அலசல்
Published:Updated:

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

பேருந்துப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பேருந்துப் பயணம்

முகச்சுளிப்பு... கேலிப்பேச்சு... அலட்சியப் பார்வை...

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?
பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

கடந்த மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, ‘பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’. பெண்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்களை சுயசார்புடன் வாழ வழிவகை செய்யும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள்களில் பெண்களை வரவேற்று அமரவைத்த நிலைமாறி தற்போது, பஸ் நிறுத்தத்தில் கூட்டமாகப் பெண்களைப் பார்த்தாலே பஸ்ஸை நிறுத்தாமல் செல்வது, அப்படியே பஸ்ஸில் பெண்களை ஏற்றிக் கொண்டாலும் முகம் சுளிப்பது என்று பெண்கள் அவமதிக்கப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் வருகின்றன. இந்தப் புகாரில் உண்மையிருக்கிறதா என்று தமிழகம் முழுவதும் களமிறங்கியது ஜூ.வி மாணவர் நிருபர்கள் குழு!

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

“இரும்மா... ஆளு வர்றாங்க!”

திருநெல்வேலி, வடகரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐயம்மாள் நம்மிடம், “ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் அஞ்சாயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் படிக்குறோம். கல்லூரி முடியுற நேரத்துல எல்லா மாணவிகளும் பஸ் நிறுத்தத்துல வந்து நிக்குறாங்க. அந்த நேரத்துல ஒண்ணு ரெண்டு பஸ் மட்டுமே விடறாங்க. எல்லாரும் அதுல அடிச்சுப் பிடிச்சு ஏறுறதால, தள்ளு முள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்து காயமடையறாங்க. சில நேரத்துல சீட் காலி இருந்து உட்காரப் போனாக்கூட ‘இரும்மா, ஆளு வர்றாங்க’னு சொல்லி அடுத்த ஸ்டாப்புல ஜென்ஸை உட்காரவெக்கிறாங்க. இதுக்கு எங்களுக்கு இலவச பஸ்ஸே விட்டிருக்க வேணாம்” என்றார் பரிதாபமாக!

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

“டீலக்ஸ் பஸ்ஸைத்தான் விடறாங்க!”

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகள் சிலர் நம்மிடம், “டீசன்ட்டா டிரெஸ் போட்டுட்டு வர்றவங்களையே நக்கல் அடிக்குறாங்க. எங்களையெல்லாம் மதிக்குறதே இல்லைங்க. பஸ்ஸுல ஏறும்போதே கண்டக்டர் கடுகடுன்னு பேசுறாரு. எங்களோட பொருள்களைக் கால்ல தள்ளிவிடுறாங்க... பீக் ஹவர்ல ஏறுனா, `உங்களுக்கு என்னா அவசரம்... அடுத்த பஸ்ஸுல வரக் கூடாதா... எங்க கலெக்‌ஷனை ஏன் கெடுக்குறீங்க?’னு சிடுசிடுக்குறாங்க. ஒரே அசிங்கமா இருக்குங்க!” என்றார்கள் அழாத குறையாக. கோவை உக்கடத்தைச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி புஷ்பாவோ, “காலையில 8 மணிக்கு போயிட்டு, சாயங்கலாம் 5 மணிக்கு வீட்டுக்குத் திரும்புறோம். ஆனா, அந்த நேரம் பார்த்து கரெக்டா டீலக்ஸ் பஸ்ஸை மட்டும்தான் விடறாங்க. எனக்கு மட்டும் ஒரு நாளைக்கு போக வர 34 ரூபா செலவாகுதுங்க” என்றார் வருத்தத்துடன்.

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

“ஓசி டிக்கெட்தானே... கையில வெச்சிருங்க!”

“கூட்டமா பெண்களைப் பார்த்தாலே பஸ்ஸை நிறுத்துறது இல்லை” என்று புலம்பிய சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டீக்கடைத் தொழிலாளி மீனா நம்மிடம், “ஒரு நாள் பஸ் ஸ்டாப்புல சுமார் பத்துப் பேரு பஸ் ஏற காத்துட்டு இருந்தாங்க. அங்க வந்து நின்ன அரசு பஸ்ஸுல அஞ்சு பேரு மட்டும்தான் ஏறியிருந்தாங்க. மத்தவங்க ஏறுறதுக்குள்ள பஸ்ஸை ஸ்பீடா எடுத்துட்டாங்க. பாவம், பின்னாடி ஏற வந்த லேடீஸ் தடுமாறி விழப் போயிட்டாங்க. அவங்க கத்தக் கத்த பஸ்ஸை நிறுத்தவே இல்லை. உள்ளே உட்கார்ந்திருந்த நான், ‘ஏங்க பஸ்ஸை நிறுத்தலை?’னு கேட்டதுக்கு ‘அதான் அடுத்த பஸ் இருக்குல்ல’னு கண்டக்டர் கூலா சொல்றாரு. ஒரு முறை பஸ்ல வர்றப்ப டிக்கெட்டை வாங்கி பர்ஸுக்குள்ள வெச்சேன். அதுக்கு கண்டக்டர், ‘ஓசி டிக்கெட்தானே.. கைலயே வெச்சிருங்க... டிக்கெட் கொடுத்தேனா, இல்லையான்னு எனக்கு எப்படித் தெரியும்?’னு கேலி பண்றாங்க. ஏன்டா பஸ்ல போனோம்னு ஆகிடுச்சு. இப்பல்லாம் பஸ்ஸுல ஏறும்போதே ஏதாச்சும் கிண்டல் பண்ணிடுவாங்களோன்னு மன உளைச்சலோடதான் ஏறவேண்டியிருக்கு” என்றார் வேதனையுடன்!

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

“மரியாதையே இல்லாமப் போச்சு!”

திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த பவதாரணி, “முன்னெல்லாம் கூட்டம் இருந்தாலும் பக்கத்துல வந்து டிக்கெட் கொடுப்பாங்க. ஆனா, இப்ப எவ்ளோ நெரிசல் இருந்தாலும், `ஏன் முன்னாடி வந்து டிக்கெட் வாங்க மாட்டீங்களா?’னு கடுகடுக்குறாங்க. நாங்க எப்படி ஆம்பிளைங்க கூட்டத்துல உரசிக்கிட்டு முன்னாடி போக முடியும்?” என்றார் வேதனையுடன்!

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

“டிக்கெட் கேட்டா பதிலே சொல்றதில்லை!”

மதுரை மீனாட்சி நகரைச் சேர்ந்த கங்கா, ``இலவசம்னு அறிவிச்சதுல இருந்து எங்களுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு. இலவச பஸ்ஸுன்னு அறிவிச்ச பின்னாடி எங்கே இறங்குனா இவங்களுக்கு என்னா? ஒரு ஸ்டாப் தாண்டி இறங்குனா கண்டபடி ஏசுறாங்க. டிக்கெட் கேட்டா பதிலே சொல்றதில்லை... ஆண்களுக்கெல்லாம் கொடுத்துட்டு கடைசியாத்தான் எங்களுக்கு டிக்கெட் தர்றாங்க. இந்த விஷயத்துல தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கணும்!’’ என்றார் ஆதங்கத்துடன்!

பெண்களை அவமதிக்கிறதா இலவச பேருந்துப் பயணம்?

“பஸ் ஸ்டாப்பை தாண்டி பஸ்ஸை நிறுத்துறாங்க!”

தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப்பிரியா நம்மிடம், ``எங்களைப் பார்த்தாலே பஸ் ஸ்டாப்பைத் தாண்டி போய் பஸ்ஸை நிறுத்துறாங்க. ஆம்பிளைங்க ஓடிப்போய் ஏறிடுறாங்க. வயசானவங்க நடந்துபோய் ஏறறுதுக்குள்ள பஸ்ஸை எடுத்துடறாங்க. இதையே ஒரு டெக்னிக்கா ஃபாலோ பண்றாங்க. நாங்க பஸ் டிப்போ வரைக்கும் போய் புகார் கொடுத்துட்டோம். அங்கேயும் எங்களை இளக்காரமாத்தான் பார்க்குறாங்க” என்றார் சோர்வுடன்!

பெண்கள் சுயசார்புடன் வாழ வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. ஆனால், அவர்களின் தன்மானத்தைக் காயப்படுத்தலாமா?

- ரேகாஸ்ரீ, கீர்த்தனா, செந்தமிழ், ஆர்த்தி தனுஜா, இலக்கியா