Election bannerElection banner
Published:Updated:

சிவகங்கை: வரவு, செலவு கணக்கை மக்களிடம் கொடுத்த பெண் ஊராட்சிமன்றத் தலைவர்... பாராட்டிய கலெக்டர்!

ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழிக்கு கலெக்டர் பாராட்டு
ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழிக்கு கலெக்டர் பாராட்டு

''என்னுடைய ஊராட்சியில் நிரந்தரமாகத் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கவும் வருவாய் ஈட்ட தனியார் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும் உள்ளேன்'' என்கிறார் ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழி.

சிவகங்கை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது எஸ்.புதூர் ஒன்றியம். 'ஊருக்கு கடைசி உலகம்பட்டி' என்று சொல்லப்படும் செட்டிநாடு சொலவடைக்கு பெயர் பெற்ற விவசாய கிரமங்கள் இந்தப் பகுதியில்தான் உள்ளன. விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் வறட்சியிலும் வெற்றி கண்டுவருகின்றனர் முன்னோடி விவசாயிகள்.

ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழி நோட்டீஸ் வெளியிட்டபோது
ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழி நோட்டீஸ் வெளியிட்டபோது

எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாராப்பூர் ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழி நாகராஜன், தன் ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு விவரங்களை ஊராட்சி மக்களுக்கு தெரியும்படியாக வெளிப்படை தன்மையுடன் நோட்டீஸாக வெளியிட்டது கவனம் பெற்றது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, ஊராட்சிமன்றத் தலைவர் மலர்விழிக்கு தனது அலுவலகத்தில் சால்வை அணிவித்து அவரைப் பாராட்டியுள்ளார்.

ஊராட்சிமன்றத் தலைவியை கலெக்டர் பாராட்டினார்
ஊராட்சிமன்றத் தலைவியை கலெக்டர் பாராட்டினார்

இது குறித்து மலர்விழியிடம் பேசினோம். "வாராப்பூர் ஊராட்சியில் வாராப்பூர், குறும்பலூர், கட்டையன்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட நான்கு வருவாய் கிராமங்கள் உள்ளன. கிட்டத்தட்ட நான் பதவி ஏற்று ஓர் ஆண்டாகப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து வருகிறேன். நான் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டபோது, லஞ்சம், ஊழல் இல்லாமல் செயல்படுவேன் எனப் பொதுமக்களிடம் உறுதி அளித்தேன்.

அதன்படி செயல்பட வேண்டும் என, ஊராட்சியில் ஏற்பட்ட வரவு, செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என, நோட்டீஸ் அடித்துக் கொடுத்தேன். ஊருக்குப் பொதுவான கோயில் ஒன்றில் வைத்து அவற்றை மக்களிடம் கொடுத்தேன். சில இடங்களில் நோட்டீஸை வீடு, வீடாகவும் கொடுத்துள்ளேன். அதில் எந்த சந்தேகம் இருந்தாலும் மக்கள் என்னை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளேன்.

அச்சிடப்பட்ட கணக்கு விவரம்
அச்சிடப்பட்ட கணக்கு விவரம்

இந்நிலையில் இந்தத் தகவலை சிலர் வாட்ஸ் அப் மூலம் அனுப்ப, அதைப் பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் சென்றுள்ளது. அவர் என்னை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தொடர்ந்து இதுபோல செயல்பட அறிவுறுத்தினார். கிராமத்தில் குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கேட்டுக்கொண்டார். எங்கள் ஊராட்சியின் தேவைக்கு எப்போதும் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்று உற்சாகம் கொடுத்தார்" என்றவர் தொடர்ந்து, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

"எங்கள் ஊராட்சியில் நிரந்தரமாகத் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கவும், வருவாய் ஈட்ட தனியார் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் உள்ளேன். நீர்வரத்தை அதிகப்படுத்த பனை விதை, புங்கை, வேம்பு, நாவல் உள்ளிட்ட நாட்டு மரங்களின் விதைகளை நட்டு பராமரிக்கத் தொடங்கியுள்ளேன். தொழில் பயிற்சி முயற்சிகளுடன், நூலகத்தைப் பாடசாலையாக மாற்றவும் முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து லஞ்சம், ஊழலற்ற ஊராட்சி நிர்வாகத்தைச் செயலாக்கிக் காட்டுவேன்" என்றார் நம்பிக்கையுடன்.

மரக்கன்று நடும் நிகழ்வில் மலர்விழி
மரக்கன்று நடும் நிகழ்வில் மலர்விழி

இது குறித்து சமூக ஆர்வலர் உதினிப்பட்டி அருணாசலம் கூறுகையில், "குடிமராமத்து தொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், 'குடிமராமத்துப் பணி என்பது ரகசியப் பணி அல்ல. ஒரு பணியில் வெளிப்படைத் தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கு ஏற்ப, வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவி வெளிப்படை தன்மையோடு செயல்படுவது பாராட்டுக்குரியது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் 2 கிராமங்களை முன்னோடி கிராமங்களாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்வு செய்துள்ளனர். அதில் வாராப்பூர் கிராமமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வாராப்பூர் ஊராட்சிமன்றத் தலைவரைப்போல் தமிழகத்தில் பல ஊராட்சி மன்றத் தலைவர்கள் செயல்படுகின்றனர். இந்த நல் முயற்சிகளை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். ஒரு தலைவரின் நேர்மை, அந்தக் கிராமத்துக்கே விடியலாக அமையும்” என்றார்.

மலர்விழியின் நேர்மை வராப்பூரில் முன்னேற்றங்களைப் பெருக்கட்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு