Published:Updated:

தனியொருத்தி - 13 - “நீங்க பயப்படற அளவுக்கு இந்தச் சமூகம் அவ்வளவு மோசமானது இல்லை!”

அர்ச்சனா அச்சுதன்
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா அச்சுதன்

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - அர்ச்சனா அச்சுதன்

தனியொருத்தி - 13 - “நீங்க பயப்படற அளவுக்கு இந்தச் சமூகம் அவ்வளவு மோசமானது இல்லை!”

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - அர்ச்சனா அச்சுதன்

Published:Updated:
அர்ச்சனா அச்சுதன்
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா அச்சுதன்

இறப்பதை நினைத்து பயப்படாதீர்கள்... வாழாமலேயே இறப்பதை நினைத்து பயப்படுங்கள்!

``கல்யாண வாழ்க்கை குறித்து எல்லாப் பெண்களுக்கும் ஆயிரமாயிரம் கனவுகள், கற்பனைகள் இருக்கும். ஆனா, எனக்கோ ரொம்ப யதார்த்தமான, எளிமையான எதிர்பார்ப்புகள்தான் இருந்தது. கணவர் என்கிட்ட அன்பா இருக்கணும், என்னை முழுமையா புரிஞ்சுக்கிறவரா இருக்கணும், குடும்ப வாழ்க்கை அமைதியா நகரணும்ங் கிறதுதான் என் அதிகபட்ச எதிர்பார்ப்புகள். அடிப்படையான அந்த விஷயங்களே ஆட்டம்கண்ட பிறகு அந்த உறவைத் தொடர் வதுல என்ன அர்த்தம் இருக்கும்...’’ மென் சோகம் இழையோடுகிறது அர்ச்சனா அச்சு தனின் முகத்திலும் பேச்சிலும். உளவியல் ஆலோசகரான இவர், சென்னையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கிலப் பாட ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். மாற்றுத் திறனாளியாக சமுதாயத்தை எதிர்கொள்வதே சவால் என்ற நிலையில், அர்ச்சனாவுக்கோ தனி மனுஷி என்ற கூடுதல் சவாலும் சேர்ந் திருக்கிறது.

ஒரு வருடம்கூட நீடிக்காத மண வாழ்க்கை, குடும்பத்துக்குள்ளேயே நடந்த உருவகேலி என அர்ச்சனாவின் போராட்டங்கள், மெகா சீரியல் சோகங்களையெல்லாம் தாண்டியவை.

``2015-ம் வருஷம் எனக்கு கல்யாணம் நடந்தது. பெரியவங்க பார்த்துப் பண்ணி வெச்ச கல்யாணம்தான். கூட்டுக்குடும்பத்துச் சூழல்ல வளர்ந்த எனக்கு, புகுந்தவீட்டுச் சூழலும் அதே மாதிரி கூட்டுக்குடும்பமா அமைஞ்சது சந்தோஷமாதான் இருந்தது. என்னால எல்லாரையும் அனுசரிச்சு வாழ்ந் துட முடியும்னு நம்பினேன். ஆனா, அவங் களுடைய ஆச்சாரமான குடும்பச் சூழல் எனக்கு ரொம்பவே புதுசா இருந்தது. ரெண்டு பேரோட அலைவரிசைகளும் வேற வேறயா இருந்தது. மெள்ள மெள்ள பிரச்னைகள் ஆரம்பிச்சது. குடும்பத்துல உள்ள மத்த யாரும் என்னைப் புரிஞ்சுக்கலைன்னாலும் என் கணவர் மட்டும் புரிஞ்சுக்கிட்டாலே சமாளிச் சிடலாம்னு நினைச்சேன். புரியவைக்க போராடினேன். ஆனா, அது நடக்கவே இல்லை...’’ தொடக்கம் சொல்பவருக்கு, திருமணமான மூன்றே மாதங்களில் வாழ்க்கை தடம் புரண்டிருக்கிறது.

தனியொருத்தி - 13 - “நீங்க பயப்படற அளவுக்கு இந்தச் சமூகம் அவ்வளவு மோசமானது இல்லை!”

``பிறவியிலேயே எனக்கு மூளை முடக்கு வாதம் (செரிப்ரல் பால்சி) பாதிப்பு உண்டு. அதுல மைல்டு, மாடரேட், சிவியர்னு மூணு நிலைகள் இருக்கு. தீவிர நிலையில பாதிக்கப் பட்டவங்களால நடக்கவே முடியாது. மைல்டு பாதிப்புங்கிறதால எனக்குப் பெரிய பாதிப்பு இல்லை. அதனால என் நடை மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். கல்யாணம் பேசினபோது என்னுடைய பிரச்னையைச் சொல்லித்தான் பண்ணாங்க. முதல்ல ஒரு மாசம் ரெண்டு பேரும் சந்தோஷமாதான் வாழ்ந்தோம். ஹனிமூன் பீரியட் முடிஞ்சதும் என் கணவருக்கு எனக்கிருந்த மாற்றுத்திறன் பிரச்னையா தெரிய ஆரம்பிச்சது. ‘நான் தெரி யாம உன்னைக் கல்யாணம் பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்’ங்கிற வார்த்தைகளை அவர் அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சார். எங்க கல்யாணம் முடிஞ்சதும், என் மாமனாருக்கு சதாபிஷேகம் நடந்தது. அன்னிக்கு சாயந்திரம் பூஜை ரூம்ல விளக்கேத்தப் போனேன். எதிர் பாராத விதமா விளக்குத்தீ என் துப்பட்டாவுல பட்டதுல தீப்பிடிச்சு, என் வலது பக்க உடம்பு எரிஞ்சிடுச்சு. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில ட்ரீட்மென்ட் எடுத்துட்டுதான் வீட்டுக்கு வந்தேன். எனக்கிருந்த மூளை முடக்குவாத பிரச்னையைச் சொல்லி கணவர் உட்பட புகுந்த வீட்டார் என்னை உருவகேலி பண் ணாங்க. அன்னிக்கு நடந்த தீ விபத்துக்கும் எனக்கிருந்த மூளை முடக்குவாதப் பிரச்னை தான் காரணம்னு சொன்னாங்க.

ஆனாலும் நான் அதையெல்லாம் பொருட் படுத்தாமதான் இருந்தேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டில்லையா... ஒரு கட்டத்துக்கு மேல என்னால அதை சகிச்சுக்க முடியலை. அப்போ நான் கர்ப்பமா இருந்தேன். அந்தச் சூழல்ல அந்த வீட்டுல இருக்கறது சரியா இருக்காதுனு தோணவே பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன். குழந்தையும் பிறந்தது. ஒரே ஒரு முறை குழந்தையைப் பார்க்க வந்தவர்தான், அப்புறம் வரவே இல்லை. எங்க வீட்டுலேருந்து போய்ப் பேசினாங்க. ஆனா, அவர் என்கூட சேர்ந்து வாழத் தயாரா இல்லை. பிரிஞ்சு வந்த பிறகும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் அவர்கூட பேசவும், பிரச்னை களை சரிசெய்யவும் எத்தனையோ முயற்சி களை எடுத்தேன். முடியலை. அதுக்கு மேலயும் நான் அதுக்காகப் போராடிட்டிருந்தா என் குழந்தையோட வாழ்க்கையும் பாதிக்கப் படும்னுதான் நிரந்தரமா விலகினேன். உள வியல் படிச்சதாலோ என்னவோ... எல்லாத்துல யிருந்தும் சீக்கிரம் வெளியே வர முடிஞ்சது...’’ துணிந்து முடிவெடுத்தவர், கடந்த எட்டு வருடங்களாக கணவரைப் பிரிந்து தன் குழந்தையுடனும் பெற்றோருடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

``கணவரோட சேர்ந்து வாழறது சாத்திய மில்லைங்கிற நிலைமையில, பிரிவுதான் ஒரே வழினு முடிவெடுத்தபோது ‘சிங்கிள் வுமன்’ என்ற நிலையை எப்படி எதிர்கொள்ளப் போறேன்னு நினைச்சு ரொம்ப பயந்திருக்கேன். ஆனா, சமுதாயம் என்னை அப்படியெல்லாம் பார்க்கலை. கல்யாணம் பண்ணிட்டு கணவ ரோட வாழறது மாதிரி தனியா இருக்கிறதும் ஒருவித வாழ்க்கைமுறைதானேங்கிற மாதிரி தான் பார்த்தது. சிங்கிள்னு சொல்லிக்க நானும் தயங்கறதில்லை. பிரிவுக்குப் பிறகு கவுன்சிலரா வேலை பார்த்த தனியார் பள்ளி யிலும் சரி, அடுத்தடுத்து நான் வேலை பார்த்த இடங்கள்லயும் சரி, சிங்கிள் பேரன்ட்டுங்கிற பரிதாபப் பார்வையோ, வெறுப்போ என்மேல விழாதது என் அதிர்ஷ் டம். என் குழந்தைக்கு அவ பிறந்ததுலேருந்து அப்பாங்கிற கேரக்டர் பத்தி தெரியாது. அவகிட்ட நான் எதையும் மறைக்கலை. நடந்ததைச் சொல்லிதான் வளர்த்திருக்கேன். அவளுக்கு எல்லாம் புரிஞ் சதாலயோ என்னவோ, இதுவரை அப்பா பத்தி என்கிட்ட எதுவும் கேட்டதில்லை...’’ பாசிட்டிவ் மனிதர்கள் சூழ வாழும் அர்ச்சனா வுக்கு, தனிமை வாழ்க்கையில் துயரங்கள் இல்லாதது ஆச்சர்யம், ஆறுதல்.

``பிரிவுங்கிறது எந்தப் பெண்ணுக்கும் ஈஸியா எடுக்கக்கூடிய முடிவா இருக்கிற தில்லை. அப்படியே அவ துணிஞ்சு அந்த முடிவுக்குத் தயாராகும்போது, சொந்தக் காரங்க, சுத்தியிருக்கிறவங்கனு எல்லாரும் ‘குடும்பம்னா அப்படித்தான் இருக்கும், நீதான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... நாங்க பார்க்காத பிரச்னையா?’னெல்லாம் மூளைச் சலவை செய்வாங்க. எனக்கும் அதெல்லாம் நடந்தது. ஆனா, அப்படி அட்வைஸ் பண்ற யாருக்கும் நாம அனுபவிக்கிற வலி புரியாது. அந்த வலியை எந்த அளவுக்குப் பொறுத் துக்கலாம், அவசியம் பொறுத்துக்கணுமாங்கிற தெல்லாம் அதை அனுபவிக்கிற பெண்தான் முடிவு செய்யணும். சமூகம் என்ன சொல் லுமோ, குழந்தையோட வாழ்க்கை என்னா குமோ, நம்மால தனியா ஜெயிக்க முடியுமாங் கிற கேள்விகளை எல்லாம் ஓரமா வெச்சிட்டு, உங்க சுயமரியாதை என்னாகும்னு யோசியுங்க.கணவர்தான்... ஆனாலும் அவர் உங்களை இழிவா பேசவோ, உருவகேலி செய்யவோ, உடல்ரீதியாகவோ உளவியல்ரீதியாகவோ துன்புறுத்தவோ அனுமதிக்காதீங்க. நீங்க பயப்படற அளவுக்கு இந்தச் சமூகம் அவ்வளவு மோசமானது இல்லை. தனியா வாழ்ந்துட முடியும்ங்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா, நச்சான உறவுலேருந்து நிச்சயம் உங்களால வெளியே வந்து சாதிக்க முடியும்...'' நம்பிக் கையை விதைக்கிறது அர்ச்சனாவின் பேச்சு.

- நம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டவர் களுக்கு வாழ்க்கை எதையும் சாதித்துக் கொடுக்கும்.

- வெற்றிக்கதைகள் தொடரும்...