Published:Updated:

தனியொருத்தி 12 - “என் கணவர் இறந்ததுக்கு என்னை தண்டிக்கிறது எந்த வகையில நியாயம்?” - பிரபா ஸ்ரீதேவன்

பிரபா ஸ்ரீதேவன்
பிரீமியம் ஸ்டோரி
பிரபா ஸ்ரீதேவன்

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

தனியொருத்தி 12 - “என் கணவர் இறந்ததுக்கு என்னை தண்டிக்கிறது எந்த வகையில நியாயம்?” - பிரபா ஸ்ரீதேவன்

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
பிரபா ஸ்ரீதேவன்
பிரீமியம் ஸ்டோரி
பிரபா ஸ்ரீதேவன்

கடல் அலைகளைத் தடுத்து நிறுத்த முடியாதுதான்.

ஆனால், அதில் அலையாடல் பழகுவது சாத்தியமே!

சென்னை, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பிரபா ஸ்ரீதேவன். வாழ்க்கையின் பாதியை இல்லத்தரசியாகக் கழித்தவர். திருமணமாகி 11 வருடங்களுக்குப் பிறகு சட்டம் படித்தவரின் அடையாளம், இல்லத்தரசி என்பதிலிருந்து வக்கீலாக, பிறகு நீதிபதியாக மாறியது. பல வழக்குகளுக்கு நியாயமான தீர்ப்பெழுதிய பிரபாவின் வாழ்க்கையில் இயற்கை எழுதிய தீர்ப்பு மட்டும் அநியாயமாகிப் போனது. இளம் வயதில் கணவரை இழந்து தனிமையில் தவித்தவரின் வாழ்க்கை, வலியால் வரையப்பட்டிருக்கிறது.

‘‘சென்னை, ஸ்டெல்லா மாரிஸ் காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரச்சர் முடிச்சதும் எனக்கு இங்கிலாந்து போய் படிக்கணும்னு ஆசை. ஆனா, கூட்டுக்குடும்பத்துல நான்தான் முதல் பேத்தி. தாத்தா உயிரோட இருக்கும்போதே எனக்கு கல்யாணம் பண்ணிடணும்னு ஆசைப் பட்டாங்க. சென்னையில வழக்கறிஞரா பிராக்டிஸ் பண்ணிட்டிருந்த ஸ்ரீதேவனோடு 1969-ம் வருஷம் எனக்கு கல்யாணம் நடந்தது. புகுந்த வீட்டுல நான்தான் முதல் மருமகள். அதுக்குண்டான பொறுப்புகள் இருந்தது. எல்லாத்தையும் மனசார ஏத்துக்கிட்டேன். எனக்கு, என் புகுந்த வீட்டு மனுஷங்களை ரொம்ப பிடிக்கும். அதனால வேலைக்குப் போகாம குடும்பத்தைப் பார்த்துக்கிறது எனக்கு எந்த வருத்தத்தையும் தரலை...’’ உறவுகள் சூழ, கிட்டத்தட்ட 11 வருடங்கள் இனிமையான இல்லத்தரசியாக வாழ்ந்த கதையோடு ஆரம்பிக்கிறார் பிரபா ஸ்ரீதேவன்.

‘‘1980-ம் வருஷம்... ஒருநாள் என் கணவர் என்கிட்ட ‘நீ ஏன் வக்கீலுக்குப் படிக்கக் கூடாது’ன்னு கேட்டார். கொஞ்சமும் சீரியஸ் னெஸ் இல்லாம, ‘படிச்சாப் போறது’னு மூணு வருஷ டிகிரியா லா படிச்சேன். என் கணவர் சென்னையில மிகப் பிரபலமான வழக்கறிஞரா இருந்தார். 83-ம் வருஷம் சட்டப்படிப்பை முடிச்சதும் நான் அவர் அலுவலகத்துலயே சேர்ந்தேன். அப்போ என்னைப் பார்த்த பலரும், ‘இவங்க பொழுதுபோக்கறதுக்காக லா படிச்சிட்டு கணவர் அலுவலகத்துக்கு வராங்க’ன்னு நினைச்சிருக்காங்க. கணவர் சொன்னதாலதான் சட்டம் படிச்சேன்னாலும், படிச்சு முடிச்சதும் அந்தத் துறையில தீவிர ஆர்வம் காட்டினேன்ங்கிறதுதான் உண்மை...’’ விமர்சனம் செய்தவர்களுக்கு வெற்றியை பதிலாகக் கொடுக்கத் துணிந்த தருணம் அதுதான் என்கிறார் பிரபா.

தனியொருத்தி 12 - “என் கணவர் இறந்ததுக்கு என்னை தண்டிக்கிறது எந்த வகையில நியாயம்?”  - பிரபா ஸ்ரீதேவன்

‘‘93-ம் வருஷம்... எதிர்பாராத நேரத்துல என் கணவர் தவறிட்டார். அதுக்கப்புறம் வாழ்க்கை யில நிறைய சவால்கள்... அலுவலகத்தைப் பார்த்துக்கிறது, அங்கே வர்ற ஜூனியர்ஸை பார்த்துக்கிறதுனு எல்லாப் பொறுப்புகளும் என்கிட்ட வந்தது. என் பெரிய மகன் அமெ ரிக்காவுல இருந்தார். வக்கீலுக்குப் படிச்சிட்டி ருந்த சின்னவர் ஆபீஸ் வர்ற வரைக்குமாவது அதைக் கட்டிக் காப்பாத்தணும்னு நினைச் சேன். என் கணவர் தவறினதும் அவருடைய கார்ப்பரேட் க்ளையன்ட்ஸ் பலரும், ‘இவங் களால நம்ம கேஸை பார்க்க முடியுமா’ங்கிற சந்தேகத்துல என்கிட்டருந்து வழக்குகளைத் திரும்ப வாங்கிட்டுப் போயிட்டாங்க. அதுக்கு நேரெதிரா, கிராமத்து க்ளையன்ட்ஸ் ‘இந்தம் மாவை நம்பி வழக்கைக் கொடுக்கலாம்’னு என்னைத் தேடி வந்தாங்க...’’ புறக்கணிப்பு களைப் புறந்தள்ளியவர், ஒருகட்டத்தில் தன்னிடமிருந்து விலகியவர்களே தன்னைத் தேடிவரும் அளவுக்கு உயர்ந்தது தனிக்கதை. வழக்கறிஞராக வெற்றிகளை வசப்படுத்திக் காட்டியவருக்கு நீதிபதி பதவி மேலும் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னை, உயர் நீதிமன்றத்தில் 2000 முதல் 2010 வரை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் பிரபா ஸ்ரீதேவன். கற்பனையே செய்திராத உயரங் களை எட்டிவிட்ட பிறகும், கணவரின் இழப்பு இன்னும் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது இவருக்கு.

‘‘ஸ்ரீதேவன் டென்னிஸ், கோல்ஃப்னு ஸ்போர்ட்ஸ்ல அதீத ஆர்வம் உள்ளவர். உடலளவுல ஃபிட்டா இருந்தவருக்கு ஏன் இந்த நிலைனு பல நாள் யோசிச்சிருக்கேன். அவர் இறந்ததுல எனக்கு கடுமையான கோபம், வருத்தம் எல்லாம் இருந்தது. என் னுடைய குரு ஸ்தானத்துல உள்ள ஒருத்தர், ‘உன்கிட்ட உள்ள இவ்வளவு கோபத்தையும் வருத்தத்தையும் வேஸ்ட் பண்ணாதே... அதை பாசிட்டிவ்வா மாத்து... அதுதான் உன் கணவ ருக்கு நீ செய்யற மரியாதையா இருக்கும்’னு சொன்னார்.

ஸ்ரீதேவன் உயிரோட இருந்தப்ப, ‘நம்ம பசங்க படிச்சு அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிடுவாங்க. வயசான காலத்துல உனக்கும் எனக்கும் பொதுவான ஆர்வம்னு ஒண்ணு இருக்கணும்’னு சொல் வார். அந்தப் பொதுவான விஷயமா நான் சட்டத்துறையைப் பார்த்தேன். என்னுடைய கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லாத்தையும் ஆக்கபூர்வமான வழியில திருப்பினேன். ஆனாலும் அவரின் இழப்பும் அது ஏற்படுத்தின வெறுமையும் இன்னிக்கும் அப்படியே இருக்கு. என் ரெண்டு மகன்களும் அவங் களுடைய வாழ்க்கைத்துணையை அவங்களா தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க. அவங்க கல்யாண நேரத்துல நான், என் கணவரை ரொம்ப மிஸ் பண்ணினேன். வருமான வரி ஃபைல் பண்றது லேருந்து ஒவ்வொரு விஷயத்தையும் அவர் இல்லாம நான் தனியா செய்யப் பழகின போதெல்லாம் அவரை மிஸ் பண்ணிருக்கேன்...’’ வருத்தம் பகிர்பவருக்கு இந்தச் சமூகத்தின் மீதான கோபம் அதிகம் இருக்கிறது.

‘‘கணவரை இழந்த பெண்களை திருமணம், வளைகாப்பு மாதிரியான நிகழ்ச்சிகள்ல நம்மூர்ல நடத்தற விதம் ரொம்ப கஷ்டமா இருக்கு. என் கணவர் இறந்ததுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர் வாழ்க்கை முடிஞ்சுபோச்சு... அதுக்கு என்னைத் தண்டிக்கிறது எந்த வகையில நியாயம்? `இப்ப நிறைய மாறியிருக்கே'ன்னு சிலர் கேட்கலாம். ஆனா, முழுக்க மாறலையே... பலமுறை பல இடங்கள்ல காயப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு. ஆண்கள் ரொம்ப சுலபமா மறுமணம் பண்ணிக்கிறாங்க. ஆனா, பெண் மறுமணம் பண்ணிக்கிறதை நம்ம சமூகம் அவ்வளவு ஈஸியா ஏத்துக்கிறதில்லை.

தனியொருத்தி 12 - “என் கணவர் இறந்ததுக்கு என்னை தண்டிக்கிறது எந்த வகையில நியாயம்?”  - பிரபா ஸ்ரீதேவன்

துணையை இழந்தவங்களோ, விவாக ரத்தானவங்களோ... ஓர் ஆணுக்கு என்ன தேவைகள் இருக்குமோ, அத்தனையும் பெண்ணுக்கும் இருக்கும். அதனால மறுமணம் செய்துக்கணும்னு பெண்கள் நினைச்சா தாராளமா பண்ணிக்கணும். ஏன்னா முதுமை யில தனிமைங்கிறது ரொம்ப கஷ்டம். வயசாக, ஆக என் கணவர் மேல கோபம் வருது... என்னை விட்டுட்டுப் போயிட்டாரேங்கிற கோபம் அது... என் கணவர் உயிரோட இருந்த போது, அவர்கிட்ட நீதிபதியாக விருப்ப மிருக்கான்னு கேட்டாங்க. இல்லைனு சொல் லிட்டார். அப்ப அவர் என்கிட்ட, ‘நீ ஜட்ஜா யிடு... ஜட்ஜ் ஆனா சம்பாத்தியம் குறைஞ்சிடும். பரவாயில்லை’னு சொன்னார். நான் ஜட்ஜ் ஆனது, உலக நாடுகள் பலதுலயும் நடக்கும் மாநாடுகள்ல பேசறதெல்லாம் அவரை ரொம்ப சந்தோஷப்படுத்தியிருக்கும்...’’ யதார்த்தமாகப் பேசுபவர், முதுமையிலிருந்தும் தனிமை யிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள 74 வயதிலும் பிசியாக இயங்குகிறார்.

‘‘இல்லத்தரசியா இருந்தபோதே நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கேன். இப்போ உவேசா, ஆர். சூடாமணி, தோப்பில் முகமது மீரான், இமையம்... இப்படிப் பல எழுத்தாளர் களோட படைப்புகளை மொழிபெயர்க்கும் வேலையில தீவிரமா இருக்கேன். என் ஓய்வுக்குப் பிறகு 2011 முதல் 2013 வரைக்கும் அறிவுசார் சொத்துரிமைக்கான தீர்ப்பாயத்துல (Intellectual Property Appellate Board) சேர்மனா இருந்தேன். கோவிட் காலத்துல நம்மூர்ல தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பத்தி நிறைய கேள்விப்பட்டிருப்போம். நம்மூர்ல தயாரிச்ச துங்கிறது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுது... ஏன்னா வெளிநாடுகள்ல தயாரிச்ச மருந்துகளுக்கு அவங்க காப்புரிமை வாங்கிட் டாங்கன்னா, அவங்க சொல்ற விலையைத் தான் நாம கொடுக்க வேண்டியிருக்கும். நாம வாழறதுக்கு மருந்து தேவை. அது நம்மால வாங்க முடியற மாதிரி இருக்கணும். அதனால காப்புரிமை வெச்சிருக்கிறவனோட உரிமை பெருசா, நம்மளோட வாழும் உரிமை பெரு சாங்கிற கேள்வி வரும். இந்த மாதிரியான பல வழக்குகளைக் கேட்டு, தீர்ப்பு சொல்ற வாய்ப்பு அந்தப் பொறுப்புல இருக்கும்போது கிடைச்சது. ரொம்ப நிறைவைக் கொடுத்த பணி அது. மொழிபெயர்ப்புப் பணி மூலமா பலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிஞ்சுக்கிறேன். ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு மனநிறைவைக் கொடுக்கிற ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக் கேன். அந்த வகையில நான் ரொம்ப அதிர்ஷ்ட சாலி...’’ தனிமையை விரட்ட வழிகாட்டுபவர், தனியே வாழும் பெண்களுக்குச் சொல்லவும் மெசேஜ் வைத்திருக்கிறார்.

‘‘அந்த நாலு பேர் என்ன சொல்வாங்களோன்ற எண்ணத்தை எல்லா பெண்களும் கைவிடணும். நான். என் கணவரைப் பிரிஞ்சு தனிமையில அழுதபோது அந்த நாலு பேர் எனக்காக வரலையே... உங்களை நீங்களே மதிக்கக் கத்துக்கோங்க. அப்பதான் மத்தவங்க உங்களை மதிப்பாங்க. நான் மதிக்கத்தக்கவள், எனக்கு சுயமரியாதை இருக்கு, நான் உயர்வானவள், எந்த வேலையைச் செய்தாலும் சிறப்பா செய்வேன்’ங்கிற எண்ணம் உங்க நடை, உடை, பாவனைகள்ல பிரதி பலிக்கணும். எந்த முடிவையும் நேர்மையா எடுங்க, அது போதும்..!’’

- வெற்றிக்கதைகள் தொடரும்...