Published:Updated:

தனியொருத்தி! - 5 - ``கல்யாணம் பண்ணாததால என் சந்தோஷம் எதுவும் குறையலை!’’ - பானுமதி

பானுமதி
பிரீமியம் ஸ்டோரி
பானுமதி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

தனியொருத்தி! - 5 - ``கல்யாணம் பண்ணாததால என் சந்தோஷம் எதுவும் குறையலை!’’ - பானுமதி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
பானுமதி
பிரீமியம் ஸ்டோரி
பானுமதி

‘தவறான உறவிலிருப்பதைவிடவும் தனியாக இருப்பது மேலானது.’

``கல்யாணமாயிடுச்சா... எத்தனை குழந்தைங்க... கணவர் என்ன பண்றார்...’’ - சாமானியர் தொடங்கி சாதனையாளர் வரை எல்லாப் பெண்களையும் இந்த மூன்று கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூகம் இது. உண்மையில், அறிமுகமான, ஆகாத எந்தப் பெண்ணிடமும் கேட்கத் தேவையில்லாத கேள்விகள் இவை. பதில்கள் இல்லாத நிலையில் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளும் பெண்கள் அனுபவிக்கும் வலியும் வெறுப்பும் எதிராளி அறியாதது.

‘ஏன் கல்யாணம் பண்ணிக்கலை...’ங்கிற கேள்வி பல வருஷங்கள் என்னைத் துரத்தியிருக்கு. ‘என்னமோ பண்ணிக்கலை’ங்கிறதுதான் என் ஒரே பதிலா இருந்திருக்கு...’’ 65 வயதிலும் அந்த பதிலைச் சொல்லிச் சளைக்கவில்லை பானுமதிக்கு. சென்னையைச் சேர்ந்த இவருக்கு இயற்கைக் கல்வியாளர், பாவைக்கூத்துக் கலைஞர், ஆராய்ச்சியாளர், புத்தக ஆசிரியர் என பன்முகங்கள் உண்டு.

‘எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ

நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ’ என்று பாடினார் வைரமுத்து.

பானுமதியோ தன் வாழ்வை பத்து பத்தாகப் பிரித்து தன் பயணம் பகிர்கிறார்.

தனியொருத்தி! - 5 - ``கல்யாணம் பண்ணாததால என் சந்தோஷம் எதுவும் குறையலை!’’ - பானுமதி

``நான் ரொம்பவும் நேசிச்ச என் வேலையா... எடுத்துச்சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க அம்மா இல்லாததா... சின்ன வயசுலயே சுமக்க ஆரம்பிச்ச குடும்ப பொறுப்பு களா... நான் கல்யாணம் பண்ணாததுக்கு எது காரணம்னு சொல்லத் தெரியலை. ஆனா கல்யாணம் பண்ணியிருந்தா சந்தோஷமா இருந்திருப்பேனோன்னு ஒரு நாளும் நினைச்சதில்லை. கல்யாணம் பண்ணாததால என் சந்தோஷம் எந்த வகையிலயும் குறையவுமில்லை...’’ பாசிட்டிவ் வைப்ரேஷனோடு ஆரம்பிக்கிறது பானுமதியின் பேச்சு.

``20 வயது வரையிலான வாழ்க்கையில பெரிய சவால்களோ, சங்கடங்களோ இருந்ததா நினைவில்லை. படிப்புதான் பிரதானமா இருந்த காலகட்டம் அது. அப்பா மத்திய அரசுப் பணியில இருந்தார். படிப்பை முடிச்சிட்டு வேலை தேடிட்டிருந்த நேரத்துல அம்மா தவறிட்டாங்க. அம்மா போனதும் எனக்குப் பொறுப்புகள் அதிக மானதா உணர்ந்தேன். அடுத்த வருஷம் ரிட்டையர் ஆகப் போற அப்பா, படிச்சிட் டிருந்த தங்கை, வயசான பாட்டினு மூணு பேரைப் பார்த்துக்க வேண்டிய பெரிய பொறுப்பு எனக்கு வந்தது.

டெல்லியில தமிழ்ப்பள்ளிக்கூடத்துல படிச்சதால டெல்லி அரசுப் பள்ளிக்கூடத்துல ஆசிரியர் வேலைக்கு அழைப்பு வந்தது. ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அங்கேயே இருக்கிறது சரியா வராதுன்னு அப்பா நினைக்கவே, குடும்பத்தோட சென்னைக்கு இடம்பெயர்ந்தோம். எம்.எஸ்ஸி படிச்சிருந்த எனக்கு சரியான அங்கீகாரமோ, பொருத்த மான வேலையோ கிடைக்கலை. அம்மா ஸ்தானத்துல இருந்து மூணு பேரையும் பார்த் துக்கிட்டதால கல்யாணம் பண்ணிக்கணுமா வேண்டாமானு ஒரு குழப்பம் தொடர்ந்தது. இதுக்கிடையில என் தங்கைக்கு கல்யாணம் பண்ணிவெச்சேன்.

அப்பதான் எனக்கு அனைத்துலக இயற்கை பாதுகாப்பு மையத்துல இயற்கை கல்வியாளரா வேலை கிடைச்சது. அந்த வேலையும் அதன் தன்மையும் எனக்குள்ள நிறைய மாற்றங்களை ஏற்படுத்துச்சு. வேலையின் காரணமா எப்போதும் வனப்பகுதிகள்ல இருக்கிறதும், விலங்குகள் பாதுகாப்பு பத்தி யோசிக்கிறதும் இயங்கறதுமா என் வாழ்க்கையே மாறிப் போச்சு. ஒருவேளை எனக்கு கல்யாணமாகி யிருந்தா அப்படியொரு வேலையைத் தொடர கணவர் நிச்சயம் அனுமதிச்சிருக்க மாட்டார். வேலையை அளவுகடந்து நேசிச்சதால கல்யாணத்தை பத்தி நினைச்சுப் பார்க்கவும் தோணலை...’’ சிங்கிள் பயணத்தின் தொடக்கம் சொல்பவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு பத்தாண்டுகளும் சுவாரஸ்யங்களுடனும் சவால்களுடனுமே நகர்ந்திருக்கின்றன.

``30 - 40 வயது வரையிலான பத்து வருஷங் களை என் வாழ்க்கையின் ஆகச் சிறந்த காலகட்டம்னு சொல்வேன். என் அனுபவத் துக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்த பல வாய்ப்புகள் அந்தப் பத்தாண்டுகள்ல வந்தவைதான். ‘பாவை சென்டர் ஃபார் பப்பெட்ரி’ என்ற பெயர்ல ஓர் அமைப்பை நடத்திட்டிருந்தேன். தோல்பாவைக் கலைக் கான பொம்மைகள் பண்ணக் கத்துக்கிட்டது, அந்தக் கலையில என்னை தீவிரமா ஈடுபடுத்திக் கிட்டதுன்னு அந்தப் பத்தாண்டுகள் என் வாழ்க்கையின் மிக அழகான நாள்கள்.

30 வயசைத் தாண்டினதும் சமூகத்தோட கேள்விகளை எதிர்கொள்றது பெரிய சவாலா இருந்தது. ‘ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக் கலை...’ங்கிற அந்தக் கேள்வி என்னை கொஞ்ச மும் சலனப்படுத்தாமப் பார்த்துக்கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

40-வது வயசுல அடியெடுத்துவெச்சபோது பி.ஹெச்டி பண்ணாதது பெரிய குறையா உறுத்திட்டிருந்தது. அப்பாவோட வருமானம் இருந்ததால ‘நான் பார்த்துக்கறேன்’னு அவர் கொடுத்த தைரியத்துல வேலையை ரிசைன் பண்ணிட்டு காந்திகிராம் பல்கலைக்கழகத்துல பி.ஹெச்டி முடிச்சேன். படிப்பை முடிச்ச நேரம், எனக்கு ஆதரவா இருந்த ஒரே நபரான அப்பாவும் இறந்துட்டார். அப்பா தவறினதும் முதல்முறையா ஒரு வெறுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்கள் அதுலேருந்து என்னால மீள முடியலை. ஆனா, அப்பவும் எனக்குனு ஒரு வாழ்க்கைத்துணை இல்லையேனு நான் நினைக்கலை.

அப்பா இருந்தவரைக்கும் சிங்கிள் வுமனா வாழ்க்கையை நடத்தறதுல எனக்கு எந்தச் சவாலும் வந்ததில்லை. அவர் போனதும் முதல் சவாலா இருந்தது குடியிருக்கும் வீடு. அவர் இருந்தவரை சொந்தமா வீடு வாங்கணும்ங்கிற எண்ணமும் வரலை.

அப்பா போனதும் 30 வருஷங்களா நாங்க குடியிருந்த வீட்டை காலி பண்ணச் சொன்னாங்க. வீடு தேடிப் போன பல இடங்கள்லயும் ‘சிங்கிளா... அப்போ உங்களுக்கு வீடு கொடுக்க முடியாது’ன்னு சொல்லியிருக்காங்க. சிங்கிளா இருக்கறதுல எனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. அந்த வாழ்க்கையை நான் ரசிச்சு அனுபவிச்சு வாழ்ந்திட்டிருக்கேன்னுதான் சொல்லணும். வீட்டுவேலைகள் எல்லாத்தையும் நானேதான் செய்வேன். எனக்கான பொருள்களை நானே தான் வாங்குவேன்.

அதையும் மீறி தனியா இருக்கற வாழ்க்கை யில சின்னச் சின்ன ஏக்கங்கள் எப்போதாவது எட்டிப் பார்க்கத்தான் செய்யும். திடீர்னு ஒருநாள் காலையில எழுந்திருக்கும்போது எனக்காக யாராவது ஒரு கப் டீயோடு காத்திருக்க மாட்டாங்களானு தோணியிருக்கு. டிராவல் பண்ணும்போது என் லக்கேஜ்களை நானே சுமந்துகிட்டுப் போகணும். நானேதான் ஆட்டோ பிடிக்கணும். எவ்வளவு களைப்பா இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் எனக்கான தேவைகளை நானேதான் பார்த்துக்கணும். ‘என் ஹஸ்பண்ட் வந்து பிக்கப் பண்ணினார்’னு ஃபிரெண்ட்ஸ் சொல்லும்போது மட்டும் அந்த ஏக்கம் சின்னதா எட்டிப் பார்க்கும். ஆனா, சில நிமிஷங்கள்ல காணாமப் போயிடற உணர்வு அது...’’ உண்மையைச் சொல்பவருக்கு, 50 ப்ளஸ்ஸில், மெனோபாஸ் ஏற்படுத்திய உடல், மன சங்கடங்களைச் சமாளிப்பதுதான் பெரிதாக இருந்ததாம்.

தனியொருத்தி! - 5 - ``கல்யாணம் பண்ணாததால என் சந்தோஷம் எதுவும் குறையலை!’’ - பானுமதி

``இந்த வருஷம் எனக்கு 65 வயசு முடியப் போகுது. கடந்த பத்தாண்டுகளா என் வாழ்க்கையில புத்தகங்கள் எழுதறதுனு வேறொரு புது ஆர்வத்தை வளர்த்துக்கிட் டேன். பட்டாம்பூச்சிகள், ஊசித்தட்டான்கள், தோல்பாவைனு இயற்கை குறித்த புத்தகங்கள் எழுதிட்டிருக்கேன். இப்போதும் வாய்ப்புகள் தேடி வரும் அளவுக்கு என்னை ஆக்டிவ்வா வெச்சிருக்கேன். தனியா இருக்கிறதால எனக்கான எந்த சந்தோஷத்தையும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. நிறைய டிராவல் பண்ணுவேன். படங்கள் பார்ப்பேன். போட்டோகிராபி பிடிக்கும். ஃபிரெண்ட்ஸ்கூட அரட்டையடிப்பேன். ஒருத்தருக்காக சமைக்கிறதான்னெல்லாம் யோசிக்காம எனக்குப் பிடிச்சதை சமைச்சு சாப்பிடுவேன். யோகா பண்ணுவேன். வாக்கிங் போவேன். என்னை சந்தோஷமா வெச்சுக்க எல்லா முயற்சிகளையும் பண்றேன்.

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே வாழ்ந்துட முடியும்ங்கிற கேள்வி வராம இல்லை. உண்மைதான். உடம்பும் மனசும் சுறுசுறுப்பா இருக்கிறவரை சமாளிப்பேன். முடியாத கட்டத்துல சீனியர் சிட்டிசன் களுக்கான ஹோம்ல சேர்ந்துடணும்ங்கிற ப்ளானும் இருக்கு...’’ யதார்த்தம் உணர்ந்து பேசுபவர், தன்னைப் போன்ற சிங்கிள் பெண்களுக்கான மெசேஜ் சொல்லி முடிக்கிறார்...

``இதுதான் வாழ்க்கைன்னு தெரிஞ்சதும் அப்பாவோட பென்ஷன், இன்வெஸ்ட் மென்ட், என் புத்தகங்களுக்கு கிடைக்கிற ராயல்டினு எல்லாத்தையும் சரியான ப்ளான் பண்ணி இன்வெஸ்ட் பண்ணினேன். சிங்கிளா இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா நீங்களும் 40 வயசுலயே பொருளாதார ரீதியா உங்களை நிலைநிறுத்திக்கோங்க. மூளையை சுறுசுறுப்பா வெச்சுக்கோங்க. பண்ற வேலை களைத் தொடர்ந்து செய்யுங்க. வாழ்க்கை அதன் போக்குல உங்களை அழைச்சிட்டுப் போகும்!’’

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism