Published:Updated:

"நான் இனி உங்க மகன்!" - மகனை இழந்த கரூர் பெண்ணைத் தேற்றிய சோமாலிய இளைஞர் #relationshipgoals

சண்முகம் இறுதிச் சடங்கு
சண்முகம் இறுதிச் சடங்கு ( நா.ராஜமுருகன் )

"மகனை இழந்து எதிர்காலமே இருண்டுகிடக்கும் எங்களுக்காக முகமது உசேன் ஆறுதல்சொன்னது தைரியத்தை கொடுத்திருக்கு. சண்முகம் சாகலை, இவங்க உருவத்துல எங்களோட வாழ்ந்துகிட்டுதான் இருக்கான்."

'உணர்வுகளை வெளிப்படுத்த, சகமனிதர்களை உறவுகளாகப் பாவித்து, அவர்களின் கண்ணீரைத் துடைக்க, மொழி, நாடு என்ற எல்லைகளெல்லாம் தடையில்லை' என்பதை நிரூபித்து, நெகிழவைத்திருக்கிறார், சோமாலியா நாட்டைச் சேர்ந்த இளைஞரான முகமது உசேன்.

முகமது உசேன்
முகமது உசேன்
நா.ராஜமுருகன்

27 வயது மகனை இழந்து தவித்த கரூரைச் சேர்ந்த தாய் ஒருவரிடம் போன் செய்து பேசியதோடு, "நான் உங்களுக்கு மகனா இருக்கிறேன். கலங்காதீங்க" என்று தேற்றி, அந்தத் தாயின் துயரத்திற்கு மருந்திட்டு, அவரை உருகவைத்திருக்கிறார் அந்த இளைஞர்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். 27 வயதே நிரம்பிய அவருக்குச் சிலமாதங்களுக்கு முன்பு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகிப்போயின. அவருக்குத் திருமணமாகி, 19 வயதில் சௌமியா என்ற மனைவியும், பத்துமாதக் குழந்தையும் இருக்கிறார்கள்.

சண்முகம் மனைவி சௌமியாவோடு (இறப்பதற்கு முன்பு)
சண்முகம் மனைவி சௌமியாவோடு (இறப்பதற்கு முன்பு)
நா.ராஜமுருகன்

சண்முகத்தின் தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டு போய்விட, தாய் லட்சுமி, மனைவி, குழந்தையோடு வாழ்ந்து வந்த சண்முகத்திற்குத்தான், இப்படி சிறுநீரகம் பழுதாகி, விதி மொத்தக் குடும்பத்தை தடுமாற வைத்தது. கொத்தனார் வேலைபார்த்துவந்த சண்முகத்தின் வருமானமும் இல்லாமல் போக, மொத்தக் குடும்பமும் அல்லாடிப்போனது. 'தனது மகனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும்' என்று துடித்த தாய் லட்சுமி, மகனுக்குத் தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தானமாக வழங்க முடிவுசெய்தார்.

"என் கிட்னியை எடுத்துக்க சாமி... புள்ளையக் காப்பாத்து!" - 2 கிட்னியும் பாதித்த மகனை மீட்கப் போராடும் ஏழைத்தாய்

இந்தச் செய்தியை விகடன் இணையதளத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி, "என் கிட்னியை எடுத்துக்க சாமி... புள்ளைய காப்பாத்து!" - 2 கிட்னியும் பாதித்த மகனை மீட்கப் போராடும் ஏழைத்தாய்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம். இந்தக் கட்டுரை பலரது மனதையும் உருக்க, அதில் சிலர் சண்முகத்திற்கு உதவ முன்வந்தனர். கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாதிக் அலி என்பவரும், சண்முகத்துக்கு உதவினார்.

லட்சுமி, சௌமியா
லட்சுமி, சௌமியா
நா.ராஜமுருகன்

கரூர் அரசுமருத்துவமனையில் உடல் உருக்குலைந்து நோயின் தாக்கத்தில் தவித்த சண்முகத்தை, கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் மருத்துவம் பார்க்க வைத்தார். இந்நிலையில், நாம் எழுதிய சண்முகத்தின் செய்தியையும், அதுசம்பந்தமான வீடியோவையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் சாதிக் அலி. அது பலரது மனதையும் அசைக்க, சண்முகத்தின் வைத்தியத்திற்கு கொஞ்சம் பணஉதவிகள் கிடைத்தன.

அந்த வீடியோவை பார்த்த சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சோமாலியா நாட்டைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர், மொழி தெரியாததால், 'என்ன பிரச்னை' என்று சாதிக் அலியிடம் போன் செய்து கேட்டிருக்கிறார். விஷயத்தைச் சொல்ல, சண்முகத்தின் நிலையைக் கேட்டு உச் கொட்டிய முகமது உசேன், சாதிக் அலி மூலமாகச் சண்முகத்தின் தாய் லட்சுமியிடம் பேசினார். "நாங்களெல்லாம் இருக்கிறோம். கவலைப்படாதீங்க. சண்முகம் நலமாயிருவார். நான் இங்க இருக்கிற தர்காவுல சண்முகம் நலம்பெற வேண்டிப் பிரார்த்திக்கிறேன்" என்ற ஆறுதல் சொன்னதோடு, சண்முகத்தின் வைத்தியச் செலவுக்காக முதல்கட்டமாக 3800 ரூபாயை அனுப்பி, லட்சுமியைக் கண்கலங்கவைத்தார்.

லட்சுமிக்கு ஆறுதல் சொன்ன முகமது உசேன்
லட்சுமிக்கு ஆறுதல் சொன்ன முகமது உசேன்
நா.ராஜமுருகன்

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு திடீரென சண்முகம் சிகிச்சை பலனின்றி தவறிவிட, மொத்தக் குடும்பமும் சோகத்தில் விக்கித்து நின்றது. சண்முகத்தின் இறுதிச்சடங்குக்கு பத்துப் பேர்கூட வரவில்லை. சாதிக் அலியே முன்னின்று, சண்முகத்தின் பிணத்தை தூக்கிபோய் அடக்கம் செய்தார்.

மகனை இழந்து எதிர்காலமே இருண்டுகிடக்கும் எங்களுக்காக முகமது உசேன் ஆறுதல்சொன்னது தைரியத்தை கொடுத்திருக்கு. சண்முகம் சாகலை, இவங்க உருவத்துல எங்களோட வாழ்ந்துகிட்டுதான் இருக்கான்.
லட்சுமி
சண்முகம் (இறப்பதற்கு முன்பு)
சண்முகம் (இறப்பதற்கு முன்பு)
நா.ராஜமுருகன்

இந்தத் தகவலும் முகமது உசேனுக்கு தெரிவிக்கப்பட, சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார். மறுபடியும், சண்முகத்தின் தாய் லட்சுமியிடம் பேசிய அவர், "இது உண்மையில் எதிர்பார்க்காதது. சண்முகத்தை அல்லா காப்பாத்துவார்னு நினைச்சேன். ஆனா, அவர் உங்க மகனை தன்னோடு எடுத்துக்கிட்டார். கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு மகனா இருக்கிறேன். வேண்டிய உதவிகளைச் செய்கிறேன்" என்று ஆறுதல்படுத்த, லட்சுமி துக்கத்திலும் நெகிழ்ந்துபோயிருக்கிறார்.

இதுகுறித்து சாதிக் அலியிடம் பேசினோம்.

"நான் 2012 ம் வருஷம் வரை சவுதிஅரேபியாவில் வேலைபார்த்தேன். அப்போ எனக்குப் பழக்கமாகி, நண்பரானவர்தான் முகமது உசேன். சண்முகத்தின் பரிதாப நிலைமையைப் பார்த்துட்டு, அவருக்கு முதல்கட்டமா 3800 ரூபாய் பணஉதவி பண்ணினார். தொடர்ந்து உதவுறதா சொன்னார். ஆனா, அதுக்குள்ள எல்லாரையும் அழவச்சுட்டு, சண்முகம் போய்சேர்ந்துட்டார். 'இனி முதல்ல லட்சுமிக்கும், சண்முகத்தின் மனைவிக்கும் தேவை ஆறுதல்தான்'னு லட்சுமியிடம் பேசினார் முகமது உசேன்.

சண்முகம் இறுதிச் சடங்கில் சாதிக் அலி
சண்முகம் இறுதிச் சடங்கில் சாதிக் அலி
நா.ராஜமுருகன்

முகமது உசேன் பேசிய மொழி புரியலன்னாலும், என்மூலமாக முகமது உசேன் பேசிய ஆறுதல் வார்த்தைகளை கேட்டு, நெகிழ்ந்துபோயிட்டார். என்னிடமும் முகமது உசேன், 'சண்முகம் குடும்பத்தை இனி நாம பார்த்துக்குவோம்'னு சொன்னார். சோமாலியா நாடு உலக அளவில் வறுமைநாடுகள்ல ஒண்ணு. அந்த நாட்டைச் சேர்ந்த முகமது உசேன், மொழி, நாடு கடந்து பள்ளப்பட்டி சண்முகத்துக்காக இரக்கப்பட்டது லட்சுமி மனதுக்கு கொஞ்சம் தெம்பை கொடுத்திருக்கு" என்றார்.

சண்முகத்தின் தாய் லட்சுமியோ,

"என் கணவர் எங்களை தவிக்கவிட்டுட்டு போயிட்டார். மகன்தான் தலைமகனா இருந்து, எங்க குடும்பத்தை நடத்தினான். ஆனா, எந்த பழக்கமும் இல்லாத அவனுக்கு, இப்படி ஒரு பிரச்னை வரும், எங்களை இப்படி நட்டாத்துல தவிக்கவிட்டு போவான்னு கனவுலகூட நினைக்கலையே. என்னோட மகன் இறந்த செய்தியைக் கேட்டுகூட, அவன் இறுதிச்சடங்குக்கு என் கணவர் வரலை. ஆனா, 'நீங்க குடியிருக்கிற வீட்டை உடனே காலி பண்ணலன்னா, புல்டோசர் வச்சு இடிப்பேன்'னு ஆள்விட்டு நெஞ்சுல இரக்கமே இல்லாம சொன்னார் பாவி மனுசன்.

லட்சுமி (சண்முகம் தாய்)
லட்சுமி (சண்முகம் தாய்)
நா.ராஜமுருகன்

சொந்த உறவுகளே கைவிட்ட சண்முகத்தின் குடும்பத்தை காப்பாற்ற துடிக்கும் முகமது உசேன் மனதளவில் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு