Published:Updated:

தனியொருத்தி! - 4 - ``யார்னே தெரியாத அந்த ‘நாலு பேரு’க்காக யோசிக்காதீங்க!’’ - புனிதா

மகனுடன் புனிதா...
பிரீமியம் ஸ்டோரி
மகனுடன் புனிதா...

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

தனியொருத்தி! - 4 - ``யார்னே தெரியாத அந்த ‘நாலு பேரு’க்காக யோசிக்காதீங்க!’’ - புனிதா

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
மகனுடன் புனிதா...
பிரீமியம் ஸ்டோரி
மகனுடன் புனிதா...

‘அழவைக்க ஆயிரம் காரணங்களோடு காத்திருக்கும் வாழ்க்கையிடம், சிரிப்பதற்கு லட்சம் காரணங்கள் இருப்பதைக் காட்டுங்கள்...’

``நாலு பேர் என்ன நினைப்பாங்க... இது தான் பலருக்கும் பிரச்னையே... உண்மையில அந்த நாலு பேர் யார்னே நமக்கெல்லாம் தெரியறதில்லை. அப்படியே தெரிஞ்சாலும் அந்த `நாலு பேர்' நம்மகூட வரப்போறது மில்லை... உங்க வாழ்க்கையை பத்தி அடுத்தவங்க என்ன நினைப்பாங்களோன்ற எண்ணத்தை விட்டுட்டு, நீங்க என்ன நினைக் கிறீங்களோ அதுல உறுதியா நில்லுங்க. நிச்சயம் ஜெயிச்சிடுவீங்க...’’- நான்கு பேரல்ல, நான்காயிரம் பேரின் விமர்சனங்களால் காயப்பட்டு மீண்ட அனுபவத்தில் பேசுகிறார் புனிதா. சென்னையில் தனியார் நிறுவனத்தின் சீனியர் டைரக்ட்ர் ஹெச்ஆர்... `மாற்றம்' அறக்கட்டளையின் எக்ஸிகியூட்டிவ் டிரஸ்ட்டியும்கூட. துணையைப் பிரிந்து தனியே வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணிந்த இவரது பயணம் தடைகள் நிறைந்தது.

``எம்.பி.ஏ ஹெச்.ஆர் படிச்சு முடிச்சு வேலைக்காக வந்த இடத்துலதான் அவரைச் சந்திச்சேன். ரெண்டு வருஷ ஃபிரெண்ட்ஷிப் காதலா மாறுச்சு. ‘ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டிருக்கோம்... நாம ஏன் லைஃப்ல இணையக்கூடாது’னு கேட்டு அவர்தான் புரொபோஸ் பண்ணார். அரேன்ஜ்டு மேரேஜ்ல எனக்கு உடன்பாடில் லைன்னாலும், வேற வேற மதங்களைச் சேர்ந்த நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதை வீட்டுல ஏத்துப்பாங்களான்ற தயக்கம் இருந்தது. இந்த ரிலேஷன்ஷிப் சரியா வருமா, எதிர்காலத்துல பிரச்னைகள் இல்லாம இருக்குமா, சமுதாயம் எப்படிப் பார்க்கும்னு ஏகப்பட்ட கேள்விகள்...

தனியொருத்தி! - 4 - ``யார்னே தெரியாத  அந்த ‘நாலு பேரு’க்காக யோசிக்காதீங்க!’’ - புனிதா

கணவன்-மனைவி உறவுங்கிறது ஈக்வல் பார்ட்னர்ஷிப்பா இருக்கணும்னு நினைச்சேன். எங்கம்மா, அப்பா அப்படி வாழ்ந்ததைப் பார்த்து வளர்ந்ததால ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பு அது. ரெண்டு பேரும் அவங்கவங்களுடைய கரியரையோ, விருப்பங்களையோ விட்டுக்கொடுக்காம அனுசரிச்சு வாழணும்ங்கிறதை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய பேசினோம். பேசினபடிதான் வாழ்க்கை இருக்கும்ங்கிற நம்பிக்கையோடதான் கல்யாணத்துக்கும் சம்மதிச்சேன்.

வேற வேற மதங்களைச் சேர்ந்தவங்கன்னாலும் அவங்கவங்க அடையாளத்தை விட்டுக்கொடுக்கக் கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். ரெண்டு பேர் வீட்டு லயும் பிரச்னைகள் இருந்தன. குழந்தை வளர்ப்பு உட்பட எதிர்காலத்துல எந்த விஷயத்துலயும் பிரச்னைகள் வந்துடக் கூடாதுன்னு ரொம்ப பக்குவமா பேசி வெச்சிருந்தோம். ரெண்டு பேர் வீட்டுலயும் பேசிப் புரியவெச்சோம். கிறிஸ்தவ முறைப் படியும், இந்து முறைப்படியுமா ரெண்டு தடவை எங்க கல்யாணம் நடந்தது...’’

எங்கேயும் இடறிவிடக் கூடாதெனும் எச்சரிக்கையுடன் எல்லாமும் பேசி இணைந் தவர்களை ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என திசைத் திருப்பியிருக்கிறது வாழ்க்கை.

``கல்யாணத்துக்கு முன்னாடிவரைக்கும் என்னையும் என் பர்சனாலிட்டியையும் நேசிச்ச என் கணவருக்கு கல்யாணத்துக்குப் பிறகு எதுவுமே பிடிக்காமப் போச்சு. நான் எதிர்பார்த்த ஈக்வல் பார்ட்னர்ஷிப், எதிர் பார்ப்பாகவே நின்னுடுச்சி. வாக்குவாதங்கள் அதிகமாச்சு. கல்யாணமான பத்தே மாசத்துல எனக்கு பையன் பிறந்துட்டான். என் ஒட்டு மொத்த கவனமும் குழந்தை பக்கம் திரும்புச்சு. குழந்தை பிறந்த சில நாள்கள்லயே நான் வேலைக்குப் போயிட்டேன். காலையில அம்மாகிட்ட குழந்தையைவிட்டு வேலைக்குப் போய், ராத்திரி குழந்தையைக் கூட்டிட்டு வீட்டுக்கு வருவேன். ராத்திரி குழந்தையைப் பார்த்துக்கணும். இப்படி என் வாழ்க்கை பிசியா மாறுச்சு. அதை அவரால புரிஞ்சுக்க முடியலை. தவிர ஹெச்ஆர் வேலையில இருக்கிறவங்களுக்கு ஆண், பெண்ணுன்னு நிறைய பேர்கிட்டருந்து போன் கால்ஸ் வரும். இதெல்லாம்கூட பிரச்னையா மாறி, எங்களுக் குள்ள இடைவெளி அதிகரிக்க ஆரம்பிச்சது. கஷ்டப்பட்டு அம்மா, அப்பாவை சம்மதிக்க வெச்சு பண்ணிக்கிட்ட கல்யாணம்... அவ்வளவு சீக்கிரம் விட்டுடக் கூடாது, குழந்தைக்கு அப்பா அவசியம்னு எல்லாத் தையும் பொறுத்துக்கிட்டேன். மூணு வருஷம் கழிச்சு அம்மா, அப்பாகிட்ட சொன்னேன். அதிர்ச்சியானாங்க. ஆனாலும் இந்த உறவை ஒட்டவைக்கறதுக்கான முயற்சிகளை எடுத் தாங்க. ஆனா, அவர் எதுக்கும் தயாரா இல்லை. ஒரு கட்டத்துல என்னுடைய பாதுகாப்பே கேள்விக்குறியாச்சு. எப்போதும் சண்டை, எந்நேரமும் அழுகைனு மோசமான சூழல்ல என் குழந்தை வளர்றதை நான் விரும்பலை. அப்பா இல்லாம வளர்றதை விடவும் தப்பான குடும்ப சூழல்ல வளர்றது மோசம்னு புரிஞ்ச நிமிஷம் அந்த உறவு வேணாம்னு தோணுச்சு...’’ - `முடிவெடுக்காத வரை எதுவும் நிகழப்போவதில்லை' என்ற வாசகத்துக்கேற்ப, மாற்றம் வேண்டி அந்தக் கணம் முடிவெடுத்திருக்கிறார் புனிதா.

``டைவர்ஸ் முடிவை எடுக்கிறது அவ்வளவு ஈஸியில்லை. அதை வீடும் வெளிஉலகமும் எப்படிப் பார்க்கும்ங்கிற குழப்பம் இருந்தது. ‘லவ் மேரேஜ் பண்ணதே தப்பு’ங்கிறதுல ஆரம்பிச்சு, ‘உனக்கு வாய் ஜாஸ்தி, அதனால தான் இப்படி ஆயிடுச்சுங்கிறவரை முகத்துக்கு நேராவும் முகத்துக்குப் பின்னாடியும் நிறைய பேசினாங்க. அதுக்கெல்லாம் பயந்துட்டு நான் அப்படியே முடங்கிப்போறது... அல்லது இது என் லைஃப், நான்தான் முடிவு பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்குறதுன்னு எனக்கு முன்னாடி ரெண்டு சாய்ஸ் இருந்தது. நான் குழந்தையா இருந்தபோது எனக்குக் கிடைச்ச மகிழ்ச்சியான குடும்ப சூழல் என் குழந்தைக்குக் கிடைக்கலை... அதனால அவனோட சந்தோஷத்துக்காக நான் டைவர்ஸ் முடிவெடுக்கிறது சரிதான்னு பட்டது. என் படிப்பு, என் வேலை, சமுதாயத் துல எனக்கிருந்த அடையாளம்னு எல்லாம் எனக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது.

தனியொருத்தி! - 4 - ``யார்னே தெரியாத  அந்த ‘நாலு பேரு’க்காக யோசிக்காதீங்க!’’ - புனிதா

முடிவெடுத்தபோது என் பையனுக்கு மூணு வயசு. ஆரம்பத்துல ‘அப்பா வெளியூர்ல இருக்காரு...’ன்னு சொல்லி சமாளிச்சேன். ‘வெளியூர்ல இருந்தா ஏன் போன்கூட பண்றதில்லை’ன்னு கேட்ட குழந்தைக்கு என்னால பதில் சொல்ல முடியலை. சைல்டு கவுன்சலர்கிட்ட கூட்டிட்டுப் போனேன்.

குழந்தைங்ககிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு புரியவெச்சாங்க. `நான், நீ, அப்பா எல்லாம் ஒண்ணா இருந்தோம். இனிமே நானும் நீயும் மட்டும்தான் இருக்கப்போறோம். மூணு பேரும் ஒரே வீட்ல இருந்தோம்னா நம்மால சந்தோஷமா இருக்க முடியாது’ன்னு சொன்னேன். புரிஞ்சுகிட்டான். ஆனா எனக்கு சமுதாயத்தோட கேள்விகளை எதிர் கொள்றதுதான் பெரிய சவாலா இருந்தது. அவனை எங்கே வெளியே கூட்டிட்டுப் போனாலும், ‘அப்பா எங்கே’ன்ற கேள்வி விரட்டுச்சு. அதனாலயே அவனை பொத்திப் பொத்தி யாரும் அவன்கிட்ட பேசிடாம பார்த்துக் கிட்டேன்.

ஒருநாள் அதையும் மீறி அவன்கிட்ட யாரோ அந்தக் கேள்வியைக் கேட்க, ‘எனக்கு அம்மா, அப்பா எல்லாம் இவங்கதான்’னு என்னைக் காட்டி முடிச்சிட்டான். அதுவரை எனக்கு வராத தைரியம் அன்னிக்கு வந்தது.

டைவர்ஸ் முடிவை எடுத்தபோது சட்டம் எனக்கு சாதகமா இருக்குமா, கோர்ட், கேஸ்னு அலையறதெல்லாம் கொடுமையான விஷயங்களா இருக்குமாங்கிற பயமெல்லாம் இருந்திருக்கு. உண்மையைச் சொல்லணும்னா சட்டங்கள் இன்னிக்கு பெண்களுக்கு ரொம்பவே சாதகமா இருக்கு. கோர்ட், டைவர்ஸ் விசாரணை எல்லாம் சினிமாக்கள் சித்தரிக்கிற மாதிரியெல்லாம் இருக்கிறதில்லை. ரொம்ப எளிமையா கடந்துபோகக்கூடியதா இருக்கு.

அரேன்ஜ்டு மேரேஜோ, லவ் மேரேஜோ... அது காலத்துக்கும் நிலைச்சிருக்கணும்னுதான் எல்லாருமே ஆசைப்படுவோம். வாழ்க்கையில சுயமரியாதை ரொம்ப முக்கியம். அந்த சுயமரியாதையை இழக்கவைக்கிற திருமண உறவு நல்ல உறவில்லை. அதுலேருந்து வெளியே வர நினைக்கிறதுல தப்பில்லை. நாலு பேர் என்ன சொல்வாங்களோன்னு பயந்து, பிரச்னைகளை சகிச்சுக்கிட்டு கொஞ்சமும் சந் தோஷமில்லாத திருமண உறவுல தத்தளிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அந்த நாலு பேர் யாருன்னே தெரியாது. அவங்க நமக்காக நிற்கப் போறதும் இல்லை. நீங்க எடுத்த முடிவு சரின்னு தோணினா அதுல உறுதியா நில்லுங்க. பிரிஞ்சு வந்து பத்து வருஷங்களாச்சு. என் மக னுடைய எதிர்காலத்துக்காக நான் எடுத்த முடிவு சரியானதுங்கிற நிம்மதி எனக்கு இருக்கு. என் மகன் பெண்களை மதிக்கிறவனா வளர்ந் திருக்கான். அவனுடைய வாழ்க்கை யில வரப்போற பெண்களை அவன் கண்ணியமா, மரியாதையா நடத்து வான்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுதான் எனக்கான வெற்றி...’’ வலிகளால் வலிமையான வராக முடிக்கிறார் புனிதா.

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism