமாக இருக்கும்.

``சன் டி.வி, ராஜ் டி.வினு பிரபல சேனல்கள்ல தொகுப்பாளரா பிசியா இருந்த நேரத்துலதான் எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சு. கல்யாண மானா கரியர் என்னாகுமோனு பயப்படற வங்களுக்கு மத்தியில நானோ, எதைப் பத்தி யும் கவலைப்படாம, பக்கா ஹவுஸ் வொயிஃபா கல்யாணக் கனவுல மிதந்திட்டிருந்தேன். நான் ஆசைப்பட்ட மாதிரியே கூட்டுக் குடும்பத்துல கல்யாணமாகிப் போனேன். விக்ரமன் படம் மாதிரி `லாலாலாலா...'னு வாழ்க்கை ஜாலியா போகும்னு நினைச்ச எனக்கு, கற்பனை வேற, யதார்த்தம் வேறனு ரொம்ப சீக்கிரம் புரிஞ்சிடுச்சு. புகுந்த வீட்டுல அடியெடுத்துவெச்ச முதல் நாள்லேருந்து தினம் தினம் எனக்காக மோசமான ஆச்சர்யங்கள் காத்திருந்தது. பிரச்னைகளை ஆரம்பத்துலயே அம்மா, அப்பாகிட்ட சொன்னேன்.

`புது சூழல், புது மனுஷங்க... பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளிக்கத் தெரியலைன்னா நீ வாழ்க்கையில தோத்துட்டேன்னு அர்த்தம். பொறுத் துக்கோ...'ன்னு அட்வைஸ் பண்ணாங்க. இன்னிக்கு சரியாயிடும், நாளைக்கு சரியா யிடும்ங்கிற நம்பிக்கையில கிட்டத் தட்ட 11 வருஷங்களை ஓட்டினேன்...'' அவரே இடைவெளிவிட்டு அவரே தொடர்கிறார்.

``என்னோட முன்னாள் கண வருக்கு வேற குடும்பம் இருக்கு. அதனால என் வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு இப்போ பேசறது சரியா இருக்காது. அவ்வளவு கசப்புக்கு நடுவுலயும் எனக்கு மகன் பிறந்தான். என் தைரியத்துக்கான முதல் விதை என் மகன் சூரஜ் விஸ்வேஷ்வர்தான்னு சொல்லலாம். என் புகுந்தவீட்டுக்காரங்க மிகப் பெரிய பணக்காரங்க. பிரியறதுன்னு முடிவெடுத்தபோது, பொருளாதார ரீதியா நான் ஸ்ட்ராங்கா இல்லை. பூஜ்ஜியத்துலேருந்து என் வாழ்க் கையை ஆரம்பிக்க வேண்டிய நிலை. ஆனாலும் புகுந்த வீட்டுலேருந்து ஒரு பைசாவைக்கூட செட்டில்மென்ட் என்ற பெயர்ல வாங்கக்கூடாதுங் கிறதுல உறுதியா இருந்தேன்.

தனியொருத்தி! - டாக்டர் சூரஜ்... S/O மகாலட்சுமி - ஒரு தாயின் தன்னம்பிக்கை - புதிய பகுதி - 1

ரொம்பவும் எதிர்பார்ப்போட ஏத்துக்கிற கல்யாண வாழ்க்கை நாம நினைச்ச மாதிரி இல்லை, அதுல தாக்குப்பிடிக்க வாய்ப்பே இல்லைங் கிற நிலைமையிலதான் ஒரு பெண் அந்த உறவு வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு வெளியே வர நினைக் கிறா. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அந்த முடிவு எவ்வளவு துயரமானதா இருக்கும்னு யாரும் யோசிக்கிற தில்லை. என் அம்மா, அப்பாவோ, மத்தவங்களோ யாருமே என் நிலைமையைப் புரிஞ்சுக்கலை. `உனக்கு என்ன பிரச்னைங்கிறதை விடவும், உன் லைஃப்ல வேற யாராவது இருக்காங்களா....'ங்கிறது தான் அவங்க கேள்வியா இருந்தது.

`நீ , உன் புருஷனோட இருந்தாதான் எங்களுக்கு சந்தோஷம்...'னு சொல்லிச் சொல்லியே அம்மாவும் அப்பாவும் என்னை முடிவெடுக்க விடாம தடுத்தாங்க. அப்பா உயிரோட இருந்தவரை அவருக்காக எல்லாத் தையும் சகிச்சுக்கிட்டேன். அப்பா இறந்த பிறகுதான் துணிஞ்சு முடிவெடுத்தேன். ஹவுஸ்வொயிஃப் கனவுலயே வாழ்ந்ததால அந்த வாழ்க்கைக்கு நான் படிச்ச பி.காம் போதும்னு நினைச்சேன். ஆனா கல்யாண வாழ்க்கையில பிரச்னை, அது முறியப்போகுதுனு தெரிஞ்சபிறகு தான் எம்.காம், பி.எல், எம்.எல்னு எல்லாம் படிச்சேன். புகுந்த வீட்டுல இருந்தபோதே அட்வகேட்டா பிராக் டிஸும் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். பெத்தவங்க உட்பட யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணாததால என் டைவர்ஸ் கேஸை நானே ஃபைல் பண்ணினேன். என் க்ளையன்ட் ஸோட டைவர்ஸ் கேஸுக்காக பேசிட்டு அடுத்து ஜட்ஜ் முன்னாடி நான் போய் நிப்பேன். `க்ளையன்ட் எங்கம்மா'ன்னு அவர் கேட்கும்போது, 'நான்தான் சார் க்ளையன்ட்'டுன்னு சொன்ன அந்த நொடி எவ்வளவு வலிச்சிருக்கும்னு சொல்லவே முடியலை....'' மகாலட்சுமியின் வார்த்தைகள் அந்தக் காட்சியையும் அந்தத் தருணத்து வலியையும் நமக்குக் கடத்துகின்றன.

``டைவர்ஸுக்கு பிறகான வாழ்க்கைங்கிறது திருமண வாழ்க்கையோட துயரங்கள்லேருந்து விடுதலை கொடுத்தாலும், அடுத்த வாழ்க்கைக்குப் பழகறவரைக்குமான ஆரம்ப காலம் ரொம்பவே கொடுமை யானது.

டைவர்ஸுக்கு பிறகு இந்தச் சமூகம் நம்மைப் பார்க்கிற விதமே மாறும். `உன்னைப் பார்த்துட்டு இப்போ என் பொண்ணும் லைஃப்ல பிரச்னைங்கிறா....'னு போறபோக்குல சொல்வாங்க. அவ்வளவு வலிக்கும். கணவனை இழந்த பெண்ணைப் பரிதாபத்தோட பார்க்குற இந்தச் சமூகம், விவாகரத்தான பெண்ணை மட்டும் கெட்டவளாவே பார்க்கறது ஏன்னு தெரியலை. என் ஃபிரெண்ட்ஸுக்கு அவங்க கணவரோட ஏதாவது சண்டை வந்தா, `அவ உனக்கு சொல்லிக்கொடுத்தாளா, அவ தனியா வாழறதால உன்னையும் அப்படி இருக்கச் சொல்றாளா'ன்னு கேட்பாங்க.

அதுவரைக்கும் மரியாதையா பேசிட்டிருந்த ஆண்கள், டைவர்ஸ் ஆனது தெரிஞ்சதும் போன் பண்ற நேரமும் பேசற விதமும் வேற மாதிரி இருந்தது. கல்யாணங்களுக்குப் போகறதைத் தவிர்த்தேன். கலகலப்பான நான், ஒரு கூட்டுக்குள்ள என்னை அடைச்சுக்கிட்டேன். அதிகம் பேசறதைக் குறைச்சிக்கிட்டேன். யார்கிட்டயாவது சிரிச்சுப் பேசறதைப் பார்த்துட்டு என் கேரக்டரை தப்பா பேசிடுவாங்களோன்ற பயம்.

இன்னிக்கு வரைக்கும் என் பையனோட இனிஷியலை நான் மாத்தலை. தனி மனுஷியா அவனைப் படிக்கவெச்சு, ஆளாக்கினதெல்லாம் நான். ஆனாலும் பெயருக்கு முன்னால வெறும் இனிஷியலா மட்டும் இருக்கிறவர் அவனோட அப்பா. எல்லா டாகுமென்ட்ஸ்லயும் இனிஷியலை மாத்தறதுங்கிறது சாதாரண வேலையில்லை. `அது அப்படி இருந்துட்டுப் போகட்டும்மா'ன்னு சொல்றான் என் மகன். அந்த ஓரிடத்துல மட்டும் நான் தோத்துட்டதா நினைக்கிறேன். ஆனா, தனி மனுஷியா வாழ்க்கையில நான் ஜெயிச்சிட்டதாகவே நினைக்கிறேன்.

தனியொருத்தி! - டாக்டர் சூரஜ்... S/O மகாலட்சுமி - ஒரு தாயின் தன்னம்பிக்கை - புதிய பகுதி - 1

மெள்ள மெள்ள வாழ்க்கை மாற ஆரம்பிச்சது. கிரிமினல் மற்றும் மேட்ரிமோனியல் வழக்கறிஞரா என்னை அப்டேட் பண்ணிக்கிட்டேன். டைவர்ஸ் ஆகி வந்தபோது என் கையில ஒரு ரூபாய் சேமிப்பு இல்லை. இன்னிக்கு எனக்கு சொந்த வீடு, கார்னு எல்லா வசதிகளும் இருக்கு. எல்லாம் என் உழைப்புல சாதிச்சது. இதையெல்லாம் தாண்டி என் மகனை பல் மருத்துவராக்கி இருக்கேன்....'' - `டாக்டர் சூரஜ், சன் ஆஃப் மகாலட்சுமி' மொமென்ட் பகிர்பவரின் முகம் பெருமையில் மிளிர்கிறது.

``டியர் பேரன்ட்ஸ்... ஒரு பெண் டைவர்ஸ் முடிவெடுக்கறாள்னா அவ வாழ்க்கையில வேறோர் ஆண் இருக்கணும்னு நீங்களா கற்பனை செய்துக்காதீங்க. அவளால இந்தச் சமுதாயத்துல தனியா வாழ முடியுமானு கேட்கா தீங்க. அவளால முடியும்னு நம்புங்க. அப்புறம் ஜென்டில்மென்... உங்களுக்கொரு வேண்டுகோள்... ஒரு பொண்ணு தனியா இருக் கான்னா உங்க பார்வை, பேச்சு, நடவடிக்கைகளை வேற மாதிரி மாத்திக்காதீங்க...''

மகாலட்சுமியின் மெசேஜ், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு மானது.

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism