Published:Updated:

தனியொருத்தி - 10 - ‘‘வன்முறையை சகிச்சுக்கிட்டு வாழத் தேவையில்லை!’’ - ப்ரியா வேணுகோபால்

ப்ரியா வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா வேணுகோபால்

உங்கள் சந்தோஷத்துக்கான சாவியை மற்றவரிடம் கொடுக்காதீர்கள்.

தனியொருத்தி - 10 - ‘‘வன்முறையை சகிச்சுக்கிட்டு வாழத் தேவையில்லை!’’ - ப்ரியா வேணுகோபால்

உங்கள் சந்தோஷத்துக்கான சாவியை மற்றவரிடம் கொடுக்காதீர்கள்.

Published:Updated:
ப்ரியா வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரியா வேணுகோபால்

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

‘‘காதல் கரைபுரண்டு ஓடும்... ஒவ்வொரு நாளும் சந்தோஷம் திக்குமுக்காட வைக்கும்னு நினைச்சுதான் எல்லாரும் கல்யாண வாழ்க்கை யில அடியெடுத்து வைக்கிறோம். ஆனா யதார்த்தம் அப்படி இருக்கிறதில்லை. எதிர் பார்ப்புகள் ஏமாற்றங்களாகும். பிரச்னைகள் வரும். அதையெல்லாம் சரிபண்ற பொறுப்பு கணவன்-மனைவி ரெண்டு பேருக்கும் இருக் கணும். என் வாழ்க்கையை எப்படியாவது சரி பண்ணிட முடியாதானு நான் எடுக்காத முயற்சிகள் இல்லை. அதே முனைப்பு எதிர்த் தரப்புல காட்டப்படலை. உறவு முறிஞ்சதுல இந்த நிமிஷம் வரை எனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. இந்தச் சமூகம் என்னை பரிதாபத்தோட பார்க்கிறதையும் நான் அனுமதிக்கிறதில்லை’’ - போல்டு அண்ட் பியூட்டிஃபுல்லாக பேசுகிறார் ப்ரியா வேணு கோபால். சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆசிரியர். ‘சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்’ குழுவின் நிர்வாகி.

‘‘அப்பா ஆர்மி ஆபீஸர். அகமதாபாத்ல இருந்தோம். ப்ளஸ் டூவுல ஃபெயில் ஆயிட்டேன். கம்பார்ட்மென்ட் எக்ஸாம் எழுதிட்டு 17 வயசுலயே மாற்றுத்திறனாளி களுக்கான ஒரு பள்ளிக்கூடத்துல வேலை செய்ய ஆரம்பிச்சேன். 98-ல சென்னை வந்து வித்யாசாகர் அமைப்புல சிறப்புக் குழந்தை களுக்காக ஒரு கோர்ஸ் படிச்சுக்கிட்டு அங்கேயே வேலையும் பார்த்தேன். அப்பவே அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுத்திட்டிருந் தேன். அந்த அறிமுகத்துலதான் அப்புறம் அதே ஸ்கூல்ல டீச்சரா வேலை கிடைச்சது’’ என்பவர், 22 வருடங்களாக அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

‘‘21 வயசுலயே எனக்கு கல்யாணமாயிடுச்சு. அம்மா, அப்பா பார்த்துச் செய்த அரேன்ஜ்டு மேரேஜ்தான். முதல் ஒரு வருஷம் நல்லாதான் போச்சு. கல்யாணமான அடுத்த வருஷமே பையன் பிறந்துட்டான். அப்புறம் எல்லா வீடுகள்லயும் வர்ற மாதிரி சின்னச் சின்னதா பிரச்னைகள் வர ஆரம்பிச்சது. ஆனா, அது விவாகரத்தாகும் அளவுக்குப் போகும்னு எதிர்பார்க்கலை. பிரச்னைகளை சரியாக்க என்னால முடிஞ்ச முயற்சிகளைச் செய்தேன். அதையும் மீறி ரெண்டு பேரோட சிந்தனை, வாழ்க்கைமுறைனு பல விஷயங்கள்ல கருத்து வேறுபாடுகள் அதிகமாச்சு.

 மகன் மற்றும் பெற்றோருடன்...
மகன் மற்றும் பெற்றோருடன்...

தாத்தாவும், அப்பாவும் ராணுவத்துல வேலை பார்த்தவங்க. அதனால ரொம்ப கட்டுக்கோப்பா, நேர்மையா எல்லாம் நடக் கணும்னு எதிர்பார்ப்போம். நான் நிறைய கேள்விகள் கேட்பேன். ஆனா, அப்படிக் கேட்கறதை அவர் விரும்பலை. ஒரு கட்டத்துல போலீஸ் கேஸ் ஃபைல் பண்ணினேன். அது எங்களுக்கிடையில இருந்த பிளவை இன்னும் பெருசாக்குச்சு. ஒரு வருஷம் பிரிஞ்சிருந்து மறுபடி சேர்ந்தோம். ரெண்டாவது பையன் பிறந்தான். இனி எல்லாம் சரியாயிடும்னு நம்பினேன். ஆனா அப்படி எதுவும் நடக்கலை.

ரெண்டு குழந்தைங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழலாம்னு நினைச்சேன். ஆனா, பத்து வருஷங்கள் கழிச்சு அவரே எங்களை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட் டாரு. டைவர்ஸ் கேஸ் போட்டாரு. அதுக்கப் புறமும் அந்த வாழ்க்கையை சரிசெய்துட முடியாதானு போராடி னேன். அஞ்சு வருஷம் கேஸ் நடந்தது. ஆனா எங்களை விட்டுட்டுப் போன ரெண்டாவது வருஷமே அவருக்கு வேறொரு பெண்ணோட தொடர்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்து டுச்சு. அந்த நிமிஷம் என் நம்பிக்கை மொத்தமும் தகர்ந்தது...’’ நம்பிக்கை துரோகத்தால் உடைந்து போனவர், மேலும் நொறுங்கி விடாதபடி சுதாரித்துக் கொண்டிருக் கிறார். துயரங்களிலிருந்து மீள, பி.எட், கேம்பிரிட்ஜ் சர்ட்டிஃபிகேஷன் மற்றும் அமெரிக்காவின் மாஸ் டர்ஸ் டிகிரி என கல்வியைத் துணையாக்கியிருக்கிறார்.

‘‘நாங்க பிரிஞ்சபோது பெரியவன் அஷ்வினுக்கு ஏழு வயது. சின்னவன் ஷ்யாமுக்கு ஒன்றரை வயசு. நாங்க குடியிருந்த வீட்டை எங்களுக்கே தெரியாம அடமானம் வச்சிருந்தாரு. அதைக் காப்பாத்த ஒரு கேஸ், டைவர்ஸ் கேஸ், ஜீவனாம்சம் கேஸ்னு மாசத்துல நாலஞ்சு நாள் கோர்ட்டுக் குப் போயிட்டு வருவேன். அதையெல்லாம் பார்த்து பிள்ளைங்களுக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சது. என்னோட அப்பாவும் அம்மாவும் எங்களுக்கு ஆதரவா எங்க கூடவே இருக்கிறதுனு முடிவு பண்ணாங்க. அவங்க பிள்ளைங்களைப் பார்த்துக்கிட்ட தாலதான் என்னால வேலைக்கும் போயிட்டு, கோர்ட் கேஸையும் சமாளிக்க முடிஞ்சது. என் சம்பாத்தியத்துல என் பிள்ளைங்களைப் படிக்க வெச்சேன்.

சின்னவனுக்கு ரெண்டரை வயசிருக்கும் போது அவனுக்கு கண்ல கேன்சர் (ரெட்டினோ பிளாஸ்டோமா) வந்தது. அந்த வயசுலயே அவனுக்கு ஒரு கண்ணை எடுத்துட்டோம். இப்போ வரைக்கும் அவனுக்கு ஒரு கண்தான். அவனோட வாழ்க்கை என்னவாகப் போகுது, அவனால ஸ்கூலுக்கு போக முடியுமா, படிக்க முடியுமா, கேன்சர் மற்ற இடங்களுக்குப் பரவாம இருக்கணுமேங்கிற கவலைகள் ஒரு பக்கம்... குடும்ப பிரச்னை இன் னொரு பக்கம்னு நான் கடந்து வந்த பாதை அசாதா ரணமானது.

குழந்தைங்களை வந்து பார்க்கிறதுக்கான விசிட்டேஷன் ரைட்ஸ் இருந்ததால மாசத்துக்கொரு முறை அவர் வந்து பார்த்துப் பேசிட்டுப் போவார். ஆனா வெறும் 45 நிமிஷ சந்திப்புல எந்த மாற்றமும் நடந்துடா தில்லையா...’’ விரக்தியை மறைத்துப் பேசும் ப்ரியா வின் முயற்சியொன்று அவரது பொதுநல எண்ணத் துக்குச் சான்று.

‘‘பிரிவுக்குப் பிறகு நான் சந்திச்சவங்கள்ல என்னை மாதிரியே சிங்கிள் மதர்ஸ் நிறைய பேர் இருந்தாங்க. கோர்ட் கேஸ்ல தொடங்கி, குழந்தைங்களை வளர்க்கறது வரை சிங்கிள் பேரன்ட்ஸ் எதிர்கொள்ற சவால்களையும் அனுபவங் களையும் ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துப் போம். நம்மளை மாதிரி இருக்கிறவங்களுக்கு ஏன் ஒரு சப்போர்ட் குரூப் தொடங்கக் கூடாதுன்னு தோணுச்சு.

தனியொருத்தி - 10 - ‘‘வன்முறையை சகிச்சுக்கிட்டு வாழத் தேவையில்லை!’’ - ப்ரியா வேணுகோபால்

ஃபேஸ்புக்ல ‘சென்னை சிங்கிள் பேரன்ட்ஸ்’ என்ற பெயர்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சேன். எங்களுக்காக ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. மாசத்துக்கொரு முறை நாங்க சந்திப்போம். தன் அப்பாவோ, அம்மாவோ பிரிஞ்சிட்டாங் கன்ற எண்ணம் குழந்தைங்களுக்கு வருத்தத் தைத் தரக் கூடாதுனு தான் இந்த குரூப்பையே ஆரம்பிச்சேன். அந்த மாதிரி பிள்ளைங்க சந்திக்கும்போது, ‘நான் மட்டும் இந்த உலகத்துல தனியா இல்லை. அம்மா, அப்பா பிரிவுங்கிறது சமுதாயத்துல சாதாரணமா நடக்கிற விஷயம்தான்’னு புரிஞ்சுப்பாங்க.

இந்த குரூப்ல யாரும் யாரையும் ஜட்ஜ் பண்ண மாட்டோம். நிறைய பேச்சு, நிறைய நிறைய சிரிப்பு, அதைவிட நிறைய தகவல் பரிமாற்றம்னு பாசிட்டிவ்வான, பாதுகாப்பான குரூப் இது’’ என்பவரின் இந்தக் குழுவில் திருமணமாகி பிரிந்தவர்கள், பிரியப் போகும் மனநிலையில் உள்ளவர்கள், திருமணமாகாமல் தத்தெடுத்தவர்கள், ஆண்கள் என பலரும் உறுப்பினர்களாம்.

‘‘ `பிரிஞ்சிடுங்க... நாங்க இருக்கோம்’னு சொல்றதில்லை எங்கக் குழுவோட நோக்கம். முடிஞ்சவரை சேர்ந்திருக்கப் பாருங்க. பிள்ளைங்களுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் வேணும். முடியாத சூழல்ல வெளியே வாங்க. உங்க பிரச்னைகளுக்கு குழந்தைங் களை பகடைக்காயா ஆக்காதீங்க. அவங்க சந் தோஷம் ரொம்ப முக்கியம்னு அட்வைஸ் பண்ணுவோம்...’’ நல்நோக்கம் சொல்பவர், கடைசியாகப் பகிர்ந்தது, அத்தனை பெண் களுக்குமான அழுத்தமான, அவசியமான மெசேஜ்.

‘‘வன்முறைங்கிறதை எந்த ரூபத்துலயும் துளிக்கூட சகிச்சுக்கிட்டு வாழத் தேவையே இல்லை. ‘ஒரு அறைதானே விட்டான்... பொறுத்துக்கிட்டு வாழ்ந்தா என்ன’ன்னு கேட்கற நபர்கள் இருக்காங்க. ஒரு அறைதான் நாலு அறையா மாறும். அப்புறம் கை, கால்களை உடைக்கிற அளவுக்கும் உயிரைப் பறிக்கிற அளவுக்கும் போகும். திருமண உறவுல வன்முறை இருக்குன்னா அதை எக்காரணம் கொண்டும் சகிச்சுக்காதீங்க. உடனே யார்கிட்டயாவது உதவி கேளுங்க. உங்களை அந்தச் சூழல்லேருந்து காப்பாத்திக் கோங்க. எல்லாத்தையும்விட முக்கியமா உங்கக் குழந்தைகளோட பாதுகாப்பை உறுதிப்படுத்துங்க!’’

- வெற்றிக்கதைகள் தொடரும்...