Published:Updated:

தனியொருத்தி 7 - ”தனியா வாழற பெண்ணுக்கு இந்தச் சமூகம் இன்னும் சவாலாதான் இருக்கு!” - மீனா சத்யமூர்த்தி

தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - வலிமையாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்பதை உணர்கிறீர்கள்.

தனியொருத்தி 7 - ”தனியா வாழற பெண்ணுக்கு இந்தச் சமூகம் இன்னும் சவாலாதான் இருக்கு!” - மீனா சத்யமூர்த்தி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள் - வலிமையாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்பதை உணர்கிறீர்கள்.

Published:Updated:
தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

``இருட்டுன்னா பயம், ரத்தம்னா பயம், தனியா இருக்கணும்னா பயம்... நினைவு தெரிஞ்ச வயசு வரை நான் இப்படித்தான் இருந்திருக்கேன். அப்படிப்பட்ட நான், இன்னிக்கு பிணவறைக்குள்ள தனியா போயிட்டு வரேன், ஆதரவற்ற சடலங்களை அடக்கம் பண்ண சுடுகாட்டுக்குப் போறேன்... ஏழு வருஷங்களா தனியா வாழ்ந்திட்டிருக் கேன்... `பயம் இல்லாம தைரியம் சாத்திய மில்லை’னு சொல்வாங்களே... அதுக்கு என் வாழ்க்கையே சாட்சி...’’ சன்னமான குரலில் ஸ்ட்ராங்காக பேசுகிறார் மீனா சத்யமூர்த்தி. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை செய்துகொண்டே சமூக பணிகளிலும் தீவிரமாக இயங்கிவருபவர்.

16 வயதில் திருமணம், அது புரிவதற்குள் நிகழ்ந்த பிரிவு, உறவுசொல்ல ஒருவருமில்லா வாழ்க்கை என இவர் கடந்துவந்த பாதை யெங்கும் கசப்பும் கண்ணீரும் மட்டுமே.

வயது 28 என்கிறார். பேச்சில் 68-க்கான பக்குவம் பளிச்சிடுகிறது. எல்லாம் வாழ்க்கை கற்றுத்தந்த பாடம்.

மீனா சத்யமூர்த்தி
மீனா சத்யமூர்த்தி

``எனக்குப் பூர்வீகம் கரூர் மாவட்டம். என்னுடைய நாலு வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க. தாத்தா-பாட்டியோட அரவணைப்புலதான் வளர்ந்தேன். என் 12 வயசுல பாட்டியும் தவறிட்டாங்க. தாத்தா மட்டும்தான் உலகம்னு ஆச்சு. டென்த் முடிச்சிருந்த நேரம்... ‘மனைவி, மகன், மருமகள்னு எல்லாரையும் இழந்தும் உனக்காகத்தான் வாழ்ந்திட்டிருக்கேன். உனக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டா என் பாரம் இறங்கிடும்’னு தாத்தா சொன்னபோது என்கிட்ட பதில் இல்லை. கல்யாணம்னா என்னன்னே தெரியாத வயசுல அந்த வாழ்க்கைக்குத் தயாரானேன்.

2010-ல கல்யாணமாகி சென்னையில செட்டிலானோம். அம்மா, அப்பா இல்லாத குறை தெரியாம தாத்தா பார்த்துக்கிட்டார். தாத்தா தவறினதும் அந்த அன்பும் அரவணைப்பும் கணவர்கிட்ட கிடைச்சது. லைஃப் சந்தோஷமாதான் ஆரம்பிச்சது. ஆனா, அது நீடிக்கலை. ரெண்டு பேருக்குமான வயசு வித்தியாசம், அதனால உருவான மனஸ்தாபங்கள் நாளுக்கு நாள் அதிகமா யிட்டே போச்சு. இனிமே சேர்ந்து வாழறதுல அர்த்தமில்லைனு 2015-ல ரெண்டு பேரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தோம்...’’ ஐந்தே வருடங்களில் அனைத்தும் முடிவுக்கு வந்தபோது மீனாவின் உலகம் கிட்டத்தட்ட சூன்யமானது.

``சென்னையில எந்த இடமும் தெரியாது. நண்பர்கள்னு யாருமில்லை. பஸ்ல ஏறிப் போகத் தெரியாது. பத்தாவதுக்கு மேல படிப்பும் இல்லை. தனி மனுஷியா என்ன பண்ணப் போறேன், என் வாழ்க்கை என்னவாகப் போகுதுங்கிற பயம்தான் பெருசா இருந்தது. சில நல்ல உள்ளங்கள் மூலமா சென்னையில ‘சுமைதாங்கி அறக் கட்டளை’யை நடத்தறவங் களுடைய அறிமுகம் கிடைச்சது. அங்கே எனக்கு அடைக்கலம் கொடுத்து என்னை மகள்போல பார்த்துக் கிட்டாங்க. பிறகு ஒரு தனியார் கம்பெனியில டெலிகாலரா வேலை பார்த்தேன். எங்க தாத்தா கத்துக்கொடுத்த தைரியமும் அவர் மூலமா கிடைச்ச ஆங்கில அறிவும்தான் எனக்குத் துணையா இருந்தது. நல்ல சம்பளத்துல மெடிக்கல் கோடிங் சம்பந்தப்பட்ட வேலை கிடைச்சது. ஆனா, தொடர்ந்து நைட் ஷிஃப்ட் பார்த்ததுல எனக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. அந்த வேலையை விட்டுட்டு ஈவென்ட் மேனேஜ் மென்ட் பண்ண ஆரம்பிச்சேன். ‘தோழன்’ அமைப்புல சேர்ந்து ‘விபத்தில்லா பயணம்’ கேம்பெயினுக்காக வொர்க் பண்ணேன்.

எங்கம்மா, அப்பா இறந்தபோதும், பாட்டி, தாத்தா இறந்தபோதும் என்னால அவங் களுக்கான இறுதி காரியங்களைச் செய்ய முடியலை. பெண் என்ற காரணத்தால என்னை அதுக்கு அனுமதிக்கலை. பெண்கள் சுடுகாட்டுக்குப் போகக்கூடாதுங்கிற தடை எனக்குள்ள நெருடலை ஏற்படுத்தியிருந்தது. ‘உறவுகள்’ டிரஸ்ட் மூலமா ஆதரவற்ற சடலங்களை அடக்கம் பண்ற வேலையில என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். ரத்தம், பேண்டேஜ், இருட்டையெல்லாம் பார்த்து பயந்த நான், முதல்முறை மார்ச்சுவரிக்குள்ள போனபோது கைகள் நடுங்க உறைஞ்சு போய் நின்னது ஞாபகமிருக்கு. பல நாள்களுக்கு தூங்க முடியாம, கனவெல்லாம் சுடுகாடு வந்த அனுபவங்கள் உண்டு. ‘உனக்கெதுக்கு இந்த வேலை’னு நிறைய பேர் திட்டியிருக்காங்க. பலநாள் மன அழுத்தத்துலகூட இருந்திருக் கேன். பிறகு மெள்ள மெள்ள நானே அதுலேருந்து மீண்டு வந்தேன்...’’ வீழ்ந்து எழுந் தவர், பச்சிளம் குழந்தை முதல் வயதானோர்வரை ஆதர வற்ற பலரின் சடலங்களை அடக்கம் செய்திருக்கிறார்.

கொரோனா பரவத் தொடங்கியபோது, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி ஆப ரேட்டர் வேலையில் தன்னார்வலராகச் சேர்ந் திருக்கிறார். கொரோனா அறிகுறிகளோடு வருபவர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்யும் அந்த வேலையிலும் கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்தநிலையில் நிறைய மரணங்களைப் பார்த்த வலியை மனதில் சுமந்துகொண்டிருக்கிறார் மீனா.

``நாளைக்கு உனக்கு கொரோனா வந்து இறந்துட்டா உன் உடலை வாங்கக்கூட ஆளில்லை... உனக்கெதுக்கு இந்த வேலை’னு பலரும் கேட்டிருக்காங்க. ‘எனக்குதான் யாருமே இல்லையே... அப்படியே கொரோனா வந்தாலும் என்னை நான் தனிமைப்படுத்திக்க முடியும். என்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவாம பார்த்துக்க முடியும்னு சொல்லி யிருக்கேன். பெரும்பாலான நேரங்கள்ல சாபமா இருக்கும் தனிமை வாழ்க்கை இந்த விஷயத்துல எனக்கு ப்ளஸ்ஸா இருந்தது...’’ சோகம் மறைத்துச் சிரிப்பவரின் பேச்சு, தனிமைப் பயணம் நோக்கித் திரும்புகிறது.

``தனியா வாழற பெண்ணுக்கு இந்தச் சமூகம் இன்னும் சவாலாதான் இருக்கு. டூவீலர் ஓட்டிட்டுப் போகும்போது சிக்னல்ல நின்னுட்டிருப்பேன். பக்கத்துல பைக்ல வர்றவங்க தலையிலேருந்து கால் வரைக்கும் ஸ்கேன் பண்ணுவாங்க. நெத்தியில குங்குமம், கழுத்துல சரடு, கால்ல மெட்டி இருக்கானு பார்ப்பாங்க. அதெல்லாம் இல்லைனு தெரிஞ்சதும் கொஞ்ச தூரத்துக்கு பின்னாலயே வருவாங்க. தனியா வாழ ஆரம்பிச்ச புதுசுல இது மாதிரியான அச்சுறுத்தல் அடிக்கடி நடந்திருக்கு. கடவுளுக்கு முன்னாடி எல்லாரும் சமம்னு சொல்ற கோயில்லகூட திருமண அடையாளங்களோட வர்றவங்களுக்குத்தான் தனி மரியாதை கொடுக்கறாங்க. சாதாரணமா உடம்பு சரியில்லைனு டாக்டர்கிட்ட போனாலும், எப்ப கல்யாணமாச்சுங்கிறதுல ஆரம்பிச்சு என் பீரியட்ஸ் சைக்கிள் வரைக்கும் தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எல்லா இடங்கள்லயும் என்னை மீனா சத்யமூர்த்தினு தான் சொல்லிப்பேன். சத்யமூர்த்தி என் அப்பா பெயர். ஆனா, ஒரு பெண்ணோட பெயருக்குப் பின்னால இருக்குற ஆண் பெயர் கணவருடையதாதான் இருக்கணும்னு அவங்களா ஒரு முடிவுக்கு வந்து ‘மிஸஸ் மீனா சத்யமூர்த்தி’னு கூப்பிடுவாங்க. அதைப் புரியவைக்கறது பெரிய வலி. இப்படி சமூகம் கொடுக்குற வலி ஒரு பக்கம்னா, பர்சனலா நான் அனுபிக்கிற பிரச்னைகளும் கொஞ்சமில்லை.

இறுதி காரியங்களில்...
இறுதி காரியங்களில்...

உடம்புக்கு முடியலைன்னாலோ, பீரியட்ஸ் நாள்கள்லயோ வெந்நீர் வெச்சுக் கொடுக்கக் கூட ஆளிருக்க மாட்டாங்க. அந்த வலியிலும் வேதனையிலும் சாப்பிடாம தூங்கின நாள்கள் அதிகம். ‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே’னு சிலர் கேட்கறதுண்டு. ஒரு வலியிலேருந்து தப்பிக்க இன்னொரு வலியைத் தேடிக்க நான் தயாரா இல்லை. அதுக்காக கல்யாணத்தையே நான் தவறா சொல்லல. என் விஷயத்துல கல்யாணம் கசந்துபோயிடுச்சு.

எனக்கு 28 வயசாகுது. சுகரும், பிபியும் இருக்கு. ஒவ்வொரு நாளும் தனியா தூங்கும் போது என்னை அறியாம ஒரு பயம் மனசுல பரவும். ஒருவேளை தூக்கத்துல எனக்கு ஏதாவது ஆயிட்டா... கதவு திறக்கப்படாதவரை யாருக்கும் எதுவும் தெரியாது. நான் இறந்தா சில மணி நேரமோ, சில நாள்களோ கழிச்சுதான் அது வெளியில தெரியவரும். இது தனியா வாழும் ஒவ்வொருத்தருக்கும் பொருந்தும். இதையெல்லாம் தாண்டி தனிமை வாழ்க்கை யில நிறைய சாதகங்களும் இருக்கு. என் வாழ்க்கை, என் முடிவு. எதுக்கும் யார்கிட்டயும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு ஏதாவதுன்னா உடனே ஓடிவந்து உதவற நல்ல நட்பு வட்டத்தையும் சம்பாதிச்சிருக்கேன்.

‘எதுக்கு தனியா கிடந்து கஷ்டப்பட்டுக் கிட்டு... ஊரோட வந்துடலாம்ல...’னு சொந்தக் காரங்க கேட்கறதுண்டு. ‘நாளைக்கே எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, தகவல் கேள்விப்பட்டு நீங்கள்லாம் வந்து சேர்றதுக்குள்ள என் நண்பர்கள் எனக்கான எல்லா கடமைகளையும் செய்து முடிச்சிருப்பாங்க. அப்படிப்பட்ட அருமையான நட்புதான் நான் சம்பாதிச்ச சொத்துனு என்னால பெருமையா சொல்லிக்க முடியும். நல்ல நட்பு வாழ்க்கையை அழகாக்கற தோடு அர்த்தமுள்ளதாகவும் மாத்திடும்’’ என்கிறார்.

தனிமையை வென்றவரின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தளும்புகிறது.

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism