Published:Updated:

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

நல்லாத்தானே இருந்தீங்க... ஏன் உங்களுக்கு டைவர்ஸ் ஆச்சு? நீங்க கணவர்கூட சேர்ந்து இல்லையா?

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

நல்லாத்தானே இருந்தீங்க... ஏன் உங்களுக்கு டைவர்ஸ் ஆச்சு? நீங்க கணவர்கூட சேர்ந்து இல்லையா?

Published:Updated:
தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

‘ஆணிடம் சம்பளத்தையும் ‘பெண்ணிடம் வயதையும் கேட்கக் கூடாது’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால் இன்று அறிமுகமானவர்கள், அறிமுகமில்லாதவர்கள் என எந்த பேதமும் இல்லாமல் ஒருவரின் பர்சனல் விஷயங்களைக் குறிவைத்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன... குறிப்பாக பெண்களிடம்.

‘உங்களுக்குக் குழந்தைங்க இருக்காங்களா... எத்தனை குழந்தைங்க... இந்த இரண்டும் மற்றவர்களிடம் கேட்கப்படுவதிலேயே மிகக் கொடூரமான கேள்விகள். இவை உருவாக்குகிற தர்மசங்கடம் பெரிது' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஆண்ட்ரியா கோரி.

‘உங்களை எரிச்சலூட்டிய பர்சனல் கேள்விகள் என்னென்ன...’ என்று அவள் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தோம். `இப்படியெல்லாமா கேட்கறாங்க...' என அதிரும் அளவுக்கு பின்னூட்டத்தில் பொங்கி எழுந்திருந்தார்கள் பல பெண்கள். பெண்களிடம் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவற்றை எதிர்கொண்டவர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் அளித்த விளக்கங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. மற்றவரின் அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

நல்லாத்தானே இருந்தீங்க... ஏன் உங்களுக்கு டைவர்ஸ் ஆச்சு? நீங்க கணவர்கூட சேர்ந்து இல்லையா?

பெண்ணிய ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா

‘`இந்தக் கேள்விகளைக் கேட்பவர்களை நான் குற்றவாளிகளாகப் பார்க்கவில்லை. இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கிற அக்கறையில்லா இயல்பையும், இந்தக் கேள்விக்கான உண்மையான பதிலை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாத சமூகத்தையும்தான் நான் விரல் சுட்டுவேன்.

சமூகத்தைத் துண்டித்துவிட்டு வாழ முடியாது. அது வேறு மாதிரியான உளவியல் பிரச்னைகளை ஏற்படுத்திவிடலாம். நம்மைச் சுற்றியிருப்பவர்கள், ‘நீ உன் ஹஸ்பண்ட்கூட இருந்தா எனக்கென்ன; இல்லாட்டி எனக்கென்ன’ என்று இருந்தால் அது நல்லதொரு சமூகத்துக்கான அடையாளம் கிடையாது. அதனால், இந்தக் கேள்விகள் அற்று வாழ்வதற்கு பதில், இந்தச் சமூகத்துக்கு ‘எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது’ என்பதைச் சொல்லித்தர வேண்டும்.

‘ஆமாம், கணவரைப் பிரிந்திருக்கிறேன்’, ‘அவருடன் வாழப் பிடிக்கவில்லை’, ‘இப்போ நான் சிங்கிள்தான்’, ‘நல்ல ஆணை சந்திச்சா ரீமேரேஜ் செஞ்சுக்கிற ஐடியாவுல இருக்கேன்’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணால் உண்மையை அப்படியே பேச முடிந்தால், அதை இந்தச் சமுதாயம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிந்தால், மேலேயுள்ள கேள்விகளைத் தாராளமாகக் கேட்கலாம்.

‘நான் என் ஹஸ்பண்ட்கூடதான் இருக்கேன். நீ ஏன் இல்ல’, ‘ஹஸ்பண்ட்கூட இருக்கிறதுதானே மதிப்பு’ என்ற மனநிலையுடன் இருந்துகொண்டு, சம்பந்தப்பட்ட பெண்கள் சொல்கிற உண்மையான பதிலை விமர்சனமும் செய்வீர்கள் என்றால், இந்தக் கேள்விகளைக் கேட்காமலே இருக்கலாம்.’’

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

உன் வீட்டுக்காரர்தான் வேலைக்குப் போறார்ல... நீயும் வேலைக்குப் போகணுமா?

நிதி ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்

‘`25 வருஷங்களுக்கு முன்னாடி என் குடும்பத்துல நான்தான் முதல்முதலா வேலைக்குப்போன பெண். ‘வீட்டைப் பார்க்கலை, குழந்தையைப் பார்க்கலை. இதையெல்லாம் விட்டுட்டு வேலை என்ன வேண்டிக்கிடக்கு’ன்னு இதே கேள்வியை நான் சந்திச்சப்போ என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சேன். நம்மளைத் தப்பா நினைக்கிறாங்களோன்னு பயந்தேன். நல்லவேளையா என் கணவர் என்னைப் புரிஞ்சுகிட்டதால, என்னால தொடர்ந்து வேலைக்குப் போக முடிஞ்சது.

வளர்ந்துவிட்ட சமுதாயம்னு சொல்லப்படுற இந்தக் காலத்துலயும் அதே கேள்வி சமூகத்துல நிலைச்சி இருக்குறது பெரிய அநியாயம். இதை நமக்கு நெருக்கமானவங்களே, நம்ம மரியாதைக் குரியவங்களேதான் கேட்கிறாங்க. அதுக்காக, இந்தக் கேள்விகளுக்கு பயந்து வீட்டுலயே உட்கார்ந்திட்டிருந்தா மன உளைச்சல்தான் மிஞ்சும். ஒரு குடும்பத்துல மனைவியும் வேலைக்குப் போனா, வாழ்க்கையோட அடுத்தடுத்த கட்டங்களுக்கு அந்தக் குடும்பம் சுலபமா போக முடியும். கணவருக்கு திடீர்னு வேலை போயிட்டா குடும்பத்தைக் காப்பாத்த முடியும். முக்கியமா, எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வர்றப்போ கடன் வாங்காம சமாளிக்க முடியும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் எந்தப் பெண்ணைப் பார்த்தும் இந்தக் கேள்வியை கேட்கக்கூடாது. உங்களுக்குத் தெரிஞ்ச பெண்கள் யாராவது இந்தக் கேள்வியால வேலையைவிடுற மனநிலையில இருக்கிறாங் கன்னா, அவங்களை வேலையைவிடாதபடிக்கு உதவிசெய்ய வேண்டிய கடமை யும் உங்களுக்கு இருக்குங் கிறதை மறந்துடாதீங்க.’’

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு... எத்தனை குழந்தைகள்? டாக்டரைப் பார்த்தியா?

சமூக ஆர்வலர் கீதா இளங்கோவன்

“நானும் என் கணவரும் இணைந்து வாழறதுனு முடிவெடுத்ததும் குழந்தை வேண்டாம் கிற முடிவையும் எடுத்துட்டோம். கணவர் வீட்டுல முற்போக்கு சிந்தனை உடையவங்க. அதனால பெரிய பிரச்னை இல்லை. என் அம்மாதான் கொஞ்சம் பழைமை வாதி. குழந்தை பெத்துக்கோங்கன்னு சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டுட்டாங்க. இப்போ நாங்க வாழறதைப் பார்த்துட்டு நீங்க எடுத்த முடிவு சரியானதுதான்னு சொல் றாங்க. 18 ஆண்டுக்கால வாழ்க்கையில எந்தக் கட்டத்திலும் எங்க முடிவு தவறுன்ற எண்ணம் ஏற்படல.

குழந்தை என்ற மிகப்பெரிய கமிட்மென்ட்டை எல்லாரும் ஏத்துக் கணும்ற அவசியமில்லை. குழந்தை வேண்டாம்னு தீர்மானிக்கிறதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கணுங்கற அவசியமும் கிடையாது. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சாய்ஸ். அறிமுகம் இல்லாத நபர்கள் கிட்ட பேச்சைத் தொடங்கும்போது பர்சனல் விஷயங்களைக் கேட்கறது தவறில்லைன்னு இந்திய சமூகத்துல கட்டமைக்கப்பட்டிருக்கு. ‘நீங்க யார்’, ‘எங்கிருந்து வர்றீங்க’, ‘கல்யாணம் ஆயிடுச்சா?’ என்ற கேள்விகள்கூட ஒருவரைப் புண்படுத்தலாம்.

அப்படியிருக்கும்போது ஒருவர் அறிமுகமான அடுத்த நொடியே ‘குழந்தை’ என்ற விஷயத்தைக் கேட்டா அதை எதிர்கொள்றவங்க மனநிலை எப்படியிருக்கும்? அவங்க குழந்தை இல்லாதவங்களா, குழந் தையை இழந்தவங்களா, குழந்தை வேண்டாம்னு முடிவெடுத்தவங்களா இருக்கலாம். வேற எந்தக் கேள்வியை விடவும் இது உருவாக்குகிற தர்ம சங்கடம் பெரிசு. அறிமுகமானவங்க கிட்ட அன்பை, அக்கறையைக் காட்டுறோம்னு நினைச்சு பர்சனல் விஷயங்கள்ல கூடுதல் உரிமை எடுத்துக்கறாங்க.

குழந்தை பெத்துக்கிறது ஒரு வருடைய தனிப்பட்ட விஷயம் என்ற புரிந்துணர்வு வேணும். அப்பா, அம்மா, குழந்தைகள் இருப்பதுதான் ஒரு குடும்பம்னு ஸ்டீரியோடைப் செய்யப்பட்டிருக்கு. ஓர் ஆணும் பெண்ணும் குழந்தை இல்லாம அல்லது வேண்டாம்னு முடிவெடுத்து வாழறதும் குடும்பம்தான். இதுபோன்ற கேள்வியைச் சந்திக்க நேர்ந்தா ‘அது எங்கள் பர்சனல் சாய்ஸ்’னு சொல்லிட லாம். அதையும் மீறி பேசினாங் கன்னா பதில் எதுவும் சொல்லாம சிரிச்சிட்டே கடந்துடுங்க. அதைவிட பெரிய பதிலடி எதுவும் இருக்காது.”

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

வீட்ல சமைக்கிறதே இல்லையா?

பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்

“எங்களுடைய 15 ஆண்டுக்கால திருமண பந்தத்துல இந்தக் கேள்வியை அதிகம் எதிர்கொண்டிருக்கேன். ஆனா, இப்போ நண்பர்கள், உறவினர் களுக்கு தெளிவும் மாற்றமும் ஏற்பட்டி ருக்கு. என்னை நோக்கி எழும் கேள்விகளும் குறைஞ்சிருக்கு. என் மாமியார் ஒரு ரெசிப்பி சொல்லணும் னாகூட அதை என் கணவ ருக்குத்தான் போன் பண்ணிச் சொல்வாங்க.

பெரும்பாலும் நானும் என் கணவர் முரளியும் சேர்ந்துதான் சமைப்போம். என் கணவருக்கு இயல்பாவே சமையல்ல ஈடுபாடு உண்டு. அவர் தனியா இருந்தாக்கூட சமைச்சுப் சாப்பிட்டுப்பாரு. ஆனா, நான் தனியா இருந்தா அம்மா வீட்டுக்குப் போய் சாப்பிடுவேன் அல்லது ஆன் லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். நான் சமையலை பெருசா என்ஜாய் பண்ண மாட்டேன். சமைக்கிற நேரத்துல சும்மா உட்கார்ந்திருக்கிறதுகூட எனக்கு சரியான விஷயமா இருக்கலாம். பெண்கள் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடுறதையும், ஹோட்டல்ல, கேன்ட்டீன்ல சாப்பிடுறதையும் ரொம்ப சரியான விஷயமா நான் நினைக்கிறேன். காரணம், இந்தச் சமூகம், சமையல் பெண் ணோட பொறுப்புன்ற வரையறையை வெச்சிருக்கு. ஓர் ஆண் ஹோட்டல்ல போய் தனியா சாப்பிட்டாலும், ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலும் அவனை யாரும் இப்படிக் கேள்வி கேட்கற தில்லையே.

உலகம் முழுக்க சமையல் வணிகமயமாகி அது மூலமா பணம் வரும் என்ற சூழல் வரும்போது அது ஆண்கள் கையில போகுது. இந்தியாவுல, தமிழகத்துல பெரும்பாலான செஃப்கள் ஆண்களாக இருப்பதைப் பார்க்க லாம். வணிகமயமாகும்போது மட்டும் ஒரு விஷயம் பெண்கள் கையைவிட்டுப் போகும் போது அதை பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய பாகுபாடா பார்க்கறேன். மொத்தத்துல சமையல் என்பது மிகப்பெரிய ‘சர்வைவல் ஸ்கில்’. பெண் குழந்தைக்கு மட்டும் அதைக் கத்துக்கொடுக்காம ஆண் குழந்தைகளுக்கும் கத்துக்கொடுக்கணும்.”

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க அம்மா அப்பா ஏன் உங்க வீட்ல இருக்காங்க?

நடிகை உமா ரியாஸ்

‘`சொந்தத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்தாகூட பெண்ணோட பெற்றோர்களால தன் பொண்ணுகூட இருக்க முடியறதில்லை. இந்த நிலைமை இன்னிக்கும் இருக்கு. ஆனா இந்தத் தலைமுறையில மாற்றம் வர ஆரம்பிச் சிருக்கு. ‘கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க அம்மா, அப்பா ஏன் உங்க வீட்ல இருக் காங்க’ன்னு யாராவது கேட்டா ‘ஐ டோன்ட் பாதர்’னு சொல்லிட்டுக் கடந்து போகற அந்த மாற்றத்தை ரொம்ப நல்ல விஷயமா பார்க்கறேன்.

இந்தக் கேள்வியை என் வாழ்க்கையில நானும் எதிர்கொண்டிருக்கேன். கேட்கற வங்களுக்கு, ‘ஆமா, என் அம்மா என்கூடதான் இருக்காங்க. என் மாமியாரும் என்கூடதான் இருக்காங்க’ன்னு பதில் சொல்லியிருக்கேன். ரெண்டு பேரையும் பார்த்துக்க வேண்டியது என்னோட கடமைதான். அவங்க அவங்க வாழ்க்கை, அவங்கவங்க உரிமை. இந்தக் கேள்வியே அநாகரிகமானது.’’

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

ஏன் குழந்தை இவ்ளோ ஒல்லியா இருக்கு...சாப்பாடே கொடுக்கிறதில்லையா?

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சர் திவ்யா

“நான் பப்ளியா இருக்கேன். என் பொண்ணு ஒல்லியா இருக்கா. அதனால இந்தக் கேள்வியை நான் பலமுறை எதிர்கொண்டு இருக்கேன். ஆரம்பத்துல கோபம் வந்திருக்கு. ஆனா, யதார்த்தம் தெரியாம பேசறவங்ககிட்ட என்ன சொல்லிப் புரியவைக்க முடியும். குழந்தைங்க ஒல்லியா இருந்தாலும், ஆக்டிவ்வா இருந்தா பிரச்னை இல்லைனுதான் மருத்துவர்கள் சொல்றாங்க. `குழந்தை ஒல்லியா இருக்கே... தாய்ப்பால் கொடுக்கிறது இல்லையா, சாப்பாடே போடறதில்லையா'னு ரொம்ப அக்கறையோடு கேட்கறவங்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்புறேன். உங்களுக்கு இருக்கும் அதே அக்கறையும், கவலையும் குழந்தையைப் பெற்ற அந்தத் தாய்க்கும் நிச்சயம் இருக்கும்.

குழந்தைக்குக் கொடுக்காம, சுயநலமா சாப்பிட எந்த அம்மாவால முடியும்? உடல்வாகு என்பது மரபணு சார்ந்தது. தாய் பருமனா இருந்தா குழந்தையும் அப்படித்தான் இருக் கணும்னு அவசியம் இல்ல. குழந்தைக்கு அப்பாவோட மரபணுகூட அதிகமா இருக்க லாம். இதெல்லாம் தெரியாம அநாவசியமா அடுத்தவங்களைப் புண்படுத்தாதீங்க.”

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

‘என்ன நைட்டெல்லாம் தூங்கல போல....’

(வேலையிடத்தில் கொட்டாவி விடும் பெண்களிடம்)

மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் அனுராதா

“எந்த ஒரு நபருக்கும் 6-8 மணி நேரத் தூக்கம் அவசியம். வேலைக்குப்போற பெண்களுக்கு வேலைப்பளு அதிகமா இருப்பதால தூங்கும் நேரம் குறையலாம். காலையில சமையல், வீட்டு வேலை அடுத்து அலுவலக வேலை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறுபடி வீட்டுவேலைனு தொடர் வேலைப்பளுவால காலை 8-9 மணிக்கே அவங்களுக்கு ஆவி தீர்ந்த மாதிரி ஆயிடுது. இதனால சோர்வாகி, கொட்டாவி வருவது இயல்பு.

தவிர, நம்ம நாட்டுல 50 சதவிகிதத்துக்கு அதிகமான பெண்களுக்கு அனீமியானு சொல்ற ரத்தசோகை பிரச்னை இருக்கு. இதனால பொதுவாகவே பல பெண்களுக்கு ரத்தத்துல ஹீமோ குளோபின் அளவு குறைவா இருக்கும். வயசாகிறது, பிரசவம், மாத விடாயின்போது அதிகமான ரத்தப் போக்கு, கர்ப்பப்பையில பிரச்னை... இப்படிப் பல காரணங்களால ஹீமோகுளோபின் இழப்பு அதிகரிக்கும். ஹீமோகுளோபின் குறையும்போது உடலுறுப்புகளுக்குப் போகும் ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு சோர்வு, கொட்டாவி வர்றது இயல்பு.

தைராய்டு ஹார்மோன் குறைவா சுரக்கும் ‘ஹைப்போ தைராய்டு’ நிலை, கால்சியம் மற்றும் வைட்டமின் குறைபாடு, மனச்சோர்வு, மனச் சோர்வால ஏற்படற உடல்பருமன் இதெல்லாமும் சோர்வை ஏற்படுத்தும். ஒரு பெண் வேலையிடத்துல சோர்வா இருக்க உடல்ரீதியா, மனசுரீதியா இப்படி எத்தனையோ பிரச்னைகள் இருக்கலாம். எல்லாத்தையும்விட கணவன் - மனைவி உறவுல தாம்பத்யம் முக்கியமானது.

பசி, தூக்கம், தாகம் மாதிரி அதுவும் இயல்பான ஒரு விஷயம்தான். அதன் காரணமா ஒரு பெண் சோர்வா இருந்தாலுமே அதைக் கேலி செய்யவோ கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை.”

கொஞ்சம் ஷட் அப் பண்ணுவோமா... தாண்டப்படும் எல்லைகள், தவிர்க்க வேண்டிய கேள்விகள்!

இந்த டிரஸ்ஸுக்கு துப்பட்டா கிடையாதா?

பெண்ணிய செயற்பாட்டாளர் தீபலட்சுமி

‘`உடலை மறைக்கத் தான் ஆணும் பெண்ணும் உடை அணியுறோம். பெண்ணுக்கு மட்டும் ஏன் கூடுதலா மேலும் மேலும் துணிகளை அடுக்கணும்? பெண்களின் உடல் பற்றிய புரிந்துணர்வை ஆண்களுக்கு கொண்டு வரணுமே தவிர, துப்பட்டா போட்டிருக்கியா, அதைச் சரியா போட்டிருக்கியாங்கிற மாதிரியெல்லாம் பெண்களை இன்னும் எத்தனை காலத்துக்கு கேள்வி கேட்பாங்களோ தெரியலை. துப்பட்டா ஒன்றும் பெண்களின் பாதுகாப்பு கவசம் கிடையாது.

சின்ன வயசுலேயே உடல் பாகங்களுடைய செயல்பாடுகளைக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். ஆணும் பெண்ணும் சமம் என்பதைக் குழந்தைகள் மனசுல பதியவெச்சு, ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகளை அணியத் தொடங்கும்போதுதான் இந்த மாதிரியான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சில வீடுகள்ல பெற்றோர்கள், ‘எங்க பொண்ணு அவங்க அப்பா திட்டுவார்னு துப்பட்டா இல்லாம வெளியே போக மாட்டா’. ‘குட்டியான டிரஸ் எல்லாம் போட மாட்டா’னு பெருமையா சொல்லு வாங்க. பெண் உடல் என்பது அருவருப்பானதெல்லாம் இல்லையே, அதை ஏன் அடுக்கடுக்கான உடைகளால மறைக்கணும்... ஓர் ஆண், ‘நீ துப்பட்டா போட வேணாம், அதுல அவமானப்பட ஒண்ணும் இல்லைனு தன் மகள், சகோதரி, மனைவிகிட்ட சொல்லும் மனநிலைக்கு வரும்போது, சமுதாய மாற்றம் நிச்சயம் நிகழும்.”

கணவரைப் பிரிந்த பெண் மருத்துவர் ஒருவர் தன் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வை விமரிசையாகச் செய்திருக்கிறார். நிகழ்வுக்கு வந்தவர்கள் எல்லாம் கணவரைப் பற்றி விசாரிக்க, மனமுடைந்த மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் பார்த்திருப்போம். பர்சனல் விஷயங்களைக் குறிவைத்து கேள்விகள் கேட்பது ஒருவரின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதற்குச் சான்று இது. நம்முடைய பர்சனல், பிரைவசி சார்ந்த விஷயங்களில் பிறர் நுழைவதை எப்படி தர்மசங்கடமாக உணர்வோமோ, அதே உணர்வு எதிரிலிருப்பவர்களுக்கும் ஏற்படும் என்ற தெளிவு உருவாகி விட்டால் இதற்குத் தீர்வு கிடைத்துவிடும்.

அத்துமீறாதிருப்போம்!