Published:Updated:

``திருமண உறவுல தனியொருத்தி! - 6 - அட்ஜஸ்ட்மென்ட் அவசியம்தான்... ஆனா, அது எதுவரைக்கும்?'' - ஷீபா

தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

``திருமண உறவுல தனியொருத்தி! - 6 - அட்ஜஸ்ட்மென்ட் அவசியம்தான்... ஆனா, அது எதுவரைக்கும்?'' - ஷீபா

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

`நன்றாக வாழ்ந்துகாட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்.'

``ஃப்ளைட்ல டிராவல் பண்றீங்க... ஏதோ ஆபத்துனு அறிவிக்கிறாங்க. சுதாரிச்சுக்கிட்டு நீங்க முதல்ல ஆக்ஸிஜன் மாஸ்க்கை போட்டுக் கிட்டாதான் உங்க குழந்தைங்களைக் காப்பாத்த முடியும். அந்த இடத்துல உங்க பாதுகாப்புதான் முதல்ல முக்கியம். வாழ்க்கையும் அப்படித்தான். பிரச்னை வரும்போது நீங்க அதுலேருந்து முதல்ல வெளியே வரணும். அப்பதான் உங்க குழந்தைங் களையும் அந்தப் பிரச்னை பாதிக்காம தடுக்க முடியும்...'' அக்கறையான அம்மாவாகப் பேசுகிறார் ஷீபா. சென்னையைச் சேர்ந்த பிசினஸ்வுமன்.

ஆட்டிசம் பாதித்த மகனை அதிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தவரின் வாழ்க்கை நெடுக சவால்களும் சங்கடங்களும் மட்டுமே... முதல்நாளிலேயே கசந்துபோன திருமண வாழ்க்கைக்கு 24 வருடங்களுக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைத்தவர். சிறப்புக் குழந்தை, கொஞ்சமும் சிறக்காத திருமண உறவு என இவரின் இரட்டைப் போராட்டம் வலி மிகுந்தது.

``என்னோட 13 வயசுல அப்பா தவறிட்டார். அக்கா, அண்ணன், நான்... மூணு பேரையும் அம்மாதான் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த் தாங்க. என்னுடையது லவ் மேரேஜ். பல எதிர்பார்ப்புகளோடு புகுந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். நான் எப்பவுமே நிறைய விட்டுக்கொடுப்பேன். அதனாலயோ என்னவோ எனக்கு எல்லாமே சுமுகமா இருக்கிற மாதிரியே தெரிஞ்சது. யதார்த்தம் அப்படியில்லைங்கிறதை உணர்ந்தபோது வருஷங்களும் வாழ்க்கையும் ஓடியிருந்தது...’’ வார்த்தைகளில் வருத்தமோ, விரக்தியோ எட்டிப் பார்த்துவிடக்கூடாதெனும் பிரக்ஞை யோடு பேசுகிறார் ஷீபா.

 மகள், மகனுடன்...
மகள், மகனுடன்...

``மூத்த மகன் அஷ்வத்துக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்தது. வாழ்க்கையில எதுவுமே தண்டனையோ, கஷ்டமோ இல்லைனு ஏத்துக்கிறது என் சுபாவம். என் குழந்தைக்கு ஆட்டிசம்னு உறுதியானபோதுகூட முதல்ல ஆறு மாசங்களுக்கு அதை நினைச்சு அழுதிருப்பேன். அப்புறம் அடுத்தென்னனு யோசிக்க ஆரம்பிச்சேன். அவனுக்குப் பிறகு மூணு வருஷம் கழிச்சு யாழினி பிறந்தாள். அஷ்வத் விஷயத்துல அவன் பேசினது, நடந்ததுனு எல்லா மைல்ஸ்டோன்ஸுமே ரொம்ப லேட்டாதான் நடந்தது. ஆனா, அதை யெல்லாம் ஈடுகட்டற அளவுக்கு யாழினி உற்சாகத்தின் மொத்த உருவமா இருந்தாள். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட் டிருக்கிறதா நினைச்சிட்டிருந்தேன். ஆனா...'' என நிறுத்துபவருக்கு அடுக்கடுக்கான அல்லல்கள்.

``ஸ்பெஷல் சைல்டு, குடும்ப பொறுப்புகள், இதுக்கடையில பேங்க்ல வேலைனு பரபரப்பா ஓடிட்டே இருந்தேன். சுமுகமா போயிட் டிருக்கிறதா நம்பிகிட்டிருந்த என் திருமண வாழ்க்கையில எங்கேயோ சில தவறுகள் நடந்திருந்ததை ரொம்ப லேட்டாதான் உணர்ந்தேன். அந்தத் தவறுகளால கணவன்-மனைவி உறவுக்குள்ள நிறைய பிரச்னைகள். அது கொடுத்த வலி ரொம்ப அதிகமா இருந்தது. அந்த வலியோட அந்த உறவைத் தொடர்வது எனக்கு மட்டுமல்ல, என்னைச் சுத்தியிருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்தும்னு தோணுச்சு. ஆனாலும் தனி மனுஷியா ஒரு ஸ்பெஷல் குழந்தையையும் பெண் குழந்தை யையும் என்னால வளர்த்துட முடியுமா, ஊர், உலகம் என்ன பேசும்னெல்லாம் எனக்குள்ள பல கேள்விகள். தினம் தினம் வலியோடு தூங்கறதும் வலியோடு எழுந்திருக்கிறதுமே வாடிக்கையா இருந்தது.

ஒருநாள் காலையில தூங்கி எழுந்தபோது எனக்குள்ள நானே எதிர்பார்க்காத அளவுக்கு அப்படியொரு தெளிவு... இப்படியொரு வலியோட, நெருடலோட வாழறது அவசிய மில்லைனு தோணுச்சு. கல்யாணமாகி கிட்டத்தட்ட 24 வருஷங்களுக்குப் பிறகு நான் என் குழந்தைகளோடு தனியா வந்தேன். என் குழந்தைங்க ரெண்டு பேரும் அத்தனை வருஷங்களா நான் பட்ட கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்ததால தனியா போறதுனு முடிவெடுத்தப்ப என்கூட வரத் தயாரா இருந்தாங்க. கல்யாணமான முதல் நாள் லேருந்தே வாழ்க்கையில நடந்த எதுவுமே உண்மையா இருந்ததில்லை. அதனால இத்தனை வருஷ தாம்பத்தியத்துல இனிமையான நினைவுகள்னு சொல்லிக்கிற மாதிரி எனக்கு எதுவும் இருந்ததில்லை. காமெடியா சொல்லணும்னா என் வாழ்க்கையில நடுவுல சில பக்கங்கள் இல்லை, நிறைய பக்கங்கள் காணாமப் போயிடுச்சு...’’ சிரிப்பால் சோகம் மறைப்பவருக்கு மகனை சராசரி மனிதராக்கியதில் பெரும் நிம்மதி.

``அஷ்வத் எம்.எஸ்ஸி விஷுவல் கம்யூனி கேஷன் முடிச்சிருக்கான். யாழினி டென்த் எழுதியிருக்கா.அடுத்து வெளிநாட்டுக்குப் போய்ப் படிக்கப் போறா. ஆட்டிசம் பாதிப்போட ஸ்பெஷல் சைல்டா இருந்த அஷ்வத்தை இன்னிக்கு போஸ்ட் கிராஜுவேட்டாக்கி, அவனை ஆட்டிசத்து லேருந்து முழுமையா மீட்டுக் கொண்டு வந்திருக்கேன். அவன் பிறந்ததுலேருந்து இன்னிவரைக்கும் அவனை நான் எந்தக் குழந்தையோடவும் கம்பேர் பண்ணிப் பார்த்ததில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு நினைக்காம, அவனை சராசரி குழந்தையா மாத்தறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு அவனா நீச்சல் கத்துக்கட்டும் என்ற மாதிரி எல்லா விஷயங்களையும் அவனை செய்யவெச்சேன். அவனோட எதிர்காலத்துக்காக ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு, அதுல அவனை டிரெயின் பண்ணிட்டிருக் கேன். நான் இழந்த அத்தனை சந்தோஷங் களையும் என் ரெண்டு குழந்தைங்களும் எனக்கு கொடுத்திருக்காங்க...’’ பூரிப்பவர், எழுத்தாளராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ‘டீகோடடு’ (Decoded) என்ற இவரது லேட்டஸ்ட் புத்தகம், ஆட்டிசம், நார்சிஸம் என இரண்டையும் பேசுகிறது.

``திருமண உறவுல 
தனியொருத்தி! - 6 - அட்ஜஸ்ட்மென்ட் அவசியம்தான்...
ஆனா, அது எதுவரைக்கும்?'' - ஷீபா

``நான் என் கணவரோட சேர்ந்திருந்தபோது எங்களுக்கு பொதுவான நண்பர்கள் நிறைய பேர் இருந்தாங்க. நாங்க பிரிஞ்சதும் பல பேர் என்னைவிட்டு விலகிப் போயிட்டாங்க. அவங் களுடைய உண்மையான முகத்தைத் தெரிஞ்சுக்க அதை ஒரு வாய்ப்பா பார்த்தேனே தவிர, வருத்தப்படலை.. அதையும் தாண்டி சிலர் இன்னிக்கும் என்கூட நிக்கறாங்க. ஆண்கள், பெண்கள் ரெண்டு பேருக்குமே நான் ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படறேன். உங்க கல்யாண வாழ்க்கையில சகிச்சுக்க முடியாத அளவுக்குப் பிரச்னைகள் இருக்கா.., பல வருஷங்கள் வாழ்ந்துட்டோமே... பிள்ளைங்க இருக் காங்களேன்னெல்லாம் யோசிச்சு பிரச்னைக்குரிய அந்த உறவுக்குள்ளேயே சிக்கித் தவிக்கிறது புத்திசாலித்தனமே இல்லை.

திருமண உறவுல அட்ஜஸ்ட்மென்ட் அவசியம்தான். ஆனா, அது எதுவரைக் கும்ங்கிறதுதான் கேள்வியே... உங்களையே இழக்கற அளவுக்கான அட்ஜஸ்ட்மென்ட் உங்களை நீங்களே ஏமாத்திக்கிறதுக்கு சமம். உங்க சுயத்தை இழந்து எந்த உறவுக்காகவும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டாம். அது கணவன்-மனைவி உறவு மட்டுமல்ல, அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்க, பிள்ளைங் கன்னு எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

``இத்தனை வருஷங்கள் வாழ்ந் துட்டீங்கல்ல... இன்னும் கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா என்ன’ன்னு கேட்கறவங்களைப் பார்க்கறேன். நான் எத்தனை நாள் வாழப் போறேன்னு தெரியாது. வாழப் போற நாள்கள்ல நானும் சந்தோஷமா இருக்கணும். என் குழந்தைங்களையும் சந்தோஷமா வெச்சிருக்கணும். அதுக்காக பிடிச்ச வாழ்க்கையை வாழறதுல தப்பில்லைனு நினைக் கிறேன். `நாங்கல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழலையா’னு கேட் கறவங்களும் இருக்காங்க. அது அவங்க இஷ்டம். ஏன்னா அந்த வாழ்க்கை அவங்க மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லை. குழந்தைங்களும் சம்பந்தப்பட்டது. குழந்தைங்க பெற்றோர் செய்யறதைப் பார்த்துதான் எதையும் கத்துப்பாங்க. பிரச்னைகளை தைரியமா எதிர்கொள்ற பெற்றோரைப் பார்த்து வளரும் பிள்ளைங்க நாளைக்கு அதே மாதிரி தைரியத்தோட வளர்வாங்க. ‘அப்போ பிரச்னை உள்ள பெண்கள் எல்லாம் தனியா போயிடணுமா’னு கேட்டா நான் அப்படிச் சொல்லலை. வலியோட வாழறது எனக்குப் பிடிக்கலை. நான் தனியா வந்தேன். நீங்க எதைப் பெற எதை இழக்கறீங்கன்றது உங்க முடிவு. அவ்வளவு தான்...'' தன் வாழ்க்கையையே மெசேஜாக சொல்லி முடிக்கிறார் ஷீபா.

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism