Published:Updated:

தனியொருத்தி! - 2 - டாக்டர் கிருத்திகா - சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

 மகன், மகளுடன் கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
மகன், மகளுடன் கிருத்திகா

‘`கணவனோடு இருக்குற பெண் டாக்டராலதான் நல்ல ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்னு நம்பறாங்க!’’

தனியொருத்தி! - 2 - டாக்டர் கிருத்திகா - சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

‘`கணவனோடு இருக்குற பெண் டாக்டராலதான் நல்ல ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்னு நம்பறாங்க!’’

Published:Updated:
 மகன், மகளுடன் கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
மகன், மகளுடன் கிருத்திகா

விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கை சவால்கள் நிறைந்ததுதான்... ஆனால் சாத்தியமாகாதது அல்ல.

‘‘வாழ்க்கையில ஒரு துணை வேணும்... அவர் நம்ம சுக, துக்கங்களைப் பகிர்ந்துக் கணும்... சந்தோஷமா இருக்கணும்னுதானே எல்லோரும் கல்யாணம் பண்றோம்... ஆனா இப்படி எதுவுமே நடக்காதபோது அர்த்தமற்ற அந்தக் கல்யாண வாழ்க்கை எதுக்கு? - சந்தோஷத்துக்கான தொடக்க மாகவோ, தொடர்ச்சியாகவோ அமைய வேண்டிய திருமண உறவு, வெறும் சம்பிரதாயமாக மாறிப்போன வருத்தத்துடன் பேச ஆரம்பிக்கிறார் டாக்டர் கிருத்திகா.

சென்னை அரசு பொது மருத்துவமனை யில் உயிர்வேதியியல் துறை மருத்துவர். 24 வயதில் நடந்த கல்யாணம் நான்கரை வருடங்களில் முறிந்தபோது கிருத்திகாவுக்கு இரண்டரை வயதில் மகனும், கர்ப்பத்தில் மகளும்... பிறக்கும் குழந்தைகள் பிரிந்த உறவுகளைச் சேர்த்துவைப்பார்கள் என்று சொல்வதுண்டு. கிருத்திகா விஷயத்தில் அது பொய்த்துப்போனது. கர்ப்பமான நிலையிலேயே கணவரைப் பிரிந்திருக் கிறார்.

தனியொருத்தி! - 2 - டாக்டர் கிருத்திகா - சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

‘‘வாழ்க்கையில என் படிப்பு உட்பட எல்லா விஷயங்களிலும் நானே முடிவெடுத்திருக்கேன். ஆனா கல்யாணத் துக்குப் பிறகு சின்ன விஷயத்துலகூட முடிவெடுக்க முடியாதவளா, சுய மரியாதையை இழந்தவளா மாறியிருந்தேன். அந்தச் சூழல்லயே நான் வாழத் துணிஞ்சா, என் மகன் நாளைக்கு எப்படிப்பட்ட கணவனா இருப்பான்... எனக்கு மகள் பிறந்தா அவ எப்படி சுயமரியாதையோடு வளர்வாள்னு யோசிச்சேன்... கிட்டத்தட்ட ஒரு வருஷம் யோசிச்சு, பிரிவுதான் நிம்மதிக்கான ஒரே தீர்வுன்னு முடிவெடுத் தேன். ‘நீ எடுக்குற முடிவு சரிதானா... ஒருவேளை பெண் குழந்தை பிறந்தா நாளைக்கு அவளை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கொடுப்பே...’ன்னெல்லாம் என்னென்னவோ கேட்டாங்க. பிரிஞ்சு வந்து சில மாசங்கள் இருக்கும். ஒருநாள் டி.வி விளம்பரத்துல ஜோடியா வந்தவங்களைப் பார்த்து, ‘அவங்க ரெண்டு பேரும் அம்மா, அப்பாவா’ன்னு கேட்டான் என் மகன். ‘ஆமாம்’னு சொன்னேன். ‘அவங்களுக்குள்ள நிறைய லவ் இருக்குல்ல’ன்னு கேட்டான். ‘ஆமாம்’ சொன்னேன். ‘உனக்கும் அப்பாவுக் கும் அப்படி இல்லல்ல... அப்போ நாம தனியாவே இருந்துடலாம்’னு சொன்னான். ‘இப்பல்லாம் நீ முன்ன மாதிரி இல்லம்மா... சந்தோஷமா இருக்கே... இப்படியே இரும்மா’ன்னு சொன்னான்.

கணவனும் மனைவி யும் சேர்ந்து குடும்பம் என்ற அமைப்புல இருந்தாதான் குழந்தைங்க சந்தோஷமா இருப் பாங்கன்னு நாமெல்லாம் நினைச்சிட்டிருக்கோம்.ஆனா, அந்தக் குடும் பத்தோட சூழல்தான் பிள்ளைங்களோட சந்தோஷத்தைத் தீர் மானிக்குதுனு நமக்குப் புரியறதில்லை. அதை என் மகன் புரிய வெச்சான்’’ - யதார்த்தம் உணர்த்துபவருக்கு பிரிவுக்குப் பிறகான வாழ்க்கையில் அடுத் தடுத்து காத்திருந்தன சங்கடங்களும் சோதனை களும்...

‘‘என் பொண்ணு பிறந்தபோது அவளுக்கு அப்பான்னு ஒருத்தர் இருக்கிறதே தெரியாது. ஸ்கூல்ல யாராவது உங்கப்பா யார்னு கேட்டா, ‘எங்கம்மாதான் எனக்கு அப்பா’ன்னு சொல்ற அளவுக்கு என் மகனுக்குப் பக்குவம் இருக்கு. ஸ்கூல் மாத்த முயற்சி செய்தபோது ஒரு ஸ்கூல்ல நான் சிங்கிள் மதர்னு தெரிஞ்சு, ‘உங்களை மாதிரி ஆளுங்களோட குழந்தைங்களை நாங்க ஸ்கூல்ல சேர்த்துக்க மாட்டோம்’னு சொன்னாங்க. எத்தனையோ குழந்தைங்க சிங்கிள் பேரன்ட்கிட்ட வளர்றாங்க. ரெண்டு பேருமே இல்லாம, தாத்தா, பாட்டிகிட்ட வளர்றவங்களும் இருக்காங்க. அதனால பள்ளிக்கூடங்கள்ல பெற்றோர் பெயர்களைக் கேட்காம, கார்டி யன்னு பொதுவா மாத்தினா நல்லாருக்கும்’’ - தன் இன பெற்றோர் சார்பாக கோரிக்கை வைக்கிறார் கிருத்திகா.

பிரச்னைகள் எல்லோருக்கும் பொது வானவை. அவை ஆள், அந்தஸ்து பார்த்தெல் லாம் வருவதில்லை. ஆனாலும் சமுதாயத்தில் அப்படியொரு பார்வை இருப்பதை அனுபவத்திலிருந்து சொல்கிறார் கிருத்திகா.

‘‘டாக்டர்ஸுக்கெல்லாம்கூடவா குடும்பத் துல பிரச்னை வரும்’னு கேட்கும்போது சிரிக்கிறதா, அழறதான்னு தெரியாது. நாங்களும் மனுஷங்க தானே...இன்னும் சொல்லப்போனா சாமானியப் பெண்களை விடவும் எங்களுக் கெல்லாம் சவால்கள் அதிகம்... ஆணாதிக்கம் நிறைஞ்ச துறை மருத்துவம். ஒரு பெண், அவ டாக்டரா இருந் தாலும் கணவரைப் பிரிஞ்சு தனியா இருக்கான்னு தெரிஞ்சா, சக மருத்துவர்களோட பார்வை மாறிடுது. ‘நான் இன்னிக்கு அந்த டியூட்டி ரூம்லதான் இருக் கேன்...’னு ஆரம்பிப் பாங்க. சிலர் போன்ல ஃபாலோ பண்ணுவாங்க.

இது ஒரு பக்கம்னா பேஷன்ட்ஸ் எங்களைப் பார்க்கற பார்வையும் வேற மாதிரி இருக்கு. கணவனோடு இருக்குற பெண் டாக்டராலதான் நல்ல ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்னு நம்பறாங்க. ‘நீங்க ஏன் தாலி கட்டலை, ஏன் மெட்டி போடலை’ன்னு கேட்பாங்க. சிங்கிள்னு தெரிஞ்சதும் இந்த டாக்டரே வேண்டாம், வேற டாக்டரை பார்க்கலாம்னு போறவங்க இருக்காங்க. ஆரம்பத்துல இது ரொம்ப வலிச்சிருக்கு. கோபப்பட்டிருக்கேன்.

இப்பல்லாம் ‘ஆமாம்... நான் சிங்கிள் பேரன்ட்தான். உங்களுக்கு என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கப் பிடிக்கலைனா வேற டாக்டரை பாருங்க’ன்னு அனுப்பி வெச்சிடறேன். சக பெண் டாக்டர்ஸ்ல எத்தனையோ பேர் குடும்பத்துல பிரச்னைகளோட இருக்காங்க. ‘இத்தனை பிரச்னைகளோட ஏன் இருக்கணும், வெளிய வர வேண்டியதுதானே’ன்னு கேட்டா, ‘தனியா இருக்கேன்னு தெரிஞ்சா மெடிக்கல் பிராக்டிஸ் பாதிக்கும்’னு சொல்றவங்கதான் அதிகம். அதுதான் யதார்த்தம்.

தனியொருத்தி! - 2 - டாக்டர் கிருத்திகா - சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

கல்யாண வாழ்க்கையில பிரச்னைன்னு அதுலேருந்து வெளியே வர்ற பெண்களைப் புரிஞ்சுக்க இங்கே ஆட்கள் இல்லை. சிங்கிளா இருக்குற பெண்களை இதுதான் கேட்கணும்னு அளவில்லாம என்னென்னவோ கேள்விகளைக் கேட்கற சமூகம் இது. நான் ஒரு டாக்டர். எங்கம்மா வயசானவங்க. என் குழந்தைகளுக்கு அம்மாவா மட்டுமல்லாம அப்பாவாகவும் இருக்கவேண்டிய நிர்பந்தம் எனக்கு. பொருளாதார சுமை, குழந்தை வளர்ப்பு, அவங்க படிப்புனு எல்லாத்தையும் ஒத்தை ஆளா பார்க்க முடியாதுன்னு உதவிக்கு ஒரு பெண்ணை வேலைக்கு வெச்சா, ‘இதக்கூடவா உன்னால பண்ண முடியாது’ன்னு கேட்க றாங்க.

வேலைக்குப் போற ஒரு பெண் அவ துறையில நல்லா பண்ணிட்டாள்னா அதுக்குப் பின்னாடி கண்டிப்பா அவ கணவர் இருக்கணும்ங்கிற தப்பான கருத்தும் இங்கே இருக்கு. ஏதாவது சாதிச்சோம்னா, ‘உங்க ஹஸ்பண்ட்தான் ஹெல்ப் பண்ணாரா’ன்னு கேட்பாங்க. ‘இல்லை, நான் சிங்கிள்னு சொன்னா, ‘அது சரி... கமிட்மென்ட்ஸ் இல்லை... வீட்டைப் பார்க்க வேணாம்... அதனாலதான் முடிஞ்சிருக்கு’ன்னு பேசுவாங்க...’’ - போகிற போக்கில் அடுத்தவர் அந்தரங்கத்தை விமர்சிக்கும் அநாகரித்தையும் அது தரும் வேதனையையும் வெளிப் படுத்துகிறது கிருத்திகாவின் பேச்சு.

தனித்து வாழத் துணியும் பெண்களின் மற்றொரு சவால், ஆண் நட்பு. பழகும் ஆண்களை நல்லவரா, கெட்டவரா என பகுத்தறிவதிலேயே பாதி வாழ்க்கை கடந்து விடும். கிருத்திகாவுக்கும் அந்தச் சவால் இருக்கிறது.

‘‘தப்பா அணுகும் ஆண்களைப் பார்த்த பிறகு, நிஜமான அக்கறையோட உதவ நினைக்கிற ஆண்களையும் மனசு நம்ப மறுக்குது. முன்னல்லாம் இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணணும்னாகூட என் கணவர் உதவி தேவைப்பட்டிருக்கு. தனியா வாழ ஆரம்பிச்ச பிறகு இன்னோர் ஆண்கிட்ட உதவி கேட்க பயமா இருக்கு. அதனால என் வேலைகளை நானே செய்யக் கத்துக் கிட்டேன். நம்மால இதெல்லாம் முடியுமாங்கிற தயக்கம்தான் பெண்களோட பிரச்னையே... செய்யப்பழகிட்டோம்னா, இவ்வளவுதானானு புரிஞ்சிடும்...’’ என்பவர் இறுதியாகச் சொல்லும் மெசேஜ் ஆண் குழந்தைகளின் பெற்றோருக்கானது.

‘‘எல்லா போதனைகளையும் பெண் குழந்தைகளுக்கே சொல்லி வளர்க்கறோம். அப்படியில்லாம பெண் குழந்தைகளை எப்படி நடத்தணும்னு ஆண் குழந்தைங் களுக்கும் சொல்லி வளர்க்கணும். ‘பெண்ணை அழவைக்காதே... அவளுக்கு வேண்டாம்னு சொன்னா விட்டுடு’னு சொல்லி வளர்க்கணும். அடுத்த தலைமுறை பெண்கள் நிம்மதியா வாழ அதுதான் அடிப்படை...’’

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism