Published:Updated:

‘கணக்கு வழக்கெல்லாம் எனக்குச் சரிபட்டு வராது... எல்லாம் அவருதான்!’ - இது, பெருமையல்ல... சிறுமை

சமத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவம்

சமத்துவம்

‘கணக்கு வழக்கெல்லாம் எனக்குச் சரிபட்டு வராது... எல்லாம் அவருதான்!’ - இது, பெருமையல்ல... சிறுமை

சமத்துவம்

Published:Updated:
சமத்துவம்
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவம்
எல்லோர் மனத்திலும் இடம்பிடித்த சின்னத்திரை பிரபலம் ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் இளவயதில் அண்மையில் தவறிவிட்டார். இரண்டு குழந்தைகள், மனைவி எனச் சிறிய குடும்பம். அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொண்டபோது பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம்... “அவர் மனைவிக்கு வெளி உலகமே தெரியாது. அவரும் குழந்தைகளும் தான் அவங்களுக்கு உலகம். வீட்டை நிர்வகிச்சது எல்லாம் அவர்தான். இப்போ அவர் மனைவியை நினைச்சா பாவமா இருக்கு.”
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குடும்பத் தலைவிகளில் மட்டுமல்ல, ஆணுக்கு நிகராக... ஏன் ஆணைவிட அதிகமாகவே படித்து கை நிறைய சம்பாதிக்கும் பெண்களிடமும் இந்த நிலை நீடிக்கிறது. `என் வீட்டுக்காரர் இல்லாம ஒரு கைக்குட்டைகூட வாங்கப்போனது இல்ல', `கணக்கு வழக்கெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது... எல்லாம் அவருதான்' எனப் பெருமையாகப் பேசும் பல பெண்களைப் பார்த்திருப்போம்.

ஒருகாலத்தில் இது தாய்வழிச் சமூகமே! அதாவது, வீட்டை மட்டுமல்ல, நாட்டிலும்கூட காலங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது பெண் சமூகமே. குடும்பத்தின் முக்கிய முடிவுகள் தொடங்கி, குடும்பத் தொழிலின் முக்கிய முடிவுகள் வரை பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமாகவே இருந்தது. கால ஓட்டத்தில் கடந்த சிலபல தலைமுறைகளுக்கும் மேலாக இது தலைகீழாக மாறத்தொடங்கி விட்டது. இயல்பாகவோ, கட்டாயத்தின் பேரிலோ பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் ஆண்களைச் சார்ந்தே வாழக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் பெரும்பாலான பெண்கள். இப்போதும்கூட கிராமப்புறங்களில் தற்சார்புடன் இயங்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்றாலும், இதுவும்கூட கொஞ்சம் கொஞ்சமாக அருகிக்கொண்டே இருக்கிறது.

‘கணக்கு வழக்கெல்லாம் எனக்குச் சரிபட்டு வராது... எல்லாம் அவருதான்!’ - இது, பெருமையல்ல... சிறுமை

சார்ந்திருப்பதில் என்ன தவறு?

வீட்டின் அன்றாட நிர்வாகத்துக்குக்கூட ஆண்களைச் சார்ந்திருக்கும் நிலை நகரத்துப் பெண் களிடமும் நீடிக்கிறது. வாழ்க்கை இயல்பாகச் சென்று கொண்டிருக்கும் வரை பிரச்னை இல்லை. திடீரென ஏதோ ஒரு கட்டத்தில் சமூகத்தைத் தனித்து எதிர்கொள்ள வேண்டி வரும்போதுதான் திக்குமுக்காடிப் போகிறார்கள்.

“என் வீட்டில் நான்தான் கடைசி. அப்பாவையும் உடன் பிறந்தவர்களையும் சார்ந்தே இருந்ததால் தனியாகச் செயல்படுவ தற்கு அவசியம் ஏற்படவில்லை. திருமணத்துக்குப் பிறகு, கணவரைச் சார்ந்து வாழப் பழகினேன். சென்னையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் அப்போதும் தனித்து குடும்பத்தை நிர்வகிக்கும் தேவை ஏற்படவில்லை. திடீரென்று கணவருக்கு மும்பைக்கு பணி மாறுதல் ஆனது. அந்தச் சூழலில் குடும்பத்தைத் தனியே நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. இடம், மனிதர்கள், மொழி எல்லாமே புதிதான சூழலில் வெளி உலகத்தைச் சந்தித்தபோது திணறிப்போனேன். கடைக்குப் போனால்கூட யாரிடம் எப்படிப் பேச வேண்டும், யாரை நம்பலாம், நம்பக் கூடாது என்று தெரியாது.

போகப் போகத் தனியாகக் குடும்பத்தை நிர்வகிக்கப் பழகிக்கொண்டேன். என் மகள் யாரையும் சார்ந்து வாழப் பழகக் கூடாது என்று அப்போதே முடிவெடுத்தேன். அவளை அப்படித்தான் வளர்த்தேன். அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றிவரும் அவள், இன்று தன் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்கிறாள்” என்கிறார் மும்பையில் வசிக்கும் சத்யபாமா.

சார்ந்திருக்கும் ஆண் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும்போது பல பெண்களுக்கு அதுவே ‘கம்ஃபர்ட் ஸோன்’ ஆகவும் மாறி விடுகிறது. அதிலிந்து வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை.

குழந்தை வளர்ப்பிலேயே மாற்றம் வேண்டும்!

ஒரு பெண் ஒருவரைச் சார்ந்து வாழப் பழகுவதற்கு பின்னால் இருக்கும் உளவியலை விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

``பிறரைச் சார்ந்தே இருப்பது ஒருவித ஆளுமை. உளவியல் ரீதியாக இதை `டிப்பென்டென்ட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்' (Dependent Personality Disorder) எனும் ஆளுமைக் கோளாறு என்பார்கள். இந்தப் பிரச்னை 16 வயதிலேயே தொடங்கிவிடும். அவர்களின் எண்ணங்கள், நடத்தை எனச் சுயமாக இயங்க முடியாமல் சற்று மாறுபட்டே இருப்பார்கள்.

யார் எதைச் சொன்னாலும் அது தனக்குப் பிடிக்காவிட்டாலும், தவறு என்று பட்டாலும் அனுசரித்துப் போய்விடுவார்கள், மனதுக்குள் குமுறிக்கொள்வார்கள். முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவே மாட்டார்கள். எதிர்மறை எண்ணங்களே அவர்களை ஆக்கிரமித்திருக்கும். யாரையாவது சார்ந்து வாழாவிட்டால் அவர்கள் அவயங்களை இழந்தது போன்று உணர்வார்கள். இதுபோன்ற பெண்கள்தாம் எளிதில் குடும்ப வன்முறைக்கு உள்ளாவார்கள். குறைபாடு இல்லாவிட்டாலும் இயல்பாகவே பெண்கள் பிறரைச் சார்ந்திருக்கும் நிலையும் உள்ளது. ஒருவரைச் சார்ந்தேயிருக்கும்போது ஒரு கட்டத்தில் இருவருக்கும் அது சுமையாக மாறும். ஒரு பெண் சுதந்திரமாக யாரையும் சாராமல் வாழப் பழக்குவது பெற்றோரின் பொறுப்பு. குடும்பத்தில் சில முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பெண் குழந்தைக்கு சிறிய வயதிலேயே கொடுக்க வேண்டும். அந்தக் குழந்தை எடுக்கும் முடிவு சரியோ, தவறோ அது நல்ல அனுபவமாக மாறும். திருமணமான பிறகும், அவர்களால் சுதந்திரமாக வாழ முடியும்” என்கிறார்.

 சத்யபாமா - சித்ரா அரவிந்த் - பூம்பாவை - ரேணு மகேஸ்வரி
சத்யபாமா - சித்ரா அரவிந்த் - பூம்பாவை - ரேணு மகேஸ்வரி

அந்த அனுபவம் என் குடும்ப வாழ்க்கைக்கும் கை கொடுத்தது!

``சார்ந்து வாழ்வதைப் பற்றிப் பேசும்போது பொருளாதார சுதந்திரத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது'' என்று சொல்லும் பூம்பாவை, பெண்கள் கல்லூரியில் நிர்வாகப் பிரிவின் கண்காணிப்பாளரக இருக்கிறார். “என்னுடைய 10 வயதில் என் அப்பா தவறிவிட்டார். அம்மாவுடன் சேர்ந்த கூட்டுக்குடும்பத்தில்தான் வளர்ந்தேன். நானும் அக்காவும் சிறிய வயதிலிருந்தே யாரையும் சார்ந்து இருந்ததில்லை. கல்லூரி அட்மிஷன் தொடங்கி என் திருமண ஏற்பாடுகள்வரை நானே பார்த்துக்கொண்டேன். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. என்னுடைய வருமானத்தில் எனக்கான தேவைகள், செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன். வீட்டு நிர்வாகத்துக்கான பொருளாார விஷயங்களைப் பற்றி இருவரும் பேசியே முடிவெடுக்கிறோம். என்னுடைய கருத்துகளுக்கும் பரிந்துரைகளுக்கும் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் சுதந்திரமாக இருப்பது என்பது கணவரின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகிவிடாது. தனியாக முடிவெடுக்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒருவருக்கொருவர் தகவல் தெரிவித்துவிடுவோம். இதனால் எங்களுக்குள் பிரச்னையோ ஈகோவோ தலைதூக்குவதில்லை” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்தார் பூம்பாவை.

பொருளாதார சுதந்திரம் ஏன் அவசியம்?

பெண்களுக்கு பொருளா தார சுதந்திரம் இருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறார் முதலீட்டு ஆலோசகர் ரேணு மகேஸ்வரி.

“ஒரு பெண் தனக்கென்று ஒரு பர்ஸை கையில் வைத்திருக்காதவரை யாரையாவது சார்ந்தே ஆக வேண்டும். அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தந்த போராளி எலிசபெத் கேடி ஸ்டேன்டனின் வார்த்தைகள் இவை. பெண்ணுக்குப் பொருளாதாரத்தில் சுதந்திரம் இல்லாதவரை பாலின சமத்துவம் சாத்தியமே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார விவகாரங்களில் பெண்கள் குறித்து நாங்கள் நடத்திய ஓர் ஆய்வில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குடும்பத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றிப் பேசுவதில் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். பணத்தைப் பற்றிப் பேசுவதற்கு குடும்பத்தினரின், சமூகத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது என்பது இளம்பெண்களின் கருத்தாக இருந்தது.

பெற்றோரின் வளர்ப்பு முறையில் ஏற்படும் தாக்கம் இதில் வெளிப்படுகிறது. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்கினார்கள். ஆண் குழந்தைகள் பொருளாதாரம் பற்றிப் பேசுவதை உற்சாகப் படுத்தினர். குடும்பத்தின் பொருளாதார நிர்வாகத்திலும் ஆண்கள் பொறுப்பேற்பதையே விரும்புகிறோம். பல தலைமுறைகளாக இந்த நிலை தொடர்ந்ததால் பெண்களுக்கு பொருளாதார நிர்வாகத்தில் சம்பந்தமில்லை என்ற மனத்தடை இருக்கிறது.

பொருளாதார சுதந்திரம் என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. சுயமரியாதை, தன்னம்பிக்கை, அதிகாரமளித்தல், வளர்ச்சி அனைத்தும் அடங்கியது. பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்ணின் வாழ்க்கை கடினமானதுதான்” என்கிறார்.

அன்பின் பிணைப்பால் அப்பாவையோ, கணவரையோ, மகனையோ சார்ந்திருப்பது தவறல்ல. எந்தச் சூழலிலும் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய தன்னம்பிக்கையும் பெண்களுக்கு அவசியம்.

பொருளாதார சுதந்திரத்துக்கு சில ஆலோசனைளைச் சொல்கிறார் ரேணு மகேஸ்வரி...

 • உங்கள் வருமானம், செலவு, சொத்துகள், முதலீடுகள் அனைத்தையும் உணர்வுபூர்வமாகவும் பிராக்டிக்கலாகவும் நீங்களே நிர்வகியுங்கள்.

 • பண நிர்வாகத்தில் தன்னம்பிக்கை இல்லையென்றால் அது தொடர்பான அடிப்படை பயிற்சிகளை ஆன்லைனில் பெற முடியும்.

 • உங்களைப் போன்ற ஒத்த கருத்துடைய பெண்கள் ஒரு குழுவாக இணைவதன் மூலம், பணத்தை நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனைகள், ஐடியாக்களைப் பெறலாம்.

 • குடும்ப பொருளாதார விவகாரங்களில் பங்கெடுங்கள். எனக்கு எதுவும் தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மை அவசியமற்றது.

 • முதலீடுகள் செய்வது தொடர்பாகக் கற்றறியுங்கள். இருக்கும் பணத்தைக் கொண்டு மேலும் பணம் சம்பாதிப்பதற்கு அதுதான் ஒரே வழி.

 • பொருளாதார சுதந்திரத்தை அடைய உதவும் வழிகாட்டியைத் தேர்ந்தெடுங்கள். அவர் உங்கள் கணவராகவோ, பிள்ளையாகவோகூட இருக்கலாம்.

 • குடும்பத் தலைவி (ஹோம்மேக்கர்) ஆக இருந்தாலும் குறைந்தபட்ச வருமானம் தரும் ஏதாவது தொழிலில் ஈடுபடுங்கள்.

 • குடும்பத் தலைவிகளாக மட்டுமே இருப்பவர்கள் குடும்பத்தின் வரவு செலவுகளில் தங்களுடைய பங்கையும் உறுதிப்படுத்துங்கள். குடும்பச் செலவுகள் பற்றி முடிவெடுப்பதில் உங்களுடைய பங்கும் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.