Published:Updated:

தனியொருத்தி - 14 - “குடும்ப வாழ்க்கையைவிட சந்தோஷமான விஷயம் வேற இல்லை!”

டாக்டர் நிகிலா
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நிகிலா

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - டாக்டர் நிகிலா

தனியொருத்தி - 14 - “குடும்ப வாழ்க்கையைவிட சந்தோஷமான விஷயம் வேற இல்லை!”

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - டாக்டர் நிகிலா

Published:Updated:
டாக்டர் நிகிலா
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் நிகிலா

கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்...

கற்றுக்கொடுப்பதை வாழ்க்கை ஒருபோதும் நிறுத்துவதில்லையே!

``சின்ன வயசுல வீட்டுல ‘உன் லட்சியம் என்ன’ன்னு கேட்பாங்க. மத்த குழந்தைங்க எல்லாம் பெரிய பெரிய லட்சியங்களைச் சொல்வாங்க. நான் மட்டும் ‘ஹவுஸ்வொயிஃப் ஆகணும்’னு சொல்வேன். பெரிய தோட்டத் தோட சின்னதா ஒரு வீடு, அதுல நிறைய நிறைய சந்தோஷம், அன்பான கணவர், குழந்தைன்னு அது மட்டும்தான் என் கனவா இருந்தது. நாம நம்ம வாழ்க்கை பத்தி பல கனவுகளை வெச்சிருக்கலாம். ஆனா வாழ்க்கை நமக்காக வேற திட்டங்களை வெச் சிருக்கும்னு நாம உணர்றதில்லை...’’ அமைதி யாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார் டாக்டர் நிகிலா. பிரபல வென்ட்ரிலோக்யுஸ்ட் வெங்கி மங்கியின் மனைவி. ஜூனியர் வென்ட்ரி லோக்யுஸ்ட் நிரஞ்சனாவின் அம்மா.

உறவுகள் உங்கள்மேல் வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தாலும் நீங்கள் அன்பை மட்டுமே திருப்பிக் கொடுங்கள் என்பதே நிகிலாவின் கொள்கை. திருமண உறவின் கசப்பிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் அவரை மீட்டதும் அந்த அன்புதான்.

``எனக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக்கொடுத்துடணும், அது அரேன்ஜ்டு மேரேஜா இருக்கணும்ங்கிறதுதான் எங்கம்மா வோட ஒரே நோக்கம். ஸ்பா சென்டர் நடத் திட்டிருந்த எனக்கு அப்போ பிசினஸ் பர பரப்பா போயிட்டிருந்தது. அதனால கொஞ்ச நாள் கழிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அம்மா கேட்கறதா இல்லை. அவங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். வெங்கியோடு என் கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா ஆரம்பிச்சது. ஆனா, அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கலை...’’ நீண்ட பெரு மூச்சுடன் நிறுத்துகிறார் நிகிலா. அவரது மௌனம், அடுத்து அவர் பகிரப்போகும் பயங்கரம் உணர்த்துகிறது.

டாக்டர் நிகிலா
டாக்டர் நிகிலா

``வெங்கியோட பெரியம்மா, பெரியப்பா வுக்கு குழந்தை இல்லைனு இவரை தத்தெடுத்து வளர்த்தாங்க. அந்த முடிவை எடுத்தபோதே அவங்களுக்கு வயசாயிருந்தது. வெங்கிக்கு படிப்பு உள்பட எல்லாத்தையும் ‘தி பெஸ்ட்’டா கொடுத்தவங்க, குழந்தைப் பருவத்தை அனுபவிக்க விடாம வளர்த்துட்டாங்க. ரிடையர் ஆன காலத்துல அவரோட பெரியப்பா, தான் போகுற ஆசிரமங்களுக்கும், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி களுக்கும் குழந்தையா இருந்த வெங்கியையும் கூட்டிட்டுப் போயிடுவார். சாமியார்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால, வெங்கிக்கும் சாமியார்கள்மேல ஈர்ப்பு வந்திருச்சு. ஒரு கட்டத்துல வெங்கியும் தன்னையே ஒரு மகானா கற்பனை பண்ணப் பழகி யிருந்தார். நம்ம சமூகத்துலதான் எந்தப் பிரச்னையா இருந் தாலும், ‘கல்யாணமானா சரியாயிடும்’னு சொல் வாங்களே... அப்படிச் சொல்லித்தான் அவரை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க...’’ கனவு களுடன் புகுந்தவீடு வந்தவருக்கு காத்திருந்ததோ சஸ்பென்ஸும் சவால்களும் நிறைந்த வாழ்க்கை...

``2001-ம் வருஷம்... சமீபத்துல பரபரப்பா செய்திகள்ல அடி பட்ட சர்ச்சைக்குரிய ஒரு சாமியாரோட ஆசிரமத்துக்குப் போக ஆரம்பிச்சார் வெங்கி. குடும்பத்தோட அங்கே போய் செட்டிலாயிடலாம்னு என்னையும் கூப்பிட்டார். கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா அப்படியோர் இடத்துல என்னால குடும்பம் நடத்த முடியாதுன்னு நான் மறுத்துட்டேன். அங்கேதான் பிரச்னைகள் ஆரம்பமாச்சு.

2005-ல இன்னொரு சாமியார் பின்னாடி போக ஆரம்பிச்சார். இந்தமுறை இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலேயே மறைச்சார். திடீர்னு ஒருநாள் வெங்கியைக் காணோம். போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அடுத்தநாள் காலையில அது எல்லா நியூஸ்பேப்பர்லயும் வந்திருச்சு. விசாரிக்கிறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மாளலை. காய்கறி வாங்கக்கூட நிம்மதியா வெளியே வர முடியாத நிலையில என்னை நானே வீட்டுக்குள்ள சிறைவெச்சுக்கிட்டேன்.

என் ஸ்பா சென்டர், பியூட்டி பார்லர் பிசினஸும் அடிவாங்குச்சு. வாடகை கட்டவும் சாப்பிடவும் குழந்தைக்கு ஃபீஸ் கட்டவும் வருமானம் வேணுமே... ஸ்பா சென்டரை மூடிட்டு, லேடீஸ் ஹாஸ்டல் ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல சமைக்கவும் பாத்திரங்கள் கழுவவும் பாத்ரூம் கழுவவும் கூட ஆளில்லாம எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்தது. இப்படி போராட்டங்களோட வாழ்க்கை நகர்ந்திட்டிருந்தது.

காணாமப் போன வெங்கி திடீர்னு ஒருநாள் திரும்பி வந்தார். பெரிய தாடியும் ருத்ராட்ச மாலையுமா ஆளே மாறியிருந்தார். அவர் அப்போ சார்ந்திருந்த சாமியார் ஆசிரமத்துல ‘குடும்பத்தோட வரணும் அல்லது குடும்பத்தை அறுத்து விட்டுட்டு வரணும்’னு சொல்லியிருந்தாங்களாம்.

‘நாம கலிஃபோர்னியா போயிடலாம். அங்கேயே குழந்தையைப் படிக்க வெச்சுக்க லாம்’னு மறுபடி என்னை வற்புறுத்தினார்.அஞ்சு வயசுக் குழந்தை சந்நியாசம் வாங்க ணும்னு என்ன தேவை இருக்கு..? அவ வளர்ந்த பிறகு எந்த மதத்தைப் பின்பற்றணும், எப்படி வாழணும்ங்கிறதெல்லாம் அவளோட முடிவு, உரிமைன்னு சொல்லி அவர்கிட்ட சண்டை போட்டேன். உடல் ரீதியா, வார்த்தைரீதியா பயங்கரமான வன் முறைகளை அனுபவிச்சேன். தன்கூட வர விருப்பமில்லைனா, விவாகரத்து பண்ணிட லாம்னு சொன்னார். இப்படி தினம் தினம் செத்து வாழறதுக்கு, கஷ்டப்பட்டாவது தனி மனுஷியா என் குழந்தையை வளர்த்துட முடியும்னு தோணுச்சு. 2007-ல விவாகரத்து பண்ணினோம். ஹாஸ்டலை மூடிட்டு நானும் என் மகளும் பாண்டிச்சேரியில குடியேறி னோம்...’’ கற்பனைக்கெட்டாத கஷ்டங் களைக் கடந்த நிகிலாவுக்கு அடுத்துவந்த சில நாள்கள் அமைதியானவை, அழகானவை.

``பாண்டிச்சேரியில புதுசா வாழ்க்கையைத் தொடங்கினோம். கல்யாணமான புதுசுல வெங்கிதான் என்னை ரெய்கி படிக்கவெச்சு கிராண்ட்மாஸ்டர் ஆக்கினார். விவாக ரத்துக்குப் பிறகு ரெய்கிதான் என் அடையாளமா மாறுச்சு. நிரஞ்சனாவையும் வென்ட்ரிலோக்விஸம்ல எக்ஸ்பெர்ட் ஆக்கறதுக்கான முயற்சிகளை எடுத்தேன். ‘எப்போதும் சிரிச்சுக்கிட்டே போவாங்களே அம்மாவும் குழந்தையும்’னு எங்களை அடை யாளப்படுத்தற அளவுக்கு சந்தோஷமா வாழ்ந் தோம்னு சொல்லலாம்.

சில வருஷங்கள் அப்படியே போச்சு... அப்பதான் நிரஞ்சனாவோட ஸ்கூல்ல அவ திறமையைப் பார்த்துட்டு, பாண்டிச் சேரியைவிட, சென்னைதான் அவளுடைய எதிர்கால வளர்ச்சிக்கான இடமா இருக்கும்னு சொன்னதால 2012-ம் வருஷம் மறுபடி சென்னைக்கே வந்தோம்.

அவ ஸ்கூல்ல சொன்ன மாதிரியே நிரஞ்சனா மீடியாவுல பிரபலமாக ஆரம்பிச்சா. விஜய் டி.வி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி யில டைட்டில் வின்னரா வந்தாள்...’’ திரைப்படமாக இருந்தால் இந்த இடத்தில் மகிழ்ச்சியான எண்டு கார்டு போட்டு இந்தக் கதையை முடித்திருக்கலாம். நிஜ வாழ்க்கை அப்படி இருப்பதில்லையே...

 கணவர் வெங்கி
கணவர் வெங்கி

``நாங்க பிரிஞ்ச பிறகும் வெங்கி அடிக்கடி எனக்கு போன் பண்ணுவார். அவருக்கு ஏதாவது பிரச்னைன்னா என்னால முடிஞ்ச உதவிகளை அவருக்குப் பண்ணியிருக்கேன். 2021-ம் வருஷம் ஒருநாள் அவர்கிட்டருந்து போன் வந்தது. ‘எனக்கு பயமா இருக்கும்மா... என்கிட்ட கொஞ்ச நேரம் பேசறியா’ன்னு கேட்டபோது அது வழக்கமான குரலா எனக்குத் தெரியலை. நானும் என் மகளும் உடனே அவரை சந்திச்சோம்.

உலகத்தையே சிரிக்கவெச்ச அந்த மனுஷன் கண்கள்ல முதல் முறையா குற்ற உணர்ச்சியையும் வலியையும் பார்த்தேன். ‘தப்பு பண்ணிட் டேம்மா... கடவுள் என்னைக் கூப்பிடறாரு’ங் கிறதையே திரும்பத்திரும்ப சொல்லிட்டிருந் தார். அஞ்சு மணி நேரம் அவர்கூட பேசி, சிரிக்கவெச்சுட்டு ‘எல்லாம் சரியாயிடும்’னு தைரியம் சொல்லிட்டுக் கிளம்பினோம். அடுத்த நாள் காலையில மறுபடி போன் பண்ணி, மயக்கமா இருக்குறதா சொன்னார். `உடனே டாக்டர்கிட்ட போங்க, நாங்க வரோம்’னு சொல்லி போனைவெச்சேன். அடுத்த அஞ்சாவது நிமிஷம் மறுபடி போன்... அவர் உயிர் போயிடுச்சுனு சொன்னாங்க. அவருக்கு எந்த நோயும் இல்லை.

முதல்நாள் சந்திப்புலகூட எதையும் யூகிக்க முடியலை. கடவுள் அவருக்கு நல்ல குடும்பத் தைக் கொடுத்தார். அவர் அதைத் தொலைச் சிட்டு, பிறகு உணர்ந்தபோது ‘உன் டைம் ஓவர்’னு சொல்லிட்டார். இதுதான் வாழ்க்கை...’’ வாழ்ந்தபோதும் இழந்தபோதும் கணவரை வெறுக்காத நிகிலா, விவாகரத்து முடிவிலிருப்போருக்கு வேண்டு கோளாக சில விஷயங்களை முன்வைக்கிறார்.

தனியொருத்தி - 14 - “குடும்ப வாழ்க்கையைவிட சந்தோஷமான விஷயம் வேற இல்லை!”

``கல்யாணம் பண்ணும்போதே விவாகரத்தை பத்தி நினைக்காதீங்க. பிரச்னைகள் வரும்போது அது கடைசி முடிவா மட்டும்தான் இருக்கணும். கணவன் மனைவிக்குள்ள பிரச்னை வந்ததும் உடனே பிரிவை பத்தி யோசிக்காதீங்க. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. கதவை சாத்திட்டு சண்டை போடுங்க. வெளியில வரும்போது சுமுகமான முடிவோட வாங்க. ஈகோவை தூக்கிப் போடுங்க. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கோங்க. எதுல வேணா எக்ஸ்பெரி மென்ட் பண்ணுங்க... குடும்ப வாழ்க்கையில மட்டும் வேண்டாம். குடும்ப வாழ்க்கையைவிட சந்தோஷமான விஷயம் வேற இல்லை...’’ நிதர்சனம் உணர்த்தும் நிகிலாவின் பேச்சில் இழப்பின் வலி.

- வெற்றிக்கதைகள் தொடரும்...