Published:Updated:

தனியொருத்தி - 8 - ‘‘தனிமைங்கிறது என்னிக்கும் சுமையா இருந்ததில்லை!’’ - மாலா மணியன்

தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

தனியொருத்தி - 8 - ‘‘தனிமைங்கிறது என்னிக்கும் சுமையா இருந்ததில்லை!’’ - மாலா மணியன்

சிங்கிளாக சாதிக்கும் சிங்கப் பெண்களின் வெற்றிக் கதைகள்

Published:Updated:
தனியொருத்தி
பிரீமியம் ஸ்டோரி
தனியொருத்தி

‘‘மகிழ்ச்சியானதும் நிறைவானதுமான வாழ்க்கையை துணை தீர்மானிப்பதில்லை.’’

‘அவள் விகடன்ல ‘தனியொருத்தி’ பகுதியில இடம்பெற்ற பெண்களுடைய பேட்டிகளைப் படிச்சேன். இந்தப் பகுதியில அனுபவங்களைப் பகிர்ந்துக்கிற அளவுக்கு என்கிட்ட அழுத்த மான, கண்ணீர்க் கதைகளோ, சவால்களோ இல்லை. ஆனாலும் கடந்துவந்த வாழ்க்கை யைத் திரும்பிப் பார்க்குறபோது ‘நாட் பேட்’னு தோணுது... இதெல்லாம் எப்படி சாத்திய மாச்சுனு ஆச்சர்யமாகவும் இருக்கு... என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க இது ஒரு வாய்ப்பு...’’ எவர்க்ரீன் புன்னகை மாறாமல் பேச ஆரம்பிக்கிறார் சின்னத்திரை பிரபலம் மாலா மணியன். ஐஜீன் டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் (IGENE - DI and VFX) ஸ்டூடியோவின் சிஓஓவாக இன்றுவரை மீடியா பிரபலம்.

விரும்பி ஏற்றுக்கொண்டாலுமே தனிமை வாழ்க்கை என்றாவது ஒருநாள் யாருக்கும் சலித்துப்போகும். மாலாவுக்கு அப்படி ஆகாதது ஆச்சர்யம். காரணம், அதை அவர் எதிர்கொண்ட விதம்.

‘‘எனக்கு மூணு அண்ணன்கள், ஒரு அக்கா. அப்பா எல்.ஐ.சில வேலை பார்த்திட்டிருந்தார். எளிமையான, மிடில் கிளாஸ் குடும்பம். அக்கா வுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. அதேபோல, அண்ணன்கள்ல ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகியிருந்தது. குயின்மேரிஸ் காலேஜ்லதான் டிகிரி படிச்சேன். காலேஜ் லைஃப் நினைச்சுப் பார்க்காத அளவுக்கு சந்தோஷமா இருந்தது. காலேஜ் லைஃப்ல கடைசி நாள்... அத்தனை நாள் சந்தோஷத்தையும் காணாமப் போகச் செய்யற மாதிரி எதிர்பாராத திருப்புமுனையா அமைஞ்சது...'' வருடங்கள் கடந்தும் வலி தொண்டையை அடைக்க, கண்கள் கலங்கு கின்றன மாலாவுக்கு.

தனியொருத்தி - 8 - ‘‘தனிமைங்கிறது என்னிக்கும் சுமையா இருந்ததில்லை!’’ - மாலா மணியன்

‘‘காலேஜ் கடைசி நாள் கொண்டாட்டம் முடிஞ்சு வீட்டுக்குள்ள நுழைஞ்ச எனக்கு அம்மாவோட இறப்புச் செய்தி காத்திருந்தது. அப்பாவையும் அண்ணன்களையும் பார்த் துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. அன்னிலேருந்து நான் அம்மாவா மாறினேன். அம்மாவோட இழப்புலேருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியலை. அதுக்கப்புறம் எனக்கு மேல படிக்கிற ஐடியாவும் இல்லை. டி.சி.எஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன். ஆறு மாசம் வேலை பார்த்த நிலையில ஒரு மாறுதல் வேண்டி, மஸ்கட்ல இருந்த என் அக்கா வீட்டுக்குப் போனேன். அங்கே கோனிகா லேப்ல அரைநாள் வேலை... மீதி நேரத்தை வீணாக்க மனசில்லாம, ஃபேர் டிரேடுனு பெரிய சூப்பர் மார்க்கெட்டோட கார்ப்பரேட் ஆபீஸ்ல ரிசப்ஷனிஸ்ட்டா ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அக்கா குடும்பம் மறுபடி சென்னைக்கு இடம்பெயர்ந்ததால நானும் சென்னைக்கு வந்தேன்...’’ என்பவருக்கு சென்னை ரீஎன்ட்ரியில் ஆரம்பமே அட்ட காசமாக அமைந்திருக்கிறது.

‘‘ ரஜினி சார், கமல் சார்னு பிரபலங்களுடைய குடும்ப விசேஷங்களுக்கு வீடியோ எடுக்கறதுல அப்போ செவன்த் சேனல் நிறுவனம் ரொம்ப பிரபலம். என் காலேஜ் ஃபிரெண்ட்ஸ் மூலமா சென்னையில செவன்த் சேனல் கம்பெனியில ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யாம, ஆர்வத்தோட மற்ற வேலைகளையும் கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச் சேன். உழைக்கிற ஆர்வத்தோட, நேர்மை, நாணயம், சின்சியாரிட்டி இருந்தா ஒருத்தங்க என்ன வேணா ஆகலாம்ங்கிறதுக்கு நானே உதாரணம். ரிசப்ஷனிஸ்ட்டா கரியரை தொடங்கின நான் அதே கம்பெனியில சி.இ.ஓ அளவுக்கு உயர்ந்ததுக்கு அதுதான் காரணம். நான் எம்.பி.ஏ படிக்கலை, அந்த பீரியட்ல மீடியாவுல எனக்கு எந்த ரோல் மாடலும் இல்லை. அப்படிப்பட்ட என்னால இவ்வளவு தூரம் சாதிக்க முடிஞ்சிருக்குன்னா மற்ற பெண்களால முடியாதா என்ன...’’ உதாரண மனுஷியாக உற்சாகம் தருபவர், மீடியாவில் எல்லா தளங்களிலும் இயங்கியவர்.

‘‘மீடியாவுல பீக்ல இருந்தபோது ‘எப்படி உங்களால எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்க முடியுது’னு கேட்டிருக்காங்க. என்கிட்ட இருந்த அந்த குவாலிட்டியையே நான் பல வருஷங்கள் கழிச்சுதான் உணர்ந்தேன். ஆனா தெரிஞ்சோ, தெரியாமலோ மத்தவங்களோட புன்னகைக்கு நான் ஏதோ ஒரு வகையில காரணமா இருந்திருக்கேன்...’’ என்பவர் அதற்கும் உதாரணம் வைத்திருக்கிறார்.

‘சென்னை தொலைக்காட்சி நிறுவனத்துல, ‘மெட்ரோ சேனல்’னு புது சேனல் ஆரம்பமான புதுசுல பாரதிராஜா, ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், ஷியாம் பெனகல், மோகன்லால், மம்மூட்டி, கமல், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், ராதிகா, சுஹாசினி, எஸ்.ஜானகி, சித்ரானு நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கேன். அத்தனையிலும் என் மனசைத் தொட்டதுன்னா டிஸ்கோ சாந்தி யோட பேட்டி. டிஸ்கோ சாந்தியை பேட்டி எடுக்கப் போறீங்கன்னு சொன்னதும் ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா அப்படி யோசிச் சது எவ்வளவு பெரிய தப்புங்கிறதை அவங் களை பேட்டி எடுத்தபோது உணர்ந்தேன். அப்பா தவறின பிறகு குடும்பத்துக்காக அவங்க எடுத்த அந்த முடிவு, அதுல இருந்த சவால்களை பத்தி அவங்க பேசப் பேச எனக்கு கண்ணீர் வழிஞ்சிட்டிருந்தது. பேட்டி ஒளிபரப்பான அன்னிக்கு ராத்திரி சாந்தி ஏர்போர்ட்லேருந்து எனக்கு போன் பண்ணி னாங்க. அப்போ அவங்க பீக்ல இருந்த டைம்... ‘இத்தனை நாளா நான் வரும்போது வெளியிடங் கள்ல என்னை யாரும் கௌரவமா பார்த்த தில்லை. ஐட்டம் டான்ஸரா தான் பார்த்திருக்காங்க. ஆனா இன்னிக்கு பேட்டி யைப் பார்த்துட்டு என் கிட்ட வந்து அவங்க பேசற விதத்துல அவ்வளவு மரியாதையும் அன்பும் தெரியுது. இந்த மாதிரி கமென்ட்ஸ் எனக்குப் புதுசு. ரொம்ப நன்றி’ன்னு நெகிழ்ந்து பேசினாங்க. அவங்களைவிடவும் நான் ரொம்ப நெகிழ்ந்த தருணம் அது...’’ மாலாவின் வார்த்தைகள் அந்த உணர்வை நமக்கும் கடத்துகின்றன.

பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்த மாலா வுக்கு திருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லாமல் போனதும் ஆச்சர்யம்தான்.

‘‘அடுத்த பத்து வருஷங்கள் வெளிநாடு களுக்குப் பயணம் பண்றது, அங்குள்ள தமிழர் களை பேட்டி காண்றது, சினிமா தொடர்பான உரையாடல்கள்னு பிசியா போச்சு.செவன்த் சேனல்ல 25 வருஷங்களை நிறைவுசெஞ்சுட்டு அங்கிருந்து வெளியே வந்தேன். எதைப் பண்ணாலும் பெஸ்ட்டா பண்ணணும்னு நினைக்கிற கேரக்டர் நான். பரபரப்பா ஓடிட் டிருந்த நிலையில கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால அந்த வாழ்க்கையில நான் நினைக்கிற மாதிரி பெஸ்ட்டா இருப்பேன்னு தோணலை. பிடிச்சவங்களை கல்யாணம் பண்ணிக்கிற சுதந்திரம் வீட்ல இருந்தபோதும் எனக்குதான் அதுக்கு நேரமில்லாமப் போயிடுச்சு. இப்படியே வருடங்கள் ஓடிருச்சு.

மீடியாவுல பல வருஷங்கள் பல விஷயங்களைப் பண்ணி முடிச்சிட்ட நிலைமையில அடுத்தென்னங்கிற கேள்வி வந்தது. கௌரவ மான பிரேக் எடுக்கலாம்னு தோணுச்சு. அப்பதான் ’சிறகு’னு ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். அது, எனக்கு நானே வெச்சுக்கிட்ட சவால்னு சொல்லலாம். அதாவது ஒரு தயாரிப்பாளரா ஸ்கிரிப்டை ஓகே பண்ணலாம் அல்லது சின்ன திருத்தங்கள் சொல்லலாம். ஆனா, அதுக்கப்புறம் அதுல தலையிடக்கூடாது. எத்தனை நாள்களுக்குள்ள படத்தை முடிக்கணுமோ, அத்தனை நாள்களுக் குள்ள முடிக்கிறது, எந்த நாள் எந்த லொகேஷன்ல ஷூட் பண்ணணுமோ அதை பிளான்படி சாத்தியமாக்கறது, பட்ஜெட்டுக் குள்ள படம் எடுக்கிறது, நடிகர்கள், டெக்னீ ஷியன்கள்னு படத்துல வொர்க் பண்ணின அத்தனை பேருடனும் படம் முடிஞ்ச பிறகும் இணக்கமான நட்போட இருக்கறதுன்னு சில கொள்கைகளோடு பண்ண வேலை அது. படம் இன்னும் ரிலீசாகலை. ஆனா, சவால்ல நான் ஜெயிச்சிட்டதா நினைக்கிறேன். நான் பிளான் பண்ணினபடி எடுத்து முடிச்ச திருப்தி எனக்கு இருக்கு...’’ நிறைவுடன் சொல்பவருக்கு, மீண்டும் படம் தயாரிப்பதில் தொடங்கி பல திட்டங்கள் இருக்கின்றன.

 ஐஜீன் டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் ஸ்கூல் மாணவர்களுடன்...
ஐஜீன் டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் ஸ்கூல் மாணவர்களுடன்...

‘‘என் வாழ்க்கையில நான் எதையும் பிளான் பண்ணலை. வாழ்க்கையை அதன் போக்குல ஏத்துக்கப் பழகிட்டேன். ஒருவேளை கல்யாணமே பண்ணிருந்தாலும் அந்த நபர் கடைசிவரை என்கூட இருந்திருப்பார்ங் கிறதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ‘வயசானா என்ன பண்ணுவீங்க... முதுமையை நினைச்சா உங்களுக்கு பயமா இல்லையா’னு சிலர் கேட்கறதுண்டு. அந்த பயம் எனக்கு கொஞ்சமும் இல்லை. நான் இருக்குறவரை வேலை பார்த்துட்டே இருப்பேன். சம்பாதிக் கிறதை சேர்த்துவைக்கிறதில்லை. ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைக்கிறேன். உண்மை யிலேயே தேவை இருக்கிறவங்களுக்கு சின்னதா தொழில் தொடங்க உதவறேன். அது ஒருவிதமான நிறைவைத் தருது. தனிமைங்கிறது எனக்கு என்னிக்கும் சுமையா இருந்ததில்லை. ‘உனக்கென்னம்மா... நினைச்சா எங்கே வேணா சட்டுனு கிளம்பிடலாம்... நாங்கள்லாம் ஹஸ்பண்டுக்கு என்ன வேலை இருக்கு, பசங் களுக்கு என்ன வேலை இருக்கு, யாருக்கு என்ன சமைக்கிறதுன்னு ஒவ்வொண்ணையும் பிளான் பண்ண வேண்டியிருக்கும். நீ உன் வேலையை மட்டும் பிளான் பண்ணினா போதும்’னு என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. அதுதான் உண்மை.

வாசலைத் தாண்டிட்டா எனக்கு வீடு பத்தின நினைவே இருக்காது. அதுக்காக எல்லாரும் சிங்கிளா இருங்கன்னு சொல்லலை. கல்யாணமான பெண்களுக்கு கணவரை பத்தி, குழந்தைங்களை பத்தி இருக்குற கவலைகள்கூட எனக்கு இல்லை. அப்பா உயிரோட இருந்த வரைக்கும் அவர்கூட இருந்தேன். அப்புறம் அண்ணன்கள், அக்கா குடும்பத்தோட இருந் தேன். இப்போ எனக்கு 60 வயசு. இந்த வயசுல தனியா வசிக்க ஆரம்பிச்சிருக்கேன். `எப்படி எப்பவும் உங்களால சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுது'ங்கிற கேள்வி இப்பவும் தொடருது... நான் சிரிச்சுக்கிட்டே இருக்கேனானு தெரி யலை. ஆனா வாழ்க்கையில தினமும் ஒருத்தர் முகத்துலயாவது சிரிப்பு வர நான் காரணமா இருக்கணும்ங்கிறதை இன்னிக்கும் கொள் கையா வெச்சிருக்கேன்...’’ அழகாகச் சிரிக் கிறார் மாலா. அந்தச் சிரிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

- வெற்றிக்கதைகள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism